ஈராக்கின் ISIS ஒபாமாவின் திடீர் எதிரியானது ஏன்..?
இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற அமைப்பு திடீரென அமெரிக்காவுக்கு எதிரியானது, சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒபாமாவும் அவரது அரசும் இந்த அச்சுறுத்தலைக் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இது குறித்து அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து அறவியல்/அரசியல் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வரும் 'கவுன்ட்டர் பன்ச்' என்ற இணையதளத்தில் சமூகத் தொண்டர் மற்றும் எழுத்தாளர், விமர்சகர் ஷாமஸ் குக் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
பாகிஸ்தான், ஏமன், சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ அமெரிக்கா தீவிரமாக நடத்தி வந்த 2 ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். தனது பலத்தை இராக்கில் பரவலாக்கம் செய்தது.
ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற உண்மையான அச்சுறுத்தல் எழுந்த போது ஒபாமா அதனை அலட்சியமாக ஒதுக்கினார். அமெரிக்க ஊடகங்களும் இந்த அச்சுறுத்தல் குறித்து வாயைத் திறக்கவில்லை. தனது போர்த்திறப் பார்வையை ஒபாமா உக்ரைன் மீது திருப்ப, காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு தொடர்ந்து நொண்டிச்சாக்குகளைக் கூறிவந்தார்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக அல்-கய்தா பாணி பிற அமைப்புகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியவையும் சிரியா போரில் உந்துசக்தியாக விளங்கியதில் 170,000 பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் தெருவுக்கு வந்தனர். நிரந்தர அகதிகளாக உணவுக்கு ராணுவ லாரிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் திடீரென ஒபாமா ‘மனிதார்த்த அக்கறைகளுடன்’(?) ஐ.எஸ்.ஐ.எஸ். மீது போர் தொடுத்துள்ளார். அப்படியென்றால் அமெரிக்கா மன்னிக்க முடியாத ஒரு காரியத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். செய்துள்ளது. அதாவது கடைசியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டதாம். இதற்கு முன்னால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நலன்களும் அமெரிக்க நலன்களும் சரியாக ஒன்றிணைந்திருந்தன என்றுதானே இதற்குப் பொருள்?
நியூயார்க் டைம்ஸ் இதழே ஒபாமாவின் முந்தைய செயலின்மையை விமர்சனம் செய்துள்ளது. “இராக்கில் மொசூல் நகரிலும் பாக்தாத்திலும் ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது அமெரிக்க ராணுவ தாக்குதல் குறித்து யோசிக்கக் கூட இல்லை” என்று எழுதியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். சிரியாவை அழித்தது, இராக்கில் உள்ளே நுழைந்து அதகளப்படுத்தியது, ஆனால் யு.எஸ். தலைமை நேட்டோ, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதான சாத்தியங்கள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்தது. இது ஏன்? ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீறல்களைக் கண்டிக்கக் கூட இல்லை.
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ஆதரவு பிற வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு மலையளவு பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கி வருவதையும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.
மிதவாத இஸ்லாமிய போராளிகளுக்கு ஒபாமா அரசு பெரும் டாலர் தொகைகளையும் ஆயுதங்களையும் அளித்தது, ஜிஹாதிகள் கைக்கே சென்றது. மேலும் சில மிதவாத இஸ்லாமியா போராளிகளே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததுதான் நடந்தது.
இராக்கையும் சிரியாவையும் ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகுலையச் செய்தது பற்றி கண் கூட இமைக்காத ஒபாமா, இதே இஸ்ரேலிலோ, சவுதி நாடுகளிலோ பயங்கரவாத அமைப்பு ஒன்று ஊடுருவினால் என்ன செய்திருப்பார், உடனே எஃப்-16-இலிருந்து குண்டுகள் நிமிடமாக மழை பொழிந்திருக்கும்.
இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சி மாற்றங்கள் தேவை, அதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு சாதகமாகவே இருந்தது. மாறாக இராக் அரசு உள்ளடக்கிய அரசியலை நடத்தவில்லை என்று விமர்சனம் செய்தார் ஒபாமா.
மேலும் இராக் துண்டாடப்படுவதை அமெரிக்க அரசியல் தலைவர்கள் ஆதரிக்கவே செய்தனர். ஆனால்... ஐ.எஸ்.ஐ.எஸ். அமெரிக்காவின் கோபத்தைச் சம்பாதிக்க அப்படி என்னதான் செய்து விட்டது? அது தனது எல்லையை மீறிவிட்டது.
அமெரிக்காவுக்குக் கண்மூடித் தனமான ஆதரவைத் தந்து கொண்டிருக்கும் எண்ணை வளம் மிக்க தனிப்பட்ட மண்டலத்தை ஆட்சி புரிந்து வரும் இராக் குர்திஷ்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்தியுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க, அதுவும் அமெரிக்க ஆதரவு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். தொட முயற்சித்ததே அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ். மீதான கோபத்திற்குக் காரணம். உடனே ஏதோ மனிதார்த்த அக்கறைகளுக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை அடக்க முனைந்ததாக அவர் கூறிக் கொள்கிறார்.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
jaffnamuslim
0 comments:
Post a Comment