கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆடம்பரத்துக்கு அடிமையாகாத ஜனாதிபதி குடும்பம்: லண்டன் அனுபவம்

பிரித்தானிய மகாராணியின் அழைப்பையேற்று பொதுநலவாய தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள தனது பாரியார் மற்றும் பிரிதிநிதிகள் குழுவுடன் கடந்த வார இறுதியில் லண்டன் விஜயம் செய்து நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில், இரு ஜனாதிபதிகளின் அண்மைய லண்டன் விஜயங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை மாத்திரமன்றி மைத்ரி குடும்பம் ஆடம்பரத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் குடும்பம் என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
மஹிந்த ராஜபக்ச வந்த போது அவர் மாத்திரம் ஒரு நாள் தங்கியிருப்பதற்காக செலவு செய்ததன் ஒரு சிறு பகுதியே அனைத்து பிரமுகர்களும் தங்கியிருப்பதற்கு செலவாகியிருந்தமையும் வந்திருந்த பிரமுகர்கள் குழுவும் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்பவே வீண் விரயத்தை விரும்பித் தவிர்ப்பவர்களாகவும் இருந்தமை முக்கியமான விடயமாகும். இந்நிலையில் ஜனாதிபதியின் எளிமையான செயற்பாட்டைக் கண்டு இரு பாதுகாப்பு பிரிவினர்களிடம் இரு வேறு அனுபவத்தைக் கேட்டறிந்தோம்.

ஜனாதிபதி
முதலாவது, ஜனாதிபதியுடனேயே வருகை தந்திருந்த அவரது பிரத்யேக பாதுகாப்புக்குழு அடுத்தது பிரித்தானிய அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு குழு. இந்த இரு அணிகளிடமும் வெ வ்வேறு அனுபவங்கள் இருந்தன. இலங்கைப் பாதுகாப்புக் குழுவைப் பொறுத்தவரை அவர்கள் ஜனாதிபதியிடம் இன்னும் நெருங்கிப் பழகுவதற்குத் தயங்குவதோடு முன்னாள் ஜனாதிபதியின் அதிகார ஆளுமையிலிருந்து இன்னும் விடுபாடாத சூழ்நிலையையே காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை பிரித்தானிய பாதுகாப்புக் குழுவினர் தமது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் ஒரு வகை ஆச்சரியத்துடனேயே காணப்பட்டார்கள்.
இதில் பிரித்தானிய பாதுகாப்பு ஊழியர்களிடம் தனித்தனியாக ஒரே கேள்வியைக் கேட்டுப் பார்த்தோம். அதாவது இதற்கு முன் இருந்த ஜனாதிபதியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா என்பது தான் அது. அதில் மூத்த உறுப்பினர் ஒருவர் ஆம் நான் அவர் வந்த போதும் பாதுகாப்பு கடமையில் இருந்தேன் என்றார். அப்படியானால் அவருக்கும் இவருக்கும் வித்தியாசம் ஏதாவதிருக்கிறதா என கேட்க, இவரா ஜனாதிபதி என்று கேட்கும் அளவுக்கு மிக மிக எளிமையான மனிதராக இருக்கிறாரே என்று அவர் கூற இன்னொரு அதிகாரி ஆம்.. நானும் அவரைப் பற்றி அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார்.
இத்தனைக்கும் இந்த சம்பாசனை இடம்பெறும் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு மிகச் சாதாரண சராசரி இளைஞனைப் போன்று பந்தா இல்லாமல் அவ்வப் போது அவ்வழியே நடந்து செல்வதும் எல்லோரையும் பார்த்து புன்முறுவலுடனேயே ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்த்து எழ முனையும் பாதுகாப்பு அதிகாரியை ‘உட்காரப்பா’ என்று சொல்வது போல் சைகை செய்வதுமாக தனது கடமைகளை செய்து கொண்டிருந்தார்.

முதற்பெண்மணி
இது ஒரு புறமிருக்க, அவரது மனைவி திருமதி மைத்ரிபால சிறிசேனவோ தன் சமையல் கடமைகளை செய்ய முடியவில்லையே என வருத்தத்துடன் முதல் நாளும் பின் அவ்வப்போது தன் கையாலேயே சமைக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றதனால் தானுண்டு தன் கடமையுண்டு என்று இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கும் மேலாக அவ்வப்போது ஜனாதிபதியுடன் வெளியில் செல்ல நேர்ந்தால் செல்லும் வழியில் சில வேளைகளில் ஜனாதிபதியை ஒரு தடவையேனும் பார்க்க வேண்டும் எனும் ஆவலுடன் ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் குவிந்திருப்போரைக் கண்டால் ஜனாதிபதி அங்கு சென்று அவர்களோடு உரையாடி விட்டு வரும் வரையும் மிகப் பொறுமையாக ஏதாவது ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டு எமக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு தடவை அவரோடு உரையாடிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் இர்பான் இக்பால் மூலமாக புகைப்படம் ஒன்றை எடுப்பதற்காக அனுமதி கேட்ட போது வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டு வேண்டாம் என்று கூட சொல்ல முடியாமல் அவர் தயங்கிக் கொண்டே இருந்ததை அவதானித்த போது அவரிடம் இருந்த எளிமையை நினைத்து ஆச்சரியமாகவே இருக்கிறது. இறுதியில் நேற்று மாலை ஜனாதிபதி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் போது அங்கு 20 பேர் வரை கூடியிருந்த சூழ்நிலை காணப்பட்டது.

ஜனாதிபதியின் புதல்வர்
ஜனாதிபதி உட்பட அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலியும் புறப்பட்டுச் சென்ற பின் அங்கு எங்கள் குழுவில் இருந்த மூவருடன் சேர்த்து பத்துப் பேர் நின்றிருந்தோம். சில நிமிடங்களில் கலைந்து செல்ல மெதுவாக நகர்ந்த போது எமது அருகில் எங்களோடு ஒருவராக மிகச் சாதாரணமாக ஜனாதிபதியின் மகனும் தனது நண்பர்கள் இருவருடன் நடந்து வந்தார். பின், புகையிரத நிலையம் வந்ததும் சென்று வருகிறோம் என ஒரு நண்பனாக அவரும் விடைபெற்றுச் சென்ற இந்த அனுபவங்களை இலங்கையின் முதற்குடும்பம் பற்றி வாசகர்களும் அறிந்து கொள்ள இங்கு பதவிலிடுகிறோம்.

இங்கு காணப்படும் படங்கள் கடந்த 10ம் திகதி புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை தூதரக ஏற்பாட்டில் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி தனக்கான அழைப்பு வரும் வரை தனியாக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிந்த இடத்தில் அமர்ந்திருந்த வேளையில் எடுக்கப்பட்டவையாகும். எமது நிருபரின் வேண்டுகோளை மறுக்காது ஒத்துழைத்ததோடு எந்தவொரு கட்டத்திலும் அணுகி உரையாடக்கூடிய சாதாரண நபராகவே அவர் நடந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சோனகர்.கொம்

0 comments:

Post a Comment