மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8:50 மணியளவில் மண்டேலாவின் உயிர் பிரிந்துள்ளது.
///////////////////
உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற கறுப்பு மனிதனாக நெல்சன் மண்டேலா பார்க்கப்படுகிறார். ''எனது வாழ்நாள் முழுவதும், நான் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, கறுப்பு ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிறேன். அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் ஓர் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை நான் கனவு காண்கிறேன். இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காக சாகவும் தயாராக இருக்கிறேன்" - 1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்சன் மண்டேலா கூறிய வார்த்தைகள் இவை.
தென் ஆபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர், மிக நீண்டகாலம் சிறைவாசம் (27 வருடங்கள்) இருந்த அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என பல பெருமைகள் மண்டேலாவுக்கு உண்டு.
தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதும், அவர்களிடம் எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாத காலப்பகுதி அது. 1939 ஆண்டில் தனது 21 வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்டத்தை தொடக்கினார். வாக்களிக்கும் உரிமை மறுப்பு, சொந்த நாட்டுக்குள் பிரயாணம் செய்வதற்கு கூட விசேட அனுமதி பெறும் நிலமை, நில உடமையாளர்களாக இருக்க முடியாத நிலைமை போன்ற இனப்பாகுபாட்டினை சுட்டிக்காட்டி கறுப்பின மக்களை விழிப்படைய செய்வதில் மண்டேலாவும், அவரது பல்கலைக் கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் சிறுது வெற்றி கண்டனர். அதே காலப்பகுதியில் தனது சட்டப்படிப்பை மேற்கொண்டதால் கறுப்பின மக்களுக்கான சட்ட ஆலோசனைகளையும் வழங்கினர்.
எனினும் 1948ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசின் ஆதரவுடன் இனவாதமும், ஒடுக்குமுறையும் தொடர்ந்து அரங்கேறுவதை அறிந்து சீற்றம் கொண்ட மண்டேலா நேரடியாக அரசியலில் குதித்தார். கறுப்பினத்தவர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான 'ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்' என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார். பின்பற்றி வன்முறையற்ற அறப்போரிலேயே மண்டேலா முதலில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதை கண்ட வெள்ளை இனத்தவர்களின் அரசு 1956ம் ஆண்டு மண்டேலாவை முதன்முறையாக கைது செய்தது. பின்னர் விடுதலையான போது, ஷர்பெவில் நகரில் மண்டேலா முன்னின்று நடத்திய அமைதியான கண்டனப் பேரணி ஒன்றை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கலைத்ததில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதோடு தேசத் துரோகம் குற்றச்சாட்டுக்களுக்காக மண்டேலாவும் அவரது 150 வரையிலான தோழர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். நீண்டதொரு சட்டப் போராட்டத்தின் பின்னர் விடுதலையான மண்டேலா, இனி வன்முறையற்ற ரீதியில் போராடிப் பயனில்லை எனக் கூறி ஆயுத வழிமுறையை நாடினார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கி மரபுசாரா கெரில்லா போர்முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினார். இதன் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், அமெரிக்காவும் மண்டேலாவை எதிர்த்து பயங்கரவாத முத்திரை குத்தியது. அமெரிக்காவுக்குள் நுழைவதற்குள் ஜூலை 2008 வரை மண்டேலாவுக்கு தடை நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. அந்த 27 ஆண்டுகால சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ம் ஆண்டு அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென் ஆபிரிக்க குடியரசு மலர்ந்தது.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்".
1993 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அவர், 1994 இல் தென் ஆபிரிக்காவின் முதல் ஜனநாயக ரீதியிலான குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்துவருடங்கள் அரசியல் பயணத்தில் நீடித்த அவர் 2008 ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்துள்ளது ஐ.நா.
பொதுவாழ்க்கையிலிருந்து விலகியதும், தென் ஆபிரிக்காவின் மிக உயரிய தூதுவர்களில் ஒருவரானார் மண்டேலா. எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டார். அதோடு 2010ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை தென் ஆபிரிக்கா நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்க் கொடுத்தார். கொங்கோ, புருண்டி மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தார்.
முன்னாள் பாக்ஸிங் வீரர், சட்டத் தரணி, சிறைக்கைதி 46664 என மண்டேலாவுக்கு பல முகங்கள் உண்டு. இவற்றையெல்லாம் விட 'நான் வெள்ளையனே வெளியேறு எனக் கூறவில்லை. அவர்களுக்கும் சம உரிமையுடன் வாழ அனுமதியுண்டு. அதே போன்று கறுப்பர்களுக்கும் உண்டு. அனைவரும் ஒன்றாக, சம உரிமைகளுடன் மனிதம் போற்றும் மகத்தான விட்டுக்கொடுப்பு பண்புகளுடன் வாழ்வோம் என்று தான் ஆசைப்படுகிறேன்' என வெள்ளையர்களையும் உருக வைத்தவர் மண்டேலா.
தன்னை சிறைக்கு அனுப்ப வாதாடிய அதே வழக்கறிஞரின் வீட்டு நிகழ்வுத் தொடக்க விழா ஒன்றில் கலந்து கொண்டு, நிறவெறிக்கு எதிரான ஆபிரிக்க அந்தெம் பாடியவர் மண்டேலா.
தான் சிறையில் இருந்த காலப்பகுதியில் தென் ஆபிரிக்காவின் அதிபராக நீடித்து, தனது விடுதலை பற்றி கவனமே எடுக்காத இருந்த ஹெண்ட்ரிக் வெர்வோர்ட் அம்மையார் பின்னாளில் கணவனை இழந்து தனித்துப் போனப் போன போது பல நூறு மைல்கள் கடந்து, அவரது வீட்டுக்கு சென்று தேனீர் அருந்தினார்.
மண்டேலா தனது நண்பர்களுடன் 18 வருட காலம் சிறைவாசமிருந்த ரோபன் தீவில் சுண்ணாம்புக் கல் உடைக்கும் பணியை கட்டாயமாக செய்யும் நிலமைக்கு ஆளானதாலேயே அவருக்கு முதன்முறையாக நுரையீரல் நோய்த் தொற்று ஏற்பட்டது.
"ஒருவனின் தோலுக்காகவோ அல்லது அவனது பின்னணிக்காகவோ அல்லது அவனது சமயத்திற்காகவோ எவரும் அவன் மீது வெறுப்பை உமிழ்வதற்காக அவன் பிறக்கவில்லை.
மனிதர்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்ள முடியுமென்றால், அன்பை கற்றுக் கொள்வதற்கும் முடியுமானபவர்களாக இருப்பார்கள். காரணம் எப்போதும் வெறுப்பை விட அன்பு என்பது மனித இதயத்தில் அதிக இயல்பாக வரக்கூடியது'" எனக் கூறிய மண்டேலா இன்று உலகில் எம்முடன் இல்லை.
ஆனால் உலகில் இனவெறி, நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்கள் பற்றிய காலத்தால் அழியாத வரலாற்று அத்தியாயங்களில் மண்டேலா மாத்திரமே எப்போதும் முதல் பக்கத்தில் நீடிப்பார் என்பது மட்டும் உண்மை.
அமைதிப் புரட்சியின் அடலேறே! சென்று மறுபடியும் வா! என்றுதான் இன்று ஒட்டுமொத்த உலகமும் அவரை அழைக்கிறது!
- தகவல் உதவி : விக்கிபீடியா