ரவூப் ஹக்கீமின் கணக்கு சரியா..?
மகாராஜாவோ, மக்களோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சமூகத்துக்கு தொழில் வாய்ப்புகள் செய்து கொடுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் முஸ்லிம்களின் வாழிடங்களில் அபிவிருத்தி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் நாட்டின் நீதி அமைச்சர் என்ற உயர் கௌரவமும் மதிப்புமிக்கதுமான உயர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகி விட்டார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்!
நேரத்துக்கொரு கதை, இடத்துக்கொரு கதை, ஜனாதிபதி முன் ஒரு கதை, மக்கள் முன் ஒரு கதை, சரியோ பிழையோ எல்லாக் கதைகளுமே சரியானது என வாதிடக்கூடிய திறமையும் மொழியாற்றலும் சட்டப் பின்னணியும் கொண்ட நவீன காலப் புலவராகி விட்டார் போலும்.
சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவும் எப்போதும் பிழையானதே என மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரபின் பேச்சைக் கோடிட்டுக் காட்டும் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் பிழையானதும் பிழையான நேரத்தில் சரியானதுமான முடிவுகளை எடுப்பதினூடாக எப்போதும் பிழையான முடிவுகளையா எடுக்கிறார் என கேட்கத் தோன்றுகிறது.
ஒருபுறம் அரசுக்குள்ளிருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். மறுபுறம் அரசுக்குத் தேவையான போதெல்லாம் அரசை ஆதரித்துப் பேசுவார். நீதியே இல்லாத நாட்டில் நீதியமைச்சராக இருப்பதாகவும் சமாதான நீதவான் பதவியைத் தவிர வேறெந்தப் பதவியையும் தன்னால் வழங்க முடியாது என்றும் மேடைகளில் தன் நிலையை முழங்கியவர் தொடர்ந்தும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் மூலம் இனியும் என்ன செய்யப் போகிறார் என அவருக்கே தெரியாது.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் சந்திப்புகளின் போது முஸ்லிம்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் சரிவர எடுத்துக் கூறக்கூடிய சந்தர்ப்பங்களை நழுவ விடுவதும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் அரசுக்கெதிராக வரக்கூடிய ஆபத்துகளை தணித்து விடுவதில் பங்காற்றுவதுமான அவரது போக்குகள் நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எவ்விதத்தில் உதவக் கூடும்?
தேர்தல் காலங்களில் அரசுக்கெதிராக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசுடன் இணைந்து கொள்வதாகக்கூறி சமூகத்தை எப்போதும் பரிதாபகரமாக வைத்துக் கொண்டு தான் மாத்திரம் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பது சரியானதுதானா?
இவர் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் உடைக்கப்படுவது, கல்லெறியப்படுவது, நிந்தனை செய்யப்படுவது, ஹலால் எதிர்க்கப்படுவது, பர்தா அணிதல் தடுக்கப்படுவது என இந்த அரசாங்க காலத்தில் தாராளமாகவே முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க ரவூப் ஹக்கீம் தான் அரசுடன் இணைந்திருக்காவிட்டால் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிடும் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ளார்.
அரசு பலமாக இருக்கும் போது சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை நசுக்குவதும் பலவீனமாக இருக்கும் போது அவர்களின் ஆதரவை நாடுவதும் வழமை. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கும் 18 ஆம் திருத்தப்படி ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் கேட்பதற்கும் ரவூப் ஹக்கீம் ஆதரவளித்து அரசை பலமாக்கி சிறுபான்மை மக்கள் அடிவாங்கிக் கட்ட காரணமாகி விட்டார்.
கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சியில் அமர்ந்திருந்து கொண்டு எதிரணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசுக்கெதிராகப் பிரேரணை நிறைவேற்றினார். பின்னர் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாண சபைத் தேர்தல்களின் தோல்வியை மறைக்க கிழக்கு மாகாண சபையில் அரசுக்கெதிராக பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அரசியலமைப்புக்கு 17 ஆம் திருத்தத்தைக்கொண்டு வந்து சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி நாட்டில் ஜனநாயகத்தை அதிகரிக்க வேண்டுமென்ற ஒரு தேசிய ரீதியான தேவைக்காக 100 நாள் காலக்கெடுவை முன்வைத்ததன் மூலம் ரவூப் ஹக்கீம் அரசிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் 17 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை ஒழித்துக் கட்டும் 18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாக செயற்பட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசுக்கெதிரான கடும் பேச்சுப் பேசுவார். தேர்தல் முடிந்ததும் வீண் பேச்சுப் பேசுவார். தேர்தலில் தோற்றுப் போவார். ஆனால் வெற்றிப் பேச்சுப் பேசுவார். அரசுக்கு அவர் எதிர்ப்பு. ஆனால் அவர் ஆதரவு. ஒன்றுமே புரியவில்லை. அவரும் குழம்பி மக்களையும் குழப்புகிறாரா? அல்லது மக்களை மாத்திரம் குழப்பி அவர் தெளிவாக இருக்கிறாரா?
ஊவாத் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு தோல்வியடைந்தது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ரவூப் ஹக்கீம் நாட்டில் எதிர்க்கட்சி பலமடைவது ஜனநாயகத்திற்கு சாதகமானதென சம்பந்தமில்லாத இடத்தில் ஜனநாயகம் குறித்து பேசுகிறார். ஆனால் 18 ஆவது திருத்தத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றத் தவறி விட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவரையும் பொதுவாக இந்த நாட்டு முஸ்லிம்களுடைய குரலாகவே சகல தரப்பினரும் பார்க்கின்றனர். முஸ்லிம்களின் பிரச்சினை, தேவை, அபிலாஷை என வருகின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகின்ற போது இந்த நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்திப்பதே வழக்கம், மாறாக அரசின் நிலைப்பாட்டை எவரும் நீதி அமைச்சரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை.
எப்போதும் அரசாங்கத்துடன் கலந்திருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அரசு சார்பானவர்கள். தமது சமூகத்துக்கு ஏதேனும் பிரச்சினை எழுகின்ற போதிலும் கூட அவர்கள் அரசைப் பகைத்துக் கொள்வதில்லை. மாறாக எய்தவனிருக்க அவர்கள் அம்பை ஏசிக் கொண்டிருப்பர்.
ஆனால் ஒரு சமூகம் சார்பாக உருவாகி அந்த சமூகத்தைக் காட்டி அரசியல் நடத்தும், அந்த சமூகத்துக்குத் தலைமைத்துவம் வழங்கும் கட்சியோ நபரோ தமது சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங் கட்சிக்குள் நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் போன்ற புதுமையான கதைகளைக் கதைத்துக்கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் முட்டாள்களாகக் கருதக் கூடாது.
அரசின் முஸ்லிம் விரோதப் போக்குக் காரணமாக அரசுடன் ஒட்டிக் கொண்டு தேர்தலை சந்தித்தால் ஆளுங்கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கருதி அரசாங்கத்தின் அனுசரணையோடு ஊவா மாகாண சபைத் தேர்தலில் இரு முஸ்லிம் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து தனித்துப் போட்டியிட்டன. இதன்மூலம் முஸ்லிம்களுடைய வாக்குகளில் ஆசனமொன்றைப் பெற்று அதனை ஆளுங்கட்சிக்குத் தாரை வார்க்கும் இத்திட்டத்திற்கு ஊவா முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை.
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துக்குக் காரணமாக இருந்து மந்திரி சபை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டிருந்தும், கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி ஆட்சியமைக்க காரணமாக இருந்தும் பேரம்பேசும் சக்தியை பலமிக்கதாகத் தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள், ஊவா மாகாண சபையொன்றில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்று சாதிக்கப்போவது எதுவுமில்லை என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள். இதனை முஸ்லிம் தலைமைகள் உணர்ந்திருக்கவில்லை.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்து வருவதையறிந்து எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணத்திற்கு வந்திருப்பதாக வழமைபோல் ஹக்கீம் கூறி வருவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் பாயக்கூடிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதனை அறிந்தே ஊவா தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற ஹரீன் பெர்ணான்டோ எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாக இருந்தால் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துத் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமினதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் இப்போக்குகள் இந்த நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பிறர் விமர்சிக்கக் காரணமாக இருக்கின்றன.
ஒரு தலைவனுக்கு பொறுமை, சகிப்புத் தன்மை அவசியம். அதேவேளை ஒரு தலைவன் பலமானவனாகவும் தைரியமானவனாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்புத் தருவதும் உணவளிப்பதும் இறைவனே! எனவே சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சமூகத்தின் தேவை பாரியளவில் இருக்கும் போது அச்சமூகத்தின் பிரதிநிதிகள் தூங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?
சமூகம் அரசினால் பாதிக்கப்படும் போது அச்சமூகத் தலைமை சாணக்கியம் என்ற போர்வையில் எப்போதும் அரசுக்கு கூஜா தூக்கக் கூடாது. அதனை மக்கள் விரும்புவதுமில்லை.
வித்தியாசமான புதிய முடிவுகளையும் உபாயங்களையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துகளும் மாற்றுத் தீர்வுகளும் பல புதிய ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரலாம். அனுகூலமான புதிய பரிமாணங்களை எடுக்கலாம்.
0 comments:
Post a Comment