கருமலையூற்று மஸ்ஜித் இடிப்பும், அரசியல் தலைமைகளின் தவறும் நிலைப்பாடும்.
400 வருடம் பழைமை வாய்ந்த திருகோணமலை வெள்ளைமணல் கருமலையூற்று பள்ளிவாசல் ஞாயிற்றுக்கிழமை காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்து வரும் இந்தப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமை நாசகார செயல் என்று பள்ளி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூன்று தினங்களாக பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் கடும் மழை பெய்துள்ளது. இந்த மழை பெய்த நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தின் மூலம் இந்தப் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது . தற்போது பள்ளிவாசல் இருந்த இடமே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு இந்தப் பள்ளிவாசல் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த 350 குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த மக்கள் நானூறு வருடங்களுக்கு மேல் குடியிருந்தவர்களாவர். கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1985 ஆம் ஆண்டு மீண்டும் அது புனரமைக்கப்பட்டது.. 2007 ஆம் ஆண்டு தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அமைச்சராக இருந்த வேளையில் மீலா நபி நிதியிலிருந்து 5 இலட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கியதையடுத்து மீண்டும் இந்தப் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டிருந்தது. .
இந்த நிலையிலேயே பழைமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசலானது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.. பள்ளிவாசல் இடிக்கப்பட்டமை தொடர்பில் இதன் நிர்வாகத்தினர் கருத்துத் தெரிவிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனரக இயந்திரமொன்றின் சத்தம் பள்ளிவாசலை அண்டியபகுதியில் கேட்டபோது என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. கடல் பிரதேசத்தை அண்டிய பகுதி என்பதால் தோணியொன்றை எடுத்து கடல் வழியாக சென்று பார்த்தபோது பள்ளிவாசல் கனரக இயந்திரமொன்றை பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டதை கண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பழைமைவாய்ந்த பள்ளிவாசலை படையினரே தகர்த்துள்ளமை தெளிவாகின்றது. கடந்த சில வருடங்களாகவே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்த இத்தகைய வன்முறைச்சம்பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தொடர்ந்தது. வீதி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதற்கு தொடர்ந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அமைந்திருந்த நானூறு வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளமை முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தப் பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்தை ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் கண்டித்துள்ளனர். கருமலையூற்றுப் பள்ளிவாசலை மீள அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஐ.ம.சு.மு. வின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகத்துறை மேற்பார்வை எம்.பி. யுமான ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷ ஆகியோரின் கவனத்திற்கும் தான் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதேபோல் பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டமையை முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.என். அமீர் அலி கண்டித்துள்ளார். மூன்று மாதங்களுக்குள்ளே இந்தப் பள்ளிவாசலை மீட்டெடுத்து அந்தப் பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பேன் என்று 2012 என்று கூறிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டமையினால் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் கிழக்கு மாகாண முதலமைச்சரே ஏற்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பள்ளிவாசலை படையினரிடம் இருந்து விடுவித்து பொதுமக்களின் பாவனைக்கு விடவேண்டும் என்று கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு நவம்பரில் ஆளும் கட்சி உறுப்பினர் அமீர் அலியினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த பிரேரணையில் உரையாற்றும்போதே மூன்று மாதகாலத்திற்குள் பள்ளிவாசலை விடுவித்து தருவதாக முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாமை குறித்து உறுப்பினர் அமீர் அலி யைப் போல் ஐக்கிய தேசியக்கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல் உடைப்புக்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்கவேண்டும். அவர் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பள்ளிவாசலுக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் திருகோணமலை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியதுடன் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைப்பதோடு அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.
இவ்வாறு பள்ளிவாசல் படையினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளபோதிலும் அதனை அவர்கள் மறுத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் கருமலையூற்று உயர் பாதுகாப்பு வலயத்திற்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட்டார். பாழடைந்த நிலையில் காணப்பட்ட பள்ளிவாசல் கட்டடம் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாகவே இடிந்து விழுந்துள்ளதாக இராணுவத்தினரால் முதலமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. .
இது குறித்து முதலமைச்சரிடம் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது உண்மையிலேயே அது தானாகத்தான் விழுந்திருக்கும் என்று அவர் பதிலளித்துள்ளார். பள்ளிவாசல் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகமும் ஏனைய முஸ்லிம் தலைமைகளும் கூறுகின்ற நிலையில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இராணுவத்தினரின் கூற்றுக்கு தலைசாய்த்து கருத்து தெரிவித்துள்ளமையும் உண்மை நிலை எவ்வாறு மழுங்கடிக்கப்படுகின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கில் படையினரால் அதியுயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவீடுகள்இ மற்றும் ஆலயங்கள் என்பவற்றை படையினர் தமது தேவைகளுக்காக இடித்துள்ளமை வரலாறாகவே உள்ளது. வலிகாமம் வடக்குப் பகுதியில் 6300 ஏக்கர் காணிகளை சுவீகரித்துள்ள படையினர் அங்கு அமைந்திருந்த கோவில்கள்இ மற்றும் வீடுகள்இ என்பவற்றை இடித்து தரைமட்டமாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதேபோன்றே இந்தப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவமும் இடம்பெற்றிருக்கலாம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் இடித்து அழிக்கப்பட்டு விட்டது. இந்தப் பள்ளிவாசலையும் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்த பகுதியையும் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் தலைமைகள் ஏற்கனவே மீட்டிருந்தால் இவ்வாறான துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றிருக்கமாட்டாது. ஆனாலும் அவ்வாறு படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பதென்பதும் இலகுவான காரியமில்லை.
கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலேயே உள்ளது. இதன் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த ஒருவரே பதவி வகித்து வருகின்றார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே கிழக்கு மாகாண ஆட்சியினை நடத்திவருகின்றன. இத்தகைய நிலையில் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இடிக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைத்து மக்களின் பாவனைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளையாவது இனியாவது இந்த அரசியல்வாதிகள் செய்தால் நல்லது.
-லங்காமுஸ்லிம்
0 comments:
Post a Comment