இரவோடு இரவாக ஹமாஸின் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே வந்த ஏராள ஏவுகணைகள்!
இஸ்ரேலிய ராணுவமும், ஹமாஸ் இயக்கமும் மோதிக்கொள்ளும் யுத்தத்தில், இஸ்ரேலியத் தரப்பில் இதுவரை பெரியளவு சேதம் ஏதுமில்லை. ஆனால், இதே நிலைமை நீடிக்காது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
உளவு வட்டாரத் தகவல்களின்படி காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் பல நூற்றுக் கணக்கான M-302 ஏவுகணைகளை தமது ஆயுதக் கிடங்குகளில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு காசா பகுதியின் வெவ்வேறு இடங்களுக்கு பல வாகனங்களில் இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த ஏவுகணைகள் காசா – இஸ்ரேல் எல்லையருகே கொண்டு செல்லப்படவில்லை.
காசா – இஸ்ரேல் எல்லைப் பகுதி முழுவதும், இஸ்ரேலிய உளவு சாட்டலைட்டுகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அதைவிட காசா பகுதிக்குள் தமது உளவாளிகள் பலபேரை ஊடுருவ விட்டுள்ளது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத். இந்த காரணங்களால்தான் காசா இரவோடு இரவாக டிஸ்ட்ரிபியூட் செய்த ஏவுகணைகள், எல்லைப் பகுதிக்கு வரவில்லை என ஊகிக்கலாம்.
எல்லைப் பகுதிக்கு மேற்கே, காசாவின் மெடிட்டரேனியன் கடல் பகுதிக்கு அந்த ஏவுகணைகளை கொண்டுபோய் நிலத்தடி ஸ்டோரேஜ் இடங்களில் வைத்திருக்கலாம் ஹமாஸ்.
காசாவின் மெடிட்டரேனியன் கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைப் பகுதிக்கு 1 மணி நேரத்துக்கும் குறைந்த நேரத்தில் இந்த ஏவுகணைகளை கொண்டுவந்து விடலாம். இதனால், ஏவுகணைகளை அடிப்பதற்கு சற்று முன்னர் அவற்றை ஏவுகணை தளங்களுக்கு கொண்டுவர முடியும்.
இங்கு குறிப்பிடப்படும் M-302 ஏவுகணைகள் எவ்வளவு எண்ணிக்கையில் ஹமாஸிடம் உள்ளது என்ற தகவல் யாரிடமும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் ஏவுகணைகளை காசா பகுதிக்குள் கடத்திக்கொண்டு வந்தார்கள்.
காசா பகுதிக்கு கடல் மார்க்கமாக ஆயுதங்கள் வந்து சேர்கின்றன என இஸ்ரேல் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறது. அந்த கடல் பகுதி முழுவதும் இஸ்ரேலிய கடற்படையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்கள் இஸ்ரேலியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆயுதப் படகுகளை கொண்டுவரும் சாமர்த்தியசாலிகளாக உள்ளார்கள்.
கடல் வழி கடத்திவரப்படும் ஆயுதங்கள் எப்போதாவது ஒரிரு தடவைகள் அபூர்வமாகவே இஸ்ரேலிய கடற்படையிடம் சிக்கியது நடந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் தெற்கு செங்கடல் பகுதியில் ஆயுதக் கப்பல் ஒன்றை வளைத்துப் பிடித்தன இஸ்ரேலிய கடற்படை கப்பல்கள். நடுக் கடலில், இஸ்ரேலிய கரையில் இருந்து சுமார் 1000 மைல்கள் தொலைவில் இந்த கப்பல் அகப்பட்டது. அந்தக் கப்பலில் ஏராளமான அளவில் M-302 ஏவுகணைகள் இருந்தன. இந்த ஏவுகணைகள், காசா பகுதிக்கு அனுப்பப்பட்டன எனவும், அவை ஈரான் அரசால் அனுப்பப்பட்டவை எனவும் குற்றம்சாட்டியது, இஸ்ரேல்.
ஏவுகணைகள் தமக்கு வரவில்லை என்றது ஹமாஸ். அவற்றை தாம் அனுப்பவில்லை என்றது ஈரான். ஆனால், அவை தெஹ்ரானில் இருந்து ஹமாஸூக்கு வந்த ஏவுகணைகள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த ஒரு ஷிப்மென்ட் அகப்பட்டது பற்றி ஹமாஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், அதுபோல பல ஷிப்மென்ட்கள் அதற்குமுன் அவர்களை வந்தடைந்து விட்டன. இந்த சம்பவத்துக்கு பிறகும், ஆயுதக் கப்பல்கள் வந்தன. அந்தக் கப்பல்களில் இருந்து ஆயுதங்கள் சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு, காசா கரைக்கு வந்து சேர்ந்தன.
இதனால், ஹமாஸிடம் எவ்வளவு எண்ணிக்கையில் ஏவுகணைகள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. பல ஆயிரங்கள் இருக்கலாம்.
கடந்த 4 தினங்களாக இஸ்ரேல்மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை மழை பொழியும் ஹமாஸ், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே M-302 ஏவுகணைகளை ஏவியது.
ஆனால், தற்போது ஏராளமான எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகள் ஆயுதக் கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்ற தகவல் வந்துள்ளதால், இந்தப் பகுதியில் யுத்த நிலையில் மாற்றம் ஏற்படலாம்.
கைபர் தளம்.
0 comments:
Post a Comment