கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசியல் களத்தில் சமநிலை! முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு..

தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஜனாதிபதியின் அரசியல் அரங்கில் தற்போது நிலைமாற்றம் உருவாகியிருப்பது மாத்திரமன்றி பலவீனமாக இருந்த எதிர்க்கட்சியின் நிலையும் மாறி புதிய சமநிலை தோன்றியிருக்கிறது என்றால் மிகையாகாது.
Lanka minister defects to challenge president at polls
ஜனநாயக சோசலிச குடியரசில் பலவீனமான எதிர்க்கட்சியிருப்பதன் விளைவுகளை கடந்த காலத்தில் இலங்கையின் அனைத்து மக்களும், குறிப்பாக முஸ்லிம் சமூகம் அனுபவித்துவிட்டது. பாராளுமன்றில் அமையப்பெற்றிருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேர்தலில் வெற்றிபெற்றதனால் அமைந்ததன்று. விலைக்கு வாங்கப்பட்ட உறுப்பினர்களின் உதவியோடுதான் பாராளுமன்றப் பெரும்பான்மை ஆளுந்தரப்புக்கு அமைந்திருக்கிறது எனும் போது இந்த அரசினை பலவீனப்படுத்துவதற்கான அடிப்படை செயற்பாடு பாராளுமன்றப் பெரும்பான்மையை குறைப்பதாகும்.

கூட்டு சக்திகளின் பயனாக மிகச்சரியான முடிவின் அடிப்படையில் தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் பிரிந்தும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருப்பது போல் பார்த்தால் மொத்தமாக 60 பேர் வெளியேறவுள்ளனர்.
தேர்தல் பயமுறுத்தலாக அதைத் தள்ளி வைத்தாலும் கூட, மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அடுத்து வரும் சில நாட்களுக்குள் கட்சி தாவப்போவது உறுதியாகியிருக்கிறது. இது இரும்புக் கரங்கொண்டு ஆட்சி புரியும் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்பார்க்காத மாற்றம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனினும், சுதாரித்துக்கொண்டால் மேலும் மேலும் பணத்தை அள்ளிவீசி எதையாவது சாதிக்கமுடியும் என்றே அவர்களால் எண்ணத்தோன்றும்.

ஆயினும் ஏதோ ஒரு புறத்தில் ஜனநாயகம் தளிர்விடும் நிலையையும் காணக்கூடியதாக இருப்பதால் தற்போது வியாக்கியானங்களை விட விவேகமான சிந்தனையும் செயற்பாடும் அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் அவசியப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பாதும் முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணும் ஒரு கட்சியெனும் அடிப்படையில் சில நியாயபூர்வமான விடயங்களை எதிர்பார்க்கவும் அக்கட்சிக்குள் ஒன்றரக் கலந்திருக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் வேகமான செயற்பாட்டு வடிவங்களைக் கொண்டு ஆகக்குறைந்தது தற்போது ஏற்பட்டிருக்கும் சமநிலையில் இனி வரும் காலங்களில் களமாற்றம் ஒன்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறைக்கெதிரான பலமான குரல்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
எது எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டிருக்கும் சமநிலை எதிரணிக்கு சாதகமான நிலையாக மாறுமாக இருந்தால் ராஜபக்ச அரசாங்கம் ஆட்டம் காணும் நாள் வெகுதொலைவில் இல்லையெனலாம். ஏனெனில் இரு வருட பதவிக்காலம் எஞ்சியிருந்த போதும் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி தோல்வி கண்டால் இங்கு பேசப்படும் சமநிலை மாறி எதிரணிக்கு சாதகமான நிலை உருவாவது தவிர்க்க முடியாது போகும்.

அவ்வாறான நிலை உருவாகுமிடத்து அது பொதுத் தேர்தலையும் பாதிப்பதோடு பாராளுமன்றில் வெற்றிபெற முடியுமான நிலை உருவாகும் போது ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அமையும். இந்நிலை வருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முழு முயற்சி செய்து தம்மோடு தங்கியிருப்பவர்களைத் தக்க வைத்துக்கொள்ளும்.
ஆயினும் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். உதாரணமாக முஸ்லிம் காங்கிரசை தக்க வைப்பதென்பது அரசின் பங்காளியாக இருந்து அக்கட்சி இதுவரை பட்ட அவமானங்களுக்கும் பின்னடைவுகளுக்குமான முதலும் வட்டியும் வழங்கப்படவேண்டிய நிலையாகும். இவ்வாறே விமல் வீரவன்சவை தக்க வைத்துக்கொள்வதும் அமையப் போகிறது.

எனவே, தற்போதைய சமநிலையை சமயோகிதமாக வாக்காளர்கள் பாவித்தால் அரசியல் சூழ்நிலை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் மாற்றம் பெறலாம். ஆயினும் வாக்காளர்கள், குறிப்பாக கடந்த பத்து வருட அசைக்க முடியாத ஆட்சிபீடத்தின் வியாபனம் அதிக பலம் வாய்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டும் நம்பப்பட்டும் வருவதனால் எதைச் செய்தாலும் அவர் வெல்வார் எனும் பொடுபோக்கும் அலட்சியமும் எமது சமூகத்திலும் காணப்படுகிறது.

ஆனாலும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்தான் ஆட்சியாளர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது எனும் உண்மை உணரப்படுமேயானால் ஒவ்வொரு கல்லும் (வாக்காளரும்) தனது நிபந்தனையையும் அதிருப்தியையும் தெரிவிக்க தமது வாக்குரிமையைப் பாவிக்கலாம். எனினும், இதற்கான விழிப்புணர்வை எமது சமூகத்தில் ‘சலுகை’, ‘அச்சம்’ போன்ற விடயங்களும் நமது இன்றைய அரசியல் பிரதிநிதிகள் பழக்கி வைத்திருககும் அரசியல் அடிமை நிலைகளும் தடுத்து நிற்கின்றன.

ஒருவர் போனால் அந்த இடத்தை நிரப்புவதற்கு இன்னுமொருவர் தயாராக இருப்பதனால் அந்த இடத்தை விடுவதற்கு இவரும் விரும்புவதில்லை விட்டால் பிடிக்கக் காத்திருப்பதை அவரும் விடுவதில்லை எனும் நிலையே யதார்த்தம் என்பதால் அரசியல் கட்சிகளாலும் அதிரடியாகவும் நேர்மையாகவும் முடிவெடுக்க முடிவதில்லை.
ஆகவே இந்த ஜனநாயக விரோத அரசியல் போக்கினைக் கட்டுப்படுத்தவும் அதற்கு பதில் கொடுக்கவும் கூடிய சக்தி ஜனவரி மாதம் 8ம் திகதி நம்மிடம் வழங்கப்படும் போது சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே எச்சரிக்கை வழங்க வேண்டிய பொறுப்பும் மாற்றத்தைக் காணக்கூடிய வாய்ப்பும் சேர்ந்தே வருகிறது என்பதை சிந்தித்து வாக்களித்து நல்லதைத் தேடிக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மைச் சாருகிறது.

மீண்டும் எம் தலையெழுத்தை மாற்றியெழுதிக்கொண்டு அவன் அடிக்கிறான், இவன் இடிக்கிறான் என மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கும் சமூகமாக தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பதை அறிந்து, தெரிந்து செயற்படும் தேவையும் கடமையும் இறைவன் நாட்டத்தால் நம் அனைவரையும் நாடி வருகிறது என்பதை நினைவிற் கொள்வோம்.

அ. நவாஸ்

0 comments:

Post a Comment