இந்தோனேசிய மண் சரிவு: உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்ந்துள்ளதாகவும் 82 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மத்திய ஜாவாவில் ஜெம்லங் கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி மண் சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அடை மழை காரணமாக தேடுதல் நடவடிக்கை தாமதமடைவதாக கூறப்படுகிறது.
கனரக மீட்பு வாகனங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியாளர்கள் தமது வெற்றுக்கரங்களைப்பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் படை வீரர்கள் உட்பட்ட 1000 க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசிய ஜனாதிபதி யொகோவிடோடோ அனர்த்தம் இடம்பெற்ற இடத்தைஇன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த மண் சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 600 பிரதேச வாசிகள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் தேசிய அனர்த்த முகவர் நிலையம் தெரிவித்தது.
17000 தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம் இடம்பெறும் மலைப்பிரேசங்களில் பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கினர் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வாழ்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment