பாராளுமன்றத்தில் மஹிந்தவின் ஊழல்களை, அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி
மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தன் காரணமாகவே மருந்துகள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-03-2015 தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஔடதங்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் என்னை ஜனாதிபதி தெரிவு செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஔடதங்கள் பாதுகாப்புச் சட்டமூலத்தை காணாமல் போக செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தலா 25 லட்சம் ரூபா திரட்டப்பட்டதாகவும் இப்படியான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய 400 நிறுவனங்களிடம் இவ்வாறு பணம் திரட்டப்பட்டதாக பின்னர் எனக்கு தெரியவந்தது.
திரட்டப்பட்ட அந்த பணம் எங்கு போனது என்பதை நான் அறியவில்லை. அந்த பணத்தின் மூலம் கிடைத்த பலம் காரணமாக சட்டமூலம் காணாமல் போக செய்யப்பட்டது.
சட்ட மா அதிபர் திணைக்களம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியிருக்கலாம். எனினும் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவாகும் வரை கடந்த 5 வருடங்களாக எவ்விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை.
சட்டமா அதிபர் திணைக்களம் யாருக்கு கீழ் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.
இலங்கை மருந்து கூட்டுத்தாபனத்தில் மோசடிகள் காரணமாக ஏற்பட்டிருந்த துர்நாற்றத்தை நான் இன்னும் உணர்கிறேன். சுகாதார அமைச்சர் என்ற வகையில் மருந்து கூட்டுத்தாபனத்தில் கைவைக்க எனக்கு இடமளிக்கப்படவில்லை.
கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவர் பணியாற்றினார். அவர் ஜனாதிபதி ஒருவரை போல் நடந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல முறை கூட்டுத்தாபனத்தில் நடக்கும் ஊழல் மோசடிகள் பற்றி பேச வேண்டாம் என என்னிடம் கூறினார். அவற்றை கணக்காய்வாளர் பார்த்து கொள்வார், அதனால் அது பற்றி பேசவேண்டியதில்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் ஒருவரிடம் அப்படி கூறினால், அமைச்சராக இருப்பவர்களுக்கு எப்படியான அசௌகரியமான நிலைமை ஏற்படும் என்பதை இந்த சபையில் இருக்கும் அமைச்சர்கள் அறிவார்கள்.
அதிகாரிகள் முன்னிலையில், அப்படி கூறியதும் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் துள்ளி குதித்து ஊழல், மேசடிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் ஜனாதிபதியாக நான் கலந்து கொள்வது காலத்தின் கோலம். இதற்கு எதிராக செயற்பட்டவர்கள் எவரும் சட்டமூலம் இவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
jaffnamuslim
0 comments:
Post a Comment