பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்- குர்ஆன் பிரதிகளை பெற்று சென்றது: ACJU
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைமையகத்திற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என அந்த அமைப்பு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளோ, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களோ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்து அல்-குர்ஆன் பிரதிகளை எடுத்துச் செல்லவில்லை.
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு எம்மிடம் சிங்களம் மற்றும் ஆங்கில அல்- குர்ஆன் பிரதிகளை கேட்டு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியது.
இக்கடிதத்தை கொண்டுவந்து ஒப்படைத்த அதிகாரி ஏதேனும் முறைகேடாக நடந்து கொள்ளவில்லை. அப்பிரதிகள் கிடைத்தால் அறிவிக்குமாறும் அதனை வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து நாம் தொடர்புகொண்டு அறிவித்ததன் பேரில் அவ்வதிகாரி வந்து நாம் வழங்கிய சிங்கள மற்றும் ஆங்கில பிரதிகளை பெற்றுச் சென்றார்.
அதுவன்றி எவரும் உள்ளே நுழைந்து அடாவடித்தனம் புரியவில்லை என்பதையும் அறியத்தருகிறோம்.
அல்-குர்ஆனை கேட்டு வரும் ஒருவருக்கு அதனை கொடுக்க மறுப்பது பொருத்தமற்ற செயலாகும். அதனைப் பெற்று யாரும் படிப்பினை பெறுவதாக இருந்தால் அது அல்-குர்ஆனின் தனிச் சிறப்பேயாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக பிரிவு செயலாளர் அஷ்-ஷைக் பாழில் பாரூக் தெரிவித்துள்ளார்.
முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டு :
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்
இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்திற்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர் குர் ஆன் பிரதி ஒன்றையும் அதன் மொழி பெயர்ப்பு பிரதியொன்றையும் வழங்குமாறு உலமா சபையின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
அடிப்படைவாதிகளின் தேவைகளுக்காகவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு குர் ஆன் மற்றும் அதன் மொழி பெயர்ப்பு பிரதிகளை கோருகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது
0 comments:
Post a Comment