கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல் (with Photos)


கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை தொடர்பிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெறுகின்றது.


சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையிலான இந்த கூட்டம் கேகாலை மாநகர சபையில் இடம்பெறுகின்றது.

கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை இனந்தெரியாதநபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இன்று காலை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் கேகாலை மாநகர சபையில் விசேட கூட்டமொன்று இடம்பெறுகின்றது. இந்த கூட்டத்தில் பொலிஸார் மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பு – கண்டி வீதியில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்பதுடன் இந்த பள்ளிவாசல் மீதே இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த வெள்ளிக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்



மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.



ஹலால்” மதகுருமார்களுக்கும் சிறந்தது!!: லேல்வள கொடகந்த (Vendol Lanka உரிமையாளர் )

வெண்டோல் (Vendol) தயாரிப்புக்களை உற்பத்தி செய்யும் “கொடகந்த ஹெர்பல்” நிறுவன உரிமையாளர், ஹலால் சான்றிதழ் தொடர்பில் இன்றைய (27.02.2013) லக்பிம சிங்கள இதழில் வெளியிட்டிருந்த கருத்துக்களின் தமிழ் மொழிபெயர்ப்பை காலத்தின் தேவை கருதி வாசகர்களுக்காக தருகிறோம்




தமிழ் மொழிபெயர்ப்பு:  ஒகொடபொல றினூ

ஹலால் இலச்சினை இன்று பாரியதொரு பிரச்சினையாக மாறியிருக்கின்றது. எமது தயாரிப்புக்களில் மிருகக்கொழுப்பு உள்ளடக்கப்படவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிட்டிருந்தோம். ஹலால் சான்றிதழூடாக அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹலால் சான்றிதழ்களுக்காக வர்த்தகர் ஒருவர் ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா (175,000) செலுத்துகின்றார் என்பது பொய்யாகும். நாம் ஒரு வருடத்துக்காக செலுத்துவது வெறும் ஒன்பதாயிரம் ரூபா (9000) மட்டுமே. இது தொடர்பில் செலுத்தப்பட்ட கட்டணங்கள் பற்றிய பற்றுச்சீட்டுக்களும் எம்மிடம் உள்ளன.

இன்று தேசிய உற்பத்தியாளர்கள் என்ற வகையில் எமது தயாரிப்புக்கள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. சர்வதேச ரீதியாக, அதிலும் விசேடமாக மத்திய கிழக்கு உட்பட்ட முஸ்லிம் நாடுகளில் எமது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி இருப்பது ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்டிருப்பதன் மூலமேயாகும். இதன் காரணமாக ஹலால் இலச்சினையானது வர்த்தகர்களுக்கு சாதகமேயன்றி பாதகமான ஒன்றல்ல.

ஹலால் என்பதனை “பொருத்தமானது அல்லது அங்கீகரிக்கப்பட்டது” என்று அர்த்தப்படுத்தலாம். ஹலால் சான்றிதழ் மூலம் எமது தயாரிப்புக்களும் நுகர்வதற்கு பொருத்தமானவை என்ற அங்கீகாரம் பெறுகின்றன. ஹராம் என்பது பொருத்தமற்றது என்ற அர்த்தமுடையது. ஹலால் இல்லாதவை ஹராம் ஆகும். அதாவது எமது தயாரிப்புக்களுக்கு அங்கீகாரம் இல்லை என்பதாகும். அங்கீகாரம் இல்லாதவற்றுக்கு கேள்வி இல்லை. “அங்கீகரிக்கத்தக்கது” என்று பரிந்துரை செய்யப்பட்ட சான்றிதழ் ஒன்றைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. அது இன, மத பேதம் இன்றி அனைவருக்கும் பொருத்தமானதாகும்.

எமது தயாரிப்புக்களில் மிருகக்கொழுப்பை பயன்படுத்துவதில்லை என்பது எமது கொள்கை ஆகும். குறிப்பாக, துர்வாடை வீசும் பன்றிக் கொழுப்பை எமது நிறுவனத்தில் அணுவளவேனும் பயன்படுத்துவதில்லை. எமது இக்கொள்கையை ஹலால் சான்றிதழ் ஊடாக நாம் மீள உறுதிப்படுத்தி இருக்கின்றோம்.

சில பிஸ்கட் வகைகளிலும் 100 க்கு 30 வீதமான அளவு பன்றிக்கொழுப்பு இருக்கின்றது. மாசியைக் கூட உண்ணாமல் பேணுதலுடன் இருப்பவர்கள் தெரியாத்தனமாக பன்றிக்கொழுப்படங்கிய உற்பத்திகளை பயன்படுத்துவதை ஹலால் சான்றிதல் மூலம் தவிர்ந்து கொள்கின்ற நிலை ஏற்படுகின்றது.

தாவர எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துகின்ற மருத்துவர்களாகிய எமது செயற்பாடுகளை இதன்மூலம் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

அதிகளவான பௌத்த பணியாளர்களிடையே ஒரேயொரு முஸ்லிம் பணியாளரை உள்ளடக்கி இணைந்து செயற்படுகின்ற எமக்குள் எந்த பேதமும் இல்லை. நாம் சகோதரத்துவத்துடன் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். தேவையில்லாமல் சில பௌத்த மத குருமார்கள் ஹலாலை பிரச்சினையாக்குவதானது எமக்குள் நாமே முரண்பாடுகளுக்கு வித்திட்டுக்கொள்வது போன்றதாகும்.

சர்வதேச ரீதியாக எமக்கு சார்பாகவுள்ள ஹலால் சான்றிதழ் மத குருமார்களுக்கும் சிறந்ததொன்றாகும். அவர்களும் மிருகக்கொழுப்பு உள்ளடங்காத உணவுகளையும் நுகர்வுப் பொருட்களையும் தெரிவு செய்வதற்கு ஹலால் சான்றிதழ் துணை புரிகின்றது.

எமது நிறுவனத்தின் 13 வகையான உற்பத்திகளுக்கு நாம் ஹலால் சான்றிதழை பெற்றுள்ளோம். அதனால் எமது தயாரிப்புக்கள் நுகர்வோருக்கு பொருத்தமானதாகும். ஹலாலுக்கு எதிராக எவரேனும் ஒருவர் செயற்பாடுகளை முன்னெடுப்பதானது, தேசிய முரண்பாட்டை தோற்றுவித்தல், யுத்தம் ஒன்றை ஏற்படுத்தல் அல்லது தாம் பிரபல்யமாதல் என்ற காரணத்தின் அடிப்படையிலானதாகும்.

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பணிபுரிந்து சம்பாதிக்கின்ற பணம் ஹலால். அதிலும் ஹலால் ஹராம். இன்று முஸ்லிம்கள் ஹலால் இல்லை என்ற காரணத்தினால் பொருட்களைக் கொள்வனவு செய்வதில்லை. சிங்கள மக்கள் ஹலால் இருப்பதால் பொருட்களை வாங்குவதில்லை. ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கு சில ஆவணங்களை வழங்க எமது நிறுவனம் தாமதித்ததால் இம்முறை ஹலாலைப் புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதெனினும் எம்மால் ஹலால் சான்றிதழ் கோரப்பட்டுள்ளது. சில ஆவணங்களின் தாமதத்தினால் ஹலால் சான்றிதழைப் பெற முடியாமல் போனதன் மூலம் ஒன்றரைக் கோடி ரூபா நஷ்டம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எமது உற்பத்திகளில் ஹலால் இல்லை என்று கூறப்படுவதால் முஸ்லிம்கள் அவற்றைப் புறக்கணித்தார்கள். சில பௌத்த மத குருமார்கள் கோஷமிட்டு ஹலாலை நீக்கிக்கொள்ள காலக்கெடு விதிக்கிறார்கள். இவ்விதம் தொடர்ந்து செயற்படின் எமது நிறுவனம் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுவதால் சுமார் 200 ஊழியர்களின் தொழில் வாய்ப்பை இடைநிறுத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்படும்.

மத்திய கிழக்கு முழுவதும் எமது உற்பத்திகளையே நுகர்கின்றனர். இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரியச் செல்கின்றவர்கள் இங்கிருந்து எடுத்துச் செல்வதும் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட எமது தயாரிப்புக்களையே.

ஹலாலை நீக்க முடியாது. அதனை நாம் நீக்கவும் மாட்டோம். கிணற்றுத்தவளைகள் போல் வாழ்வதற்கு எம்மால் முடியாது. எமது தயாரிப்புக்களை இலங்கையில் போலவே சர்வதேசத்துக்கும் வழங்க வேண்டும். ISO சான்றிதழ் பெறுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாவை நாம் வழங்குகின்றோம். மட்டுமன்றி, SLS தரச் சான்றிதழைப் பெறுவதற்கும் கட்டணம் செலுத்துகின்றோம். அவ்வாறு செலுத்தியாவது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது அவற்றின் மூலம் வியாபாரத்துக்கு சாதகம் ஏற்படுவதாலாகும்.

பொதுபலசேனா இதுவரை வர்த்தகர்களிடம் இது தொடர்பில் எதுவும் வினவவில்லை. நாம் சரியானதைப் பேச வேண்டும். வியாபாரம் செய்வது வியாபாரிகளே. இவ்வாறான நிலை தொடருமாயின், நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று முஸ்லிம்களின் கீழ் சேவகம் புரிகின்ற பெண்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும்.

மாவனெல்லையில் பொதுபல சேனா நடத்திய பொதுக்கூட்டம்




முஸ்லிம்களுக்கு எதிரான தமது பிராசரங்களின் தொடரில் பொதுபல சேனா அமைப்பு இன்று காலை மாவனெல்லை நகரில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

மாவனெல்லை பெலிகம்மானவிலுள்ள பொத்குல் விகாரையில் இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்ற இக் கூட்டத்தில் சுமார் 1500 பேரளவில் கலந்து கொண்டனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இங்கு உரையாற்றினார். விகாரையின் உட்புறமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டப் பேரணிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெளத்த மக்கள் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டும் எனவும் ஹலால் சான்றிதழ் முறைமை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட கலகொட அத்தேஞானசார தேரர் முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற ஹிஜாப் ஆடைகளும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

வழமைபோன்று போயா தினத்துக்கு ஒன்றுகூடும் மக்களைப் பயன்படுத்தியே பொதுபல சேனா இன்றைய தினம் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இக் கூட்டத்திற்காக மக்கள் அங்கு ஒன்றுகூடவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

NO HALA At Thihriya

http://www.thihariyanews.com/2013/02/no-halal.html 

காலி பள்ளிவாசலுக்கு கல்வீச்சுத் தாக்குதல்: விஷமிகள் கைவரிசை



காலி, ஹிரும்புரை முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. வீசப்பட்ட கற்கள் பள்ளியினுள் வீழ்ந்து சிதறிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்ததையடுத்து நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காலி பிரதேச பிரதம பொலிஸ்மா அதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு உடனடியாக புலன் விசாரணை நடாத்துமாறும், பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்

சொல்லத்துடிக்கும் மனசு…!

ஒகொடபொல றினூ -

எரிகிறது மனசு..!
இனவாதத் தீமூட்டி
மதவாதம் தனைக்கூட்டி
தாயக பூமியை
துண்டாடத் துடிக்குமிந்த
சண்டாளர்களின்
ஈனச் செயல் கண்டு
எரிகிறது மனசு…!!

அன்னை மண்ணே..!
என்ன தவறிழைத்தோம்
உந்தனுக்கு..?
அனுதினமும் இப்படி
நிந்தனைப்பட…!

யுகம் யுகமாய்
சகவாழ்வு வாழுமொரு
சமூகம்-
சத்திய சோதனையை
நித்தமும் அனுபவிக்க
வித்திடுவோரே..!
விஷக்கருத்துக்களால்
வாய் கிழியக்
கத்திடுவோரே..!!
அறிந்துகொள்ளுங்கள் -
அநீதிக்கான உங்கள் வேள்வியால்
அறுத்தெறிய முடியாது
எங்கள் வேர்களை -
இந்த மண்ணைவிட்டு!
உங்களைப் போலவே கருவறை
இந்த தேசம்
எங்களுக்கும்
என்பதால்….!!

எங்கள்
அடிப்படை உரிமையைக்கூட
துடைத்தெறியத் துடிக்கும்
உங்களுக்கென்ன
அருகதை இருக்கிறது
“அடிப்படைவாதம்” பற்றி பேச..?

பல்லினத்தேசம் எனத்தெரிந்தும்
பள்ளிவாயல்களுக்கு
கல்லெறியும் உங்கள்
காடைத்தனத்தை
என்னென்பேன்…?

ஏற்றுக்கொள்கிறேன்-
உங்கள் கூற்றுப்போலவே
இது பெளத்தநாடுதான்!
என்றாலும்
இந்த “பௌத்த தேசத்தை”
செதுக்குவதற்கு
எத்தனை இஸ்லாமியன்
உளியாகியிருக்கிறான் என்ற
உண்மை தெரியுமா
உங்களுக்கு..?
தெரிந்தாலும்
வரலாற்றை மறைப்பதில்
தீரர்கள் என்பதால்
தேரர்கள் நீங்கள்
ஏற்கமாட்டீர்கள்…!

என் தாய்மண்
முப்பதாண்டுகளாய் கண்ட
புண்ணுக்கே
இன்னும்
மருந்து தேடி முடியவில்லை
அதற்குள்
நீங்கள் வேறு
விஷத்தைத் தெளித்து
விளையாடாதீர்கள்…!

நீங்கள் -
நல்லிணக்கத்தோடு வாழும்
சாதாரண சிங்கள
சோதரர் மத்தியில்
பொல்லாப்போடு தோன்றிய
“பீடைகள்” !
உங்களைக்
களைய வேண்டிய
எங்களின் “தலைமைகள்”
நக்குண்டு நாவிழந்து
சிக்குண்டு கிடக்கின்றன -
பட்டங்களிலும் பதவிகளிலும்…!

தூக்கிற்கு முன் அப்ஸல் குரு தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம்!


“நீங்கள் தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்… அல்லாஹ் எனக்கு அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்” – திஹார் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அப்ஸல் குரு தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.


அப்ஸல் குருவின் கையெழுத்துடன் சிறை சூப்பிரண்டின் குறிப்பும் அடங்கிய கடிதத்தை அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு அளித்தார்.

அப்ஸல் குருவை தூக்கிலிடப்படும் விபரத்தை தெரிவிக்கும் அதிகாரிகளின் கடிதத்துடன் ஸ்பீட் போஸ்டில் வந்த கடிதம் கடந்த பெப்ருவரி 12-ஆம் தேதி அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது.

அவர் கடிதத்தின் விபரம்:

“6.25 am
09/02/2013

மதிப்பிற்குரிய எனது குடும்பத்தினர் மற்றும் அனைத்து முஃமின்களுக்கு(நம்பிக்கையாளர்கள்)! அஸ்ஸலாமு அலைக்கும்! (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக!)

என்னை இப்பதவிக்கு தேர்வுச் செய்த அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்! அனைத்து முஃமின்களுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.நாம் அனைவரும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும். நமது இறுதி முடிவும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பாதையில் கட்டாயம் அமையவேண்டும். எனது குடும்பத்தினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் எனது முடிவிற்காக வருந்துவதற்கு பதிலாக நான் அடைந்த இந்த பதவிக்காக நீங்கள் அபிமானம் கொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாவலனும், மிகப்பெரிய உதவியாளனும் ஆவான். நான் உங்களை அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்!” இவ்வாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்ஸல் குருவின் சகோதரர் இஜாஸ் அஹ்மத் குரு கூறுகையில், “இக்கடிதம் அப்ஸல் குருவின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து கஷ்மீரிகளுக்கும் ஆகும்” என்றார்.

மத உரிமையான ஹலாலில் எவரும் தலையிட முடியாது; கடமை தவறுகிறது அரசு: சம்பந்தன்

ஹலால் விவகாரம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப் படுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விடயத்தில் அரசு ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி நிலைப் பாட்டை அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான இரா.சம்பந்தன் விளக்கினார்.


அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஓர் இனத்தினுடைய, மதத்தினுடைய உரிமைகளில் எவரும் தலையிட முடியாது. அவர்களுடைய உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். இன,மத ரீதியான முடிவுகள் சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் திணிக்க முடியாது. தமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஓர் இனம், ஒரு மதம் தீர்மானங்களை எடுக்கவேண்டு மென எவரும் கூறமுடியாது. அது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

ஹலால் என்பது மதத்தோடு சம்பந்தப்பட்டது. காலாதி காலம் அது நடைமுறையில் உள்ளது. அதனை மதிக்க வேண்டியது எமது கடமை. ஹலால் விடயத்தை முஸ்லிம் மக்கள், எவர் மீதும் திணித்ததில்லை. ஹலால் என்பது முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் தனிப்பட்ட உரிமைகளைக் கொண்டது.

இந்த விடயத்தில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள், பிரசாரங் கள் செய்து தேவையற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. நாட்டில் அனைத்து இன, மதங்களையும் அரசு ஒன்றாகக் கணிக்குமாயின் இந்த விதமான ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு சட்டம், ஒழுங்கைப் பேணவேண்டும். அரசு இந்த விடயத்தில் தனது கடமையைச் சரிவரச் செய்யாமலிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்.

இன, மத ரீதியான முடிவுகள் சம்பந்தமாக ஏனைய மதத்தவர்கள் தமது கருத்தைத் திணிக்க முடியாது. நாட்டில் அனைத்து இன, மதங்களையும் அரசு ஒன்றாகக் கணிக்குமாயின் இந்த விதமான ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு சட்டம், ஒழுங்கைப் பேணவேண்டும். அரசு இந்த விடயத்தில் தனது கடமையைச் சரிவரச் செய்யாமலிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார் சம்பந்தன்.-
தகவல் உதயன்

பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவிக்கு தொடர்மாடியில் வீடு

களனி பாலத்திற்கு கீழ் பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவி சஞ்சீவனி பிரியதர்சினி 3 பாடங்களிலும் ஏ சித்தியடைந்துள்ளார். இம் மாணவியின் குடும்பத்தினையும் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று அவரது பாடசாலையான பொரளை ரத்னாவலி பாலிகாவுக்குச் சென்று 35 இலட்சம் பெறுமதியான வீடொன்றை இலவசமாக கையளித்தார்.


இவ் வீடு பொரளை சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் வழங்கப்பட்டது. படத்தில் கல்லூரி அதிபரும் மாணவியும் வீட்டுக்கான திறப்பை பெற்றுக்கொள்வதினைப் படத்தில் காணலாம்.






வானையைச் சேர்ந்த முஜீப் ஆசிரியர் அவர்கள் காலமானார்

புத்தளத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட  முஹம்மத் முஜீப் (ஆசிரியர்) அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார்  கஹடோவிடாவை சேர்ந்த பரீஹா ஆசிரியை அவர்களின்  அன்புக் கணவரும், மருஹும் அன்ஸார் மஸ்டர் அவர்களின் மருமகனும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (18.02.2013) கஹடோவிட முஹியத்தீன் பள்ளிவாசல் மையவாடியில் பிற்பகல் 3.30 மணியலவில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

100 பேர் கடலில் பரிதாபமாக மரணம் - காப்பாற்றபட்ட மியன்மார் நாட்டினர் அதிர்ச்சி தகவல்




http://www.lankadeepa.lk/index.php/articles/98578

இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

தொடர்புடைய விடயங்கள்மனித உரிமைஇவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுவிட்டதாக உயிர்தப்பிய பர்மிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பௌத்த பிக்கு ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் அவர்களின் உடல்நிலை காரணமாக கராப்பிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பர்மாவில் வங்கதேச எல்லையில் ராக்கைன் பிராந்தியத்தைச் சேர்ந்த இவர்கள் உள்ளூரில் பௌத்தர்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக தம்மிடம் கூறியதாக, அவர்களை சந்தித்துப் பேசிய காலி மாளிகாவில அஸ்ஸஜி தேரர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்டவர்களில் பலர் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து பலவீனமாகக் காணப்படுகின்றனர்

தமது பிரதேசத்தில் தொழில்வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 131 பேர் மூன்று படகுகளில் வந்து பின்னர் இரண்டு அடுக்குகள் கொண்ட இன்னொரு பெரிய படகொன்றுக்கு மாறியதாக உயிர் தப்பியுள்ளவர்கள் கூறுகின்றனர்.

பின்னர் மலேசியாவுக்குள் நுழைய முடியாது என்று தெரியவந்ததன் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற போதே தாய்லாந்து செல்லும் வழியில் தமது படகு விபத்துக்குள்ளானதாகவும் பின்னர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காப்பாற்றப்பட்டவர்கள் தம்மை மீண்டும் பர்மாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அதனால் அடுத்தக் கட்டம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாகவும் அஸ்ஸஜி தேரர் தமிழோசையிடம் கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது!


முஸ்லிம்களுக்கு எதிராக வாரியப்பொலவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.


சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாரியபொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ நாவின்னவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.

ஹலால் தொடர்பாக வாரியப்பொல நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்எம். பௌசியியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர் ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் வாரியப்பொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ். பீ. நாவின்னவுக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அறிவித்தார்.

இதனையடுத்து வாரியப்பொல நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள், வாரியப்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிங்கள வர்;த்தக சங்க உறுப்பினர்கள், வாரியப்பொல பிரதேச சபையின் தவிசாளர் ஆனந்த, வாரியப்பொல நகரிலுள்ள பிரதான விஹாரைகளின் விஹராதிபதிகள் உள்ளிட்ட பலரை அழைத்து சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன விசேட கடந்த சனிக்கிழமை கூட்டமொன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் நாவின்ன,

“ஹலால் சம்மந்தமான பிரச்சினை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தோடு முடிந்து விட்டது. ஹலால் சான்றிதழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் முஸ்லிம்களுடைய தூய உணவுப் பொருட்களாக அடையாளப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்காக எதிராக செயற்படுவோர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடந்தையாகவுள்ள நான்கு வர்;த்தகர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான மோசமான காரியங்களைச் செய்யத் தூண்டி முழு சிங்கள மக்களுக்கும் அவப்பேற்றை ஏற்படுத்திவிட வேண்டாம். இந்த வாரியப்பொல நகரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்குமானால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்” என்றார்.

அத்துடன், குருநாகல் மாவட்டப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு நலன்குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.இதனை அடுத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடாபாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தாரும் சிரேஷ்ட அமைச்சருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளி இடங்களிலிருந்து இரண்டு வாகனங்களில் வந்த குழுவினர் நாரமல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் பாதுகாப்பு படையினரும் குறித்த பிரதேச மக்களும் பௌத்த மதகுமாரும் அனுமதிக்கவில்லை.
இதனால் துண்டுபிரசுரமொன்றை விநியோகித்துவிட்டு, ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தவர்களுக்கு ஏசிவிட்டு சென்றுள்ளனர்.

குருணாகலில் முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்



குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சதார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் 1983ஆம் ஆண்டைப் போன்று வன்முறைகள் வெடிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புர்காவை இலங்கையில் தடை செய்ய வேண்டுகோள்



முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னை சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொதுபலசேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

எரிகின்ற முஸ்லிம் பிரச்சினைக்குள் பாராளுமன்ற தெரிவுக்குழு எதற்கு?

ஐ.தே.க.வின் உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம்

(நேர்காணல்: ஸிராஜ் எம்.சாஜஹான்)


கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி...?


பதில்: எனது தந்தை வழியைப் பின்பற்றியே நான் அரசியலில் பிரவேசித்தேன். 1965களில் எனது தந்தை அகில இலங்கை முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தார். அதன் தலைவராக அப்போது டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல் செயலாற்றி வந்தார். கொழும்பிலுள்ள லீக்கின் தலைமை அலுவலகத்துக்கு எனது தந்தை அடிக்கடி சென்று வந்தார். அதன் போதெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வார். அதன்போது முஸ்லிம் லீக்கின் பிரமுகர்களான அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி அங்கு வருகை தந்தனர். இவர்களுள் டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், எம்.எச்.முஹம்மத். பாக்கிர் மாக்கார், ஜாபிர் ஏ. காதர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் என்னோடு அவ்வப்போது அளவளாவினர். எனக்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எனது அரசியல் பிரவேசத்துக்கு இது ஒரு உந்து சக்தியாகவும் அமைந்திருந்தது.

கேள்வி: தந்தையின் அரசியல் வாழ்க்கை பற்றி...?

பதில்: எனது தந்தை முஸ்லிம் லீக்கில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் நெருங்கிப் பழகினார். எனது தந்தைக்கு மாவனல்லைத் தொகுதி அமைப்பாளர் பதவியையும் வழங்கினார். எனினும் தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட போது முஸ்லிம் என்பதால் அவருக்கு வழங்கக்கூடாதென சிங்கள மக்கள் சிலர் ஸ்ரீகொத்தவுக்குச் சென்று தலைமைத்துவத்தை வற்புறுத்தினர். இதனால் எனது தந்தைக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. உங்களை தேர்தலில் நிறுத்துவதை இனவாதமாகப் பார்க்கின்றார்கள். என்ன செய்ய என டட்லி சேனாநாயக்க தந்தையிடம் கூறியபோது எனக்குப் பதவிகள் முக்கியமல்ல. மக்கள் பணியே முக்கியமென தெரிவித்தார். 1991 இல் சீ.ஆர்.பெலகம்மன (பாராளுமன்ற உறுப்பினர்) இறந்த போது அந்த இடத்துக்குப் பாராளுமன்ற உறுப்பினராக எனது தந்தையை நியமிக்க ஜே.ஆர். ஜெயவர்த்தன முயற்சி மேற்கொண்டார். அதனை எனது தந்தை விரும்பவில்லை.

கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசத்துக்கு இனவாதம் தடையாக இருக்கவில்லையா?

பதில்: இல்லை, எனது தந்தை இனவாதிகளால் பழிவாங்கப்பட்டார். இது என்னுள் வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்படியும் அரசியலில் பிரவேசித்து எனது தந்தைக்குக் கிடைக்காத பதவிகளைப் பெற வேண்டுமென கங்கணம் கட்டினேன். அதில் வெற்றியும் கண்டேன். 1994 இல் மாவனல்லைத் தொகுதியின் அமைப்பாளராகி கேகாலை மாவட்ட வேட்பாளராக களமிறங்கினேன். அப்போது இனவாதம் தலை தூக்கவில்லை. எனது சிங்கள பௌத்தர்களுக்கும் அதிக உதவி செய்தார். அவர்களது சுக, துக்கங்களில் பங்கேற்றார். இதனால் பௌத்தர்கள் மத்தியில் அவருக்கு மிகப் பெரும் மரியாதையும், பாதிப்பும் இருந்தது. இதனால் நான் தேர்தலில் போட்டியிட்ட போது பௌத்த மக்கள் அதனை எதிர்க்கவில்லை. இனவாதமாக நோக்கவும் இல்லை. என்னை கேகாலையின் புத்திரன் என்றே அவர்கள் அழைத்தார்கள். அதனால் 94 தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றம் செல்லவும் முடிந்தது.. கேகாலையில் அதிக விருப்பு வாக்குகளுடன் முதலிடத்துக்குத் தெரிவானேன். பௌத்தர்களே எனக்கு அதிகம் வாக்களித்திருந்தனர்.

கேள்வி: ஐ.தே.கவின் தற்போதைய நிலை பற்றி...?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இப்போது பலம் குன்றியிருக்கிறது. ஏற்றுக் கொள்கிறோம். எனினும் பெரும் கட்சி ஐ.தே.கவே. கடந்த சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது ஐ.தே.க 35 வீத வாக்குகளைப் பெற்றது. ஐ.தே.கவுக்குள் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த காலப்பகுதிக்குள் கட்சியின் வாக்குப் பலம் பெருமளவில் சரியவில்லை என்பதை இது காட்டுகிறது. இந்த நிலையில் ஐ.தே.கவுக்குள் உள்ள முரண்பாடுகள் காணப்பட்டு திட்டமிட்ட முறையில் எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல்களின் போது இந்த அரசை வீழ்த்தும் வாய்ப்புக் கிட்டும்.

கேள்வி: ஐ.தே.கவுக்குள் பிரச்சினை உள்ளதே?

பதில்: ஆம், இல்லையென்று சொல்ல மாட்டேன். ரணில் விக்கிரமசிங்க 6 வருட காலத்துக்குள் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை தலைவராக எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் சீர்திருத்தங்களை விரும்புவோர் கூட ஐ.தே.கவிலேயே இருக்கிறார்கள். கருஜயசூரிய மற்றும் ஏனையோரும் ஐ.தே.கவிலேயே உள்ளனர். பிரதித் தலைவர் தொடர்பில் பிரச்சினை உள்ளது. பெரும்பாலும் சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவராக நியமிக்கப்படுவார் என நம்புகின்றேன். அடுத்த வாரமளவில் இந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றுவிடும். அதன் பின் இரண்டு தலைவர்களும், ஏனையோரையும் ஒன்றினைத்துக் கொண்டு ஐ.தே.கவுக்கு பலம் சேர்க்கும் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

கேள்வி: சஜித்துக்கு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டுமா?

பதில்: ஆம், தலைவரும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். சஜித் பிரேமதாஸவுக்கும் தலைவருக்கும் இடையில் பெருமளவில் பிரச்சினைகள் எதுவுமில்லை. பிரச்சினைகளை ஒரு சிலர் பெரிதுபடுத்த முயற்சிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் சஜித்துக்கு முக்கிய பதவி ஐ.தே.கவுக்குள் வழங்கப்பட வேண்டுமென்பதில் அதிகமானோர் உறுதியாகவுள்ளனர். அண்மையில் வரக் காப்பொலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். அவர்களுக்குள் பிரச்சினை இல்லையென்பதே இது காட்டுகிறது.

கேள்வி: பொது எதிர்கட்சியில் பிளவேற்பட்டுள்ளதா?

பதில்: இல்லை, ஒரு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எமது கட்சியின் கொள்கைகளை மக்களின் அவசியம் கருதி மாற்ற முடியும். லிபரல் வாதம் பற்றி தற்போதைய அரசு அப்போது அலட்டிக் கொண்டது. ஐ.தே.க மீது குற்றச்சா ட்டுக்களை அடுக்கியது. இன்று மஹிந்த சிந்தனையைப் பாருங்கள். அது லிபரல் வாதத்தையும் தாண்டி அப்பால் சென்றுள்ளதாக உள்ளதனைக் காண்கின்றோம். எமது கொள்கைகள் தெளிவானது. எவருக்கும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும். ஜே.வி.பி மற்றும் இடதுசா ரிக் கட்சிகளோடு எம்மைச் சேர்த்துக் கொள்ளலாம். அதற் காக அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பொது எதிரியான தற்போதைய அரசை வீழ்த்துவதற்கு நாம் ஒன்று சேர வேண்டும்.

கேள்வி: தலைவர் ரணில் சகல கட்சிகளையும் அழைப்பாரா?

பதில்: ஆம், இந்த நாட்டின் ஜனநாயகத்துக்காகப் பாடுபடும் அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுப்பார். ஐ.தே.க வின் கொள்கைகள் அனைவருக்கும் பொருத்தமானது. பொது எதிர்கட்சியொன்றில் அனைத் துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தற்போதைய அரசை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்புக்களையும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

கேள்வி: யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது பற்றி....?
பதில்: தற்போதைய அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததது. அதற்காக இந்த அரசை நாம் பாராட்ட வேண்டும். ஐ.தே.கவும் யுத்தத்தை வெல்வதற்கான எத்தனிப்புக்களைச் செய்தது. எனினும் அது நிறைவேறவில்லை.
கேள்வி: யுத்தத்தின் பின் நாட்டு மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டதா?
பதில் : இல்லை, யுத்தம் நிறைவு பெற்றதும் சகல மக்களும் நிம்மதியாக வாழும் சூழ்நிலையொன்றினைத் தோற்றுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதம் இலங்கையில் இல்லை என்றார். இன்று தமிழ், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெரும்பான்மையினரின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன. தென்னாபிரிக்காவின் கறுப்பினர்களின் உரிமைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அந்த நாட்டில் வர்க்க பேதம் நிறைவு பெற்றதன் பின் சகலருக்கும் முன் மாதிரியாகச் செயற்பட்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொண்டாட வெற்றிவிழா எடுக்குமாறு பலர் நெல்சன் மண்டேலாவினைக் கேட்டனர்.

எனினும் நெல்சன் மண்டேலா இதனை ஏற்கவில்லை. தென்னாபிரிக்காவிலுள்ள இரு பிரிவினருக்கிடையே போராட்டம் வெடித்திருந்தது. இதில் கறுப்பினர்கள் வெற்றியீட்டினார்கள். அதாவது, வெள்ளையர்கள் வசமிருந்ததை கறுப்பர்கள் தட்டிக் கொண்டார்கள். இந்த நாட்டின் ஒரு பிரிவினர் அதிகாரத்தினை இழந்திருக்கின்றார்கள். எமது நாட்டின் ஒரு பிரிவினர் வெற்றியீட்டி மற்றொரு பிரிவினர் தோல்வியடைந்திருக்கும் வெற்றி விழா எதற்காக என மண்டேலா கேள்வியெழுப்பினர். பாருங்கள் எமது நாட்டு ஜனாதிபதி இந்த முன்மாதிரியைக் கைக்கொண்டாரா? அதுதான் இல்லை. இந்த நாட்டிலும் ஒரு இனம் தோல்வியடைய மற்றொரு பிரிவினர் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஆனால் பெரும்பணச் செலவில் வெற்றி விழாவினைக் கொண்டாடுகிறது எமது அரசு.

கேள்வி : 13வது அரசியலமைப்பு நீக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா?

பதில்: 13வது அரசியலமைப்பு இந்தியா இலங்கைக்குத் திணித்தது என ஒரு சிலர் குற்றஞ்சா ட்டுகிறார்கள். எனினும் இந்த அரசியலமைப்பு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தது. அவர்களது நலன்கள் பேணும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. 13ஐ அகற்றுவது சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு கைவைப்பதாகவே அமையும். உரிமைகளை வென்றெடுப்பதற்கான இறுதி ஆயுதத்தையும் பறிகொடுக்க வேண்டிய நிலை சிறு பான்மையினருக்கு ஏற்படும். எனவே, 13ஐ அகற்றுவது அநீதியானது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

கேள்வி: 19ஆவது அரசியலமைப்பினை கொண்டு வர முயற்சி நடக்கிறதே?

பதில்: அவ்வாறு கேள்விப்பட்டேன். 13ஐ விட 19 நல்லதாக இருந்தால் ஐ.தே.க அதற்கு ஆதரவு வழங்கும். எனினும் 18ஐப் போன்று சிறுபான்மையினரின் மறுக்கப்படும் அரசியலமைப்பாக இருந்தால் ஐ.தே.க அதனை எதிர்க்கும்.

கேள்வி: முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதே?

பதில்: ஆம், முஸ்லிம்களுக்கெதிராக சகல மட்டத்திலும் நெருக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுபலசேனா, ஹெல உறுமய உட்பட பல்வேறு குழுக்கள் முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துள்ளனர். நிலைமை மிக மோஷமான கட்டத்தினை எட்டியுள்ளது. ஐ.தே.கட்சி இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, தயாளினி ஜயசேகர ஆகியோர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இன ரீதியான செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். இனவாதிகளின் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேள்வி: ஐ.தே.க. தலைவர் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்?

பதில்: தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருகிறார். பௌத்த தேரர்கள் ஏனைய பிரமுகர்களுடன் இது தொடர்பாக அவர் அடிக்கடி ஆலோசனைகளை நடாத்தி வருகிறார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அறிக்கைகளைக் கோரியிருக்கிறார். இந்த வார நடுப்பகுதியில் அவர் பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றினையும் விடுக்கவுள்ளார்.

கேள்வி: அரசாங்கம் இனவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதா?

பதில் : இது சம்பந்தமான தகவல்கள் எனக்கு இதுவரை சரியாகத் தெரியவில்லை. என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்களின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தாததை நோக்கும் போது அரசு ஆதரவு வழங்குகின்றதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க தற்போதைய அரசாங்கத்துக்கு ஏன் இந்த இனவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் நினைத்திருந்தால் இதனைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். எனினும் இனவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

கேள்வி: முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது பற்றி...?
பதில்: முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். நல்ல விடயம். என்றாலும் அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற முடிவோடு வெளியே வந்துள்ளனர். முஸ்லிம்களின் எரியும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு எதற்கு? எமது பிரச்சினைகளையெல்லாம் வெளியே கொண்டு வந்து விசாரிப்பதற்கே தெரிவுக்குழு அமைக்கப் போகிறார்கள். எமது முஸ்லிம் அமைச்சர்கள் இதற்கு தலையசைத்திருக்கிறார்கள். உருப்படியான எதையும் அவர்களால் செய்ய முடியாதுள்ளது.

கேள்வி : தெரிவுக் குழுவால் எமக்கு எதுவும் நல்லது நடக்குமா?

பதில்: இந்த அரசு அமைக்கும் தெரிவுக்குழுக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியுமே. சொல்லத் தேவையில்லை. பிரதம நீதியரசர் மீது விசாரணை நடாத்த தெரிவுக்குழு நிறுவினார்கள். தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக அமைந்திருந் தது. இதேபோன்று முஸ்லிம் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்வார்கள். தீர்ப்பினை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாக வழங்குவார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: ஹலால் பிரச்சினை பற்றி?

பதில்: ஹலால் பிரச்சினை மிகப் பெரியளவில் இனவாதிகளால் பேசப்படுகிறது. ஹலால் உணவு அவர்களுக்கு தேவையில்லாவிட்டால் விட்டுவிடவேண்டியதுதானே. முஸ்லிம்கள் ஹலால் உணவையே சாப்பிடவேண்டும். இதனைத் தடுக்க யாருக்கும் முடியாது. ஹலால் என்பது சர்வதேசம் ஏற்றுக் கொண்ட வர்த்தக நடைமுறையாகும். இதனால் இலங்கைக்கு சர்வ தேசத்தில் மிகச் சிறந்த சந்தை வாய்ப்புள்ளது. எமது நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் இதனால் பெரிதும் நன்மை யடைந்துள்ளார்கள். இதனை நிறுத்தினால் எமது நாட்டு பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
கேள்வி: முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கச் சொல்லுகிறார்களே?
பதில்: முஸ்லிம்களின் வர்த்தகத்தினை அழிக்கும் செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. நோலிமிட் நிறுவனத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்கள். இனவாதிகளின் இந்த செயற்பாடுகள் நிறுத்தாவிடின் எமது பொருளாதாரம் மிக மேஷமாகப் பாதிக்கப்படும். இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாம் இந்த நாட்டுப் பிள்ளைகள். எமது வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. எமது முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு இனவாதிகளின் செயற்பாடுகளை வெற்றி கொள்ள வேண்டும்.

வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பொதுபல சேனா எனும் பேரினவாத அமைப்பு இன்று 09-02-2013 வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஹலால் பொருட்களை கொள்வனவு ெய்ய வேண்டாம். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், முஸ்லிம் உணவகங்களில் சாப்பிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய சுலோகங்களை ஏந்திய பௌத்த பிக்குமாரும், சிங்கள பேரினவாதிகளும், கொழும்பு கண்டி பிரதான வீதியில், வரகாபொல நகர மைதானத்திலிருந்து, வரகாபொலை நகர மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்னரிருந்தே இன்று பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்துவதாக சுவரொட்டிகள் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் அறிவிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கும் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இதற்கு முகங்கொடுக்கும் வகையில், வரகாபொலை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் சர்வமத அமைப்பு ஆகியன வரகாபொலை பொலிஸ் நிலையம் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இவ்வார்ப்பாட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தன.

இதற்கமைய, கேகாலை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட வரகாபொலை பொலிஸாரும் இணைந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 10 ஆயிரம் பௌத்தர்களை வரகாபொலை நகரில் ஒன்றுதிரட்டி பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், சுமார் 500 பேர் மாத்திரமே, இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், அவர்களது எதிர்பார்ப்பு வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் இங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடி, எதிர்ப்பை தெரிவிப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்களுக்குள் இருந்த மற்றொரு சிங்கள பிரிவினர், இந்த அமைப்பிற்கு எதிராக நேற்றைய தினம் இரவு வரகாபொலை பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டி, பொதுபல சேனா அமைப்பிற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தமை, குறிப்பிடத்தக்கதாகும்.


வரக்காபொலையிலிருந்து அபூ ஸஹ்லா

பிடில் வாசிக்கும் ‘நீரோ’க்கள் (எமது சமூகத்தின் நிலை)

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.




மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தார்.

பிடில் வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும் ……….. பேரினவாதம் கொழுந்துவிட்டு எரிகையில் நமது அரசியல் தலைமைகளும் அவர்களைப் போலத்தான் புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது இனி அனைத்து மக்களும் பேதங்களை மறந்து வாழும் சூழல் உருவாகும் என்று சிறுபான்மையின மக்கள் மட்டுமன்றி சகோதர வாஞ்சையுள்ள சிங்கள மக்களும் எண்ணினர்.

ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுள்ளது பேரினவாதத்தின் கோரமுகம்.

இந்நாட்டின் முதலாவது சிறுபான்மையினமான தமிழர்களுக்காக போராடிய இயக்கத்தின் தலைவரையே கொன்றொழித்தாயிற்று. எனவே இனி தமிழ் மக்களை அடக்கி ஆளலாம் என்ற நிலை வந்துவிட்டது. அதுபோலவே அடுத்த சிறுபான்மை இனமாக திகழ்கின்ற முஸ்லிம்களையும் ஏதோ ஒரு வழியில் அடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்கின்றது மிகைப் பேரினவாத சக்திகள்.

தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி, குருணாகல், தெஹிவளை, அனுராதபுரம், பள்ளிவாசல்கள் என பேரினவாதிகளாலும் காவியுடை தரித்தவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட புனிதஸ்தலங்களின் பட்டியல் நீளமானது - தொடர்ந்து நீண்டுகொண்டே செல்வது. பள்ளிவாசல்களை அகற்றுமாறு நடாத்தப்படும் போராட்டங்கள் நியாயமற்றவை என்ற சலசலப்பு சிங்கள சமூகத்திற்குள்ளேயே தோற்றம் பெற்றுவிட்டது.

இதனை நன்றாக உய்த்தறிந்துகொண்ட மேலாதிக்க சக்திகள் அடுத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டுள்ளன. ‘ஹலால’; சான்றிதழும் அவ்வகையிலேயே கையாளப்படுகின்றது. சற்று நடுநிலையாக இருந்து சிந்திக்கும் சிங்கள சகோதரர்களையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு கருத்துநிலைகள் சிங்கள சமூகத்திற்குள் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு காரியங்களையும் (நீங்கள் சொல்வது போல்) ஒரு சிறு குழுவினரே மேற்கொள்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ?!

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் - தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற எத்தனையோ பிரதேசங்களில் வழிப்போக்கர்களாக வரும் சிங்களவர்கள் தங்கள் மத கடமையை நிறைவேற்றுவதற்கென பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு விகாரையை அல்லது அங்கிருக்கின்ற ஒரு செங்கல் தூணை அகற்றச் சொல்லி சிறுபான்மை மக்கள் சாத்வீகப் போராட்டம் நடாத்துகின்றார்கள் என எடுத்துக் கொள்வோம்.

என்ன நடக்கும்? ……….

அதில் பங்குபற்றியவர்கள் மட்டுமன்றி வீதியால் போனவர்கள் கூட சிறையிலடைக்கப்படுவர். ஓட்டுமொத்த சிங்கள மக்களே வீதிக்கு இறங்குவர். முஸ்லிம்களும் தமிழர்களும் இனவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்படுவர்.

ஆனால் சுமார் 10 பள்ளிவாசல்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக இது எதுவுமே மேற்கொள்ளப்படாதது ஏன்? என்று தரம்-5 படிக்கும் சிறுவன் கேட்கின்ற கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாதுள்ளது.



இனவாத சிந்தனை

இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இனவாத சக்திகள் செயற்பட்டன (சாதாரண சிங்கள மக்களல்ல).

அம்மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வஞ்சகம் எப்போதும் அவர்களது மனங்களில் கனன்று கொண்டுதான் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மட்டுமன்றி பிரபாகரனும் படுகொலை செய்யப்பட்டார். எனவே தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டது. இனி அவர்கள் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்புகள்தான்’ என்ற தப்பான கணக்கு ஒன்றை சிங்கள பேரினவாதிகள் போட்டுள்ளனர்.

தமிழர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகுதான் அடுத்த சிறுபான்மை இனத்தின் பக்கம் பேரினவாதிகளும் சிங்கள அடிப்படைவாதிகளும் தமது பார்வையைத் திருப்பினர். தமிழர்கள் மீது தமது மொத்த இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டிருந்ததால் முஸ்லிம்களை கவனிக்க தவறிவிட்டோமே என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

இன்று முஸ்லிம்கள் மிகப் பெரிய வியாபாரிகளாக, செல்வந்தர்களாக, தனியுரிமை கோருமளவுக்கு அரசியல் பலம் (?) மிக்கவர்களாக முன்னேறி இருக்கின்றார்கள் என்பது அவர்களது கண்களை உறுத்தியது.

உடனே உஷாரானார்கள். மதவாதம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். போருக்குப் பின்னரான அமைதியைக் குலைத்தனர். இன்றைய முஸ்லிம் தலைமைகள் முன்பிருந்த தலைமைகளைப் போல சமூக சிந்தனை உடையவர்களல்ல என்பதும் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களைப் போல போராடும் குணம் அற்றவர்கள் என்பதையும் சிங்கள மேலாதிக்க சக்திகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

ஒருவேளை, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக (சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல) முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கினால் தமிழர்களை அடக்கியது போன்று அடக்கி ஆளலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் மியன்மாரை போல இனச் சுத்திகரிப்பு ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம்களை அரபு நாடுகளை நோக்கி துரத்தியடிக்கலாம் என்றும் பொது பலசேனா போன்ற மிதவாத அமைப்புக்கள் அடிமனதில் நிறைய கற்பனைகளை வைத்திருக்கின்றன.

பள்ளிவாசல்கள் தொழுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் கதையளப்பதைப் போல அங்கு போராட்ட குணம் போதிக்கப்படுவதில்லை. அதேபோன்று முஸ்லிம்களிடையே ஆயுதங்களும் இல்லை. போராட்ட அமைப்புக்களும் இல்லை. என்பதை சிங்கள மக்களுக்கு உரக்க எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மை மக்கள் ஆற்றிய பங்களிப்பு திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்துவதும் அவசியமாகியுள்ளது.



இனக்கலவர வரலாறு

இலங்கையில் தனிச் சிங்கள சட்டத்தின் பின்னரே இனப்பிரச்சினை ஏற்பட்டது என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இனவாத சக்திகள் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதான மேலாண்மையை வெளிப்படுத்திய ஒரு வழிமுறைதான் தனிச் சிங்கள சட்டம். தவிர, இன முரண்பாடு என்பது அதற்கு முன்னரும் இருந்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரமே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்தான் இடம்பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் ரீதியாக முறையாக கட்டமைக்கப்பட்ட ஓர் இனக்கலவரம் என்று வர்ணிக்கப்படுகின்ற இது 1915ஆம் ஆண்டு நிகழ்ந்தேறியது.

இதுவிடயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ். சேனானாயக்க, ஆர். டயஸ். பண்டாரநாயக்க, டி.எஸ். விஜேவர்தன, என். பெரேரா, ஈ.டி. தசில்வா, எச். அமரசூரிய, ஏ.எச். மொலமுற போன்ற சிங்களத் தலைவர்களை கைது செய்தனர். அப்போது, சிறுபான்மை இனத்தவரான சேர். பொன்னம்பலம் இராமநாதன் பிரித்தானியாவுக்குச் சென்று பேசி அந்த சிங்கள தலைவர்களை விடுவிக்கச் செய்தார். அவர் நாட்டுக்கு திரும்பிவந்தபோது துறைமுகத்தில் இருந்து அவரை குதிரை வண்டியில் அமர்த்தி, குதிரைகளை அகற்றிவிட்டு தாமே காலி வீதி வழியாக வீடுவரை தேரிழுத்துச் சென்றனர் சிங்கள தலைவர்கள்.

மறுபுறத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய பங்களிப்புக்களை வழங்கி இருக்கின்றனர். ஏ.எம்.ஏ. அஸீஸ், ரி.பி.ஜாயா, தேசமான்ய பாக்கீர் மாக்கார், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம்.சித்திலெப்பை, சேர் ராசீக் பரீட், டாக்டர் எம்.சி.எம். கலீல் முதல் - மறைந்த தலைவர் அஷ்ரப் வரை பெருமளவிலான பெருந்தகைகள் இந் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டுக்காக பாடுபட்டுள்ளனர்.

ஆனால், ‘மர கல மினியா’ எனும் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகத்தை தமக்கு ஏற்றாற்போல் திருபுபடுத்தி எழுதியது போலவே, மேற்சொன்ன பங்களிப்புக்களையும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டனர்.

இப்போது வெளிப்படையாகவே முஸ்லிம் விரோத கருத்துக்களை மிகச் சரியாக கட்டமைக்கப்பட்ட முறையில் அடிமட்டத்தில் இருந்து புகுத்தி வருகின்றன பேரினவாத சக்திகள். இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத தம்பர அமில தேரர் போன்ற நடுநிலை கொள்கையாளர்களையும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் மூளைச்சலவை செய்வதற்கான திட்டங்களையும் தீட்டி வருகின்றன.



கையாலாகாத்தனம்

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு பதிலிறுப்பதும் விளக்கமளிப்பதும் உலமா சபை போன்ற அமைப்புக்களின் வேலை என்றும், அரசசார்பு போக்கை கடைப்பிடிப்பதே தமது வேலை என்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.
இதனைப் பார்க்கும்போது சிங்கள இனவாதிகள் பரவாயில்லை என்று சிலவேளைகளில் தோன்றுகின்றது. நியாயமோ இல்லையோ அவர்கள் தங்களது சயமத்திற்காக குரல் எழுப்புகின்றார்கள். ஆனால் நமது சிறுபான்மை தலைமைகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்பவர்கள் சிங்கள சமூகத்திற்கு எதிராக அல்ல - தமது சமூகத்தின் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துக் கூறுவதற்குக் கூட ஏனோ தயங்குகின்றனர். அவர்கள் உண்மைகளைப் பேசுவதையிட்டும் எதுவோ ஒரு விடயம் அவர்களைத் தடுக்கின்றது.

அவர்கள் பாவம்…. நாவிழந்து இருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 17 உறுப்பினர்களை கொண்ட சபையில் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.



சபையில் கைசேதம்

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக சொன்னார். கிட்டத்தட்ட 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக 10 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது ஆளும் தரப்பில் இருந்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் எழுந்தார். ரணிலின் கருத்துக்கு அவர் பலம் சேர்ப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக எதையோ கூறுவதிலேயே குறியாக இருந்தார்.

அவ்வேளையில் சபையில் அமர்ந்திருந்த 1 பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர வேறெந்த முஸ்லிம் மக்கள் (?) பிரதிநிதிகளும் இவ்விடயத்தை வழிமொழிந்தோ அன்றேல் ரணிலின் தரவுகளில் இருக்கும் பிழைகளைத் திருத்தியோ சபைக்கு கூறவில்லை.

ரணிலின் கூற்றுக்கு மறுநாள் வியாழக்கிழமை அரசாங்கம் சபையில் பதிலளித்த போது இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது குறித்து விளக்கமளித்தார். நாட்டில் எந்தவொரு மதஸ்தலமும் இதுவரையில் தாக்கப்படவில்லை. அவ்வாறு தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை அரசாங்கம் நிராகரிப்பதாக அவர் கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு 7 நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரணில் குறிப்பிட்டவாறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் சவால் விடுத்தார்.

அப்போது முஸ்லிம் அமைச்சர்கள் பலர் சபையில் இருக்கவில்லை என்றபோதும் பிரசன்னமாகி இருந்த எந்தவொரு முஸ்லிம் எம்.பி.யும் அரசாங்கத்தின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் இவ்வாறு கூற முனைவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. இந்த இந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்பதை எவரும் சபைக்கு தெளிவுபடுத்தவில்லை. சிறிபால டி சில்வாவின் அறிக்கை முற்றுமுழுதாக உண்மை என்பதுபோலதான் சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நீதிக்கு பொறுப்பான அமைச்சர் எழுந்து உரையாற்றினார். அரசாங்கத்தின் பதிலானது தமது இணக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டதாகவும், தமது கருத்துக்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சபைக்கு எடுத்துரைத்தார். ‘தாக்கப்பட்டது’ என்ற சொல்லாடல் பிழை ‘அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது’ என்பதே சரி என அவர் குறிப்பிட்டிருந்தால் அதில் ஒரு நீதி இருந்திருக்கும்.

ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேடையில் தோன்றிய அதன் தலைவர், அரசாங்க “ஆதரவுடன் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பீரங்கிப் பேச்சுக்களை பேசிவிட்டு, இன்று அவ்வாறு பள்ளிகள் எதுவும் உடைக்கப்படவில்லை என்று கூறுவதைவிட இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் காமடி ஒன்றும் இருக்க முடியாது.
பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு கைமாறாக – அசுர காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால், முஸ்லிம் தலைமைகள் நியாயங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். சிங்கள அடிப்படைவாதக்குழுக்கள் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரசாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது மட்டுமன்றி, பள்ளிவாசல்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன என்பதை அந்த உயரிய சபையில் எடுத்துரைத்திருக்க வேண்டும் என்பதே உங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.
ஆனாலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை !

தேர்தல் முடிந்தபிறகு நீங்கள் எப்படி மக்களை மறந்து விடுகிறீர்களோ, அப்படித்தான் தேர்தல் வந்துவிட்டால் மக்கள் நீங்கள் செய்த எந்தத் துரோகத்தையும் மறந்துவிடுவார்கள். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.
- ஷேக்ராஜா
virakesari news



ஸாவியாவிற்கு முன்னால் பஸ் விபத்து.

கஹடோவிட ஸாவியாவிற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மேற்பகுதி புதிதாக கொடுக்கப்பட்ட தொலைபேசி வயர்களுடன் சிக்குண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  அருகே இருந்துள்ள மின்கம்பம் இழுப்ட்டு இந்த பஸ்ஸின் மீதி விழுந்துள்ளதை நீங்கள் படத்தில்  பார்க்கலாம்.