கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது அரசியல் மக்களுக்கு விசுவாசமானது: கூறுகிறார் அப்துர் ரஹ்மான்

PMGG ஊடகப்பிரிவு:  எமது அரசியல் மக்களுக்கு விசுவாசமானது என்பதனை நாம் மீண்டும் நிரூபித்திருக்கின்றோம்: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டு வரும் அரசியல் மக்களுக்கு
விசுவாசமானது என்பதனை மீண்டும் நிரூபித்திருப்பதாக அதன் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த வெள்ளிக்கிழமை (29.08.2014) இரவு ஏற்பாடு செய்திருந்த விஷேட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலும் அங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் வகையிலேயே மேற்படி மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பு காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் PMGGயின் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தொடர்ந்தும் உரையாற்றும் போது, “காத்தான்குடியில் எட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறிய அரசியல் வேலைத்திட்டமாகத் தொடங்கிய எமது நல்லாட்சி அரசியல் வேலைத் திட்டம் இன்று தேசிய அளவில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணத்திற்குள் மாத்திரமே எமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்த நாம் கடந்த ஆண்டு வட மாகாணத்திற்கும் எமது நடவடிக்கைகளை விஸ்தரித்தோம். அதன் பிரயோசனத்தை வட மாகாண மக்கள் மாத்திரமன்றி தென் இலங்கை முஸ்லிம்களும் இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
நடந்து முடிந்த அளுத்கம வன்முறைகளைத் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பதற்கு முஸ்லிம்களின் ஆட்சியிலுள்ள கிழக்கு மாகாண சபையினால் உடனடியாக முடியவில்லை. ஆனால் வட மாகாணசபையில் இருக்கும் எமது பிரதிநிதி ஊடாக அளுத்கம மக்களுக்க இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக முழுமையான கண்டனங்களை வடமாகாண சபையில் எம்மால் மேற்கொள்ள முடிந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை பாராளு மன்றத்திலும் முஸ்லிம்களுக்காக பேச வைக்க முடிந்தது. இது தேசிய அளவில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அரசியல் ரீதியில் எமக்கெதிராக செயற்படுபவர்களும் கூட, வட மாகாணத்தில் நாம் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்களை தூரதிருஷ்டியான ஒன்றாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறன ஒரு முன்னெடுப்பைத்தான் நடை பெறவுள்ள ஊவா தேர்தலிலும் பதுளை மாவட்டத்தில் நாம் இப்போது மேற்கொண்டிருக்கின்றோம். இந்த முன்னெடுப்புக்களைச் செய்கின்ற போது அது அம்மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், அவர்களது நீண்ட கால நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். இனவாதத்தை அல்லது பிரதேசவாதத்தை தூண்டி தேர்தலில் எவ்வாறாவது வென்றுவிட வேண்டும் என நினைக்கும் ஏனைய கட்சிகளை விட்டும் நாம் இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றோம்.
பதுளை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்பாக மூன்று வெவ்வேறு கள விஜயங்களை மேற் கொண்ட நாம் அம்மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் வாழும் சூழ்நிலைகளையும் அவர்களது எதிர் பார்ப்புக்களையும் புரிந்து கொண்டோம். அதனடிப்படையில் பதுளை முஸ்லிம்கள் இன ரீதியாக அரசியலில் தனிமைப்பட்டு விடாமல் இன நல்லிணக்கத்திற்கு ஏதுவான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் அதனூடாக முஸ்லிம்களுக்கான மாகாண சபைப் பிரதி நிதித்துவத்தை உறுதி செய்யவேண்டும் என்பதனையும் இத்தேர்தலில் நோக்காக எடுத்துக் கொண்டுள்ளோம். இனவாத சக்திகளுக்குத் தொடர்ந்தும் துணைபோகும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க முடியாத சூழ்நிலையில் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சியுடன் பலகட்டப் பேச்சு வார்த்தைகளை நாம் மேற்கொண்டோம். நம் நாடும் நமது மக்களும் சுபீட்சம் பெறுவதற்கு நிரந்தர தடையாக மாறியிருக்கும் ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இனவாத நடவடிக்கைகள் என்பவற்றை இல்லாதொழித்தல், அத்தோடு பதுளை மாவட்ட முஸ்லிம்களின் மாகாணசபைப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து ஐ.தே.கட்சி தலைமைத்துவத்துடன் நாம் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டோம் .
உடன்பாடு காணப்பட்ட இவ்விடயங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் ஐ.தே. கட்சியுடன் நாம் மிக வெளிப்படையாக மேற் கொண்டிருக்கின்றோம். தேசிய ரீதியில் எமது அரசியல் முன்னெடுப்புக்கைகளை செய்கின்றபோது ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளுடன் உறவாடுவது தவிர்க்க முடியாததாகும். ஆனாலும் அவ்வுறவுகளை வரையறை செய்வதும், உடன்பாடு காணப்பட்ட விடயங்களையும் உத்தரவாதங்களையும் எழுத்து மூலமாக உறுதிப்படுத்திக் கொள்வதும் அதனை வாக்களிக்கும் மக்களுக்கு பகிரங்கப் படுத்துவதும் நல்லாட்சி முற்போக்கு அரசியலின் முக்கிய பண்பாக இருக்கிறது. இந்த அரசியல் ஒழுக்கத்தினை நாம் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகின்றோம் என்பதற்கு ஐ.தே.கட்சியுடனான ஒப்பந்தம் மற்றுமொரு சான்றாகும். இதற்கு முன்பாகவும் கடந்த ஆண்டு வட மாகாண முஸ்லிம்களின் நலன்களையும் ஏனைய தேசிய நலன்களையும் அடிப்படியாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் வெளிப்படையாக மேற்கொண்டோம். அவ்வொப்பந்தத்தினை எமது மக்களுடன் முழுமையாகவும் பகிரங்கமாகவும் பகிர்ந்துகொண்டோம்.
கடந்த காலத்தில் முஸ்லிம்கள் சார்பாக அரசியல் நடாத்திய கட்சிகள் பலவும் ஏனைய பெரும் பாண்மைக் கட்சிகளோடு சேர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள், இப்போதும் செயற்பட்டு வருகிறார்கள். நமது மக்களின் நன்மைகளை வென்றெடுக்கும் வகையில் உடன்படிக்கைகள் செய்யப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், கடந்த 25 வருடங்களில் அவ்வாறான எந்த ஒப்பந்தங்களையும் நாம் கண்களால் காணமுடியவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் காணமுடியவில்லை. இந்த வகையில், மக்களுக்கு விசுவாசமான ஒரு அரசியல் அமைப்பு நாம், என்பதனை நாம், மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றோம். இவ்வாறான அரசியல் ஒழுக்கம் மிக்க வெளிப்படையான அரசியல் முன்னெடுப்புக்கள் மூலமாகவே நமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமா தீர்வுகளை காணமுடியும் என்பதோடு முஸ்லிம்கள் அரசியலினை அடுத்தவர்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வெல்லக்கூடிய ஒன்றாக நிலைநாட்டவும் முடியும்.” என குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின்போது காத்தான்குடி நகரசபை அமர்வு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) அவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
pmgg 1
pmgg 2

0 comments:

Post a Comment