கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு

முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள  ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந்துள்ளனர். இவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தம்மிடம் உடனடித் திட்டங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இவர்களது வருகை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுநரும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் பலருக்கு தமிழர்களுடன் திருமண பந்தம் இருக்கின்றது. அத்துடன் அவர்களில் பலருக்கு நன்றாகத் தமிழும் பேசத் தெரிந்திருக்கிறது. அனுராத புரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த இவர்கள், போர் முடிந்து நிலைமை ஓரளவு சீராகி உள்ளதால் மீளக்குடியமரும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இவர்களில் 54 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாழ். ரயில் நிலையத்திலும் ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று யாழ். அரச அதிபரைச் சந்தித்த இவர்கள், தம்மை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். தாம் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு வசதியாகத் தமக்கு அரச காணிகளைத் தந்துதவுமாறும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

""1980ஆம் ஆண்டுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ்  சிங்கள் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். இப்போதும் அவ்வாறே வாழ முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு திருநகர், திருநெல்வேலி, நாவற்குழி ஆகிய இடங்களில் அரச காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நாங்கள் குடியமர்ந்திருக்கவில்லை. காணிகள் எமக்குத் தரப்பட்டதற்கான கடிதங்கள் எம்மிடம் உள்ளன. இப்போது அந்தக் காணிகளை நாம் கேட்கவில்ல்ல. எனினும் வேறு அரச காணிகளை எமக்கு ஒதுக்கித் தரவேண்டும்.''  என அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரைக்கும் யாழ். ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என அவர்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.இவர்கள் யாழ்ப்பாணம் வந்திருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, சிங்கள மக்கள் வடக்கில் மீளக்குடியமர்வது பற்றித் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

உதயன்

0 comments:

Post a Comment