கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்

அபூதாலிப் கணவாய்:


நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும் முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய குடும்பத்தினராகிய ஹாஷிம் கிளையார், முத்தலிப் கிளையாருடனும் யாரும் கொடுக்கல், வாங்கல், திருமண உறவு போன்ற எந்த செயலிலும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவிப்பு செய்து, அதை தீர்மானமாக எழுதி கஃபத்துல்லாஹ்விலும் தொங்க விட்டார்கள்.

இதனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவை விட்டு ஒதுங்கி அவர்களுக்கு சொந்தமான ஒரு மலைப் பள்ளத்தாக்கிற்கு சென்று தங்கினார்கள். இந்த இடத்திற்கு ”ஷுஃ’ப அபூதாலிப்” அபூதாலிப் கணவாய் என்று பெயர். இங்கு மூன்று ஆண்டுகள் உணவின்றி, உதவியின்றி பெரும் கஷ்டத்தோடு வாழ்ந்தார்கள். பின்னர் இந்த தீர்மானம் கிழித்தெறியப்பட்டு மக்கா நகருக்குள் வந்தார்கள். அக்கணவாயில் தங்கியிருந்த போதுதான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பிறந்தார்கள். இந்நிகழ்வு நபித்துவத்தின் 7 ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.

முஹர்ரம் 10-ஆம் நாள் “ஆஷுரா” தினம்:

ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்குமாறும், அன்று தம் குடும்பத்தார்களுக்கு தாராளமாக செலவு செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு வைத்திருந்தார்கள். இதன் சிறப்பு என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இன்று நல்ல நாள்; பனூ இஸ்ராயீல்களை அவர்களின் விரோதிகளிடமிருந்து அல்லாஹ் ஈடேற்றமடையச் செய்த நாள்; எனவே, மூஸா(அலை) அவர்கள் இன்று நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறி, அந்த நாளில் தாங்களும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். (புகாரி,முஸ்லிம்)

கைபர் யுத்தம்:

கைபர் யுத்தம் ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மக்கத்து காஃபிர்களுடன் செய்த ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் சில நாட்களில் கைபருக்கு புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த போது அல்லாஹுத்தஆலா “ஃபதஹ்” அத்தியாயத்தை அருளினான். அதில், நபியவர்களுக்கு கைபரின் வெற்றியையும், அங்கு கிடைக்கும் கனீமத்தை(வெற்றிப் பொருட்களை)யும் வாக்களித்திருந்தான். இதைப் பற்றி திருக்குர்ஆனில்…….

“யுத்தத்தில் (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப்பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான்; நீங்கள் அதை கைப்பற்றுவீர்கள்.” (48;20)

அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம்:

நபி(ஸல்) அவர்கள், ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் கைபர் யுத்தத்திற்கு புறப்படும்முன், பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் எழுதினார்கள். அவ்வகையில், ஹபஷா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ரோம் நாட்டு மன்னர் கைஸர், பாரசீக நாட்டு மன்னர் கிஸ்ரா, சிரியா நாட்டு மன்னர் ஹாரிஸ் இப்னு அபூஷமிர் அல்கஸ்ஸானி, எகிப்து நாட்டு மன்னர் முகவ்கிஸ், யமாமா நாட்டு மன்னர் ஹவ்தா இப்னு அலி அல்ஹனஃபி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்:

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப்பின் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இஸ்லாமிய வருடம் கணக்கிடப்படவில்லை. ஹிஜ்ரத் நிகழ்ந்து 16-ஆண்டுகளுக்குப்பின் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் தான் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் மற்ற சஹாபாக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றத்திற்கு பின், இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முக்கியக்காரணமாக இருந்த “ஹிஜ்ரத்”தை மையமக வைத்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிட முடிவு செய்தார்கள்.

மேலும் திருக்குர்ஆனில் அத்தியாயம் 9; 108-வது வசனத்தில் “ஆரம்பநாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில் தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது”. என்று கூறப்பட்டுள்ளதில் “ஆரம்ப நாள்” என்ற வார்த்தை ஹிஜ்ரத்தை குறிப்பதால், இந்த வசனமும் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஆண்டைத் துவக்கக் காரணமாக இருந்தது.

தங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1432 – வது இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆண்டு முழுவதும் அனைத்து நற்பாக்கியங்களையும் நன்மைகளையும் நம் அனைவருக்கும் நல்கிட துஆச் செய்கின்றேன்.

0 comments:

Post a Comment