கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த Zசுபைர் நானா அவர்கள் காலமானார்.  அல் ஹாஜ் பசீர், அல் ஹாஜ் இல்யாஸ் மாஸ்டர், அல் ஹாஜ் அத்தாவுல்லா ஆகியொரின் சகோதரறும், ஸல்ஸபீல், நசுருல்இஸ்லாம், ஸஜரத் ஆகியோரின் தந்தையும் ஆவா்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (31.08.2012)காலை 10.00 மணிக்கு கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும்.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் – திருப்பி அனுப்பியது க்யூரியாசிட்டி!

செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல் – நாசா அபார சாதனை!



க்யூரியாசிட்டி அனுப்பியுள்ள லேட்டஸ்ட் செவ்வாய் கிரக படம். இதனோடு சேர்த்து, மனிதக் குரல் பதிவையும் திருப்பி அனுப்பியுள்ளது… இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரலை பதிவு செய்திருக்கிறார்கள்!

பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய்கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது. சந்திரனுக்கு அடுத்து மனிதக் குரல் பதிவான முதல் கிரகம் செவ்வாய்தான்.

க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது. 57 கோடி கிமீ தூரம் பயணித்து, அதே துல்லியத்துடன் இந்த ஒலி திரும்பக் கிடைத்துள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

“க்யூரியாசிட்டி மூலம் பூமிக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், விண்வெளி வீரர்களுக்கும் இது உந்துதாக இருக்கும். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு விஷயமாக இது பார்க்கப்படுகிறது,” என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்தார்.

இந்தக் குரல் பதிவு மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இன்னும் ஓரடி முன்னோக்கி சென்றுள்ளது க்யூரியாசிட்டி.


க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பியுள்ள இந்தப் படத்தில் செவ்வாயின் மிகப்பெரிய மலை தெரிகிறது. படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து அதன் உச்சி 16.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

அடுத்த சில தினங்களில் க்யூரியாசிட்டி செவ்வாயில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க உள்ளது. அப்போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

க்யூரியாசிட்டியின் நோக்கம் செவ்வாயின் தன்மையை ஆராய்வதுதான். அங்கு மனிதன் வாழும் சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தக் கலம் அனுப்பப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அனுப்பிய படங்களில் அடையாளம் காண முடியாத ஒரு பொருள் பறப்பது போன்று வெளிச்சத்துடன் தெரிந்தது. எனவே அது வேற்று கிரகத்தவரின் பறக்கும் தட்டு ஆக இருக்கலாம் என கூறப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நடத்தும் ஆய்வை வேவு பார்க்க வேற்று கிரகவாசிகள் வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சிலர் சந்தேகித்தனர். அதை மெய்பிக்கும் வகையில் தற்போது கியூரியாசிட்டி அனுப்பிய மற்றொரு போட்டோவில் தடயங்கள் சிக்கியுள்ளன.

அதில் மனித கைவிரல் எலும்பு ஒன்றும் கூம்பு போன்ற வடிவம் கொண்ட மற்றொரு பொருளும் உள்ளது. மற்றொரு போட்டோவில் ஷூ இருப்பது போன்றும் பதிவாகி உள்ளது. எனவே அங்கு அவ்வப்போது வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

யார் கண்டார்கள்… அடுத்த டெலிபோட்டோவில் செவ்வாய்கிரகவாசியின் குரலும் சேர்ந்து வருகிறதோ என்னமோ!


படங்கள்: நாசா – க்யூரியாசிட்டி



நிலவில் முதல் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் காலமானார்.


நிலவில் முதன் முதலாக 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை மாலை காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீல் ஆம்ஸ்ரோங், நேற்று இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது இழப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரெயில் இருந்து இனவெறியர்களால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட 6 முஸ்லிம்கள் பலி! 3 பேர் கவலைக்கிடம்!



கலவரங்களிலும், வதந்திகளிலும் முஸ்லிம்களின் உயிர் பறிக்கப்படும் பொழுது அரசும், ஊடகங்களும் அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரோ சில விஷமிகளின் பரப்புரையால் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வெளியேறுவதை மட்டுமே பெரிதாக சித்தரித்து வருகின்றன.வதந்திகளின் காரணமாக பெங்களூரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியேறிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்ற ரயில் ஒன்றில் பயணம் செய்த நான்கு முஸ்லீம்கள், கடந்த சனிக்கிழமை இரவு சக பயணிகள் சிலரால் கொல்லப்பட்டனர். இந்த நால்வரின் உடல்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது அங்கு சுமார் 6000 பேர் திரண்டதாகவும், அங்கு பதற்ற நிலை நிலவியதாகவும், ஆனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் மேலும் 10 முஸ்லீம்கள் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ள சிலிகுரி என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் மூவரின் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு பிராண வாயு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு இளைஞர் ஜாஹிர் ஹுசைன், என்பவர் இன்னும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று போலிசார் கூறினர்.இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அதிகாரபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், பிபிசி , காயமடைந்த ஒருவரின் சகோதரர் , ஷாஜஹான் அஹ்மது சௌத்ரி என்பவரிடம் கேட்டபோது, அவர் இந்த ரயிலில் பயணம் செய்த அஸ்ஸாமைச் சார்ந்த சக பயணிகள், மற்ற பயணிகள் அனைவரிடமும், அவர்களது அடையாள அட்டையைக் கேட்டு, முஸ்லீம்களை மட்டும் குறிவைத்தனர் என்றார். குறிப்பிட்ட ரெயில் பெட்டியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு அதில் இருந்த முஸ்லீம்கள் இரும்புத் தடிகள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டனர் என்றார் அவர். இந்த தாக்குதல் சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்த்து என்றும் அவர் கூறினார்.

அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு (ஞாயிறு அதிகாலை) அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருந்த ரயில் வண்டியிலிருந்து வெளியே வீசப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்த ரயிலில் 10 ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ஐந்து அரசாங்க ரயில்வே போலிசாரும் பயணம் செய்தனர் என்று கூறிய வட கிழக்கு எல்லைப்புற ரயில்வே அதிகாரி ஒருவர், ஆனால் மூடப்பட்ட இந்த ரயில் பெட்டிக்குள் என்ன நடந்த்து என்பதை யாரும் அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றார்.

இறந்தவர்களின் உடல்களும், காயமடைந்தவர்களும், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் பாலக்காட்டா மற்றும் பெலகோபா ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.

போலீசாரும் மாநில நிர்வாகமும் இந்த சம்பவம் குறித்து மௌனம் காக்கின்றன. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், பெங்களூரிலிருந்து குவஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு அஸ்ஸாம் மாநிலத்தவரும் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அவரது உடல் புதிய ஜல்பைகுரி ரெயில்வே நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்துக்கு பின்புறம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலைக்குக் காரணம் என்ன என்பதை போலீசாரோ அல்லது ரயில்வே நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை.


நன்றி

தூது ஆன்லைன்

சினிமா இசையுடன் சங்கமித் ஈத் பெருநாள் விளையாட்டுப் போட்டி

பெருநாள் என்பது சந்தோசமான ஒரு தினமாகும். இதில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களும் பெருநாள் தினத்தன்று விளையாட்டுப் போட்டியை கண்டு கழித்துள்ளார்கள் என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிகின்றோம். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவா்கள் நபியவர்களின் முதுகுக்குப்பின்னாலிருந்து விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்துள்ளார்கள் என்றும் நாம் அறிகின்றோம்.
எனினும் இன்றைய தினம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சினிமாப் பாடல்களை ஒளிபரப்பியமை பற்றி பலரும் பலவாறு கருத்துத் தெரிவிக்கின்றனர். பலகாலமாக மறைந்து போயிருந்த பெருநாள் தின விளையாட்டுப் போட்டி மீண்டும் நடாத்தப்படுவது சந்தோசமாக இருந்தாலும் சினமாப்பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய பாடல்கள் ஔிபரப்பியமை மார்க்கத்தில் எந்தளவுக்கு அங்கீகாரம் பெற்ற விடயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆரம்பகாலம் போலன்றி மார்க்க விடயத்தில் விளிப்புணர்வு ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் முன்மாதிரியான ஒரு விளையாட்டுப் போட்டியாக இது அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஓரளவு முன்மாதிரியான விடயங்களைக் காட்டித் தந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த வருடங்களில் நடைபெற்றமை(தஃவா பள்ளியின் பள்ளிக் கூடம், Good child pre school) குறிப்பிடத் தக்கது.

ஜாமிஉத் தவ்ஹீத் ஏற்பாட்டில் ஈத் பெருநாள் திடல் தொழுகை


கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈத் பெருநாள் தொழுகை கஹட்டோவிட அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து மௌலவி மஸ்ஊத் ஸலபி அவா்களின் உரை இடம் பெற்றது.


இவ்வுரையில் சமகால முஸ்லிம்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியதுடன் குறிப்பாக மியன்மார் மற்றும் ஸிரியாவின் இன்றைய நிலை பற்றிக்குறிப்பிட்டுக்காட்டினார். இம்மக்களின் அவல நிலைக்காக துஆ செய்வதே எம்மால் செய்ய வேண்டிய ஒரு பேருதவி என்றும் குறிப்பிட்டார். மேலும் முஸ்லிம் சமூகத்தின் பலம் ஒற்றுமையிலே தங்கியிருப்பதாகவும் இவ்வொற்றுமை ஏகத்துவ கொள்கையில் ஏற்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஏகத்துவமில்லாத வேறு எந்த வகையில் ஒற்றுமைப்பட்டாலும் அவ்வொற்றுமை பிரயோசனமற்றது என்றும் குறிப்பிட்டார். மைதானத் தொழுகையில் சுமார் 1200 பேரளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Photos Update Click here:

ஈத் பெருநாள் தொழுகை அறிவிப்பு


ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை வழமைபோல் பெருநாள் தினத்தன்று காலை 7.00மணிக்கு அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்திலும் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பெருநாள் தொழுகை பள்ளி வாசலில் காலை 7.15மணிக்கும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெருநாள் எப்படி?

ரமழான் பற்றிய பேசும் ஸுரதுல் பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். “நீங்கள் (ரமழான் மாதத்தைக் கணக்கிட்டு நோன்பின்) எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும். மேலும் (இந்த மாதத்தில் குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகன்) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்க வேண்டும். நீங்கள் நன்றியுள்ளவர்களாக மாறலாம்.”


குர்ஆனை இறக்கியருளி நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் பொருட்டு, அவனது நாமத்தை தக்பீராக முழங்கி கொண்டாட வேண்டிய நாள்தான் நோன்பு பெருநாள் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சுலோகம்தான் தக்பீர் - அல்லாஹு அக்பர்!

பெருநாள், மகிழ்ச்சியின் நாளாகும் . அன்றைய மகிழ்ச்சி, புத்தாடை அணிகிறோம், அறுசுவை உண்டு சுவைக்கிறோம் என்பது மட்டுமல்ல.

உலகில் நாம் வாழ வேண்டிய வழியை அல்லாஹ் எமக்கு காட்டிவிட்டான் என்பதே பெருநாளின் மகிழ்ச்சியாகும்.

முஸ்லிம்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக அழகியதொரு வழிமுறையை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

பெருநாள் தினம் சுபஹ் தொழுகைக்கு முன்பே முஸ்லிம்கள் தமது பெருநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராக வேண்டும். குளிப்பு, புத்தாடை, நறுமணம் என்பவற்றோடு சுபஹ் தொழுகைக்காக செல்லும் முஸ்லிம்கள் சுபஹை முடித்துக் கொண்டு ஒரு திறந்த வெளியில் ஒன்று கூடுவார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் இந்த ஒன்று கூடலில் பங்கேற்பார்கள். மாதவிலக்கு காரணமாக தொழு முடியாதிருக்கும் பெண்களாக இருப்பினும் கூட இந்தப் பெருநாள் ஒன்று கூடலில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடாது. ஆண்கள் முன்வரிசையிலும், சிறுவர்கள் அதற்குப் பின்னாலும், பெண்கள் பின் வரிசையிலும் அணிவகுத்து நிற்பார்கள்.

சுபஹ் தொழுகை முடிந்ததும் சூரிய உதயம் கழித்து, அடிவானில் சூரியன் ஒரு ஈட்டியளவு உயரும் வரை அந்த வெளியில் அனைவரும் காத்து நிற்பார்கள். பெருநாள் தொழுகை ஆரம்பமாகும். இந்த நேரம் வரை தக்பீர் முழக்கத்தால் தங்களது மகிழ்ச்சி பிரவாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு திறந்த வெளியில் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி உயரும் இந்த தக்பீர் மூலமாகத்தான் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி அருளப்பட்ட குர்ஆனுக்காக முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

அந்த நன்றி முழக்கத்தோடு பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. பின்னர் ரமழானின் பரிசாகிய ஹிதாயத்தை பெற்றுக்கொண்டு ரமழானை வழியனுப்பும் ஒரு பேருரை பெருநாளுரையாக நிகழ்த்தப்படுகிறது. அது சடங்குக்காக நிகழ்த்தப்படும் உரையல்ல. ரமழானை முடித்துக்கொண்ட முஸ்லிம் உம்மத்தின் அடுத்த 11 மாதகாலத்திற்க்கான பிரகடன உரையாகும்.

அந்த உரையோடு விண்ணினதும் மண்ணினதும் இரட்சகனுக்கு கூறிய முஸ்லிம்கள் முஸாஹபாவும், முஆனகாவும் செய்து ஒருவரை ஒருவர் வாழ்த்தும் கண்கொள்ளாக்காட்சி உலகில் எந்த கொண்டாட்டத்திற்கும் ஈடாக மாட்டாது.

இவை யாவற்றையும் முடித்துக் கொண்டு வந்த வழியை விட்டு வேறு வழியாகத் தங்களது வீடுகளை நோக்கி திரும்பிச் செல்லும் போது இன்னுமுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் சந்தித்து ஸலாம கூறும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரிக்கமைய கொண்டாடப்பட வேண்டிய பெருநாள் இன்று அதன் தன்மையயை முற்றாக இழந்து நிற்கிறது.

எதற்காக, எந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பது எமக்குப் புரியாமல் இருக்கிறது.

காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. சுபஹ் தொழுகையை தூக்கத்தில் “கழா” வாக்கிவிட்டு தாமதமாக துயிலெழுந்து ஆறுதலாக குளித்து விட்டு பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கிச் செல்லும் சோம்பேறித்தனம்தான் இன்றைய பெருநாட்களை அலங்கரிக்கிறது.

ஆண்கள் பள்ளிக்குப் போகிறார்கள். பெண்கள் ஆங்காங்கே வீடுகளிலும், தக்கியாக்களிலும் சிறு சிறு குழுக்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு குத்பா இல்லை.

தாமதமாகி பள்ளிக்குச் செல்லும் ஆண்களுக்கு குத்பாவின் பின்னரும் பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுகிறது. ஏற்கனவே தொழுகை ஒன்பது பத்துமணி வரை தாமதமாவது ஒருபுறம், அதற்கு மத்தியில் சோம்பேறித்தனத்திற்கு கண்ணியம் வேறு.

இவ்வாறு கொண்டாடப்படும் இந்தப் பெருநாளில், பெருநாளின் நோக்கம் சிறிதளவும் பிரதிபலிப்பதில்லை. குர்ஆனை அருளி ஹிதாயத்தைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் தன்மையை இன்றைய பெருநாட்களில் காண முடியாதிருக்கிறது. பட்டாசு கொழுத்தி ரமழானை விரட்டும் ஒருவகை வறட்டு மகிழ்ச்சிதான் இன்றைய பெருநாட்களின் தோரணையாக மாறியிருக்கிறது.

ஏன் இப்படி? அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த முன்மாதிக்கமைய எமது பெருநாட்களை கொண்டாட முடியாதா? ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு திரையில்லாத ஒரு பெருவெளியில் நபிகளாரின் பெருநாளைப் போல நாம் பெருநாள் கொண்டாடினால் என்ன? என்று சமூகத்தை கேட்டுப்பார்த்தால் கிடைக்கும் பதில்கள்ஆச்சரியமாக இருக்கின்றன.

ரமழானில் பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் தராவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு கிடைக்க வேண்டிய “பெருநாள் கலெக்சன்” இல்லாது போய்விடும் என்ற பயம்தான் பெருநாளின் தாக்கத்தையும் இல்லாது செய்து நபிகளாரின் முன்மாதிரியையும் குழிதோண்டி புதைக்கிறது.

என்ன ஆச்சரியம்! தரவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? குர்ஆனின் மூலம் ஹிதாயத்தை அருளிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? புரியவில்லை.

ஒரு திறந்த வெளியில் பெருநாள் கொண்டாடுவதற்கு முற்படுகின்ற போது ஒவ்வொரு தக்கியாவிலும் தராவீஹ் தொழுதவர்கள் அந்தத் தக்கியாவிற்குரிய நன்கொடையை வெவ்வேறாக செலுத்துவதற்குரிய ஒரு முறையைக் கையாளலாம். அப்போது “பெருநாள் கலெக்சன்” பாதிப்படைவதற்கில்லை.

எனினும் இத்தகைய வழிமுறைகளைக் கையாளாமல் நபிகளாரின் சுன்னாவை புறக்கணித்துவிடும் எமது சமூகம் மார்க்கத்தின் ஏனைய சுன்னாக்களை ஏவ்வாறுதான் உயிர்பெறச் செய்ய முடியும்!?

அது மட்டுமல்ல, சன்மார்க்க விவகாரங்களில் பங்கெடுப்பதற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த இடத்திற்கும் முஸ்லிம் பெண்களை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஒரு கூட்டம் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றி பெருநாள் கொண்டாடுவதற்கு மற்றுமொரு தடையாக இருக்கிறது.

இவர்களது வாதம் என்னவென்றால் ஆண்களும், பெண்களும் ஒரே வெளியில் ஒன்றுகூடுவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.

உண்மையில் இவர்கள் பெண்கள் சமூகத்தைப் பாதுகாப்பதாக நினைத்து அல்லாஹ்வின் தீனை விட்டும் அவர்களைத் தூரமாக்கும் வேலைகளையே செய்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய சமூகமாற்றத்திற்கான காரணங்களுள் ஒன்று ஆண்களைப் போலவே சமூகத்தில் சரிபாதியான பெண்களை சன்மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவர்கள் பங்குகொள்ளச் செய்ததாகும்.

ஆனால் இன்று இஸ்லாமிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பெண்கள் மார்க்கம் படிக்க வேண்டியதில்லை, பெண்களை பாடசாலைகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் அனுப்ப வேண்டியதில்லை. பெண்கள் இஸ்லாமிய பணிகளில் ஈடுபடவும் கூடாது. இதேபோன்றுதான் பெண்கள் ஜுமஆத் தொழுகைகளிலோ பெருநாள் தொழுகைகளிலோ கலந்து கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தக் கொள்கையை விடாப்பிடியாக செயல்படுத்தும் சில மார்க்க பக்தர்கள் காரணமாக பெண்கள் சமூகம் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் எத்தனையோ சுன்னாக்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நபிகளார் கொண்டாடிய பெருநாள்.

நாம் இன்று கொண்டாடும் பெருநாளுக்கும் நபிகளாரின் பெருநாளுக்கும் இடைவெளி தூரம். இந்த இடைவெளியைக் குறைக்க பெருநாள் கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் எமது சமூகமும் சமூகத்தை வழிநடாத்தும் மார்க்க அறிஞர்களும் தயாராவார்களா?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

பிரதேச சபை உறுப்பினர் நஜீம் நாநாவின் முயற்சியால் உலர் உணவு விநியோகம்





எமதூரிலிருந்து அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஏழைகளன் தோழன் நஜீம் நாநா அவா்களின் முயற்சியால் சுமார் 225 பேருக்கு உலர் உணவு வினியோகம் செய்யப்பட்டது. 2012.08.12ம் திகதி மாலை 4.00மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியின் மஹர அமைப்பாளரான திரு. துஷார ஹேமச்நிதர அவா்களும் கலந்து கொண்டார். நஜீம் நாநாவின் இம்முயற்சிக்கு ஜே.எப் கழகத்தின் ஆதரவும் கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாஸா அறிவித்தல்

திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில் கல்வி கற்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியையான நவாஸியா ஆசிரியை காலமானார். அன்னார் திஹாரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அன்ஸாரி மாஸ்டர் அவா்களின் அன்பு மனைவியும், அஸ்லம், அக்ரம் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.00மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசலில் நடைபெறும். அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாரின் கப்றை விசாலமாக்கி நிம்மதியான பா்ஸகுடைய வாழ்வை ஏற்படுத்துவானாக!

பெருநாள் கலை கட்டும் கஹட்டோவிடா

பெருநாள் என்பது அனைவருக்கும் சந்தோசமான ஒரு தினமாகும். இத்தினத்தில் நபியவர்கள் கூட சந்தோசமாக கழித்துள்ளதுடன் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிந்துள்ளோம்.

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எமதூரிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை எமதூரின் பல்வேறு சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது. கஹட்டோவிட கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டி பெருநாள் தினத்தன்று அல்பத்ரியா ம.வி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிய முடிகின்றது. மேலும் “ஹொரஸோன் பிரன்ஸி“ கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 07போ் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி அல்பத்ரியா மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் உத்தியோக புர்வமாக அறியக் கிடைத்துள்ளது.

ரஷ்யாவில் தன்னை இறை தூதராக அறிவித்து 10 வருடங்கள் பதுங்குழியில் இருந்தவர் கைது




மாஸ்கோ:ரஷ்யாவில், 70 பேர் கொண்ட இஸ்லாமிய உட்பிரிவு குழுவினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் உள்ள பதுங்குழியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கசன் நகரம். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு வசித்த, 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ்,83, என்பவர் தன்னை இறை தூதராக அறிவித்து கொண்டார்.
சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த பயஸ்ரஹ்மான், கடந்த, 70ம் ஆண்டு முதல் தனக்கென ஒரு பாணியை வகுத்து, தன்னுடைய ஆதரவாளர்களை வழி நடத்தி வந்தார். கசன் பகுதியில் உள்ள எட்டு அடுக்கு மாளிகையை தன்னுடைய ராஜ்ஜியமாக அறிவித்தார். இந்த கட்டடத்திலிருந்து வெளியேற பயஸ்ரஹ்மான் ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்த கட்டடத்தின் தரைதளத்தில் உள்ள பதுங்கு குழியில், கடந்த 10 ஆண்டுகளாக, 70 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தில் உள்ள 20 குழந்தைகள் பிறந்தது முதல் சூரிய வெளிச்சத்தையே பார்த்ததில்லை. இக்குடும்பத்தில் உள்ள 17 வயது பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவ உதவியோ, கல்வி அறிவையோ அளிக்காத இந்த குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜே.வி.பி. தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

இன்று 09.08.2012 வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜே.வி.பி தலைமை நூலகத்திற்கு தப்ஹீமுல் குரர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேற்படி தப்ஹீமுல் குர்ஆன் தொகுதிகளை நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் அவர்கள் ஜே.வி.பி. தலைமையக நூலக பொறுப்பாளர், முன்னாள் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜினதாச கித்துலகொட அவர்களிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுனில் ஹந்துநெத்தி அவர்களும் அருகில் காணப்படுகிறார்.

ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் அச்சுறுத்தலினால் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளது

ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்கடந்த மூன்று தினங்களாக பெளத்த தேரர்களில் அச்சுறுத்தலினால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக lankamuslim.org க்கு கிடைத்த தகவலை தொடந்து நாம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை தொடர்பு கொண்டோம் , குறித்த மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இன்று சுபஹ், லுஹகர் தொழுகை கூட இடம்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக செயலாளர் தாஸீம் மௌலவி எமக்கு வழங்கிய தகவல் . கடந்த -29.07.2012 அன்று இரவு ஜாமியுல் தாருள் ஈமானுக்கு வந்த வேறு பிரதேசத்தை சேர்ந்த பெளத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்தை மூடுமாறு கோஷமிட்துள்ளனர். மஸ்ஜித் நிர்வாகம் இது ரமழான் மாதம் என்றும் இடம்பெறுவது விசேட இப்தார் நிகழ்வு என்றும் விளக்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கோஷமிட்ட பின்னர் களைந்து சென்றுள்ளனர் .

இதை தொடர்ந்து மஸ்ஜித் நிர்வாகத்தினர் மஸ்ஜிதுக்கு அண்மையில் இருக்கும் ராஜகிரிய விகாரையின் பெளத்த தேரரை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக பேசியுள்ளனர் . அதற்கு அவர் மஸ்ஜிதை தற்காலிகமாக ஒரு நாள் பூட்டுங்கள் நான் உங்களுக்கு நல்ல தீர்வொன்றை பெற்றுத்தருகிறேன் என்று கூறியுள்ளார். குறித்த தேரர் பிரதேச முஸ்லிம்களுடன் நன்றாக பழகுபவர் என்பதால் மஸ்ஜித் நிர்வாகமும் அதை கேட்டு ஒரு நாள் மூடிவிட்டு மறுநாள் அவரை சந்தித்தபோது அவர் தற்போது நிலைமை என் கையை விட்டு சென்றுவிட்டது என்று கையைவிரித்துள்ளார். (இதேவேளை குறித்த தேரர் முஸ்லிம்கள் சார்பாக பல முயற்சிகளை செய்தார் என்றும் தாஸீம் மௌலவி தெரிவிக்கிறார் )

இன்று மஸ்ஜித் மூடப்பட்ட நிலையில் இரண்டு நாட்டகள் கழிந்துள்ளது. மூன்றாவது நாள் இன்று மஸ்ஜிதுல் ஜாமியுல் தாருள் ஈமான் நிர்வாகத்தினர் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை அணுகி மஸ்ஜித் மூட்டப்பட்டுள்ளமை தொடர்பாக முறையிட்டனர்.

இது தொடர்பாக உடனடியாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் பௌசியுடனும் தொடர்பு கொண்டு இதை அறிவித்துள்ளோம், அவர் எந்த வகையில் மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

குறித்த மஸ்ஜித் சட்டரீதியாக எல்லா ஆவணங்களையும் கொண்டுள்ளது . வக்பு சபையிலும் பதிவை கொண்டுள்ளது எந்த வகையிலும் மஸ்ஜித் மூடப்பட்டுள்ளதை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஏற்றுக்கொள்ளாது. மஸ்ஜிதை மீண்டும் திறக்கதேவையான உடனடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார் .
இந்த சம்பவத்தை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.