யாப்பு சீர்திருத்தத்தின் பின் ஜனாதிபதி ,பிரதமர் , பாராளுமன்றம் – சம அதிகாரம் கொண்டவையா ?
உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது தீவிரமாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன அதன்பிரகாரம் பிரதமரின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி எப்போதும் செயற்படுவது தொடர்பாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆயினும் ஜனாதிபதிக்கு பிரதமர் வழங்கிய ஆலோசைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரை ஜனாதிபதி கோருவதற்கு இயலுமானதாகவும் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கேட்கக்கூடியதாகவும் ஏற்பாடுகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் பிரதான நோக்கத்துடன் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தும் சட்டமூலம் அடுத்தமாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றமும் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை ஒன்றையொன்று மேவிச் செல்லாமல் சமநிலையை பேணுவதற்கான செயற்பாட்டுத்திறனுடனான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாக அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரணியின் பொதுவேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாரியளவில் ஜனநாயகரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதென உறுதியளித்திருந்தார்.
அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் கொண்டிருந்த எதேச்சாதிகாரமான அதிகாரங்களை நீக்கிவிடும் அம்சங்களை அவரின் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளினால் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் பற்றி தற்போது கலந்துரையாடப்படுகிறது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளினால் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் பற்றி தற்போது கலந்துரையாடப்படுகிறது.
இக்கலந்துரையாடல்களின் போது பல்வேறு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படுகின்றதென வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் நிறைவேற்று தலைவராகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்குவார்.
பிரதமர் நியமன விவகாரம் அல்லது அரசியலமைப்பின் பிரகாரம் தேவைப்படுவதைத் தவிர பிரதமரின் ஆலோசனையின்படி அல்லது பிரதமரின் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஏனைய அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி எப்போதும் செயற்படுவார்.
அதேசமயம் தனக்கு பிரதமரால் அல்லது பிரதமரின் அங்கீகாரத்தைப் பெற்ற அமைச்சர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஆலோசனையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரமுடியும். அத்துடன் ஜனாதிபதியின் சம்மதத்தை பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்று தொடர்பாக அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தைக் கோரமுடியும்.
மீள் பரிசீலனைக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு பின்னர் அது தொடர்பாக ஜனாதிபதி செயற்படுவார். பாராளுமன்றத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பாகவும் அவர் அங்கீகாரத்தை வழங்குவார்.
ஜனாதிபதியின் விடுபாட்டு உரிமையானது அவரின் உத்தியோகபூர்வ பதவிநிலைக்கு அப்பால் செயற்படுவதற்கு விரிவுபடாது அல்லது நீக்கப்படாது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாகும். ஜனாதிபதி தேர்தல் முறைமை மாற்றப்படாது. இந்த விடயம் அடுத்த பாராளுமன்றத்திற்குரியதாக அமையும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றமுடியும். தற்போதுள்ள அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை ஏற்பாடுகள் நீக்கப்படும்.
பிரதமர்
அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் விளங்குவார். பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார். அதேவேளை பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்த உறுப்பினர் கொண்டிருக்கிறார் என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதன் பிரகாரம் பிரதமரை ஜனாதிபதி நியமிப்பார்.
அதேசமயம் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் பிரதி பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார். அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதுக்கு மேற்படாது. இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் மேற்படாது.
பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான ஆசனங்களையும் இரண்டாவது அதிக தொகை ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க இணங்கும். தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கான காலப்பகுதிக்குள் கட்சிகள் 45 மற்றும் 55 இற்கும் மேலான எண்ணிக்கையை கொண்டிருப்பது தொடர்பாக பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை கொண்டுவரும்.
பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் 5 வருடங்களாகும். முதல் நான்கு வருடங்கள் 6 மாதங்களில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்கமுடியும். 18 ஆவது திருத்தத்தின் மூலம் அகற்றப்பட்ட அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன நிறுவனங்களுடன் தொடர்புபட்ட ஏற்பாடுகள் குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் மீள ஏற்படுத்தப்படும்.
கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய முகாமைத்துவ ஆணைக்குழு என்பன சுயாதீன நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்படும். அரசியலமைப்பு பேரவையானது பிரதம நீதியரசர், நீதியமைச்சர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் ஆலோசனைகளை உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நியமனங்கள் தொடர்பாக பரிசீலிக்கும்போது பெற்றுக்கொள்ளும்.
முதலாவது வாசிப்புக்கு 14 நாட்களுக்கு முன்பாக மசோதாக்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும். ஜனாதிபதியினால் சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அவசர சட்டமூலங்கள் இருக்காது. 19 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்தும் பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு , மனித உரிமை ஆணைக்குழு , இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு போன்றவற்றின் உறுப்பினர்களின் பதவி காலாவதியாகும்.-
lankamuslim
0 comments:
Post a Comment