கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பொதுபல சேனா எனும் பேரினவாத அமைப்பு இன்று 09-02-2013 வரகாபொலையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஹலால் பொருட்களை கொள்வனவு ெய்ய வேண்டாம். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், முஸ்லிம் உணவகங்களில் சாப்பிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய சுலோகங்களை ஏந்திய பௌத்த பிக்குமாரும், சிங்கள பேரினவாதிகளும், கொழும்பு கண்டி பிரதான வீதியில், வரகாபொல நகர மைதானத்திலிருந்து, வரகாபொலை நகர மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்னரிருந்தே இன்று பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்துவதாக சுவரொட்டிகள் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் அறிவிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கும் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இதற்கு முகங்கொடுக்கும் வகையில், வரகாபொலை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் சர்வமத அமைப்பு ஆகியன வரகாபொலை பொலிஸ் நிலையம் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இவ்வார்ப்பாட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தன.

இதற்கமைய, கேகாலை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட வரகாபொலை பொலிஸாரும் இணைந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 10 ஆயிரம் பௌத்தர்களை வரகாபொலை நகரில் ஒன்றுதிரட்டி பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், சுமார் 500 பேர் மாத்திரமே, இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம், அவர்களது எதிர்பார்ப்பு வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் இங்குள்ள வர்த்தக நிலையங்களை மூடி, எதிர்ப்பை தெரிவிப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்களுக்குள் இருந்த மற்றொரு சிங்கள பிரிவினர், இந்த அமைப்பிற்கு எதிராக நேற்றைய தினம் இரவு வரகாபொலை பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டி, பொதுபல சேனா அமைப்பிற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தமை, குறிப்பிடத்தக்கதாகும்.


வரக்காபொலையிலிருந்து அபூ ஸஹ்லா

0 comments:

Post a Comment