கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம். எமதூர் மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதிக்குமா?

சகல மாணவ மாணவிகளும் எல்லா வசதிகளுடனும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் 1000 பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யும் ஒரு திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 6ஆம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தெரிவு செய்யப்படும் இந்த 1000 பாடசாலைகளில் ஏதாவது ஒன்றில் படிக்கவேண்டி வருவதுடன் இன மத வேறுபாடுகளின்றி சிங்களம் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் ஒன்றாகப் படிக்கின்ற ஒரு சூழல் உருவாக இருக்கின்றது. அரசின் இத்திட்டத்தைப் பற்றி பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் அடிப்படையில் எமதூரின் பாடசாலை முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான ஆரம்பப் பாடசாலையாக மாற்றப்படுமா என்ற வினாவிற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. எமதூரிற்குப்பக்கத்து ஊரிலுள்ள இரண்டு சிறிய பாடசாலைகள் அதே பிரதேசத்திலுள்ள ஒரு பெரிய பாடசாலையுடன் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது சம்பந்தமான ஒரு விளிப்புணர்வை அவ்வூர் ;மக்களிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியிருப்பினும் எமது மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் ஒழுக்க சூழலில் கல்வி கற்க கிடைக்குமா என்பது அனைவரும் தற்போது கேற்கும் ஒரு கேள்வியாகும்.

இலங்கையில் மக்களைவிடவும் தொலைபேசிகள் அதிகம்!



இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65 மில்லியனாக இருந்தது. ஆயினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது.


இலங்கையின் சனத்தொகை 20.65மில்லியனாக இருந்தாலும் எங்கள் நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது.

இந்த புள்ளி விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரிவித்த தொலைத்தொடர்புகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் என்றார்.

வயலுக்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இன்று இருக்கின்றன. சில பிச்சைக்காரர்கள் கூட இரகசியமாக கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக பாடசாலைகளுக்கு கைத்தொலைப்பேசிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவ, மாணவிகளும் இந்த தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து தங்கள் பைகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவசியம் ஏற்படும் போது அவற்றை அவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது நூறு பேர்களுக்கு 100.8 கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் விடலைப் பருவத்தை சேர்ந்வர்களை தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய ஆபாச படங்களைக் கொண்ட இணையத்தளங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக இருக்கின்றதென்று ஆசிரியர்களும் பெற்றோரும் கவலை கொண்டுள்ளார்கள்.

காத்திருப்புக்கள்…… கிளை - 11





நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் தரிசனம் தொடர்கின்றது......


காத்திருப்பு என்றாலே… இதயத்தில் ஒரு பூரிப்பு…
காத்திருப்பில் சிலபோது கால்கள் கனக்கின்றன
சிலபோது ஆயுலே கனக்கின்றது
காத்திருப்பு சிலபோது இதமானது அதனால்தான் அது நீளும் போது பாதங்களும் பஞ்சனையாய் ஆனது.

காத்திருப்பு சிலபோது காத்திரமானது அதனால் அது ஒரு சரித்திரத்துக்கே (கதா) பாத்திரமானது.
காத்திருப்பு சிலபோது அபத்தமானது
அதனால் அது ஆயிரம் வீழ்ச்சிகளின் அடித்தளமானது.
காத்திருப்பு சிலபோது அழகானது அதனால்தான் அது வாழ்வின் சௌந்தரியங்களுக்கும், சந்தோசங்களுக்கும் கலங்கரை விளக்கானது.
காத்திருப்பு சிலபோது அசிங்கமானது அதனால்தான் அது வக்கிரங்களுக்கும், விரசங்களுக்கும் விலாசமாய் ஆனது.

காத்திருப்பு சிலபோது தேகங்களைச் சுமக்கின்றது
சிலபோது ஆயிரம் இலட்சியங்களைச் சுமக்கின்றது
காத்திருப்பு சிலபோது கற்பனைகளைச் சுமக்கின்றது
சிலபோது நிஜங்களைச் சுமக்கின்றது
காத்திருப்பின் மறு பெயர்தான் போராட்டம்.
ஏனென்றால்……
மூளையின் போரால்தான் சிந்தனைகள் பிறக்கின்றன
எறும்புகளின் போரால்தான் பாறைகள் சிதைகின்றன
ரசனைகளின் போரால்தான் இலக்கியங்கள் உதிக்கின்றன
இது ஆயுதப் போராட்டமல்ல அகிம்சைப் போராட்டம்
ஆயுதங்கள் உள்ளங்களைக் கொல்கின்றன
அகிம்சைகள் உள்ளங்களை வெல்கின்றன
ஆயுதங்கள் தேசங்களை வெல்கின்றன
அகிம்சைகள் நெஞ்சங்களை வெல்கின்றன
காந்தியின் அகிம்சையும் பாரத சுதந்திரத்துக்கு ஒரு காரணம் என்பதை விட காந்தியின் காத்திருப்பும் இந்திய விடுதலைக்கு ஒரு காரணம் எனலாம்.
வாழ்வில் சரித்திரம் படைக்க
வாருங்கள் காத்திருப்போம்.

சாய்ந்தமருதில் கவர்ச்சி நடனங்கள்; அமைச்சர் டலஸ் கடுப்பு





அண்மையில், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாவட்ட நிலையம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் இன்று தெரிவித்தார்.
"சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன் செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார். அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த உத்தரவு குறித்து அப்பிரதேசத்தின் முஸ்லிம் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர் எனவும்" அவர் குறிப்பிட்டார்.

யதார்த்தியின் உளக்குமுறல்...!

குறிப்பு - கீழுள்ள இக்கட்டுரையானது எமது நீண்டகால வாசகர்களுல் ஒருவரான யதார்த்தி அவர்கள் எமது தளத்திற்கு கருத்துரையாக அனுப்பியதை நாம் ஆக்கமாக பிரசுரித்துள்ளோம். நீண்ட விடுமுறையிற்குப்பின் எமக்கு கருத்தரை அனுப்பிய அவரின் கருத்து எமது சமூகத்தின் யதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டுவதுபோல் உள்ளதால் இதை நாம் பிரசுரிக்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்
தலைப்பே ஓர் உண்மையை சூசகமாக சொல்கிறது. அதாவது ஒரு
காலத்தில் ஜாஹிலியத்தில் இருந்த நம்மூர் பின்பு இஸ்லாமிய மறுமலர்ச்சி
ஏற்பட்டு மீண்டும் ஜாஹிலியத்தை நோக்கி பயணிக்கிறதா? என்பதே அது.
இதைத்தான் நீங்கள் பொத்தாம் பொதுவாக தெளிவற்ற நிலை மறைந்து
இஸ்லாமிய மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தது என்று சொன்னாலும் யதார்த்த
நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
ஜாஹிலியா காலத்தை பொறுத்த வரை கொலை,கொள்ளை,விபச்சாரம் போன்ற
தீமைகள் மாத்திரமல்லாது பலதெய்வ வழிபாடு, சிலை/கப்ரு வணக்கம், அல்லாஹ்
அல்லாதவர்களிடம் பிரார்த்தனை போன்ற இஸ்லாமிய அகீதாவுக்கு வேட்டு
வைக்கும் இழி செயல்களும்தான் இருந்தது.
இதே போன்றதொரு காலத்தில் தான் ஊரில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த
சில சகோதரர்கள் இந்த ஜாஹிலியத்திலிருந்து மக்களை கொஞ்சமாக
விலக்கினார்கள்-இருள் நீங்குகிறது.
இவ்வாறே இஸ்லாத்தை அல்லாஹ்வுக்காக நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய அதேபாணியில் எடுப்பாக எடுத்தியம்பிய இக்கொள்கைவாதிகள் அண்மைக்காலமாக
அவர்களின் கொள்கையில் தடம்புரண்டதே இந்த தலைப்பு வர முக்கிய காரணம்
என நினைக்கின்றேன்.
தெளிவாகச் சொன்னால் தனியிடங்கண்டு கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்த
கொள்கைப்பிடிப்பும், தியாக மனப்பான்மையும் இன்று மழுங்கடிக்கப்பட்டு
பள்ளிக்கு வந்தால் போதும் என்றளவுக்கு இவர்களின் நன்மையை ஏவி தீமையை
தடுக்கும் பணி சுருங்கிவிட்டது என்பதே நிதர்சனம்.
அத்துடன் ஆரம்பங்களில் அல்லாஹ்வை மாத்திரம் நம்பி செய்த
இந்தப்பணி இன்று மனித செல்வாக்கிற்கு முதலிடம் கொடுக்கும்
அவல நிலை இங்கே மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஆங்காங்கே
தாண்டவமாடுகிறது என்பதே உண்மைக்கொள்கை வாதிகளின் ஆதங்கம்.
நீங்கள் குறிப்பிடுவது போல் இயக்கங்கள், அமைப்புக்கள் பல இருந்தாலும்
நபிகளாரின் வழிமுறையைக் கையாளாமல் தனி மனித சித்தாந்தங்களை
தமது இயக்க கோட்பாடாக மாற்றிக்கொண்ட காரணத்தினாலேயே
இத்தீமைகள் களைந்து எடுக்கப்படுவதில் இவர்களால் எந்தவொரு பாதிப்பையும்
ஏற்படுத்த முடியவில்லை.
இந்நிலை தொடர்ந்தால் புகைத்தல், திருமணம் மட்டுமல்ல பொருளாதார(வட்டி, கடன்..),
சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான எல்லாமே ஜாஹிலிய்யத்தை நோக்கி
மீளும். இவர்களும் அப்படியே இயக்கத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.
எவ்வாராயிலும் "உங்களில் சிலர் நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டே
இருப்பார்கள்" என்ற அல்லாஹ்வின் கூற்றை கொள்கையாக கொண்ட சிலர்
ஏற்கனவே புறப்பட்டு விட்டனர் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் திருப்திதான்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

மீண்டும் ஜாஹிலிய்யத்தா?



தரீக்காக்கள், இயக்கங்கள், அமைப்புக்கள் எனப் பல்வேறு வழிகளினூடாக மார்க்க விழுமியங்கள் போதிக்கப்படும் ஒரு ஊரே எமது கஹட்டோவிடாவாகும். ஆரம்ப காலத்தில் மார்க்க விடயங்களில் தெளிவற்ற நிலை காணப்பட்டமையினால் வீடுகளில் நடைபெறும் விழாக்கள், நிகழ்வுகள் போன்றவற்றில் மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வந்தன. எனினும் காலப்போக்கில் எமதூரில் ஏற்பட்ட மார்க்க விழிப்புணர்வின் விளைவாக பல ஜாஹிலிய்யக்காலப் பழக்க வழக்கங்கள் மறைந்து இஸ்லாமிய மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊரின் அதிகமான இளைஞர்கள் மார்க்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புகைத்தலை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று  பாரிய ஒரு செயற்திட்டத்தையும் மேற்கொண்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.
எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் வாலிபர்கள் சிலரின் நடவடிக்கைகள் எமதூரில் ஏற்பட்டுவரும் இஸ்லாமி மாற்றங்களி்ற்கு வேட்டு வைக்குமுகமாக இருப்பதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஊரில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகள் விமர்சனங்களிற்கு உள்ளாகியிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுமற்றுமின்றி வாலிபர்களிடையே அதிகரித்து வருவரும் போதைப் பொருள் பாவனை போனறன  வாலிபர்களை சிறந்த முறையில் வழிநடாத்த பாரியதொரு செயற்திட்டம் வேண்டி நிற்பதை  உணர்த்துகின்றது.

பிரான்ஸில் முகத்திரை அணியத் தடை அமுல் ; இரு பெண்கள் கைது

பிரான்ஸில் முகத்திரை அணிந்து பொது இடங்களில் நடமாடுவதற்கான தடை இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இத்தடையை ஆட்சேபிக்கும் விதமாக முகத்திரை அணிந்துசென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




ஐரோப்பாவில் இத்தகைய தடையை விதித்த முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும். அங்கு பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்பவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை முகத்திரை அணிந்து செல்ல எவரேனும் கட்டாயப்படுத்தினால் அந்நபருக்கு 30,000 யூரோ அபராதமும் இருவருட காலம் வரையான சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இத்தடை அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் தலைநகர் பாரிஸில் இரு பெண்கள் 'நிகாப்' அணிந்து சென்றனர். அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 32 வயதான கேன்ஸா ட்ரைடர் எனும் பெண் ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

எனினும் அவர்கள் முகத்திரை அணிந்தமைக்காக கைது செய்யப்படவில்லை எனவும் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலெக்ஸி மார்சன் தெரிவித்தார்.

இவ்விருவருக்கும் முகத்திரை அணிந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதாக என்பது தெரியவரவில்லை.

இதேவேளை வர்த்தகரான ரஷிட் நேக்கஸ் என்பவர் தானும் தனது நண்பியொருவரும் ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸியின் மாளிகைக்கு முன்னால் நிகாப் அணிந்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டதாக ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.

'பொலிஸார் எமக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அபராதம் விதிக்க விரும்பவில்லை' என அவர் கூறினார்.

அத்துடன், முகத்திரை அணிந்து செல்லும் பெண்கள் அபராதம் செலுத்துவதற்கு உதவுவதற்கான நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக 20 யூரோ பெறுமதியான தனது சொத்துக்களை விற்கத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

கஹட்டோவிட தவ்ஹீத் பள்ளி வாசலில் மூன்றாவது தடவையாகவும் கண் சிகிச்சை முகாம்

கண்ணில் வெள்ளை படர்தல் நோய்கான இலவச கண் பரிசோதனை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.04.2011 திங்கட்கிழமை பி.ப 3.00மணியளவில் கஹட்டோவிட தஃவாப் பள்ளி வாசலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் பரிசோதனையின் பின்னர் அறுவை சிகிச்சை செய்ய தெரிவு செய்யப்படுபவர்களிற்கு முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கடந்த முறை நடைபெற்ற சிகிச்சை முகாமில் முஸ்லிம், முஸ்லிமல்லாதோரும் பயன் பெற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது.

கஹட்டோவிட அல்பத்ரியாவில் உயர்தர வகுப்புக்களிற்கான விண்ணப்பம் கோறல்

கடந்த வரும் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்க தகுதியுடைய மாணவர்களிடமிருந்து கலை, வர்த்தக மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விண்ணப்பங்கள் கோறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆம மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.

கஹட்டோவிட வரலாற்றில் இதுவே முதல் தடவையாக எமதூர் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவிற்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கபடவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. எமதூரின் தனவந்தர்கள், கல்வியியலாளர்கள் பெற்றார்கள் எனப்பலரும் ஒன்றினைந்து செயல்பட்டு இவ்விஞ்ஞானப்பிரிவை வெற்றியுள்ளதாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்வோம்.

மீதான விமர்சனப் பார்வை: கண்ணீர் வரைந்த கோடுகள்- கஹடோவிட நிஹாஸா நிஸாரின்

கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.



சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து, வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்....

'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'.

நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார்.

சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில்

ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்

தலை நீட்டலுக்கிடையில்

த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த

மாதம் தோறும் பணம் கேட்கையில்

அம்மாக்களின் இருதயங்களில்

ஆலமரம் சரியும் அரவம்....

என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது.

இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது.

அன்புகாட்டாத நேசங்கள்

முளைக்கப் பார்க்கும்

பெண்மையின் அபிலாஷைகள்

கண் முன்னே

கலையப்படும் போது - அது

தருகிற வழியும்... ரணமும்...

வேதனையாகி விரக்தியாகிறது...


மன உறுதிகள் குழைந்து

வீரம் தளர்ச்சியுற்று

உடம்பைக் கூறுபோடுகிறது...

இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது.

வாழ்வில்

அறியாத பக்கங்களை

தெரியாதென விட்டுவிட்டேன்...

அன்று அறியப்படாத - சில

பக்கங்களை அனுபவிக்கிறேன்

இன்று

அடுப்பங்கரையினுள்ளே

அடைபட்டுக்கொண்டு...

உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.

பாழ்பட்ட மண்ணில்

கால்பதித்த மக்கள்

சீர்கெட்ட சனத்தால்

சீரழிந்தது போதும்...

வாள்பட்டு நித்தம்

சீர்கெட்ட மக்கள்

சிதைந்தொழிந்தது போதும்...

நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு....

நெஞ்சில கைய வச்சா

சத்தமும் இல்ல

ஆனா நான்

சாகவும் இல்ல!


ஓடுதில்ல ஒருவேல

நெனப்பெல்லாம் உங்கமேல

நொந்து கிடக்கிறேன் நான்

நொடிப்பொழுதில் வாங்க..

தேய்ந்து போற என்ன

தேற்றிவிட்டுப் போங்க

அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.

பெண்களை

வாழ வைக்க

வக்கில்லாதவன்

பெற்றுக் கொள்ளும்

பிச்சைக் காசு...
மஹர் கொடுத்து

மணம் முடிக்கத் துணியாத

நீங்களெல்லாம் - ஏன்

காற்சட்டை அணிந்த

ஆண்கள் என்று

சொல்லிக் கொள்கிறீர்

எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தியை முன்னதாக நாம் வாசகர்களுக்கு அறியத்தந்திருந்தோம். 
இந்த விமர்சனப் பார்வையை எமக்கு அனுப்பியிருந்த சகோதரிக்கு எமது இணையம் சார்பாக நன்றிகள்.

கஹடோவிட பாலத்துக்கருகாமையில் மீண்டும் கைக்குண்டு கண்டுபிடிப்பு! (with Photos)


அத்தனகல்ல ஓயா ஆற்றுக்குக் குறுக்காக அமைந்தள்ள கஹடோவிட பாலத்துக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வழைமைபோன்று ஆற்றில் குளிப்தற்காக வந்த திருந்த ஒரு நபர் இதனைக்கண்டு பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.  இப்பொருளைக்கண்ட ஊர்மக்கள் உடனடியாக  பொலிசாருக்கு அறிவித்தள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் : இம்மாதம் கடும் வெப்பநிலை .

சூரியன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்க தொடங்குவதால்

இம்மாதம் முழுவதும், பகல்,இரவு நேரங்களின் கடுமையான வெப்ப நிலையை இலங்கை மக்கள் அனுபவிக்க நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள வெப்பநிலையை விட 5 முதல் 10 பாகைகளால் இவ்வருடம் வெப்பம் அதிகரிக்கலாம் எனவும் அதன் அறிக்கைகள் தெர்விக்கின்றன. இதனால் அதிகமான நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. சூரிய கதிர்வீச்சின் அதிகமான தாக்கம் நேரடியாக உடல் சருமத்தை தாக்குவதால் ஆரோக்கியமின்மை, இலகுவில் நோய்த்தொற்று என்பன ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சமகால உலகின் அரபுலகப் புரட்சி ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்.





வெகு அண்மைக்காலமாக அரபுலகில் ஏற்பட்டு வரும் அரசியல் புரட்சி சம்பந்தமான இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன என்பது பற்றிய விசேட உரையொன்றை கஹட்டோவிட சகோதரத்துவ அமைப்பின் ஒரு கிளையான SEDO அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.


இடம்  - SEDO அமைப்பின் கேற்போர் கூடம்

காலம் - 03.04.2011 இரவு 8 மணி

உரை - அஷ்ஷைக் அனஸ் (நளீமி)
..........................................................................
இதே தலைப்பிலான இன்னுமொரு உரை திஹாரிய தௌஹீத் ஜமாஅத் சகோதரர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இடம் - திஹாரிய புளிய மரத்தடிப் பள்ளி வாசல்
காலம் - 05.04.2011 இரவு
உரை - அஷ்ஷைக் இம்தியாஸ் (ஸலபி)

அனைவரும் கலந்து பயன் பெறுமாறு எமது இணையம் சார்பாக நாம் வேண்டிக் கொள்கிறோம்.