கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல் தனது உரையினை ஆரம்பிக்கும்போது வணக்கம், ஆயுபோவன், அஸ்ஸலாமுஅலைக்கும் என மூவின மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி தனது பேச்சை ஆரம்பித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;

நான் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளேன். நான் பண பலத்திலும் அரசியல் செல்வாக்கிலும் அரசாங்கத்திற்கு வரவில்லை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மக்களின் பசி, வறுமை, துன்பம் அனைத்தையும் உணர்ந்தவன். இன்று வரையில் நான் அவ்வாறே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். இன்று நான் பொது வேட்பாளராக களமிறங்கியவுடன் மக்கள் என்னை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரனா அல்லது ஐக்கிய தேசியக்கட்சி காரனா எனப் பார்க்கின்றனர். இதில் மக்கள் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது உருவாக்கியிருப்பது ஜனநாயக்கூட்டணி. அதன் வேலைத்திட்டம் மிகவும் பரந்தது. கடந்த காலங்களில் அரசாங்கம் கொடுத்த பொய் வாக்குறுதிகளை தகர்த்தெறிய ஜனநாயகத்தினை வென்றெடுக்க உருவாக்கியுள்ள புதிய கூட்டணி.

இலங்கையில் இன்று இருண்ட யுகம் நிலவுகின்றது. அன்று இந்தியாவில் தென்னாபிரிக்காவில் இவ்வாறான இருண்ட யுகம் நிலவியது. அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் சென்று பின்னர் தென்னாபிரிக்காவை ஜனநாயக நாடாக மாற்றியிருந்தார். மகாத்மா காந்தி இந்தியாவில் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் விடுவித்தார். நான் மகாத்மாவோ அல்லது நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் நான் அவர்களின் கொள்கையினை பின்பற்றி இலங்கையினை சூழ்ந்துள்ள அராஜக ஆட்சியில் இருந்து நாட்டிற்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பேன்.

2015ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கான ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் தமது உரிமைகளை வெற்று மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் அரசாங்கமாக உருவாக வேண்டும். அதற்கு எமது கூட்டணி துணை நிற்கும். இன்று போராட்டம் ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக் ஷ என்று சர்வாதிகளுக்கும் ஜனநாயக வாதிகளுக்குமே. எனவே இந்த ஆட்சியினை வென்றெடுக்க சகலரும் சகல கட்சிகளும் எம்முடன் இணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும். இதுவே தனித்தனி கொள்கைக்கொண்ட புதிய கூட்டணி. இதில் 100 நாட்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது கொள்கையில் போராட வேண்டும். பின்னர் தத்தமது சுய கொள்கையில் செயற்பட முடியும்.

மகிந்த ராஜபக் ஷவை வீழ்த்த வேண்டிய பொது வேட்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்திருக்கும். மஹிந்தவின் பணப்பலம் அதிகாரப் பலம் அனைவரையும் அழித்துவிடும்.  அவரைப்போல் பணபலமோ ஆயுத அதிகார பலமோ என்னிடம் இல்லை. நான் பொது வேட்பாளராக களமிறங்கியது எனது குடும்பத்தின் உயிரை பணயம் வைத்தே. எனவே இன்று நான் என்னை பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனக்கான பாதுகாப்பினை இனிமேல் பொது மக்கள் தான் வழங்க வேண்டும். இம்முறை என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள் தான். எனவே என்னையும் எனது மனச்சாட்சியினையும் நம்பி எனக்கு வாக்களியுங்கள்.

இம்முறை நாம் தவறவிடக்கூடாது. ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க சகல மக்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Jaffnamuslim

0 comments:

Post a Comment