ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி
ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ தொலைவில் உள்ள குத் நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.
இதையடுத்து நஜாப், பக்குவுபா, பாக்தாத், கர்பாலா, கிர்குக், திக்ரித், ரமாடி ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஒட்டு மொத்தத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
இத்தாக்குதல்களில் கார் வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகள், தற்கொலைத் தாக்குதல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. தியாலா மாகாணத்தில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மிக அதிகபட்சமாக குத் நகரில் பலி நிகழ்ந்துள்ளது. ஈராக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள அமெரிக்கப் படையினர் இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவர் என முன்பே அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.
ஆனால் ஈராக்கின் பாதுகாப்பு குறித்து சந்தேகித்த அந்நாட்டு தலைவர்கள் 2012ம் ஆண்டு வரை அங்கு ஒரு சிறுபடைப் பிரிவாவது தங்கியிருக்க வேண்டும் என சமீபத்தில் தான் முடிவெடுத்தனர்.
ஈராக்கில் தொடரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் மேலும் திறன் பெறவும் இந்த அமெரிக்கப் படை ஈராக் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இதையடுத்து நிகழ்ந்துள்ள திட்டமிட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் இவை. இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
0 comments:
Post a Comment