கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

காத்தான்குடி உருவச் சிலைகள் பின்நாளில் “வணங்கு’ பொருளாகும்: கோவை எஸ். ஐயூப்"

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரும் இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரான கோவை எஸ். ஐயூப் தெரிவித்தார்.

காத்தான்குடி 6ம் குறிச்சி மார்க்கட் வீதியில் நேற்றிரவு (26.04.2015) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பிரச்சாரக்கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது மிகப்பெரும் அநீதியும், கொடிய பாவச் செயலுமாகும். அந்த இணை வைத்தலில் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். இஸ்லாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிலை வணக்கத்தையோ, சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைத்துக் கொள்வதையோ ஆதரிக்கவில்லை. உருவச்சிலைகளை இறைதூதர் முகம்மத் (ஸல்) அவர்களே உடைத்தழித்து இஸ்லாம் எனும் ஏகத்துவ மார்க்கத்தை நிலைப்படுத்தியுள்ளார்கள்.

உலகில் சிலை வணக்கம் உருவானது நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்திலேயாகும். அக்காலத்தில் அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்து வந்த ஐந்து நல்ல மனிதர்கள் இறந்த பின்னர், அவர்களை நினைவுபடுத்துவதற்காக அவர்களுடைய உருவச்சிலைகளைச் செய்து வீடுகளில் வைத்துக் கொண்டு நினைவுபடுத்துமாறு சாத்தான் கூறியதற்கிணங்க, அந்த மக்கள் முதன் முதலாக அவர்களின் உருவச் சிலைகளைச் செய்து தமது வீடுகளில் வைத்துக் கொண்டு தமது முன்னோர்களை நினைவுபடுத்தி வந்தனர்.

சில காலத்தின் பின்னர் வீடுகளில் இருந்த அந்தச் சிலைகளை அவர்களின் இறையில்லங்களில் வைத்தால்தான் அங்கு வருகின்ற பல நாட்டவர்களும் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வழி பிறக்கும் என மீண்டும் சாத்தான் வேதமோதியதற்கமைய, அந்தச் சிலைகள் அவர்களின் வணக்கத்தலங்களுக்கு எடுத்து வரப்பட்டு ஒரு பக்கமாக வைக்கப்பட்டன. அந்த மக்கள் அவற்றை அப்போது வணங்கி வழிபடவில்லை. ஏக இறைவனாகிய அழ்ழாஹ்வையே அவர்கள் வணங்கி வழிபட்டு வந்தனர். இந்தச் சிலைகளை மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர் அவர்களின் நல்ல செயற்பாடுகளை பலரிடமும் எடுத்துக்கூறினர்.

இவ்வாறு வாழ்ந்த அந்த மக்கள் சமூகம் மரணித்த பின்னர் அவர்களின் சந்ததியினர் அச்சிலைகளை மிகவும் கண்ணியப்படுத்தி வந்தனர். இந்த கண்ணியம் பின்னர் படிப்படியாக அச்சிலைகளை வணங்கவும், அவற்றிடம் உதவிகள் தேடிப் பிரார்த்திக்கவும் வழிவகுத்தது. இவ்வாறுதான் உலகில் சிலை வணக்கம் எனும் மிகக் கொடிய இணை வைப்பு ஏற்பட்டது.

இன்று எமது முன்னோர்களின் சிலைகளை வணங்குவதற்காக நாம் வைக்கவில்லை, அவர்களை நினைவுபடுத்துவதற்காகத்தான் நாம் வைத்திருக்கின்றோம் என்று கூறிக் கொண்டாலும், காலப்போக்கில் எமது சந்ததியினரால் இச்சிலைகளுக்கு மதிப்பும், மரியாதையும், கண்ணியமும், கௌரவமும் வழங்கப்பட்டு அவற்றை வணங்கி வழிபட்டு, அவற்றிடம் உதவிகோரிப் பிரார்த்திக்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்பதற்கு அல்குர்ஆனே நமது முன்னோர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றது.

உலகத்தில் மூன்றாவது நபியாக அனுப்பப்பட்ட நூஹ் நபி அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட, அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட இந்த ஐந்து நல்ல மனிதர்களின் உருவச் சிலைகளும் காலங்காலமாகக் கடத்தப்பட்டு வந்து எம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் புனித கஃபா எனும் இறை ஆலயத்திலும் அவை கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து சிலைகளையும் மக்காவில் வாழ்ந்த ஐந்து கோத்திரத்தார் தினமும் வணங்கி வழிபட்டு, அவற்றிடம் தமது தேவைகளை முன்வைத்து நேர்ச்சைகள் செய்து, அவற்றுக்கு மிருகங்களைப் பலியிட்டு வந்துள்ளனர் என்பதையும் அல்குர்ஆன் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றது.

மக்கா வெற்றியின் பின் புனித கஃபா ஆலயத்திற்குள் நபியவர்களும், தோழர்களும் பிரவேசித்தபோது அங்கே நூற்றுக்கணக்கான உருவச் சிலைகள் இருந்தன. அவற்றுள் இறைத்தூதர்களான இப்ராஹீம், இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சிலைகளும் இருந்தன. அவற்றை நாம் வணங்கவில்லை, நினைவுபடுத்தவே வைத்திருக்கிறோம் என்று மக்காவாசிகள் கூறிய போதிலும் நபியவர்கள் அவற்றையும் உடைத்தழித்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இணைவைப்பு என்பது இன்று எத்தனையோ வடிவங்களில் நம்மிடையே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவையனைத்திலும் மிகக் கொடியது சிலை வணக்கமாகும். சிலை வணக்கத்திற்கான அத்திவாரம்தான் எமது முன்னோர்களான நல்ல மனிதர்களுக்கு நாம் சிலைகள் உருவாக்கி அவற்றை நினைவுச்சின்னங்களாக வைத்துக் கொள்வதாகும். இதனை இஸ்லாம் முற்றாக வெறுக்கின்றது. தடைசெய்துள்ளது எனத் தெரிவித்தார்.

– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி

0 comments:

Post a Comment