கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தரக்குறைவான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.




காலத்தின் தேவை கருதி மே மாத உண்மை உதயத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆசிரியர் பக்கத்திலிருந்த கட்டுரையை பிரசுரம் செய்கிறோம்.
.........................................................................................................................................................
இலங்கை இஸ்லாமிய பிரசார வரலாற்றில் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் பிறந்ததே தவ்ஹீத் பிரச்சாரமாகும். ஆரம்ப கால தாஈக்கள் இஹ்லாஸ{டனும் தியாகத்துடனும் ஈமானிய உறுதியுடனும் மேற்கொண்ட போராட்டம் இந்த நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதைய அழைப்பாளர்கள் சகோதர அமைப்புக்களுடன் நாட்டில் சுமுகமான உறவைப் பேணி வந்த அதே நேரம், கொள்கையில் உறுதியுடனும் இருந்தனர். 1940களில் அன்சாரிஸ் ஸ{ன்னா, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயர்களில் இரு அமைப்புக்கள் இருந்தாலும், இரண்டும் ஒன்று போல் இயங்கி வந்தன.



பின்னர் தஃவாவையும், சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு சில நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த நிறுவனங்களும் நிர்வாக ரீதியாக தனித்தனியாக இயங்கினாலும் தஃவாக்களத்தில் ஒருவர் மற்றவருக்கு துணையாகச் செயற்பட்டனர். இதனால் தவ்ஹீத் பிரசாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வீரியமாக முன்னெடுக்கப்பட்டது.



இடையில் மழைக்காலனாய் உருவெடுத்த ஒரு அமைப்பு மற்ற எல்லா அமைப்புக்களையும் விமர்சித்து நிகழ்ச்சிகளை செய்து வந்தாலும் நல்லுள்ளம் கொண்ட தவ்ஹீத் சகோதரர்கள் அந்த அமைப்பைப் புறக்கணித்து அதன் வளர்ச்சியை தடுத்தனர்.



இதனைத் தொடர்ந்து ஏனைய தவ்ஹீத் அமைப்புக்கள் மீது வெறுப்புக் கொண்ட மனநிலையில் ஒரு அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இதுதான் தவ்ஹீத் பிரச்சாரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது ‘பிரிவினை மனம்’ கொண்ட பிரசார அமைப்பு எனலாம்.



இதன் எதிரொலியாலும் மற்றும் பல நல்ல நோக்கங்களுடனும் மற்றொரு அமைப்பு உதயம் பெற்றது. அதற்கு தவ்ஹீத் சகோதரர்கள் பேராதரவு அளித்தனர். எனினும் காலப்போக்கில் அது மங்கி மறைந்து செயலிழந்து போனது.



இதனைத் தொடர்ந்து தவ்ஹீத் பிரசாரத்தில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டு வருவதைக் கசப்பான உண்மையாக நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.



உள் முரண்பாடுகள், தனி நபர் தாக்குதல்கள், விதண்டாவாதங்கள், மார்க்கம் அங்கீகரிக்காத விமர்சனங்கள்…. இவ்வாறு வேண்டத்தகாத பல விபரீதங்களால் தஃவாக் களம் உற்சாகமிழந்து ஒரு உறக்க நிலைக்குச் சென்றுள்ளது.



இதேநேரம் மற்றைய அமைப்புகள் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் தம்மை வளர்த்துக் கொண்டு வருகின்றன. இதை அந்த அமைப்புக்கள் மீது கொண்ட பொறாமையால் கூறவில்லை. எம்மில் சிலர் அடுத்த ஜமாஅத்களின் குறைகளைத் தேடித் திரிந்து பேசிக் களிப்பதில் அலாதிப் பிரியத்துடன் இருக்கின்றனர். அவர்களிடம் உள்ள நலவுகளைக் காண விரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொள்கின்றனர். ஏனைய அமைப்புக்கள் மீடியாத் துறையில் வளர்ந்து வருகின்றனர். தமது மாணவர், பெண்கள், சிறுவர்களுக்கான அமைப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர். கல்வித் துறையிலும் வளர்ச்சி தென்படுகிறது. அரசியலில் கால் வைத்தால் அதிலும் ஒரு முதிர்ச்சி தென்படுகிறது.



இவ்வாறு நான் எழுதுவதே சிலருக்கு எரிச்சலாக இருக்கலாம். இந்தப் பந்திக்காக என்னை அந்த அமைப்புக்களின் அங்கத்துவனாகக் கூடக் காட்டி விடலாம். ஆனால் இந்த வளர்ச்சி குறித்துப் பொறாமை உணர்வுடன் அல்லாமல் படிப்பினை உணர்வுடன் ஏன் நாம் சிந்திக்கக் கூடாது?



மாற்று அமைப்புக்கள் வளர்ந்துகொண்டிருக்கும் போது நமக்கள் இரண்டு பெரிய தோல்விகள் வெளிப்படையாகவே முகம் காட்டிக்கொண்டிருக்கின்றன.



ஒன்று : சோர்வு மனப்பான்மை அதன் விளைவு தஃவாவில் சலிப்பு நிலை. தவ்ஹீதுக்குப் பலரும் உரிமை கோருவதால் நான்தான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வு யாருக்கும் இல்லாது போய் விட்டது. இந்த மந்நத நிலைக்கும் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கின்றது.



அதுதான் உள்முரண்பாடுகள்! கருத்து வேறுபாடுகள் என்றால் கூடப் பரவாயில்லை. தஃவா நிகழ்ச்சிகள் என்றாலே “நாம்தான் தவ்ஹீத்வாதிகள்! மற்றோர் தவ்ஹீத் இல்லை!” எனப் பட்டம் கொடுப்பதும், தம்மைத் தூய்மைப்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதும் தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் பல தாஈகளின் உள்ளங்கள் புண்பட்டுப் போய் ஓரளவு உடைந்த மனநிலையுடன் இருக்கின்றனர். எனவே, களத்தை விட்டு ஒதுங்கிவிடும் மனநிலை இவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இவை உள்முரண்பாட்டின் நேரடி விளைவு!



இத்தகைய விமர்சனங்களைச் செய்யும் சகோதரர்கள் தமக்கு அல்லாஹ் வழங்கிய பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் தவ்ஹீதை வளர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். தவ்ஹீத்வாதிகளைத் தரக்குறைவாகத் தாக்குவதை நிறுத்திக் குராபிகளுக்கு மத்தியில் தஃவாச் செய்து புதிய தவ்ஹீத்வாதிகளை உருவாக்க முயற்சிக்கலாம். அது ஆரோக்கியமாக இருக்கும்.



எனவே, முதலில் தரக்குறைவான விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும். அவரவர் தாம் செய்யும் பணிகளைப்பற்றிப் பெருமை பேசிக்கொண்டாலும் பரவாயில்லை. அடுத்தோர் செய்த-செய்துவரும் பணிகளை வக்கிர புத்தியுடன் விமர்சிப்பதை நிறுத் வேண்டும். ஒன்றாக இல்லையென்றாலும் ஒரு முகப்பட்ட மனநிலையில் தஃவாக் களத்தில் பணி செய்ய வேண்டிய தேவையுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும்.



அத்துடன் பழைய தஃவா அமைப்புக்கள் தமது உடைந்த மனங்களுக்கு ஒத்தடம் போட்டுக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும். “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்பார்கள். உங்களை நம்பி வந்த தவ்ஹீத் சகோதரர்களை ஆரோக்கியமான மனநிலையோ, அனுபவமோ இல்லாத சிறுவர்கள் கையில் ஒப்படைத்து அவர்கள் அந்த மக்களை தவறான வழியில் வழி நடாத்துவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதும் நல்லதல்ல.



பொதுமக்களைப் பொறுத்தவரையில் வீணான விமர்சனங்களுக்கப் பலியாகாமல் தம்மைக் காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். தனி நபர் தாக்குதல்களில் ஈடபடுவோரை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். பொய்யும், அவதூறும் கலந்த விமர்சனங்களுக்கு மக்கள் இடம் கொடுப்பதைக் கண்டுதான் தஈக்கள் மனம் உடைந்து போய் உறங்கும் மனோநிலைக்கு வருகின்றனர். .



விமர்சனங்களைவிட விமர்சனங்களிற்கு மக்கள் அளிக்கும் முக்கியத்தவம்தான் தஃவாக் களத்தின் முதுகெலும்பை முறித்து விடுகின்றது. எனவே ஒரு பிரசாரம் நடைபெறுகின்றது என்றால் அந்தப் பிரசாரத்தின் இலக்கு என்ன? இலட்சியம்? இந்தச் சாடல் விமர்சனங்களால் ஏற்படப் போகும் மாற்றம் என்ன? நல்லதா? கெட்டதா? என்ற தெளிவுடன் பொது மக்கள் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.



நாம் நமக்குள் இருக்கும் உள்முரண்பாடுகளை அசிங்கமான தொணியில் எழுதியும், பேசியும் வந்தால் போராடி நாம் பெற்ற சில படித்த நல்ல நாகரிகமான தவ்ஹீத் சகோதரர்களை இழக்க நேரிடும். இவர்களுடன் இருந்தால் மரியாதையையும் இழந்துவிடுவோம் என்ற மனநிலையில் இவர்கள் மாற்று அணிகளுக்கு மாறி விடலாம். அல்லது தமது மார்க்க ஈடுபாட்டைக் குறைத்து, தான் உண்டு! தன் வேலையுண்டு! என்ற உறக்க நிலைக்குச் சென்று விடுவர்.



தவ்ஹீத் மீது பற்றுக் கொண்டு மார்க்கத்தை அறியும் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் மாணவர்களும் இவர்களது பயானுக்குச் சென்றால் மாhக்கத்தைப் படிக்க முடியாது “புறம் பேசுவார்கள்! அவதூறு கூறுவார்கள்!” என்ற எண்ணி வேறு அமைப்புக்கள் மூலம் தமது அறிவுத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முற்படுவார்கள்.



நாம் போராடிப் பெற்ற மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அமைப்புக்களுடன் தாரை வார்த்து விடும் நிலைமை உருவாகியுள்ளதைச் சிந்தித்தால் இந்த உண்மையை உணர முடியும்.



எனவே வீணாண விமர்சனங்களையும், ஏச்சுப்பேச்சுக்களையும் தவிர்த்து இஹ்லாஸ{டனும், வீரியத்துடனும் தஃவாக்களத்தில் மீண்டும் நாம் நடை பயில வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு தாயிகளும், அமைப்புக்களும் செயற்பட வேண்டும். இதில் நாம் கவனக் குறைவாக இருந்தால் நாமே தவ்ஹீத் சமூகத்தை அழிப்பதாக அமைந்துவிடும்.



எனவே தாயிகளே!

அஃவா அமைப்புகளே!

திறந்த மனதுடனும், உண்மையான உள்ளத்துடனும் அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்துப் பணி செய்வோம் என உறுதி எடுங்கள்!

அல்லாஹ் இதற்கு நம்மனைவருக்கும் அருள் செய்வானாக!

-ஆசிரயர்-

1 comments:

Anonymous said...

this is stupid.

Post a Comment