கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீண்டும் பெளத்த பிக்குகள் இடையூறு முஸ்லிம் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

கொழும்பு செய்தியாளர்: ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்கு முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது . ஆனாலும் இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இன்று-29.07.2012 நேற்று- ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள நூர் மஸ்ஜித்தில் இfப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபடிருந்தால் அதிகமான முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.
அதன் காரணமாக மஸ்ஜித்தில் வெளி மின்விளக்குகளும் போடப்பட்டுகாணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பெளத்த பிக்குகள் தலைமயிலான குழுவினர் மஸ்ஜிதின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த மஸ்ஜித்தின் இfப்தார் நிகழ்வு பிரதேசத்தின் சிங்கள அரசியல்வாதி ஒருவரினால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது .

இதை தொடர்ந்து பெளத்த பிக்குகளுடன் பேசிய மஸ்ஜித்தில் இருந்தவர்கள் அவர்களுக்கு, மஸ்ஜித்தின் நிகழ்வு தொடர்பாக விளக்க வேண்டி ஏற்பட்டது , முஸ்லிம்கள் தரப்பில் , இது ரமழான் மாதம் என்றும் இடம்பெறுவது விசேட இப்தார் நிகழ்வு என்று அதை ஏற்பாடு செய்தவர் ராஜகிரிய பிரதேச சிங்கள அரசியல்வாதி என்றும் விளக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இடையூறை ஏற்படுத்தும் முகமாக நடந்துகொண்ட அவர்கள் முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப் பட்ட விளக்கத்துக்கு பின்னர் திரும்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக குறித்த சிங்கள அரசியல்வாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது .

இந்த மஸ்ஜித்தில் வழமையாக தொழுகையில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றில் உதவி முகாமையாளர் (மொஹம்மத் ஜெமீல்) தனது கவலையை இப்படித் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், குறித்த சம்பவம் தொடர்பாக பொலீசிலும் , மனித உரிமைகள் அமைப்பிடமும் முறைப்பாடு,செய்யப் படவேண்டும் ஆனால் அவ்வாறு முறைபாடுகள் செய்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இடம்பெற்றதாக எனக்கு தெரியவில்லை. இங்கு முஸ்லிம்கள் வந்த பெளத்த பிக்குகளை பேசி அனுப்பிவிட்டது பெரிய வெற்றி என்று நினைகின்றனர் அது முற்றிலும் தவறானதாகும் .
எமக்கு நாட்டில் பள்ளிகளை கட்டுவதற்கும் அதில் பகிரங்கமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான உரிமை நாட்டின் யாப்பில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது ,அந்த உரிமைகளை வன்முறையின் மூலம் பறிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முஸ்லிம் தரப்பில் எடுக்க தவறுவதன் விளைவைத்தான் தினமும் நாட்டின் பல பகுதிகளில் நாம் அனுபவித்து வருகிறோம் என்றார்.
அதுதான் சில தினங்களுக்கு முன்னர் குருணாகல் தெதுரு ஓயகம பள்ளிவாசலிலும் இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தாலும் இந்த சமூக வன்முறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படுவதில் ,எமது முஸ்லிம் சமூகமும் எந்த சட்ட நடவடிக்கைகளையும் நாடுவதும் இல்லை. இது மிகவும் மோசமான நிலை . இப்படியான அத்துமீறல்கள் தொடர்வத்துக்கு இதுதான் பிரதான காரணம் என்று விசனம் தெரிவித்தார்.

தாடி வைப்பது தீவிரவாதமாம்?, முகம் மூடுவது விபச்சாரிகளாம்?

இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் காலாகாலமாக யுத, கிறிஸ்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுவந்தது. தற்போது இந்நிலை மாறி முஸ்லிம்களாலேயே இஸ்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறதா என்ற அச்சம் அன்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எம்மத்தியில் கேள்வியை உருவாக்கியுள்ளது.
எமதூரிற்கு அன்மைய ஊரில் ஒரு சில படித்தவர்களால் (?) தாடிவைப்பது தீவிரவாதத்தின் அடையாளம் எனவும் முகம் மூடும் பெண்களில் அதிகமானோர் விபச்சாரிளாக உள்ளனர் என்றும் பகிரங்கமாக கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூற்றினால் கலவரமடைந்த ஊர் மக்களும் சில இளைஞர் குழுக்களும் சம்பந்தப்பட்ட இரு படித்தவர்களையும் தாக்க முயன்றதாகவும் தகவல்கள் சொல்கின்றன. இவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊர் மக்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தை வேண்டியுள்ளதாம். எகிப்தில் அதிகாரம் வந்ததும் முழு உலகும் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்ததாக நினைத்துவிட்டார்களோ என்று பலரும் பேசிக் கொள்கின்றனர்.

புனித ரமழானை வரவேற்போம்

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)

மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
  • உடல் இச்சை
  • கோபம்
  • தவறான உணவு முறை
  • தவறான பேச்சு.

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.

இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.

உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.

நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.

இளைஞர்களே!

“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)

இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.

உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.

மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.

நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது:

“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.

மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.

நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.

நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.

எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!.
 

கஹட்டோவிட தவ்ஹீத் பள்ளியில் றமழான் நிகழ்வுகள்

எதிர்வரும் றமழானை முன்னிட்டு கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலினால் அரைநாள் பயான் நிகழ்ச்சியொறு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வரை நாள் நிகழ்வில் றமழானை எவ்வாறு சிறப்பாகக் கழிக்க வேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலாவது உரை அஷ்செய்க் இம்தியாஸ் மதனி அவர்களினால் இலங்கையில் சீயாக்களின் ஊடுறுவல் சம்பந்தமான தலைப்பில் நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையைத் தொடர்ந்து முஜாஹித் பின் றஸீன் அவர்களால் றமழான் சம்பந்தமான விளக்கவுரையொன்று இடம்பெற்றது. அவ்வுரையைத் தொடர்ந்து மௌலவி நவ்பல் அவர்களின் உரை இடம்பெற்றது.

கஹட்டோவிட தவ்ஹீத் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வரலாறு காணாத மக்கள் தொகையினர் கலந்து பயன்பெற்றனர்.

பர்மாவில் முஸ்லிம்களின் படுகொலை. எவ்வாறு நிகழ்ந்த்து? சில தகவல்கள்.





ரோகிங்னியா மாநிலத்தில் துங்கொக் எனும் கிராமத்தில் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் ராணுவத்தினரால் 03/06/2012 இல் பஸ் வண்டியொன்றிலிருந்து இறக்கப்பட்டு கொல்லப்பட்ட்தற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக மயொமா கயண்டன் கிராமத்தில் அமைதியான முறையில் சென்றுகொண்டிருந்த 500 இளைஞர்களைக்கொண்ட ஊர்வலத்தின் மீது ராணுவம் துப்பாக்கிபிரயோகம் செய்ததன் மூலம் பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் 08/06/2012 இல் ஆரம்பமாகியது..

அந்நாட்டின் உத்த்யோகபூர்வசெய்தி நிருவனம், மேற்படிகொலைகள் அரகான் மாநிலத்தின் மேற்குப்பகுதியில் பங்களாதேஸ் இன் எல்லைப்புரத்தில் இடம்பெற்ற ஒரு கற்பழிப்பு,கொலைக்கான பழிவாங்கள் என்று குறிப்பிட்டது.மேற்படி கொல்லப்பட்ட 10 பேரும் தென்அரகன் பகுதியிலுள்ள தந்த்வே எனுமிடத்திலுள்ள தெஸ்டா பள்ளிவாசலிலிருந்து ரன்கூன் நோக்கி யாத்திரையொன்றை (தப்லிஹ்)மேற்கொண்டிருந்தபோ​து வழியில் நூற்றுக்கணக்கான ரோகிங்னியா பெளத்தர்களால் மறிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட்தாக தந்த்வேயில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த யாத்திரிகரொருவர் குறிப்பிட்டார் .


ரோகிங்னியா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை அதிகமாக பிரதிநிதிப்படுத்தும் அபிவிருத்திற்கான தேசிய ஜனநாயகக்கட்சியினைச்செர்ந்த​ அபூ தாஹா’’இவர்கள் மிருகங்களை விடவும் கெவலமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள்’’ எனத்தெரிவித்துள்ளார். ரோகிங்னியாவில் 800,000 முஸ்லிம்கள் வாழ்வதாகவும்,இவர்கள் தான் இன்று உலகிலுள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் என ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான நிருவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பர்மா அரசாங்கம் ரோகிங்னியா முஸ்லிம்களை நாட்டின் பிரஜைகளாக கருதுவதில்லை,அந்நாட்டின் பெரும்பான்மை பெளத்தமக்களும் அவர்களை வெருக்கின்றனர்.பிறப்பின் மூலம் தாம் நீண்ட காலம் பர்மாவில் வாழ்வதாக்கூறி தமக்கு அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என ரோகிங்னியா முஸ்லிம்கள் போராடிவருகின்றனர்.ஆனால் அவர்கள் பங்களாதேக்ஷ் நாட்டிலிருந்து வந்து குடியேரிய சட்டவிரோத குடிகள் எனக்கூறி, அந்நாட்டு அரசாங்கம் அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு கொடுக்க மறுக்கின்றது..மனித உரிமைகள் நிருவனத்தின் விசேட செய்தியாளர் ,Toms Ojea Quintana ,அண்மையில் மியன்மாருக்கு விஜயம் செய்தபோது கலவரங்களுக்கான அடிப்படைக் காரணம் ‘’ நீண்டகாலமாக ரோகிங்னியா முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள்,பிரஜா உரிமை, நடமாடுவதற்கான உரிமை போன்றன மறுக்கப்படுகின்றமையே’’ எனக்குறிப்பிட்டார்.

கடந்தவாரம் லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூ கீ ‘’கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பிரஜைகள் அல்ல,நிரந்தர வதிவாளர்கள்’’ எனறேகுறிப்பிட்டார்.மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இன்ங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுனுக்கமாக கையாளாவேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார்.

ஒற்றுமை பொறி : முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் வல்லமை மீது பாரிய வேட்டு !



பிராந்திய அரசியலிலாவது பேரம் பேசும் வல்லமையை தக்க வைத்துக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் மீது விழுந்தது இடி, கிழக்கு மாகாண அரசை தீர்மானிப்பதில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இருக்கின்ற வலுவை கணக்கில் எடுத்து ஆளும் கட்சியும் தமிழர் தேசியக் கூட்டணியும் பேரம் பேசல்களை நடாத்திக் கொண்டிருந்த வேலையில், ஏற்கனவே அரசோடு இணைந்தே போட்டியிடத் தீர்மானித்திருந்த அமைச்சர் அதாவுல்லாஹ் அமைச்சர் ரிஷாத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவூது அவர்களுடன் அரச உயர் மட்ட பின்புலத்துடன் நடாத்திய பேச்சு வார்த்தைகள் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் வல்லமை மீது பாரிய வேட்டாக விழுந்துள்ளது. தலைவரதும் கட்சியினதும் அங்கீகாரமின்றி தவிசாளர் நடாத்திய பேச்சுவார்த்தைகளை தலைவர் ஹகீம் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக கண்டித்ததை தொடர்ந்து விவகாரம் மேலும் மோசமடைந்துள்ளது.
தலைவர் ஹக்கீமுக்கு சவாலாக அமைந்துள்ள அணி மேற்படி முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் அமீன் மற்றும் ஜம்மியத்துல் உலமா தலைவர் செயலாளர் ஆகியோரை அணுகி முஸ்லிம் அரசியர்கட்சிகளை ஓரணி நின்று செயற்படுமாறு கேட்கச் செய்துள்ளதோடு முஸ்லிம் காங்கிரஸ் அரச கூட்டணியில் மாத்திரமே சரணடையும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே இவ்வாறான இறுதிக்கட்ட நிலைமைகள் தோன்றும் என்பதனை நான் ஊடகங்களில் எழுதியதோடு தலைவர் ஹக்கீமுக்கு அடுத்த தலைவர்களுடனும் குறிப்பாக அதாவுல்லாஹ் ரிஷாத் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்துமாறும் மாகாண சபை மற்றும் அடுத்த பாராளுமன்றம் இரண்டையும் கவனத்தில் எடுத்து தனியாட்களின் நலன்களை திட்டமிட்டுக் கொண்டு கூட்டாக சமூக விவகாரங்களை ஒர்ரணி நின்று தூக்கிப் பிடிக்குமாறு நான் வழங்கிய எந்த ஆலோசனையையும் தலைவர் கவனத்திற் கொள்ள வில்லை என்பது கவலை தருகிறது.
இன்று வரை தமது கட்சிக் காரர்களுடன் கூட அவரவர் என்னென்ன கதாபாத்திரங்களை வகிப்பது என்று திட்டமிட்டுக் கொள்ளாது, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கணக்கில் எடுக்காது தனியாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் செல்லும் தலைவர் அடுத்த வாரம் நியமனப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்னும் இறுதி முடிவுகளுக்கு வராமலிருப்பது ஆரோக்கியமான நகரவுகளாகத் தெரியவில்லை.
அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப் படவுள்ளதகவும் அது தொடர்பான பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தாலும் இது வரை எந்த உயர் மட்டக் குழு என்னென்ன விடயங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள் என தனக்கு எதுவுமே தெரியாத நிலையில் தவிசாளர் பஷீர் தனது நடவடிக்கைகளை நியாயப் படுத்தவும் அதற்காக உள்ளிருந்து ஒரு அணியை திரட்டிக் கொள்ளவும் தலைவர் மிகவும் சௌகரியமான வழிகளை திறந்து கொடுத்துள்ளார்.
இல்லை நாங்கள் தனியே களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு விட்டு பின்னரே அரசுடனும் எதிரணியினருடனும் பேசுவோம் என ஹகீம் அறிவித்தால் அங்கேயும் அவருக்கு சவால்கள் காத்திருக்கின்றன:
அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடும் நெருக்கடிக்குள் ஹகீமை தள்ளுவதன் மூலம் மத்திய அரசிலிருந்து ஹகீமை தனிமைப் படுத்தி வெளியேறச் செய்தல்.அதற்கு நாங்களும் தயார் எல்லோரும் ஓரணி நின்றே போட்டியிடுவோம் என்ற “ஒற்றுமைப் பொறி ” கோஷம் அரச பின் புலத்துடன் முன்வைக்கப் படலாம்.அல்லது கட்சி முக்கிய பிரமுகர்களுடன் தவிசாளர் அரச தரப்பு முதன்மை வேட்பாளராக வெளியேறலாம்.
முஸ்லிம் காங்கிரஸையும் தலைவரையும் தனிமைப் படுத்துவதில் அரசிற்கும் எதிர் அணிகளுக்கும் இருக்கும் அவசியம் முஸ்லிம்களது உரிமைக் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் தொடர்வது பேரின மேலாண்மைவாத சக்திகளுக்கு பெரும் தலையிடியாக இருப்பதனாலாகும். ஆனால் அவ்வாறான நெருக்கடிகளை வலிந்து தேடிக் கொள்வதில் தலைவரின் எதேச்சதிகாரமான செயற்பாடுகளும் பாரிய பங்களிப்புகளை செய்து வருகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.
பாரம்பரிய அரசியலில் தனி நபர்கள் நலன்கள் தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்ளப் பட்ட பின்னரே சமூக நலன்களுக்கான ஒன்றிணைந்த போராட்டம் அதற்குரிய வேலைத்திட்டம் முன்வைக்கப் படுகிறது, அதையே முஸ்லிம் அரசியல் வாதிகளும் தொடர்ந்து செய்கிறார்கள், அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கட்சியை இருட்டுக்குள் வைத்துள்ள நிலையில் எதிரணியினர் தமக்குள் ஆளும் தரப்பின் பின்புலத்துடன் பாரிய புரிந்துணர்வுடன் அணி திரண்டுள்ளனர்.
எல்லா காய் நகர்த்தல் களும் பேரின மேலாண்மைவாத தென்னிலங்கை அரசியலுக்கு சாதகமான காய் நகர்த்தல் களாகவும், வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் புரிந்துணர்வுக்கு சாவு மணியடிக்கும் நகர்வுகளாக இருப்பதுவும் அதற்கு முஸ்லிம் கவுன்சிலையும் உலமாக்களையும் உள்வாங்கியமையும் எனக்கு மற்றுமொரு ஜெனீவாவையே நினைவூட்டுகிறது.
சமூகம் வெல்கிறதா அல்லது இந்த தனி நபர்களது வேலைத்திட்டங்கள் வெல்கிறதா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்..! என்னாத்தப் பொறுத்திருந்து பாக்கிறது சார் என்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்கிறது..!

அஷ்-ஷேய்க் கலாநிதி மஸி ஹுதீன் இனாமுல்லாஹ்

கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

லண்டன் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்- வேற்றுமையின் மத்தில் ஒன்றுமையை நாம் தேடவேண்டும் , எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பாக முடியாது, அப்படி உருவாக்கவும் முடியாது. கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , சகோதரத்துவதுக்கும் தடையாக வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார் .

பிரிட்டனில் இயங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலாச்சார பேரவையின் 13 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ஒற்றுமை எமது வாழ்கையில் வரவேண்டுமாக இருந்தால் இரண்டு விடயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் அப்போது எமது வாழ்கையில் முழுமையாக ஒன்றுமை வரும் ஒன்று கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டு கருத்து வேறுபாடுகளின் போது இது எனது கருத்து இந்த கருத்து சரியானது என்று நான் கருதுகிறேன் ஆனால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் .

முஸ்லிம் உம்மா இஸ்லாத்தின் அகீதாவில் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை, அடிப்படையான விடயத்தில் கருத்து முரண்பாடு இல்லை ஆனால் சட்டங்கள் , உப சட்டங்கள் என்று வரும்போது கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது .ஈமான் ஆறு அம்சங்களை கொண்டது என்பதில் கருத்து வேறுபாடு எவருக்கும் இல்லை , தொழுகையை தினமும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எவருக்கும் இல்லை, ஆனால் தொழுகையில் தக்பீர் எங்கு கட்டுவது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது , குனூத் விடயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் கருத்து முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது . காதியானிகள் கொண்டிருப்பது இஸ்லாத்தின் அடிப்படை மீதான கருத்து முரண்பாடு அது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் கருத்து முரண்பாடு அவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அனுமதிக்க பட்ட கருத்து வேறுபாடுகள் விடயத்தில் சண்டை ,சச்சரவு எதுவும் வரமுடியாது, இதில் நாம் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் . இந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , சகோதரத்துவதுக்கும் தடையாக வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது .

இமாம்கள் கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக பார்க்கவில்லை ஆனால் சிலர் கருத்து வேறுபாடுகளை வேற்றுமையாக ஆக்கியுள்ளார்கள். கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது. அது ஒரு பிளவாக , பிரச்சினையாக மாற்றப் பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகள் உண்மையில் பிளவுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உரிய விடயமல்ல. அல்லாஹ் கருத்துவேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக பார்கவில்லை .இஸ்லாத்தை நன்கு படித்த உலமாக்களும் கருத்துவேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக பார்கவில்லை. ஆனால் இடையில் இருக்கும் சிலர் அதை ஒரு பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்கள் .

ஏன் கருத்து முரண்பாடுகள் தோன்றுகின்றது என்பதை இப்படி சொல்லலாம் ”வித்தியாசமான அறிவுத்தரம் கொண்டமனிதர்கள் + அல் குர்ஆன் ஆஸ் ஸுன்னாஹ்= கருத்து வேறுபாடுகள்” . வித்தியாசமான அறிவுத்தரம் கொண்டமனிதர்கள் அல் குர்ஆன் , ஆஸ் ஸுன்னாஹ்வை பார்க்கும் போது அவர்களின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப பல்வேறு கருத்துகளை பெறுகிறார்கள் உதாரணமாக தொழுகையில் தக்பீர் கட்டியது முதல் சலாம் கொடுக்கும் வரை 200 கருத்துவேறுபாடுகள் இருக்கிறது. இது எப்படித் தோன்றியது இமாம்கள் குர்ஆன் , ஸுன்னாஹ்வை படித்ததன் , விளங்கியதன் ஊடாக வந்ததுதான் ஆனால் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த இமாம்கள் தமக்குல் சண்டையிட்டு கொள்ளவில்லை. ஒரு இமாம் தனது கருத்தை வலியுறுத்தி கூறுவார் அதே நேரம் மற்ற இமாமின் கருத்தை மதிப்பார் , பக்குவமாக, பண்பாடாக் கருத்து வேறுபாடுகளை அவர்கள் அணுகியுள்ளார்கள்.

கருத்து வேறுபாடுகளை முரண்பாடாக , பிளவாக எடுத்துகொள்ளாமல் இஸ்லாத்தின் எழுச்சிக்கு துணை புரியவேண்டும் , ஒன்றுமையான இஸ்லாத்தின் எழுச்சியைத்தான் இன்று துனூசியாவிலும், எகிப்திலும் கண்டோம். அதைத்தான் சிரியாவிலும் காணப் போகிறோம் என்றார் .

புது யுகம் காணுமா எமதூரின் இரு கண்ணும்?


எமது ஊரின் கல்வி வளர்ச்சியில் இரு கண்களாய் இருந்து உழைகை;கும் இரு இடங்களே பத்ரியா மற்றும் பாலிகா பாடசாலைகள் ஆகும். மிக நீண்ட காலமாக ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக கல்வி நிடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.சில பாடங்களிற்கு தொண்டர் ஆசிரியர்களின் சேவையைப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ற கிழமை வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய நியமணத்தின் மூலம் பாலிகா மற்றும் பத்ரியா பாடசாலைகளிற்கு போதியளவு ஆசிரியர்கள் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். பத்ரியாவிற்கு 5 ஆசிரிய ஆசிரியைகளும் பாலிகாவிற்கு இரண்டு ஆசிரியைகளும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினை தீர்ந்துள்ளது எனலாம். எனவே எதிர்வரும் காலங்களில் பாடசாலைப் பெறுபேறுகளில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர். 

Y.M.M.A.யின் இரத்த்தான முகாம்



Y.M.M.A.யின் இரத்த்தான முகாம்
கஹடோவிட கிளையினால் தொடர்ந்து 5ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த்தான முகாம் 01.07.2012 ஆம் திகதியாகிய இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. வதுபிடிவல ஆதாரவைத்தியசாலையின் இரத்தவங்கியினால் நடாத்தப்பட்ட இந்த இரத்த்தான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இரத்த்தானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
·         உங்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டால் வதுபிடிவல இரத்த வங்கயினுடாக அதனை பெற்றுத்தர முடியும்.

·         வெளியுர்களில் உள்ளவர்களுக்கு கூடுதலான இரத்தம் தேவைப்படும் போது கொழும்பு இரத்த வங்கியினுடாக அதற்கான ஏற்பாட்டை செய்துதர முடியும்.
Y.M.M.A மூலமாக செய்யப்படும் இந்த இரத்த்தான மூலமாக இதுபோன்ற சில நன்மைகளை எங்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று அதிகாரிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.