கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்.

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.
"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.
"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.
குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.
"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.
எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.
அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.
"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.
இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.
"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.
அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்...

0 comments:

Post a Comment