கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மேர்வின் சில்வாவின், பரபரப்பு பேட்டி..!

தற்போதய அரசியல் நிலமை தொடர்பாக வேண்டுமானால் என்னுடன் கோட்டா குழந்தை விவாதத்திற்கு வந்து பங்கு கொள்ளுமாறு அவருக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்று ஒரு போடு போட்டார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.    31.03.2015 இரவு நடந்த ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியல். 
நள்ளிரவு வரை நீண்ட இந்த விவாதத்தில் பல அதிர்ச்சியான தகவல்களை அவர் வெளியிட்டார் இதில் இந்தக் குறிப்பை முன்வைக்கின்றவனுக்கு ஒரு சின்னச் சந்தேகம். அவரின் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவடைகின்ற போது ஏப்ரல் முதலாம் திகதி பிறந்திருந்தது. 

எனவே ஒரு வேலை நான் அப்படியெல்லாம் பேசியது உண்மைதான் என்றாலும் அன்று முட்டள்களின் தினம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று இந்த மனிதன் என்றாவது ஒரு நாள் எங்களிடத்தில் திருப்பிக்கேட்கவும் நிறையவே வாய்ப்புக்கள் இருப்பதால் எட்வான்சாக இந்தக் குறிப்பை இங்கு பதிந்து விடுகின்றோம்.

ஒரு காலத்தில் ராஜபக்ஷக்களின் மிகப் பெரிய அடியாளாகவும் நம்பிக்கைக்குரிய மனிதனாகவும் இருந்தவர்தான் இந்த மேர்வின் சில்வா. ராஜபக்ஷ தோல்வியைத் தொடர்ந்து மனிதன் ராஜபக்ஷ காலத்தில் பார்த்த அடாவடித்தனங்கள் பற்றி தற்போது வாந்தி எடுக்கத் துவங்கி இருக்கின்றார்.

இது ராஜபக்ஷக்களுக்கும் வேண்டிய ஒரு விடயம் மட்டுமல்ல மேர்வினுக்கும் தேவையான ஒரு விடயம்தான். இது மேர்வினே சொல்கின்ற படி இயற்கையின் பரிசு என்று தான் நாம் இந்தக் கூத்துக்களைப் பார்க்க வேண்டும்.
இப்போது மனிதன் மைத்திரி விசுவாசியாக மாறி அவர் புகழ்பாடத் துவங்கி இருப்பதுடன் தான் அடுத்து வருகின்ற தேர்தலில் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி வேட்பாளராக நிச்சயம் களனித் தொகுதியில் இருந்து நான்  தேர்தல் களத்திற்கு வருவேன் என்றும் சவால் விடுத்திருக்கின்றார் அவர்.

நான் களணிப் பிரதேசத்தில் கப்பம் வாங்கினேன் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. அப்படியாக இருந்தால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் ஏன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கோட்டாக் குழந்தையும் மெத்தப்படித்த  பசில் பண்டிதரும் பிற்காலத்தில் என்னுடன் பகையாளிகளாக மாறி இருந்தார்கள். இதனை நான் பெரியவரிடத்தில் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அப்போது என்ன உனக்குப் பைத்தியமா என்று அவர் என்னிடத்தில் திருப்பிக் கேட்டதுடன் உனக்கு எதிராக அவர்கள் செயலாற்ற மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் அன்று வழங்கினார் மஹிந்த ராஜபக்ஷ.

என்ன நடந்தது அவர்களின் தொந்தரவுக்கு நான் இலக்கானேன் அவர்கள் புரிந்த அட்டகாசங்களை நாட்டுக்குச் சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் அது வரைக்கும் பொறுமை காப்பது என்று தெய்வத்தை நம்பி நின்றிருந்தேன். அதனால்தான் இப்போது அவற்றைப் பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றேன்.

என்னுடைய மகன்; மலக்கவை அடித்தது ராஜபக்ஷ மகன் யோசித்தவின் ஆட்கள். யோசித்தவின் காதலி கொடுத்த ஒரு முறைப்பாட்டுக்காகத்தான் எனது மகன் மீது அநியாயமாகத் தாக்கி அவர்கள் காயப்படுத்தி இருக்கின்றார்கள். இவற்றிக்கு எல்லாம் சேர்த்துத்தான் இப்போது தண்டனை அனுபவிக்கின்றார்கள்.

அவர்கள் பார்த்த வேலைகள் பற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றது. பொறுத்திருந்து பாருங்கள் நாளை என்ன நடைபெறுகின்றது என்பதனை. ஏற்கெனவே ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்ஹ ஆகியோரின் கொலைகளில் இவர் கோட்டாவுக்கு சம்பந்தம் என்ற முறைப்பாட்டைக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷ இப்போது பௌத்த பீடங்களையும் பிளவு படுத்தத் துவங்கி இருக்கின்றார். பதவி ஆசைபிடித்து கட்சியையும் அவர் தற்போது துண்டாட முனைந்திருக்கின்றார். இனிவரும் காலங்களில் ராஜபக்ஷ அரசியல் அதிகாரமுள்ள பதவிகளுக்கு வர முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

ராஜபக்ஷக்களுக்கு டுபாயில் ஹோட்டல்கள் இருக்கின்றது. அதேபோன்ற உலகில் பல நாடுகளில் அவர்கள் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றார்கள். பசில் ராஜபக்ஷ மல்வானையில் தனது டுபாயில் இருக்கின்ற புதல்விக்காக ஒரு பாரிய மாளிகையைக் கட்டி இருக்கின்றார். 

அந்த இடத்தின் பரப்பு 16 ஏக்கர் 45பேர்ச். வீடுகட்ட 15 கோடி செலவு செய்யப்பட்டிருக்கின்றது. வேடிக்கை என்ன வென்றால் இந்த வீட்டைக்கட்டி முடித்தாலும் கட்டிடக் கொந்தரத்துக்காரருக்கு இன்னும் ஒரு சதம் கூட பசில் கொடுக்கவில்லை.

இப்படியெல்லாம் ஊடகங்கள் முன் நான் பேசுவது எனக்கு ஆபத்து என்பது தெரியும் என்றாலும் நான் இவற்றை மறைத்து வைத்திருப்பதைவிட பகிரங்கப் படுத்துவது சமூகத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதால் இப்போது கூறுகின்றேன்.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதும் உயிராபத்துக்கள் வருமானால் அதற்கு முழுப் பொறுப்பையும் ராஜபக்ஷக்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த நிகழ்ச்சியில் மேர்வின் குறிப்பட்டார்.

கோழையாகவல்ல வீரனாகவே இந்த மோவின் சில்வா ஒருநாள் மரணிப்பான் என்று அவர் அங்கு குறிப்பிட்டார். இன்னும் பல தகவல்கள் தன்னிடம் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது அவற்றை நான் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் ராஜபக்ஷக்களை எச்சரித்திருக்கின்றார்.
-நஜீப் பின் கபூர்-

jaffnamuslim

0 comments:

Post a Comment