கஞ்சிக்கோப்பைகளுக்குள் இனியும் கவிழ்ந்து போகாது முஸ்லிம் சமூகம்….
முஹம்மது நியாஸ்:
வழமை போன்று இம்முறையும் வேப்பிலையில் தேன் பூசும் பாணியிலான இப்தார் ஒன்றை இம்மாதம் எதிர்வரும் 21ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றார். கிரீஸ் பூதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கிவருகின்ற இனவாதிகளின் முஸ்லிம்கள் மீதான அதிகபட்ச வன்முறைகளின் பின்னரும் ஒரு கஞ்சி கோப்பையை வைத்தே நமது பிரதிநிதிகளை வாயடைக்க வைத்துப் பழகிப்போன அரசாங்கம் அந்தவகையில் இம்முறையும் முஸ்லிம்களின் மீதான இப்தார் என்னும் உளமாற்றத் தந்திரோபாயத்தை மிகவும் இலாவகமாகவும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளது.
பொதுவாகவே நபிகளாரின் காலத்திலும் முஸ்லிம்களின் மீதான அச்சுறுத்தல் அதிகமாக இருந்த காலப்பகுதியில் கூட நபிகளார் (ஸல்) அவர்கள் அந்நிய மக்களை ஒன்றிணைத்தோ அல்லது அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தோ இவ்வாறான இப்தார் நிகழ்வுகளை நடாத்தியதற்கான எந்தவொரு வரலாற்றுச் சான்றுகளையும் நானறிந்த வரையில் காணக்கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் இன்றைய கால சூழ்நிலையினை கருத்திற்கொண்டு நம்மவர்கள் மேற்கொள்ளுகின்ற மதநல்லிணக்க இப்தார்களை கூடாது என்று கூறுவதற்கும் என்னிடம் போதிய ஞானம் இல்லாவிட்டாலும் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற இப்தார் நிகழ்வுகளுக்கு ஓர் காத்திரமான காரணப்பின்னணி இல்லாவிடின் அது ஓர் வீண் விரயமேயாகும். அழ்ழாஹ் வீண் விரயம் செய்வோரை ஒரு போதும் நேசிப்பதில்லை. எனவே ஒரு நல்ல செயல் என நாம் கருதி மேற்கொள்ளுகின்ற இந்த செயற்பாடானது இறுதியில் அழ்ழாஹ்வின் சாபத்தை நம்மீது அள்ளிவீசாமல் பாதுகாத்துக்கொள்வது நமது கைகளிலேயே உள்ளது.
இக்கட்டுரையில் நாம் மிக முக்கியமாக அலசுவதற்காக எடுத்துக்கொண்ட விடயம் இதுதான்,
அதாவது இன்று நாட்டின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச வேலைத்தளங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களும் ஏனைய மக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளுகின்ற இந்த இப்தார் நிகழ்வானது மத நல்லிணக்கம் என்னும் நோக்கில், ஒருவர் பின்பற்றுகின்ற மதத்தை மற்றொருவர் மதிப்பது எனும் நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகவே கொள்ளப்படவேண்டும். மாத்திரமின்றி இஸ்லாம் காட்டித்தந்த வரையறைகளுக்குள் இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் இடம்பெறுமாக இருந்தால் அதில் அதிகளவான மக்கள் பங்கெடுப்பதும் வரவேற்கத்தக்கதே.
ஆனால் இதில் இன்று மிகப்பெரும் சர்ச்சையாகவும் வேடிக்கையாகவும் மாறியிருப்பது இந்த இப்தார் நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற கேலிக்கூத்தான செயற்பாடேயாகும்.
காரணம் என்னவெனில் நான் மேலே குறிப்பிட்டது போன்று பொதுவாக இந்த நிகழ்வுக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட இவ்வுலகம் சார்ந்த விடயம் எனக்கருத்திற்கொண்டேனும் ஒரு உயரிய நோக்கமான மத நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றமையால் அதனை நாம் வரவேற்கிறோம்.இதன் போது மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகள் பலமடைவதுடன் மதங்களைப்பற்றிய தவறான எண்ணங்கள் களையப்பட்ட வரலாறுகளும் ஏராளமாகவே நடந்தேறியுள்ளன. எனவே அந்த வகையில் இந்த மதநல்லிணக்க இப்தார்கள் சமகாலத்திற்கு பெரிதும் ஏற்புடையவையாகும்.
அனால் நமது நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அவர்களோ விருந்தோம்புகின்ற இப்தார்கள் இவ்வாறானவைகளல்ல. இந்த இப்தார் நிகழ்வானது மதநல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டதும் கிடையாது. மாறாக ஒரு மதத்தின் மீது தாம் மேற்கொண்ட வன்முறையினை, அப்பட்டமான அடந்தேறலை மூடி, மறைத்துப் பூசி மெழுகிப்போர்த்துவதற்காக வெறுமனே சகட்டு மேனிக்காக மேற்கொள்ளப்படுகின்ற இப்தார் நிகழ்வே நாம் மேற்கூறிய ஜனாதிபதியும் இன்னும் அவரோடு சார்ந்த அந்தஸ்த்துக்களில் வீற்றிருக்கும் பொறுப்புதாரிகளும் மேற்கொள்கின்ற பெயரளவிலான மதநல்லிணக்க இப்தார்கள் என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் தெளிவாகப்புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
ஏனெனில் உண்மையிலேயே இவ்வாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரால் மேற்கொள்ளபடுகின்ற இப்தார்கள் முஸ்லிம்கள் மீதான பற்றை, மதிப்பை, மரியாதையினை வெளிக்கொணர்வதற்காகத்தான் நடாத்தப்படுகின்றன என்றால் அந்த பற்றையும் பாசத்தையும் வெளிக்கொணர்வதற்காக இந்த அரசாங்கத்திற்கு கடந்த காலங்களில் ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் சாதகமாகவே அமைந்திருந்தன. அந்தசந்தர்ப்பங்களிலெல்லாம் தம்மை அரச பதவியில் வீற்றிருக்கவைத்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை, பாதுகாப்பை, மத சுதந்திரத்தை தமது அனுசரணையின் கீழ் இயங்கிவருகின்ற பேரினவாதக் காடையர்களின் காலடிகளில் கசக்கி வீசிய இந்த அரசாங்கம் நோன்பு காலங்களில் மாத்திரம் “மத நல்லிணக்க இப்தார்” என்னும் போர்வையில் வேப்பிலையில் தேன் பூசிய கதையாக ஒரு கஞ்சிக்கொப்பையில் அத்தனை அநீதிகளையும் மூடி மறைக்க எத்தனிப்பது தனது தந்திரோபாயத்தின் மூலமாக முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்கின்ற செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
சென்ற மாதம் அழுத்தகம நகரில் இடம்பெயற்ற முஸ்லிம்களின் மீதான உச்சபட்ச வன்முறையினை கூட முஸ்லிம்கள் மீதே பாரத்தையும் பழியையும் அள்ளிவைகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
அந்தக் கலவரத்தில் இனவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மரணித்த முஸ்லிம்களைக் கூட வாள் வீச்சில் மரணித்ததாக பொய்யான அறிக்கை தயாரிப்பதற்கு உடந்தையாக இருக்கின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
பல மில்லியன் கணக்கான சொத்துக்களும் பெறுமதிமிக்க ஐந்து உயிர்களையும் இழந்து விரக்தி நிலையின் உச்சகட்டத்திற்கே சென்றுள்ள இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் இந்த இக்கட்டான நிலைக்குக் காரணமான ஞானசார என்னும் பயங்கரவாதியை தமது உள்வீட்டுக்குள் வைத்துப் பாதுகாக்கின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து தெருவோர அநாதைகளாக நிற்கின்ற அளுத்கம முஸ்லிம்களை தீவிரவாதிகள், வெளிநாட்டுக் கைக்கூலிகள் என வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகின்ற வகையில் அறிக்கை விடுகின்ற ஞானசார என்னும் தேச விரோதிக்கு அடைக்கலம் கொடுக்கின்ற இந்த ஜனதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
இலங்கை நாட்டில் வேரோடிப்போயிருந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை தாம் ஒரு சிறுபான்மையாக இருந்த போதிலும் இந்த அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியாக தமது ஒத்துழைப்புக்களை அள்ளிவழங்கிய முஸ்லிம்களை வெளிநாட்டித் தீவிரவாதிகள் என சில இனவாத அமைச்சர்கள் முத்திரை குத்துகின்றபோதும் அதனை கண்டிக்க வக்கில்லாத இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
இதே அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் ஐக்கிய நாட்டின் சர்வதேச விசாரணைக் கூண்டில் சிக்கிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரையும் இலாவகமாக மீட்டெடுத்த முஸ்லிம்களை தேச விரோதிகள், இனவாதிகள் என சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக்காட்டுகின்ற இரத்தக்காட்டேறிகளை சுதந்திரமாக நாட்டில் உலாவ விட்டுள்ள இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்,
முஸ்லிம்களின் உயிர்நாடியான பள்ளிவாயில்கள் தம்புள்ளை தொடக்கம் கிராண்ட்பாஸ், மஹியங்கணை, மற்றும் அழுத்கம வரையிலான சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகையில் தகர்க்கப்பட்டபோது ஆழ்ந்த தூக்கத்தில் அயர்ந்திருந்த இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்
வெறுமனே நோன்புகாலங்களில் மாத்திரம் இப்தார் என்னும் போர்வையில் முஸ்லிம்களின் மீதான தங்களின் ஆழ்ந்த அன்பையும் அக்கறையையும் வெளிக்கொணரப்புறப்பட்டிருப்பது வேடிக்கையும் நயவஞ்சகத்தனமுமாகும்.
உண்மையில் இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கஞ்சிக்கோப்பையில் தங்களின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதை விடுத்து இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து, சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழிவகைகளை முறையாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தாங்கள் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள அன்பும் அக்கறையும் உண்மையானதாக இருந்திருந்தால் தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்த்தெறியப்பட்ட போது அதற்குக் காரணமாக இருந்த சிங்களப் பயங்கரவாதிகளை கையும் மெய்யுமாகக் கைது செய்து முஸ்லிம்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு செயல் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்
இந்த பிரமுகர்கள் இருவரும் தமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதான அக்கறைக்கு செயல்ரூபம் கொடுக்க நாடியிருந்தால் சிங்களப் பேரினவாதிகளால் கிராண்ட்;பாஸ் பள்ளிவாயில் அடித்து நொறுக்கப்பட்ட போது அங்கே தமது அதிகாரத்தின் கீழுள்ள காவல்த்துறையினரை சட்டத்தை நிலை நாட்டும்படி பணித்திருக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்திருக்கவேண்டும்.
இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் யதார்த்தமாகவே இந்நாட்டு முஸ்லிம்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருந்திருந்தால் பௌத்த பேரினவாத, பயங்கரவாதக் காடையர்கள் சிலரின் தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பந்தாடப்பட்ட முஸ்லிம்களின் ஏகபோக உரிமையான ஹலால் சான்றிதழை முஸ்லிம்களிடத்திலேயே அமானிதமாகத்திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும்.
மாத்திரமல்லாமல் இந்த அரச சகோதரர்கள் இருவரும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது நன்றியுணர்வுள்ளவர்களாக இருந்திருந்தால் இனவாதக்காடையர்களால் முஸ்லிம் சமூகத்தின் மீது உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் மேடைகள் தோறும் காட்டுக்கூச்சல் போடுகின்ற ஞானசார என்னும் பயங்கரவாதியை கைது செய்து தங்களின் நீதியான, இனங்களுகிடையிலான் பாரபட்சமற்ற நீதியை நிலைநாடியிருக்க வேண்டும்.
இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் கூறுவது போன்று முஸ்லிம்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் அழுத்கம நகரில் ஊரடங்கச்சட்டம் அமுலில் இருகின்றபோதே அரச காவல்த்துறையின் அனுசரணையோடு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் காரணமாக இருந்த, தனது வார்த்தைப்பிரயோகங்களால் சிங்கள மக்களை வன்முறையின் பக்கம் தூண்டிய, முஸ்லிம்களை கொதிப்படையச்செய்த ஞானசார என்னும் இழிந்த பிறவியை இந்நாட்டை விட்டே துரத்தியடித்திருக்க வேண்டும்.
ஆனால் ரமழான் காலம் வந்துவிட்டால் மாத்திரம் முஸ்லிம்களின் மீதுள்ள அன்பையும் அக்கறையையும் வெளிக்கொணர்வதர்காகப் புறப்பட்டுள்ள இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின்போதும் வன்முறைகளின்போதும் அந்த அன்பையும் அக்கறையையும் தங்களின் முதுகுக்குப்பின்னால் ஒளித்துக்கொண்டு இனவாதிகளின் காவியுடைக்குள் தஞ்சம் புகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
தம்புளை நகரில் தகர்க்கப்பட்ட பள்ளிவாயில் விடயத்தில் இன்று வரைக்கும் முஸ்லிம்களுக்கு சாதகமான, நீதியான எந்தவொரு தீர்ப்புரைகளும் வழங்கப்படவில்லை.
மஹியங்கனை, கிராண்ட்பாஸ் பள்ளிவாயில்கள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நோலிமிட், பெஷன் பக் வர்த்தக நிலையங்களுக்கு பௌத்த இனவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதிகள் அத்தனைக்கும் இன்றுவரைக்கும் எந்தவொரு நீதியான, பக்க சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்படவுமில்லை. உரிய முறையிலான உண்மையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுமில்லை.
மாறாக பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களால் பல பில்லியன் கணக்கான சொத்துக்களையும் ஐந்து உயிர்களையும், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளையும் இழந்து இந்த ரமழான் காலத்திலும் உடுக்க ஆடைகள் இன்றி உண்ண உணவின்றி முஸ்லிம் சமூகம் அல்லலுறுகின்ற அழுத்கம சம்பவத்தில் இன்று வரைக்கும் முஸ்லிம்களே தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் பதிவிட்ட ஹன்சார்ட் அறிக்கையில் கூட அழுத்கம கலவரத்திற்கு முஸ்லிம்களே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
அழுத்கம முஸ்லிம்களின் மீதான சிங்களப் பேரினவாதிகளின் அடந்தேறல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண குறிப்பிடுகிறார். இதே வார்த்தையினை ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகிறார்.
ஆக, இலங்கை நாட்டில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படுகின்ற அத்தனை அடந்தேறல்களின்போதும் அந்த இனவாதிகளுக்கே பாதுகாப்பும் அனுசரணையும் அடைக்கலமும் வழங்குகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இறுதியில் அவ்வன்முறைகள் தொடர்பான அறிக்கைகளை வழங்குகின்றபோதும் அதன் பாரத்தையும் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு இனவாதக்காடையர்களை காப்பாற்றிவிடுகின்ற இழிந்த செயலையே தொடர்ந்தேச்சையாக மேற்கொள்ளுகின்றனர்.
ஆக, காவியுடைக்கொரு நீதியும் தாடி வைத்தவனுக்கு மற்றொரு நீதியும் என்ற காடைத்தனமான சட்டமூலமே இந்நாட்டில் அமுலில் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் என்றால் தங்களின் தேவைகளுக்கு மாத்திரம் கிள்ளுக்கீரைகளாகவும் கறிவேப்பிலைகளாகவும் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுகின்ற இந்த ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் ரமழான் காலம் வந்து விட்டால் மாத்திரம் நோன்புதிறக்கின்ற அந்தப் பத்து நிமிட நேரப்பொழுதில் மட்டும் முஸ்லிம்கள் மீதான அன்பும் அக்கறையும் பொங்கி வழிந்தோடுவதன் பின்னணிதான் என்ன?
பாதுகாப்புக்கடமைகளுக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறுகின்ற காவல்த்துறையினர் சிங்களப்பேரினவாதிகளால் முஸ்லிம்கள் மீது அடந்தேறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் உயிர்களை, உடமைகளை பாதுகாக்கத் துப்பற்ற நிலையில் கைகட்டி, வாய்பொத்தி மௌன விரதம் அனுஸ்ட்டிகின்ற அல்லதுவெளிநாடுகளுக்குப் பறந்தோடுகின்ற இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் ரமழான் காலத்தில் மாலை ஆறு மணிதொடக்கம் ஆறரை மணிவரைக்கும் மாத்திரம் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் கொண்டு நடந்து கொள்வதன் மர்மம்தான் என்ன?
முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் அவ்வப்போது ஆட்சிபீடம் எறிய அரசாங்கங்கள் அனைத்திற்கும் தங்களால் முடியுமான பங்களிப்பை வழங்கியே வந்துள்ளது. அது போன்றுதான் தற்போதுள்ள மஹிந்த ராஜபக்ச அரசிற்கும் தமது உச்சபட்ச பங்களிப்பை வழங்கி அவர்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கும் மூலகாரணியாக இருந்துள்ளது. அவ்வாறான ஓர் உன்னத சமூகத்தை, அதன் இருப்புக்களை இந்த அரசாங்கம் சரிவரப்பேணிப் பாதுகாக்கத்தவறிவிட்டது.
நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையானது உரிய முறையில் செயல் ரூபமளிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் வாழ்வாதாரம், மத சுதந்திரம், கலாச்சார உரிமைகள் என்பன உரிய முறையில் பாதுகாக்கப்படுவதற்கு இந்த ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இதுவரையில் செயற்பாட்டு ரீதியாக எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளின் போது குற்றவாளிகளை துல்லியமான முறையில் இனங்கண்டு பாரபட்சமற்ற முறையில் தண்டனைகள் வழங்கப்படவில்லை. மாறாக இனவாதிகளால் பாதிப்புகளுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்களே இந்த அரசாங்கத்தினால் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே இவ்வாறான, முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கு அரசாங்கமே கைகொடுத்து உதவி புரிகின்ற தருணத்தில் ரமழான் கால இப்தார் நிகழ்வென்பது ஒரு சூழ்;ச்சிமிக்க ஒன்றாகவே நோக்கப்படுகிறது. இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் இனரீதியான எதுவித அச்சப்பாடுகளுமில்லாமல் அரசோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ்வது போன்றதொரு காட்சியினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக வருடாவருடம் அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுகின்ற நாடகமாகவே இந்த இப்தார் நிகழ்வை முஸ்லிம்கள் நோக்குகின்றனர்.
அதன் காரணமாகவே இவ்வருடம் ரமழான் மாதம் எதிர்வரும் 21ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் இப்தார் நிகழ்வுக்கான அழைப்பினை காத்தான்குடி வாழ் உலமாக்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் அனைவருமே புறக்கணித்துள்ளதுடன் அதற்கான காரணமாக அளுத்கம சம்பவத்ததையே மேற்கோள்காட்டியும் உள்ளனர்.
இதன் காரணமாக இம்முறை நடக்கவிருக்கின்ற பாதுகாப்பு செயலாளரின் ஏற்பாட்டிலான இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் அல்லது இப்தார் ஏற்பாடு கைவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து குருவிச்சைகளாகவும் ஒட்டுண்ணிகளாகவும் ஒட்டிக்கொண்டுள்ள சில முதுகெலும்பற்ற, குரல்வளையற்ற பாதியமைச்சர்களும் மீதியமைச்சர்களும் வேண்டுமானால் இதில் பங்கெடுத்து தங்களின் நிமிர்த்த முடியாத வால்களை அரசிற்கு விசுவாசமாக அசைத்துக்கொள்ளமுடியுமே தவிர, சமூகத்தின் உண்மைநிலையினை மனதார உணர்ந்த எந்தவொரு முஸ்லிம் பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என்பது வெள்ளிடை மலையான ஒன்றாகும்.
இதன் காரணமாக தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்த நமது முஸ்லிம் சமூகத்தின் அநாதரவான நிலையிமையினை மனதார உணர்ந்தவர்களாக முஸ்லிம் சமூகத்தின் சமூகப்பற்றாளர்கள் அநேகர் வெறுமனே அரசாங்கத்தின் கஞ்சிக்கோப்பையில் தமது சமூகத்தின் அவலத்தை மூடிமறைத்துவிடாமல் சமூக உணர்வுடன் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் விடிவு ஏற்படுகின்ற வரைக்கும் இந்த அரசாங்கத்தின் இவ்வாறான சகட்டு மேனிக்கு மேற்கொள்ளுகின்ற பகட்டான நிகழ்வுகளை தொடர்ந்தும் புறக்கணித்தே வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.
http://srilankanmuslim.wordpress.com/
0 comments:
Post a Comment