2015 தேர்தலும் கற்றுக் கொண்ட பாடங்களும். உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தேர்தல் முடிவுகள் முற்றாக வெளிவருவதற்கு முன்னரே மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, அலரி மாளிகையிலிருந்து தான் வெளியேறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
30 வருட யுத்தத்தை வென்று வரலாறு படைத்தவர் சுதந்திரத்திற்குப் பின்னர் பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை நாட்டில் முன்னெடுத்தவர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் தனதாக்கி வைத்திருந்தவர் சிங்கள மக்களின் மாமன்னராக சிலாகிக்கப்பட்டவர்.
சிங்கள மக்கள் தெரிவு செய்வதற்கு இனி நாட்டில் வேறொரு தலைவர் தற்போதைக்கு இல்லை எண்ணுமளவு பெரும் செல்வாக்கைத் தனதாக்கிக் கொண்டவர். பயங்கரவாதத்தை ஒழித்தவர் என உலக மட்டத்தில் பேசப்படும் நாயகனாகப் புகழ் பெற்றவர். பிராந்திய வல்லரசான சீனாவின் ஆப்த நண்பர். உலகில் அதிகூடிய அதிகாரத்தை அமைப்புச் சட்டம் மூலம் அனுபவித்தவர். தனது ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கவல்ல குடும்ப உறுப்பினர்களையும் திறமை மிக்க அமைச்சர்களையும் பெற்றிருந்தவர்.
தனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே பதவியைத் துறந்து செல்லும் அவலத்திற்கு ஏன் அவர் ஆளாக வேண்டும்?
இந்த வினா 2015 ஜனாதிபதி தேர்தல் முடிந்த நிலையில் என்னை அறியாமலே எழுந்த வினா. இந்த வினாவின் விடையைத் தேடுவதற்காக எனது எண்ண அலைகளை பின்னோக்கி படரவிட்டேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுகள் அலையலையாக வந்தன. அவை சிங்கள மக்களிடம் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் உள்ளங்களிலும் நீங்காதவை. LTTE பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த அந்த வரலாற்று நிகழ்வை நினைத்து அன்று போல் இன்றும் நான் குறைவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்.
மஹிந்தவுக்கும் பயங்கரவாதத்திற்கெதிராகப் போர் புரிந்து போரில் தங்களது இன்னுயிர்களைப் பலி கொடுத்த அனைவருக்கும் எனதுள்ளம் உயிரோட்டத்துடன் இன்றும் நன்றி செலுத்துகிறது.
எனினும் அத்தகைய அனுதாபங்களும் நன்றியுணர்வுகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குப் பயன் தரவில்லை. அதுதான் 2015 ஜனாதிபதித் தேர்தல் எமக்குணர்த்திய உண்மை.
புதிய ஜனாதிபதிக்கும் அவரை ஆட்சிக்கு அழைத்து வருவதற்காக ஒன்றிணைந்தும் மறைமுகமாகவும் உழைத்தவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தவனாக. தேர்தல் அரங்குகளில் அவர்கள் எடுத்துச் சொன்ன நல்லாட்சி தேசிய அரங்கில் மலர்வதற்குப் பிரார்த்தித்தவனாக... முன்னாள் ஜனாதிபதியின் 10 வருட ஆட்சியின் பக்கம் எனது கவனத்தைத் திருப்புகிறேன்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறியுள்ளார். தோல்வியின் போது தோல்வியை ஒப்புக் கொள்ளும் நற்பண்பு அவரிடம் இருக்கிறது. எனினும் வெற்றியின் போது எவற்றையெல்லாம் மதிக்க வேண்டுமோ அவற்றை மதிக்கின்ற பண்பு அவரிடம் இருக்கவில்லை. அதுவே அவரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கியது. உலகின் ஆட்சியாளர் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தையே மஹிந்த உணர்த்திவிட்டுப் போயுள்ளார்.
மஹிந்த தனக்குப் சாதகமானவற்றையும் அவசியம் என்று கருதியவற்றையும் தவிர வேறு எதனையும் மதிக்கவில்லை. யுத்த வெற்றி தந்த பெருமையும்... நிறைவேற்று அதிகாரமும்.. சீனாவின் பக்கபலமும்.. அபிவிருத்தி முன்னெடுப்புகளும் சோதிடர்களின் ஜாதகமும் தனக்குப் போதும், தனது ஆட்சியை ஸ்திரமாக வைத்திருப்பதற்கும் போதும் என்று அவர் கருதினார்.
தனது அமைச்சர்களை அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை. அவர்கள் தங்களது அமைச்சுகள் மூலம் முன்னெடுக்க விரும்பிய செயற்திட்டங்களுக்கு இடமளிக்கவில்லை. ஆற்றல் மிக்கவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு ஆட்சி செய்தார் மஹிந்த.
எதிர்க்கட்சியையோ, ஏனைய சிறுபான்மை அரசியற் கட்சிகளையோ அவர் மதிக்கவில்லை. அக்கட்சிகளை உடைப்பதிலும் அவற்றிலிருந்து சிலரை ஆசை காட்டி பதவிகள் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்வதிலும் அவர் கவனம் செலுத்தினார். பணத்திற்காக வந்தவர்கள், பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் ஒன்று சேர்ந்து அமைக்கும் அரசு பலமானதல்ல. அவர்களால் உருவாக்கப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒரு சக்தியல்ல என்பதை அவர் உணரத் தவறினார்.
தனது சீரிய பண்புகளும் உன்னதமான கொள்கைகளும்தான் அவர்களைத் தன்னோடு இணையடைய வைத்திருக்க வேண்டும். எனவே அத்தகைய கொள்கைகள், உயர் குணங்களின் பக்கம் கவனம் செலுத்துவோம் என்பதை அவர் எண்ணிப் பார்க்கவில்லை. சீரிய பண்புகள் இல்லாத தலைமைத்துவமும் சிறந்த கோட்பாடுகள் இல்லாத அரசியலும் செல்லரித்த தளபாடம் ஒன்றிற்கு நிறம் பூசுவது போன்றாகும் என்பது அவருக்கு விளங்கவில்லை.
நாட்டின் சாசனமான அமைப்புச் சட்டத்தையும் அவர் பெரிதுபடுத்தவில்லை. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகின்ற ஷரத்துகளுக்குப் பதிலாக சர்வாதிகாரத்தைப் பலப்படுத்தும் சட்டத் திருத்தங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். தனது பதவிக் காலத்தை நீட்டிக் கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர் பயன்படுத்தியுள்ளாரே தவிர, அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்காக அதனை அவர் பயன்படுத்தவில்லை.
அதே போன்று நிபுணத்துவத்தையும் அவர் புறக்கணித்தார். அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்ற போது நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத திட்டங்களை ஆய்வினடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் செலவினத்தைக் குறைத்து வருமானத்தைக் கூட்டும் வகையிலும் தனக்கு ஆலோசனை வழங்கும் ஒரு நிபுணத்துவக் குழு செயற்படுவதை அவர் விரும்பவில்லை. தனது குடும்பத்தையும் கடன் கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களையுமே இது விடயத்தில் அவர் நம்பியிருந்தார். இதனால் அபிவிருத்திச் செலவினங்கள் பன்மடங்காகின. நாடு பாரிய கடன் சுமையில் வீழ்ந்தது.
மஹிந்த அரசின் இத்தகைய தவறுகளை துணிவாக எடுத்துப் பேசிய ஊடகங்களையும் மஹிந்த அரசு விட்டு வைக்கவில்லை. ஜனநாயக நாடொன்றின் சிறப்பம்சங்களுள் ஒன்றான ஊடக சுதந்திரம் இதனால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியது. ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் உயிரைப் பணயம் வைத்து தங்களது பணிகளைத் துணிவுடன் மேற்கொண்டார்கள்.
யுத்த வெற்றியையும் நிறைவேற்று அதிகாரத்தையும் சோதிடத்தையும் நம்பி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புறக்கணித்த மற்றும் அவமதித்த ஒன்றுதான் சிறுபான்மை சமூகங்கள்.
சிறுபான்மை சமூகங்களைப் புறக்கணிப்பதற்குப் பின்னால் அவர் அடைய விரும்பிய நோக்கங்கள் பல இருந்திருக்கலாம். அவற்றுள் ஒன்று பொரும்பான்மை சமூகத்தை இன ரீதியாகக் கட்டமைத்து எப்போதும் அதனைத் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு. மற்றையது, இல்லாமல் போன LTTE பிரச்சினைக்குப் பதிலாக மற்றுமொரு பிரச்சினை தனது அரசியல் வாழ்வுக்கு இன்றியமையாதது என்று கருதியமை அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை புலிகளின் முகவர்களாகவே அவர் சித்தரித்து வந்தார்.
இல்லாத இஸ்லாமியப் பயங்கரவாதம் இருப்பதாக ஒரு பிரமையை வளர்த்து பொரும்பான்மை சமூகத்தைத் தன் பக்கம் வலைப்பதாயின் முஸ்லிம்களைப் பகைத்தாக வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்களுக்கெதிராக பொதுபல சேனா போன்ற இனவாத மதவாத அமைப்புக்கள் செயற்படுவதை கண்டும் காணாமல் இருந்து கொண்டமை.
இவற்றோடு பௌத்த மதத்தையும் கூட அவர் அலட்சியம் செய்தார் என்றே கூற வேண்டும். குடு, எத்தனோல், கஸினோகாரர்கள் அவரது அரசின் பங்காளிகளாக இருந்தமை இதற்குச் சான்றாகும். இவர்களால் நாட்டுக்கு ஏற்படும் சீரழிவுகளையும் பௌத்த மதத்திற்கு ஏற்படும் அவமானத்தையும் தடுக்குமாறு பௌத்த பிக்குகள் உட்பட பலரும் முன்வைத்த வேண்டுகோள்கள் மஹிந்த அரசினால் உதாசீனம் செய்யப்பட்டன.
கஸினோ வியாபாரம் தொடர்பில் பாராளுமன்ற வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது அதற்குச் சார்பாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நான் கவலையடைகிறேன். அவர்களும் மஹிந்தவைப் போல மதங்களை மதிக்காதவர்களே.
இவற்றிற்கு மேலாக, நாட்டினதும் மக்களினதும் சொத்துக்களையும் அவர் மதிக்கவில்லை. தனதும் தனது குடும்பத்தினதும் எல்லையற்ற ஆடம்பரச் செலவினங்களை மக்களது பணத்திலிருந்து கணக்கின்றிப் பெற்றுக் கொண்டமையும் அவரது தலைமைத்துவ ஆளுமையை பயங்கரமாகச் சரியச் செய்தது.
தோல்வியை ஏற்றுக்கொண்டு மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றித் தீர்ப்பை மக்கள் வழங்கிய போது மதிக்க வேண்டியவற்றை மதித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?
இதுதான் 2015 ஜனாதிபதித் தேர்தல் எனக்குள் எழுப்பிய வினா.
மஹிந்த ராஜபக்ஷ மதித்திருந்த நிறைவேற்று அதிகாரம், யுத்த வெற்றி, சீனாவின் பக்கபலம், அபிவிருத்தி நடவடிக்கைகள், சோதிடம் என்பன அவரைக் காப்பாற்றவில்லை. அவர் புறக்கணித்த, அவமதித்த, அலட்சியம் செய்த அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை அரசுக் கட்டிலிலிருந்து இறக்கியிருக்கின்றன.
அவரது அரசிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியோறாத அதிருப்தியாளர்கள், பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், நீதியையும் நல்லாட்சியையும் நேசித்தவர்கள், பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் அனைத்தும் மஹிந்தவுக்கு எதிராக ஒன்று சேரும் சூழலை உருவாக்கிய பாவம் மஹிந்தவையே சாரும். எஞ்சியிருந்த இரண்டு வருட ஆட்சியையும் இழந்து நேர காலத்தோடு அவரை வீடு செல்ல வைத்த சாதனை நூற்றுக்கு நூறு வீதம் அவருடையதே. அதில் வேறு எந்த சக்திக்கும் பங்கில்லை.
இது 2015 தேர்தல் கற்றுத் தரும் ஒரு பாடம். மற்றொரு பாடம், நல்லவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை என்பதாகும். 2015 தேர்தல் களமும் பிரசார மேடைகளும் அதனை நன்கு உணர்த்தின. மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் மேடைகள் யுத்த வெற்றியையும், அபிவிருத்திகளையும் சிலபோது இனவாதத்தையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன.
எதிர்த் தரப்பின் பொது வேட்பாளரது மேடைகள் மஹிந்த அரசினால் விடப்பட்ட தவறுகளையும் அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் பேசி அவற்றிற்கு மாற்றீடான் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட மேடைகளாக இருந்தன.
மக்கள் 10 வருடம் சாதனைகள் படைத்த மஹிந்தவை ஒதுக்கிவிட்டு அவரது அளவு இதுவரை சாதனைகள் படைக்காத மைத்திரியைத் தெரிவு செய்துள்ளார்கள் எனின் அது நாட்டிற்கு நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் வழங்கிய வாக்குகளே.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இனம், மதம், மொழி பேதங்களை மறந்து நன்மைகளை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டு 2015 ஜனாதிபதித் தேர்தல் என்றால் அது மிகையல்ல.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இனம், மதம், மொழி பேதங்களை மறந்து நன்மைகளை ஆதரிக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டு 2015 ஜனாதிபதித் தேர்தல் என்றால் அது மிகையல்ல.
அதேவேளை, மற்றுமொரு அம்சத்தின்பாலும் நாட்டு மக்கள் கவனம் செலுத்தியாக வேண்டும் என்பதை 2015 தேர்தல் தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தின் எதிரிகளல்ல. அவர்கள் நன்மைக்கு ஒத்துழைக்க என்றும் எப்போதும் பெரும்பான்மை சமூகத்தோடு தயாராக இருக்கிறார்கள். பெரும்பான்மை சமூகத்தை வழிநடத்துவோர் தான் அந்த ஒத்துழைப்பை சிறுபான்மை சமூகங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை 2015 ஜனாதிபதித் தேர்தல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சி வேண்டி நின்ற சிங்கள அணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளார்கள் சிறுபான்மை சமூகத்தினர். சிங்கள சமூகத்திற்கு எதிராக இந்த தேர்தலில் அவர்கள் செயற்படவில்லை. அவர்கள் அதன் மூலம் சிங்கள நாட்டுக்கும் மக்களுக்கும் நலவை நாடியிருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.
நாட்டு நலன் கருதி அவர்கள் சிங்கள சமூகத்திற்கு ஒத்துழைப்பதாக எடுத்துள்ள இந்தத் தீர்ப்பை இந்த நாடு புறக்கணிக்கக் கூடாது. டுவுவுநு விடயத்தில் முஸ்லிம் சமூகம் நாட்டுக்கு ஆதரவாக செயற்பட்டதை அனைவரும் அறிவர். எனினும் மஹிந்த அரசு அதனை மறந்தது.
நாடு அதனை மறந்து விடுவதற்கு வழியும் செய்தது. எனினும் மீண்டும் ஒரு முறை நாட்டு நலனுக்காக முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானம் எடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்த போது அவர்கள் பின்வாங்கவில்லை. நல்லாட்சிக்கான ஆணையைக் கோரி களமிறங்கிய ஜனாதிபதி வேட்பாளர் திரு. மைத்திரிபால சிறிசேனாவுக்கு அது தோழமைக் கரம் கொடுத்தது. அந்த வகையில் இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் சிங்கள சமூகத்துடன் இணக்கமாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளர்.
அதன் காரணமாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம், மதவாதம் என்பன தோல்வியடைந்திருக்கின்றன. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க சூழலும் புரிந்துணர்வுகளும் மலர்ந்திருக்கின்றன. நல்லிணக்கத்தை இல்லாமல் செய்ய விரும்பிய சக்திகளுக்கு இது வெறுப்பைத் தருமாயினும் நாட்டின் நலனை அவர்கள் முற்படுத்திச் சிந்தித்தால் திரு. மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றி எத்துணை அர்த்தமுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
உண்மையில் இங்கு வெற்றி பெற்றிருப்பது சிங்கள சமூகமே. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வெற்றிக்கான பங்களிப்பையே வழங்கியிருக்கின்றன. அதன் காரணமாக மொத்தத்தில் நாடு வெற்றி பெற்றுள்ளதாக நாம் கருதுகின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோற்றதனால் நாடு தோற்றதாக, தோல்வியடைந்தவர்கள் கருத வேண்டியதில்லை.
காரணம், தொடர்ந்தும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பிரதமராக ஆளும் அதிகாரமுள்ளவர்களாக இராணுவமாக, பொலிஸாக, நிருவாகிகளாக கடமையாற்றவுள்ளவர்கள் பெரும்பான்மையினரே. அவர்களுக்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்களிப்புகளை வழங்க முடியுமே தவிர நாட்டின் ஆட்சியாளர்களாக அவர்கள் மாற முடியாது.
இந்த உண்மையை மக்களின் கண்களுக்கு மறைந்து அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என பிரிவினை பேசி நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வோரிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
இலங்கை ஓர் அற்புதமான நாடு. இந்த நாடு எப்போதும் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்தான் ஏகாதிபத்தியவாதிகள். அவர்கள் குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க எத்தனிப்பவர்கள். அவர்களது பிடியிலிருந்து நாடு விடுபட்டு அமைதியடைந்தால்தான் நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியும். கடன் பளுவிலிருந்து தன்னைப் பாதுகாக்க முடியும். அடுத்தவர்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமாக தலைநிமிர்ந்து வாழ முடியும்.
இந்த உன்னத நோக்கத்தினை இலக்காகக் கொண்டு பெரும்பான்மை சமூகத்தோடு ஒத்துழைக்க முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். தங்களது இருக்கைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் பேரம் பேசும், கட்சி தாவும் கீழ்த்தரமான முன்மாதிரிகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் நாட்டிற்கு வழங்கக் கூடாது.
நாட்டில் நல்லாட்சி நடந்தால், நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோறினால் நாமும் முன்னேறலாம் என்ற தத்துவத்தினடிப்படையில் அவர்கள் செயலாற்ற வேண்டும். முஸ்லிம் மக்களிடமும் இந்த விழிப்புணர்வு மேலோங்க வேண்டும்.
இன ரீதியாக எமது அரசியலையும் சமூக விவகாரங்களையும் அணுக முற்படாது நாட்டு நலனின் அடிப்படையில் அவர்கள் செயலாற்ற வேண்டும். தமது சமூகப் பிரச்சினைகளை ஏனைய சமூகங்களிலிருக்கும் நல்லவர்களோடு இணைந்து சுமுகமாகத் தீர்க்கும் வழிவகைகளையே அவர்கள் தேட வேண்டும். இனவாத அரசியல் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடும் கலாசாரத்தை நாம் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சிங்கள சமூகம் நன்மைகளை விரும்பும் ஒரு பண்பாடான சமூகம் என்பதை 2015 தேர்தல் எமக்குணர்த்தியிருக்கிறது. தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் கூட தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியோடு இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2015 நல்லதொரு திருப்பத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அந்தத் திருப்பத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.
வாழ்க நம் தேசம்.. வளர்க நல்லாட்சி...
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
0 comments:
Post a Comment