இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர்!
இலங்கை ஆசியாவின் ஆச்சர்யம் என்பதைப் பல வகைகளில் நிரூபித்து வருகிறது. அதில் இறுதியாக இணைக்கப்பட வேண்டிய ஆச்சரியம் தான் இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர் அரசியல் புரிவது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும், கரையோர மாவட்டம் பரிசீலிக்கப்படும் போன்ற மு.காவின் கனவுகளுக்கு இடம் தரப்போவதில்லையென்பதை கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் பின் வந்த காலங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தெளிவாக்கியிருந்த போதும் இல்லை கிடைக்கும் என்று இன்னும் நம்பும் அப்பாவித் தலைவன் தான் நன்கறிந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்காத மனநிலையை வேறு பல காரணங்கள் கொண்டு விபரிக்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தற்போதைய நிலைப்பாட்டை அடிப்படையில் இரண்டு காரணிகள் கொண்டு நியாயப்படுத்த முனைகிறது.
முதலாவது: அவசரப்பட்டு முடிவெடுக்க தயாரில்லை என்பது. சரி, அப்படியானால் எதற்காக காத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா? ஆம், அந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால் கடந்த இரு தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவும் வழங்கப்பட்டு நிறைவேற்றப்படாத, ஒருக்காலமும் நிறைவேற்றித்தரும் எண்ணமில்லாத தமது கரையோர மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதாகும்.
கண்துடைப்புக்காக உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்ட கருமலையூற்றுப் பள்ளிவாசலை மக்களுக்காகத் திறந்து விடுவதுதான் மு.காவுக்கு அரசு வழங்கும் மரியாதையாக இருக்குமாக இருப்பின் மு.கா நெருக்குதல் தரும் காலத்தில் துரும்பாகப் பயன்படுத்துவதற்குத்தான் இவ்வாறான பள்ளியுடைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன எனும் கோணமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகும்.
எனவே, மு.காவின் இன்று முடிவு நாளை முடிவு எனும் அறிவிப்புகளை அரசிடம் எதையோ சாதித்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளாகப் பார்க்கலாமே தவிர இவற்றில் மக்கள் நலன் எங்கிருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொள்ளலாம்.
இரண்டாவது: கட்சி உடைந்து விடும் எனவே அதைப் பாதுகாத்துக்கொள்ள சாணக்கியமாக தலைவர் ‘கேம் விளையாடுகிறார்’ எனும் ஒரு விளக்கம். நாட்டு மக்களின் நாடித்துடிப்பு தெரியாத பாரமரத் தலைவர்களால் தான் தன் சுற்று வட்டாரமே உலகம் என்று கருத முடியும். அவ்வகையில் தன்னைச் சுற்றியுள்ள பதவி வெறியர்களின் முகத்திரையைக் கிழித்து சமூகத்திடம் அவர்களை அடையாளம் காட்டக் கூடிய மிக அருமையான இச்சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில் சாணக்கியம் இருப்பதாக ரிசானா நபீக் எனும் அபலைப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டபோது சமூகத்துக்கு ஒரு ஆறுதல் வார்த்தையேனும் கூறாது சுப்பர் சிங்கரில் போய் ஒலி – ஒளி பார்த்த தலைவர் கூறுவதை சமூகம் நம்பாது.
எல்லோரும் நம்புவது போல பசீர் சேகுதாவுதுதான் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையென்றால் தேர்தலில் நின்று வாக்குகளைப் பெற்று வெல்லும் சக்தியில்லாத காலவதியாகிப்போன பசீர் சேகுதாவுதுக்குப் பயந்து முடிவெடுக்க ஒதுங்குவது என்பது சிறு பிள்ளைத்தனமானது மாத்திரமன்றி தற்போது திறந்து விடப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண களத்தில் அசாத் சாலி அள்ளிக்கொண்டு செல்லும் ஆதரவின் அளவை வைத்தே பசீர் சேகுதாவுதின் பங்காளிகளுக்கு மக்கள் எவ்வகை தீர்ப்பளிப்பார்கள் என்பதை கணித்துக்கொள்ளலாம். ஆனாலும் , இங்கு அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை வருவதை விட எதையாவது காட்டி அல்லது கொடுத்து மக்களை மாக்களாக்கிவிடலாம் எனும் நம்பிக்கையே இருப்பதனால் தான் வெற்று வேட்டுக்களுக்கெல்லாம் பயப்படும் நிலையாக இருக்கிறது.
டாக்காவுக்கு அந்த நாள் , அந்த நேரம் போய் தான் சங்கக்காரவை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது தெரிந்த தலைவர் இந்த நாட்களில் இன்னும் பேரம் பேசிக்கொண்டிருப்பதன் பின்னணியில் சமூக நலன் இருக்குமாக இருந்தால் அந்த சமூக நலனை இந்த நாள் வரை அரங்கேற்றியும் காட்டியிருக்க வேண்டும். அதற்காக திராணியுள்ள தலைமையாக இருந்திருந்தால் மாற்றம் எப்போதோ வந்திருக்கும்.
இப்போது மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை எமக்குத் தெரியாத ஆயிரம் அங்கே இருக்கும். அந்த ஆயிரத்தையும் பார்த்துத் தானே தலைவர் முடிவெடுப்பார் எனும் ஒரு வகையான நம்பிக்கை. அப்பாவித் தொண்டர்கள் அவ்வாறு நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஏனெனில் அவர்கள் தலைமையை நம்பியிருக்கிறார்கள், மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் புத்திசாலித் தொண்டர்கள் ஒரு படி மேலே போய் தாம் நினைக்கும் அந்த ஆயிரத்தில் எது தனக்குக் கூட பயனில்லாத சமூக நலன் கொண்டது என்று சிந்திப்பான்.
அதை சிந்திக்கத் தெரிந்தவன் அந்த சமூக நலன்கொண்ட விடயங்களில் தேசிய முஸ்லிம் சமூகத்தைக் கருத்திற்கொண்டு இந்த ஜனாதிபதியின் கூட்டில் கடந்த ஒன்பது வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் எதைச் சாதித்திருக்கிறது? சாதிக்கவில்லை என்றும் ஒரு அளவீடு செய்து பார்ப்பான். இது இரண்டுக்கும் மேலாக ஒருவன் நாளை தொப்பியையம் செருப்பையும் அணிந்து கொண்டு தாடியையும் கொஞ்சம் அதிகமாக வளர்த்துக்கொண்டு அப்பாவியாக வந்து நாரே தக்பீர் என்று தலைவர் சொல்லட்டும் அல்லாஹு அக்பர் என்று சொல்வோம் எனக் காத்திருந்தால் அது அவன் தலைவிதி.
அவன் போன்றவர்களை ஆயிரம் ஞானசாரக்கள் வந்தாலும் திருத்தமுடியாது. எனவே, இப்போது உயிரோடிருக்கும் ஞானசாரவோடு தலைவர் கூட்டு சேர்ந்திருப்பதில் அந்த அடிமட்டத் தொண்டனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால், ஏனைய முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பிருக்கிறது. ‘முஸ்லிம்’ என்ற பெயர் தாங்கிய கட்சியாக தேசிய ரீதியில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதவகையில் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு, அற்ப சொற்ப ஆசையெல்லாம் இருக்கிறது.
காத்தான்குடிப் படுகொலையின் சூத்திரதாரி கருணா அம்மானோடு கூட்டு சேர்ந்த போது ஆச்சரியப்பட்ட இலங்கை முஸ்லிம் சமூகம், அந்தக் கூட்டில் கிழக்கு மாகாண முஸ்லிம்களே வாயடைத்துப் போயிருந்த நிலையில் செய்வதறியாது மௌனமாக இருந்தார்கள். ஆனால் ஞானசாரவின் கூட்டு அவ்வாறில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த இருப்பையும், உரிமைகளையும் கேள்விக்குறியாக்கி அளுத்கமயில் உயிர்களைப் பலியெடுத்த பாதகனை எதிர்க்க வலுவில்லாத முதுகெலும்பில்லாத நிலையை ஏற்கனவே ஊவா மக்கள் நிராகரித்து தக்க பாடம் புகட்டினார்கள். மேல் மாகாண மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பேராதரவு வழங்கி மூன்று முஸ்லிம்களை வெற்றிபெறச் செய்தார்கள்.
முஸ்லிம் காங்கிரசிலோ அகில இலங்கை மக்கள் காங்கிரசிலோ வென்றவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கு மூலம் வென்றவர்கள். கட்சிக்காக அவர்கள் வெல்ல வைக்கப்பட்டிருந்தால் பதுளையிலும் மு.கா கையைக் காட்டிய ஆட்டோ சாரதிகள் மற்றும் புது ரக அரசியல்வாதிகளை மக்கள் வெல்ல வைத்திருப்பார்களே?
இது புரிபவனுக்குப் புரியும். புரிந்தவனுக்கு மேல் மாகாண சபை தேர்தல் காலத்தில் அவ்வப்போது கதை – வசனம் எழுதப்பட்டு பரிமாறக்கொள்ளப்பட்ட ஞானசார – ஹகீம் கோழிச்சண்டையின் காட்சிகளும் நினைவுக்கு வரும். அன்று ஹகீம் சொன்னதெல்லாம் உண்மையென்றால் இன்று ஒரே தளத்தில் ஞானசாரவுடன் நிற்கத்தான் முடியுமா என சிந்திக்கத் தெரிந்தவனுக்குப் புரியும்.
இத்தனையையும் தடுப்பது அந்தப் பதவியும் அதன் சுகபோகமும் எனும் நிலையில் ஆசியாவின் ஆச்சர்யமாக இரு இன அழிப்பாளர்களின் நடுவில் ஒரு நீதியமைச்சர் நலமாக நீதியைக் காப்பாற்றுகிறார் எனும் கேவலமான வரலாறும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
முடிவை நீங்கள் எடுங்கள் என்று இவர் தூக்கி வீச, இல்லை தலைவா நீங்களே எடுங்கள் என்று திருப்பி வீசிய உறுப்பினர்கள் புத்திசாலிகள். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் இங்கு தலைவன் தான் தடையென்பது!
sonakar
0 comments:
Post a Comment