கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒற்றுமை பொறி : முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் வல்லமை மீது பாரிய வேட்டு !



பிராந்திய அரசியலிலாவது பேரம் பேசும் வல்லமையை தக்க வைத்துக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் மீது விழுந்தது இடி, கிழக்கு மாகாண அரசை தீர்மானிப்பதில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இருக்கின்ற வலுவை கணக்கில் எடுத்து ஆளும் கட்சியும் தமிழர் தேசியக் கூட்டணியும் பேரம் பேசல்களை நடாத்திக் கொண்டிருந்த வேலையில், ஏற்கனவே அரசோடு இணைந்தே போட்டியிடத் தீர்மானித்திருந்த அமைச்சர் அதாவுல்லாஹ் அமைச்சர் ரிஷாத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவூது அவர்களுடன் அரச உயர் மட்ட பின்புலத்துடன் நடாத்திய பேச்சு வார்த்தைகள் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் வல்லமை மீது பாரிய வேட்டாக விழுந்துள்ளது. தலைவரதும் கட்சியினதும் அங்கீகாரமின்றி தவிசாளர் நடாத்திய பேச்சுவார்த்தைகளை தலைவர் ஹகீம் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பகிரங்கமாக கண்டித்ததை தொடர்ந்து விவகாரம் மேலும் மோசமடைந்துள்ளது.
தலைவர் ஹக்கீமுக்கு சவாலாக அமைந்துள்ள அணி மேற்படி முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் அமீன் மற்றும் ஜம்மியத்துல் உலமா தலைவர் செயலாளர் ஆகியோரை அணுகி முஸ்லிம் அரசியர்கட்சிகளை ஓரணி நின்று செயற்படுமாறு கேட்கச் செய்துள்ளதோடு முஸ்லிம் காங்கிரஸ் அரச கூட்டணியில் மாத்திரமே சரணடையும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே இவ்வாறான இறுதிக்கட்ட நிலைமைகள் தோன்றும் என்பதனை நான் ஊடகங்களில் எழுதியதோடு தலைவர் ஹக்கீமுக்கு அடுத்த தலைவர்களுடனும் குறிப்பாக அதாவுல்லாஹ் ரிஷாத் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்துமாறும் மாகாண சபை மற்றும் அடுத்த பாராளுமன்றம் இரண்டையும் கவனத்தில் எடுத்து தனியாட்களின் நலன்களை திட்டமிட்டுக் கொண்டு கூட்டாக சமூக விவகாரங்களை ஒர்ரணி நின்று தூக்கிப் பிடிக்குமாறு நான் வழங்கிய எந்த ஆலோசனையையும் தலைவர் கவனத்திற் கொள்ள வில்லை என்பது கவலை தருகிறது.
இன்று வரை தமது கட்சிக் காரர்களுடன் கூட அவரவர் என்னென்ன கதாபாத்திரங்களை வகிப்பது என்று திட்டமிட்டுக் கொள்ளாது, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கணக்கில் எடுக்காது தனியாகவே பேச்சு வார்த்தைகளுக்குச் செல்லும் தலைவர் அடுத்த வாரம் நியமனப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்னும் இறுதி முடிவுகளுக்கு வராமலிருப்பது ஆரோக்கியமான நகரவுகளாகத் தெரியவில்லை.
அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப் படவுள்ளதகவும் அது தொடர்பான பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தாலும் இது வரை எந்த உயர் மட்டக் குழு என்னென்ன விடயங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள் என தனக்கு எதுவுமே தெரியாத நிலையில் தவிசாளர் பஷீர் தனது நடவடிக்கைகளை நியாயப் படுத்தவும் அதற்காக உள்ளிருந்து ஒரு அணியை திரட்டிக் கொள்ளவும் தலைவர் மிகவும் சௌகரியமான வழிகளை திறந்து கொடுத்துள்ளார்.
இல்லை நாங்கள் தனியே களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு விட்டு பின்னரே அரசுடனும் எதிரணியினருடனும் பேசுவோம் என ஹகீம் அறிவித்தால் அங்கேயும் அவருக்கு சவால்கள் காத்திருக்கின்றன:
அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிடும் நெருக்கடிக்குள் ஹகீமை தள்ளுவதன் மூலம் மத்திய அரசிலிருந்து ஹகீமை தனிமைப் படுத்தி வெளியேறச் செய்தல்.அதற்கு நாங்களும் தயார் எல்லோரும் ஓரணி நின்றே போட்டியிடுவோம் என்ற “ஒற்றுமைப் பொறி ” கோஷம் அரச பின் புலத்துடன் முன்வைக்கப் படலாம்.அல்லது கட்சி முக்கிய பிரமுகர்களுடன் தவிசாளர் அரச தரப்பு முதன்மை வேட்பாளராக வெளியேறலாம்.
முஸ்லிம் காங்கிரஸையும் தலைவரையும் தனிமைப் படுத்துவதில் அரசிற்கும் எதிர் அணிகளுக்கும் இருக்கும் அவசியம் முஸ்லிம்களது உரிமைக் குரலாக முஸ்லிம் காங்கிரஸ் தொடர்வது பேரின மேலாண்மைவாத சக்திகளுக்கு பெரும் தலையிடியாக இருப்பதனாலாகும். ஆனால் அவ்வாறான நெருக்கடிகளை வலிந்து தேடிக் கொள்வதில் தலைவரின் எதேச்சதிகாரமான செயற்பாடுகளும் பாரிய பங்களிப்புகளை செய்து வருகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.
பாரம்பரிய அரசியலில் தனி நபர்கள் நலன்கள் தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்ளப் பட்ட பின்னரே சமூக நலன்களுக்கான ஒன்றிணைந்த போராட்டம் அதற்குரிய வேலைத்திட்டம் முன்வைக்கப் படுகிறது, அதையே முஸ்லிம் அரசியல் வாதிகளும் தொடர்ந்து செய்கிறார்கள், அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கட்சியை இருட்டுக்குள் வைத்துள்ள நிலையில் எதிரணியினர் தமக்குள் ஆளும் தரப்பின் பின்புலத்துடன் பாரிய புரிந்துணர்வுடன் அணி திரண்டுள்ளனர்.
எல்லா காய் நகர்த்தல் களும் பேரின மேலாண்மைவாத தென்னிலங்கை அரசியலுக்கு சாதகமான காய் நகர்த்தல் களாகவும், வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் புரிந்துணர்வுக்கு சாவு மணியடிக்கும் நகர்வுகளாக இருப்பதுவும் அதற்கு முஸ்லிம் கவுன்சிலையும் உலமாக்களையும் உள்வாங்கியமையும் எனக்கு மற்றுமொரு ஜெனீவாவையே நினைவூட்டுகிறது.
சமூகம் வெல்கிறதா அல்லது இந்த தனி நபர்களது வேலைத்திட்டங்கள் வெல்கிறதா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்..! என்னாத்தப் பொறுத்திருந்து பாக்கிறது சார் என்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்கிறது..!

அஷ்-ஷேய்க் கலாநிதி மஸி ஹுதீன் இனாமுல்லாஹ்

0 comments:

Post a Comment