கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதரி கமருல் பரீதா அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரி கமருல் பரீதா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னார் தாஸீம் மௌலவி அவர்களின் மனைவியும், கலீலுல் ரஹ்மான், குதுஸியா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (31.03.2013) இரவு 9.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

பேஷன் பக் மீது பேரினவாதிகளின் தாக்குதல்

FB Attack


முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் நிறுவனங்கள் மீதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விஷமப்பிரச்சாரம் மற்றும் விஷம நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஒரு காடையர் கூட்டம் இன்று பேஷன் பக் நிறுவனத்தின் பெப்பிலியான களஞ்சிய சாலை மீது தாக்குதல் நடாத்தியது.
பொலிசாரின் தகவல்படி ஆரம்பத்தில்  குறைந்தது 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதல் காரணமாக களஞ்சிய கட்டடம் ஏனைய சொத்துக்கள் மற்றும் ஒரு வாகனம் என்பன சேதத்துக்கு உள்ளானது.
இந்த சிறிய கூட்டம் சிறிது சிறிதாக ஒரு பெரிய கூட்டமாக மாறி தாக்குதலை உக்கிரப்படுத்தியது. பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் களஞ்சிய சாலை கற்கள் மற்றும் ஏனைய பொருட்கள் கொண்டு தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை கட்டுப்படுத்த பொலிசாரால் முடியவில்லை.
பின்னர் இராணுவம், விஷேட அதிரடிப்படை மற்றும் கலகமடக்கும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் இந்த காடையர் கூட்டத்தால் தாக்கப்பட்டனர்.
பொது பல சேனா அமைப்பு ஊடகவியலாளர்களுக்கு தமது முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க கோரி குறுந்தகவல் அனுப்பிய சில நாட்களின் பின்னரே இந்த சம்பவம் நிகழ்ந்தமை இங்கு குறிப்பிட தக்கது.
இந்த குறுந்தகவல் பிரச்சாரத்தில் சிங்கள பொது மக்கள் தமது புத்தாண்டு கொள்வனவுகளை சிங்கள வியாபார நிலையங்களில் மாத்திரம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப் பட்டிருந்தனர்.
இந்த ஆண்டு முற்பகுதியில் சிங்கள ராவய எனும் இனவாத அமைப்பு மகாராகமையில் அமைந்துள்ள நோ லிமிட் விற்பனை நிலையத்தின் முன் முஸ்லிம்களால் நடத்தப்படும் இந்த வியாபார நிலையம் மூடப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி இருந்தனர்.
நேற்று போலீசார் குறுந்தகவல் ஊடாக இனவாதம் மற்றும் மத விடயங்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். இது சம்பந்தமாக ஒரு பௌத்த மதத்தவரும் ஒரு முஸ்லிம் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன முறுகல்களை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிசாரின் இந்த அறிக்கையில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய வழி முறைகளில் இன முறுகலை ஏற்படுத்துவோர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. முற்று முழுதாக குறுந்தகவல் பரிமாற்றம் சம்பந்தமாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் தாக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது
 
பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புகள் அண்மைக்காலமாக முஸ்லிம் நம்பிக்கைகளுக்கு எதிராக பகிரங்கமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது யாவரும் அறிந்ததே.
பேரினவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்
பேரினவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர்


 FB Attack 5 
 FB Attack 4 
 FB Attack 3

ஹர்த்தால் : முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இல்லை



கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் மற்றும் அலுவலகங்களையும் மூடி ஹர்த்தால் அனுஷ்டித்து முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தியை வழங்கியிருக்கிறார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இருந்தாலும் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இல்லை என்பதே அந்தச் செய்தியாகும் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கில் முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அதேவேளை, மன்னார், வவுனியா போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் பொரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
கொழும்பு பகுதியிலும் மற்றும் பல இடங்களிலும் கடந்த இரு தினங்களாக பொலிஸாரும் இராணுவத்தினரும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை கடைகள் மூடப்படக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாதென அறிக்கை விட்டிருந்தார்கள். முஸ்லிம் சேவை வானொலியிலும் கடைகள் மூடப்படக்கூடாதென தெரிவிக்கப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் முன்னால் வர்த்தக நிலையங்களை மூடிவிடும் படி ஆர்ப்பாட்டம் செய்த போது அதற்கெதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காது முஸ்லிம்கள் தமது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைதியாக ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்ததை தடுக்க முயற்சித்தமை நேர்மையானதல்ல.
ஒரு சில மௌலவிகளும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்கள் கடைகளை மூடக்கூடாதென்று வர்த்தகர்களைப் பயமுறுத்தியமை எதிர்காலத்திலும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாதீர்கள் என்று பயமுறுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஹர்த்தால் சொல்லும் செய்தி !!

2
எமது செய்தியாளர்கள்: கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய படங்கள் பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் வட மாகாணத்தில் யாழ். நகரப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரப் பகுதியிலும் ,ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு சக்திகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது.

ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசஙகளில் வியாபார நிலையங்கள், சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.சில பகுதிகளில் பாடசாலைகள் இயங்கவில்லை. அரசாங்க காரியாலயங்களின் செயல்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. உள்ளுர் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்புகாளால் மக்கள் கோரப்பட்டபோதும் இன்று முஸ்லிம்கள் ஹர்த்தாலை கடைபிடிதுள்ளனர். என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கருத்திற்கொண்டு ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என சில முஸ்லிம் அமைப்புகள் இறுதி நேரத்தில் வேணடுகோள் விடுத்திருந்தன.

காத்தான்குடியிலும் நகர சபை தவிசாளர் மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனம் காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா ஆகியன ஹர்த்தால் கடைப்பிடிக்க வேண்டாம் என கூட்டாக வேண்டுகோளை விடுத்திருந்தது.

இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு ‘முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு’ அழைபொன்றை விடுத்திருந்தது எனினும் இதற்கான பிரசார நடவடிக்கைகள் பெரியளவில் மேற்கொள்ளப்படாத நிலையிலும் இந்த ஹர்த்தால் முஸ்லிம் பொது மக்களினால் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது .

இதேவேளை வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. கொழும்பு , கண்டி , மாத்தளை, குருநாகல், புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் வழமைபோன்று தமது வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை இன்று ஹர்த்தால் நாடத்தும் முஸ்லிம் கடைகளை நிரந்தரமாக முடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பொதுபலசேன எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ஹர்த்தாலை அனுஷ்டிக்கவேண்டாம் என்று அரச ஆளும் தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகளாலும் பிரதேசங்களின் சமூக தலைவர்களாலும் முஸ்லிம்கள் கோரப்பட்ட நிலையிலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் பொதுமக்களின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதுடன் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் அரசுக்கும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம்கள் இதன் மூலமாக தெளிவாக கோரியுள்ளார்கள் என்று அவதானிகள் தெரிவித்தனர்.
(பி.எம்.எம்.ஏ.காதர். முஹமத் பர்ஹான் , ஆஸிக் அலி , சஹீத் அஹமட் , முபீன் , ஏ.அப்துல்லாஹ் , அஸ்லம் அலி)

5
7
9

அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களின் இக்காலத்துக்கு அவசியமான கருத்துக்கள்.

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு  நாம் காட்டிய இஸ்லாம் பற்றிய படத்தின் சரியான முகம் காட்டப்படவில்லை. இத்தவறே இன்றைய இலங்கையின் அசாதாரணச் சூழ் நிலைக்குக் காரணமாகும்  என்று அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒழுங்கு செய்த 'இலங்கையின் இன்றைய அசாதாரண சூழ் நிலை' என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இஸ்லாம் என்பது ஒரு பெரிய கோட்டை. தேவையானவர்கள் அதனுள் பிரவேசிக்க முடியும். சிலர் பிறப்பால் அதனுள் பிரவேசித்துள்ளனர். இன்னும் சிலர் தமக்குத் தெரிந்த கதவுகளால் ஏதோ ஒரு வகையில் உற்பிரவேசித்துள்ளனர். இன்னும் அனேகருக்கு கதவு எங்குள்ளது எப்படி பிரவேசிப்பது ஏன் பிரவேசிக்க வேண்டும் என்ற எதுவும் தெரியாது. இவர்களுக்கு நாம் என்ன படத்தை காட்டியுள்ளோமோ அதுமட்டும்தான் அந்நியவர்களுக்குத் தெரியும். உதாரணமாக இன்று பாடசாலைகள் முதல் சாதாரண வீதிகள் வரை, சில இடங்களில் அதற்கும் அப்பாலும்  பர்தாவைக் காண்கிறோம். அப்படியாயின் பர்தா அணிவதுதான் இஸ்லாம் என்று அந்நிய ஒருவன் கணிக்கலாம். இதேபோல் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மாவிற்கு மட்டும் நாம் ஒழுங்காகப் போய் வந்து ஏனையவற்றை கை விட்டு விட்டால் அந்நிய மகனுக்கு வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போவது மட்டும் தான் இஸ்லாம் என்பது போல் தெரிய வரும்.
ஷரீஆ சட்டத்தின்படி கொலை செய்தவனது கழுத்தை வெட்டி கொலை செய்வது  தான் ஷரிஆ என்ற படத்தைக் மட்டும் காட்டினால் அவன்  ஷரிஆ  சட்டம் எனும் போது கழுத்தை வெட்டிக் கொள்வது மட்டும் தான் என்பது அவனுக்குத் தெரிய வரும். இத்தண்டனையின் மறைந்துள்ள மறுபக்கத்தை நாம் காட்டாத வரை அத்தவறைத் திருத்த முடியாது. 
அதே நேரம் நாம் ஒப்பீட்டு ரீதியில் நிறைய நற்பணிகளை செய்துள்ளோம். அதேபோல் சில விடயங்களில் தவறிழைத்த இடங்களும் உண்டு. உதாரணமாக சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு பர்தா அணிந்த ஒரு பெண்ணை காண்பது மிக அரிது. தற்போது அப்படியல்லாத ஒரு முஸ்லிம் பெண்ணைக் காண்பதுதான் அரிது. அதேபோல் முன்னர் உழ்ஹிய்யா என்பது அருமை. இப்போது ஒரு சாதாரண குடிமகன் கூட சுமார் ஐயாரிரம் ரூபாவிலும் குறைந்த ஒரு தொகையைச் செலுத்தி ஒரு பங்காளனாக மாறிவிடுகிறான். முன்னர் ஹஜ் கடமை நிறைவேற்றியவர்கள் ஒரு கிராமத்தில் விரல் விட்டு எண்ணுமளவு தான் இருந்தனர். இன்று குடும்பம் குடும்பமாக ஹஜ் மட்டுமல்லா வருடத்திற்கு பலமுறை உம்ரா செய்கின்றனர். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவோர் எண்ணிக்கை கூடியதால் இன்று பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. முன்னர் ஸகாத் என்பது வெறும் சில்லரைகளால் மட்டுமே வழங்கப்படும். இன்று கூட்டு ஸகாத் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் எமது நல்ல பக்கம். அதேபோல் இன்னும் சில மறுபக்கங்களும் உண்டு.
உதாரணமாக சுற்றாடல் பாதிப்பு பற்றி குர்ஆன் நிறையக் குறிப்பிடுகிறது. அதேநேரம் இன்று சர்வதேச, தேசிய மட்டங்கள் முதல் சாதாரண அமைப்புக்கள் வரை சுற்றாடல் விழிப்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்புக் குழுக்கள் என்று இயங்கு கின்றன. அரசு சுற்றாடல் அமைச்சு ஒன்றையே நடத்துகிறது. எமது நிலை என்ன? ஒரு முஸ்லிம் கிராமத்தை பார்த்த பார்வையிலே அறிந்து கொள்ள முடியும். அழுக்குகளும் குப்பை மேடுகளும் நிறைந்த சேரிப்புறத் தோற்றத்தில் காணப்படக்கூடிய கிராமங்களாக இருக்கும். ஒரு புறம் இறைச்சிக் கடைகளும் அவற்றின் கழிவுகளும், காகம் நாய் போன்றவை அவற்றை  இழுத்துத் திரியும் அருவருப்பான சூழலைக் காணலாம். மறு புறமாக சிங்களக் கிராமங்களுக்குள் நுழைந்தால் பாரம்பரிய முறையில் அமைந்த மரங்களும் விவசாயப் பூமிகளும் தண்ணீர் போன்ற இயற்கை அருட்கொடைகளைப் பாதுகாத்து சுத்தமாக வைத்துள்ளதைக் காண்கிறோம்.
இங்கே இஸ்லாம் காட்டிய வழிமுறைகள் எம்மிடத்தில் உள்ளதா? ஈமானின் ஆகக் குறைந்த ஒருபடிதான் பாதையில் உள்ள ஒரு முள்ளை அகற்றுதல். நாம் பாதையையே ஆக்கிரமித்து விடுகின்றோம். வாகனங்களை நிறுத்தி அடுத்தவர் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளோம். இஸ்லாத்தைப்பற்றி அறியாதவன் என்ன நினைப்பான் . இதுதான் இஸ்லாம் என்று. தாம் வசிக்கும் ஊரை அசுத்தமாக வைத்திருப்பது அடுத்தவர் பிரயானம் செய்யும் போது தடையாக இருப்பது, பாதையை மறைத்து கட்டிடங்களால் ஆக்கிரமிப்பது இதுதான் இஸ்லாம் என்று அவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.
இதன் மறுபுரத்தைப் பார்ப்போம்...
இன்று கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொலை கொள்ளை, இலஞ்சம், ஊழல், மோசடி, ஏமாற்றுதல், மது, விபசாரம், சூது என்று எத்தனையோ தீய செயல்கள் பிறமதத்தவர்களிடம் மலிந்து காணப்படுகின்றன. அதுபற்றி எமக்கு எது வித கவலையும் இல்லை. அது அந்தச் சமூகம் தானே என்று கண்டும் காணாதவராக உள்ளோம். இதனை ஒழிக்க அவர்களுடன் இணைந்து நாம் ஏதாவது வேலைத்திட்டங்களை முன் எடுத்துள்ளோமா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படி அவர்களது விடயங்களிலும் நுழைந்து எமது பெருந் தன்மையைக் காட்டி அவர்களுக்கு அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இப்படியும் ஒன்று இருக்கிறதா எனத் தேடிப்பார்ர்ப்பார்கள். அதனையும் நாம் தவற விட்டுள்ளோம்.
அண்மையில் இடம் பெற்ற ஒரு  விடயத்தைப் பார்ப்போம். ஒலி மாசடைவதால் ஏற்படும தீங்குகள் பற்றியும் அதனை ஒழிப்பது பற்றியும் ஒரு செலமர்வு இடம் பெற்றது. இதன் நோக்கம் அதான் (பாங்கை)  பற்றிய சர்ச்சையாக இருக்கலாம். அதில் விஞ்ஞான ரீதில் தொழில் சார் நிபுணர்கள், பல்கழைக்கழக பேராசிரியர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அங்கு சுற்றாடல் மாசடைவதில் ஒலி மாசடைவது ஒரு பிரிவு எனக் காட்டப்பட்டது. ஒலி மாசடைதலுக்கான நியதிகள் வறையறை செய்யப்பட்டன. 
உதாரணமாக அதிர்வெண், அலைவடிவம் ஒலி அலையின் வீச்சம் போன்ற பல பௌதீக வியல் அம்சங்கள் வரையறுக்கப்பட்டன. நாம் பாங்கு ஒலியையும் அதற்கு ஏற்றவகையில் துறை சார் நிபுணர்களின் உதவியுடன் விஞ்ஞான ரீதியில் பகுத்தும் தொகுத்தும் கொடுத்தோம். சர்வதேச விதிகளுக்கு அமைய அவர்கள் அமைந்த அந்த நியதிகளுக்கு அதான் பொருந்த வில்லை. இதனால் ஒலி மாசடைதலுக்கு அதான் ஒருகாரணமல்ல என்று நிறுவப்பட்டது. இதை தவிர்ந்து அது எமது உரிமை. அல்லது எமது மார்க்கத்திலுள்ள முக்கிய விடயம் என நாம் வாதாடினால் இன்றைய சூழ்நிலையில் அதை ஏற்க முன்வர மாட்டார்கள். எனவே இது போல் நாம் காலத்திற்கு ஏற்ப எமது அணுகு முறைகள் அமையாவிட்டால் அவை காலத்தால் புறந்தள்ளப் படும்.
முஸ்லிம்கள் ஐந்து நேரமும் கட்டாயம் தொழ வேண்டும். அது ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும். அதனால் இன்ன விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனித குலத்திற்கு இந்தவகையில் நன்மைகள் ஏற்படுகின்ற. என்ற வகையில் நாம் அதகைக் காட்டி இருப்பின் பள்ளிகளில் அதிகரிப்பு யதார்த்தம் புரிந்திருக்கும். நாம் அது போன்ற விடயங்களில் சரியான படத்தைக் காட்ட வில்லை.
'றமழான் வந்தால் இரவு முழுதும் பிற சமூகத்திற்கு தூங்கமுடியாது. பெருநாள் வந்தால் (ஹஜ்) கண்ட இடமெல்லாம் மாடுவெட்டி அசிங்கப் படுத்தப்படும். வருடம் ஒரு முறை மக்கா சென்று ஏதாவது கடத்திற் கொண்டு வர முடியும், சேரிப் பகுதிகளில் வாழுமட முஸ்லிம்களால் சட்டவிரோத  நடவடிக்கைளில் தாராளமாக ஈடுபட முடியும்' 
என்ற படத்தை நாம் பிற சமூகத்திற்குக் காட்டி இருப்பின அவர்கள் அதைத்தான் இஸ்லாம் என எதிர் பார்ப்பர். இன்று நடப்பது அது தான். நாம் செய்யும் நல்ல விடயங்களில் கூட அதி லுள்ள நல்ல பக்கத்தை காட்டவில்லை. இது இப்படி இருக்க ஒரு சிலர் மேற்கொள்ளும் தீய செயலில் நல்ல பக்கத்திற்கே இடமில்லையே. 
இப்படியாக இஸ்லாம் என்ற அழகிய கோட்டையில் உள்ள எத்தனையோ கதவுகளை நாம் மூடிவிட்டு தவறான முகத்தைக் காட்டி வருவதும் இன்றைய அசாதாரண சுழ்நிலைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
நபிகளார் காலத்தில் பிரச்சின ஒன்று ஏற்பட்டால் நேரடியாக அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு நபியவர்கள் உயிருடன் இருந்தார்கள் நபியவர்களின் மறைவின் பின் எத்தனையோ கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அது அன்று மட்டுமல்ல இன்றும் உள்ளன. இதற்குப் பிறகும் அது ஏற்படும். இதற்கு இஸ்லாம் காட்டிய அழகிய வழி முறைகள் பல உண்டு. குறிப்பிட்ட கருத்து முரண்பாடுகளைக் கொண்ட தலைவர்கள் ஒன்றிணைந்து குர்ஆன் அதீஸ் அடிப்படையில் அதனை விவாதித்து ஒருகருத்து மட்டுமே ஆதாரத்துடன்  இருக்குமாயின்  அதனை ஏற்பது. இருகருத்துக்கள் இருக்குமாயின் இரண்டையும் ஏற்பது.  விரும்பியவர் செய்யலாம் மற்றவர் அதனை விட்டு விடலாம். இப்படி பல கருத்து இருக்ககுமாயின் அதனைப் பின்பற்றும் கூட்டத்தார் அதனைப் பின்பற்றலாம். அனுமதிக்கப்பட்ட அவற்றை மற்றவர் தடுக்கத் தேவையில்லை. தாம் அதனை மேற்கொள்ளாது இருக்க முடியும். 
இதனைத்தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அழகாக எடுத்துக்காட்டியுள்ளது. ஆதார பூர்வமான விடயங்களை ஒரு கூட்டத்தார் மேற்கொள்ளும் போது அதே விடயமாக கருத்து முரண்பாடு கொண்டோர் அதனை செய்யாது அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது. அடிப்படை விடயங்களில் எமக்கிடையே எதுவித முரண்பாடுகளும் கிடையாது. ஆனால் சின்ன விடயங்கள் சிலவற்றில் கருத்து முரண்பாடு உண்டு. உதாரணமாக தக்பீர் கட்டுவது. இது ஒரு சின்ன விடயம். ஆனால் அது பூதாகரமாக வெடித்து இரண்டு குழுக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது. பேதாமைக்கு பொலீஸ் நீதிமன்றம் எனச் சென்று விடுகிறது. 
இதேபோல் இன்னொரு இடத்திலும் ஒரு சின்ன விடயமத்திற்கு அடிதடி. இப்படி போலீஸ் திணைக்கள வருடாந்த அறிக்கையில் பட்டியல் இடும் போது பெயர் குறிப்பிடமுடியாத சில புதிய முறைப்பாடுகள் பதிவாகத் தொடங்கியுள்ளன. அதனை மார்க்கப் பிரச்சினை என எடுத்துக் கொண்டால் இப்போது முஸ்லீம்களுக்கு மத்தியில் மார்க்கச் சண்டை அதிகரித்து விட்டது என்ற புள்ளவிபரம் வெளியாக ஆரம்பித்து விட்டது.  இவர்கள் ஒரு சின்னப்பிரச்சினையைக் கையாளத் தெரியாத காட்டு மிராண்டிகளா? என  மற்ற சமூகம் நினைக்கிறார்கள். இப்போது சாதாரண பொலீஸ் திணைக்களம் என்ன நினைக்கிறது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த சமுதாயத்தில் இப்போது ஏதோ ஒரு புதுப் பிரச்சினை. இதற்குக் காரணம் முன்னர் இல்லாத வகையில் இன்று பர்தா அணியும் பெண்கள் அதிகரித்துள்ளரமயும், தொழுகின்ற ஒரு கூட்டம் அதிகரித் துள்ளமையும் பள்ளிகள் அதிகரதித்துக் கொண்டு போவதும் (பள்ளி கட்டும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போவதும்) பிச்சினை கூடுவதற்கும் தொடர்பு இருக்கிறது. எனவே இவர்கள் தீவிரவாதிகள். மற்றவர்கள் சம்பிரதாய முஸ்லிம் என்று கூறுபோட ஆரம்பித்து விட்டனர்.
எனவே சுருங்கக் கூறின் நாம் எதைக்காட்ட வேண்டுமோ அதனை மறந்து பிழையான ஒரு படத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதே அசாதாரண சூழ் நிலைக்குக் காரணமாகலாம் என்றார்.
இப்போது பிற இனத்தவர்களுடன் மிக அந்யோன்யமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றார்கள். இது சரிதான். ஆனால் இதில் ஒரு அபாயமும் உண்டு. அந்நியவர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதுடன் எமது உடன் பிறப்புக்களுடனும் அதே விதமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடன் பிறப்புக்களையும், ஊரில் ஒன்றாய் வாழும் எமது சகோதரர்களையும் ஒதுக்கி விட்டு அந்நிய மதத்தவர்களை மட்டும் அரவனைக்க முற்படுவது எங்கு போய் முடியும் என்று கூற முடியாது என்றார்.
 (J.M.HAFEES MADAWALA BAZZAR)

முகம்மத் உவைஸ் அவர்கள் காலமானார்.

கஹடோவிடவைச் சேர்ந்த முகம்மத் உவைஸ் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னார் பாதிமா ஸுல்விகா அவர்களினதும், காலஞ்சென்ற ஜென்னதுல் நயீமா அவர்களினதும் அன்புக் கணவரும். முகம்மத் ஜவுஸி, முகம்மத் முஜீப், பாதிமா பர்மிளா, முஹம்மத் ஸப்வான், முகம்மத் ஸமீல், பாதிமா ஸமீனா ஆகியோரின் அன்புத் தந்தையும், முகம்மத் ஹன்பல், பாதிமா நிலூபா, பாதிமா ஹன்ஸா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று  (23.03.2013) மாலை 4.30 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

ஆஸாத் சாலியின் அதிரடி செவ்வி



என்னை கைது செய்து உள்ளே வைப்பதிலேயே அரசு குறியாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களையே தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கபடத் தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது என்று கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் தற்போது தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராகவும்,முஸ்லிம் தமிழ் ஐக்கிய கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள அஸாத் சாலி தெரிவித்தார்.


அஸாத் சாலியை கைது செய்ய நேற்று எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிலைமைகள் பற்றி ஜப்னா முஸ்லிம் அவரோடு தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்தும் இதுபற்றிக் கூறுகையில்,

நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்திருந்தால் இன்று கொழும்பு மாநகர மேயராக இருந்திருப்பேன் இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.சமூகத்துக்காகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு அளித்தேன்.ஆனால் இந்த அரசின் இனவாதப் போக்கை புரிந்து கொண்ட அடுத்த கனமே அதிலிருந்தும் வெளியேறினேன்.முஸ்லிம்களுக்கு விடிவு கிட்டும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி தமிழ் சமூகத்துக்கும் சேர்த்து துரோகம் இழைத்ததால் எனது மனச் சாட்சிக்கு விரோதமாக அங்கும் என்னால் இருக்க முடியவில்லை.

இப்போது தனியான ஒரு பாதையில் எல்லா சகோதர இனங்களையும் சேர்த்துக் கொண்டு புதிய அணியொன்றை உரிவாக்கியுள்ளேன்.இந்தப் புதிய அணிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாளுக்கு நாள் ஆதரவு திரண்ட வண்ணம் உள்ளது.இனவாத சிந்தனையற்ற பௌத்த மகாசங்கத்தினர் கூட எனது இந்த முயற்சிக்கு தமது பூரண ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.இதுவே அரசாங்கத்தை உறுத்தத் தொடங்கியுள்ளது.என்னை இலக்கு வைப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.

என்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் ஒன்றும் புதியவை அல்ல.ஆரம்பத்தில் ஒரு மனநோயாளியைக் கொண்டு எனக்கு எதிராக பெலிஸ் நிலையத்தில் புகார் செய்ய வைத்தார்கள். அவருக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நான் அவரை ஏமாற்றினேன் அவரிடம் இலஞ்சம் வாங்கினேன் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் விசாரணையை அவர்களே கிடப்பில் போட்டு விட்டார்கள்.

தற்போது நான் அரசின் இனவாத போக்கை கடுமையாகவும் வெளிப்படையாகவும் கண்டித்து வருவது உலகறிந்த விடயம், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுசரணையோடு செயற்படும் பொது பல சேனா அமைப்பை நேரடியாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகளுடன் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தோன்றி அவர்களின் மூக்கு உடைபட வழியமைத்துள்ளேன்.இவர்களுக்கு எதிரான பௌத்த மகா சங்கத்தினரையும்,அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்று திரட்டி ஒரே மேடையில் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கச் செய்துள்ளேன். கடந்த வாரம் மிக வெற்றிகரமாக கொழும்பில் இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளேன்.பொது பல சேனா இன்னும் இரண்டு மாத காலத்தில் மரணித்துவிடும் என்று மகாசங்கத்தினரே ஆரூடம் கூறியுள்ளனர்.

இப்படி அவர்களைப் பாதிக்கும் பல விடயங்களுக்கு நான் காரணமாக இருந்துள்ளேன் என்பதை எல்லோரும் நன்கு அறிவர்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் நான் இந்த நிகழ்வை நடத்துவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக என்னை கைது செய்து உள்ளே வைக்கும் ஒரு சதித் திட்டம் குறித்து அரச மேல்மட்டத்தால் ஆராயப்பட்டுள்ளது.இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான பிரதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்கென மூன்று திட்டங்களை இவர்கள் வகுத்துள்ளனர்.

ஒன்று என்னை கிழக்கு மாகாணத்துக்கு வரவழைத்து நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கவைத்து அங்கு ஒரு பெண்ணை அனுப்பி என்னை பாலியல் குற்றச்சாட்டொன்றில் சிக்கவைப்பது.

இரண்டாவது திட்டம் என்னுடைய வாகனத்தில் ஒரு நவீன ஆயுதத்தை எப்படியாவது போட்டுவிட்டு கள்ள ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி என்னை பொலிஸில் சிக்கவைப்பது.

மூன்றாவது திட்டம் யாராவது ஒரு சில நபர்களை ஒழுங்கு செய்து நான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக என்மீது பொலிஸில் புகார் செய்வது.

இந்தத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை செவ்வனே நிறைவேற்றுவது பற்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபல கேடி ஒருவருடன் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் விரிவாகப் பேசியுள்ளார். இதற்கென இந்த கேடியை பிரதி அமைச்சர் உள்ள இடத்துக்கு வரவழைக்க பத்தாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் துணையால் அவர்கள் திட்டம் தீட்டிய அடுத்த கனமே அது எனக்கு தெரிந்துவிட்டது. எனக்கு தெரிந்தது அவர்களுக்கும் தெரிந்து விட்டது.இதனால் எல்லாமே பிசுபிசுத்து விட்டது.

தற்போது கடந்தவாரம் எனக்கும் ஜனாதிபதியின் ஆலாசகர் ஹஸன் மௌலானாவுக்கும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகைக்குப் பின் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மௌலானா பள்ளியில் வேலைக்கு வந்தவர் இப்போது அரசியல் செல்வாக்கில் நம்பிக்கையாளர் சபையில் இடம்பிடித்துள்ளார்.குறிப்பிட்ட தினம் ஜூம்ஆ பயானில் ஹலால் விவகாரம் தொடர்பாக உலமா சபையை காரசாரமாக சாடும் வகையில் பயான் இடம்பெற்றது.தொழுகை முடிந்ததும் நான் இதை வன்மையாகக் கண்டித்தேன்.இது பலர் முன்னிலையில் இடம்பெற்ற ஒரு சாதாரண விடயம்.அந்த இடத்தில் இருந்த எல்லோருமே எனக்கு ஆதரவாகவே பேசினர்.விடயம் அத்தோடு முடிந்து விட்டது.அப்படியே இது ஒரு பாரிய விடயமாக இருந்தாலும் அதை எமக்கிடையில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அல்லது கருவாக்காடு பொலிஸில் முறையிட்டு ஆகக் கூடியது அங்கிருந்து இணக்கச் சபைக்கு சென்றாவது தீர்த்துக் கொண்டிருக்கலாம்.

இந்த சாதாரண விடயத்துக்காக என்மீது ஒன்பது குற்றச்சாட்டுக்களை சமத்தி அதுவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஏன் முறையிட வேண்டும்?இங்குள்ள ஒரு பிரிவு பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்குவதாகவும் இவர்கள் தான் அரசியல் எதிரிகளை வட்டமிடுவதாகவும், இந்தப் பிரிவே எனது விடயத்தையும் கையாள்வதாகவும் கேள்விபட்டேன்.ஹஸன் மௌலானாவோடு எனது சட்டததரணிகளும் சமூகம் சார்ந்த சில உயர்மட்டப் பிரமுகர்களும் இது பற்றிப் பேசிய போது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தான் சிலரால் தூண்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்தே என்னைக் கைது செய்யும் நோக்கில் நேற்று எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் பொலிஸார் வந்துள்ளனர். முறைப்பாடுகளை வாபஸ் பெற்று இணக்கத்துக்கு வர தயார் என்று ஹஸன் மௌலானா கூறுகின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கத்துக்கு வர முடியாத வகையில் குற்றச்சாட்டை தாங்கள் உறுதியான சட்ட விதிகளின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும்,என்னைக் கைது செய்து நீமிமன்றத்தில் நிறுத்துவதே ஒரே வழியென்றும் பொலிஸார் எனது சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து எனது சட்டத்தரணிகள் பொலிஸாருடன் ஆலாசனை நடத்தி வருகின்றனர்.

-ஜப்னா முஸ்லிம் இணையம்-

ஆசாத் சாலிக்கு எதிராக ஹஸன் மௌலானா


ஆசாத் சாலிக்கு எதிராக ஹஸன் மௌலானா ( ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர்) 5 குற்றச் சாட்டுகளை கூறியுள்ளார்.
இதனால் பொலீசார் ஆசாத் சாலியைத் தேடி வலைவீச்சு.
ஹலால் பிரச்சினை வந்தபோது இவர் எங்கே போனார்? 
அபாயாப் பிரச்சினை வந்தபோது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காதது ஏனோ? 
அல்லாஹ்வின் நாமத்தை பன்றியின் சின்னத்தில் ஏந்தும்போது எங்கே போனார் இந்த மௌலானா? 
நமது சமூகத்துக்கு குரல் கொடுத்தவனுக்கு எதிராக நம்மவனே காட்டிகொடுப்பது பொது பல சேனாவின் கொடுமையை விட மேலானது.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, எமது ஊர் பள்ளிவாசல் நிருவாக அங்கத்தவர்களுக்கு இடையிலான ஒரு கலந்துரையாடல்


எமது நாட்டில் ஏட்பட்டிருக்கும் இனமோதல் மற்றும் எமது சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் உலமாக்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், உயரதிகாரிகள், இளைஞாகள் இவர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஒர விசேட கலந்துரையாடலை கஹடோவிட ஜமியா கிளை, நாளை காலை 9.30 மணிக்கு  மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடுசெய்திருக்கின்றதாகவும்.  இக்கலந்துரையாடல் பள்ளிவாயல் நிருவாக அங்கத்தவர்களை மையமாக வைத்து நடக்கவிருப்பதால் கஹடோவிட, ஓகடபொல, குரவலான, உடுகொட பள்ளிவாயல் நிருவாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

விசேடமாக இங்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சில் உருப்பினர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

இது கதையல்ல… நிஜம்!

DIRTY POLITIC 
தேர்தல் ஒன்று எம்முன்னே வரும்
திரைக்கதை ஒன்றை
அரசாங்கம் அமைக்கும்

அப்போது அரசியல்வாதிகள் எல்லோரும்
நடிகர்களாக மாறுவார்கள்
வரலாறு காணாத கதை ஒன்று அரங்கேறும்

பதவிகளை தூக்கி எறிவார்கள்…
அரசாங்கத்தை கண்டபடி ஏசுவார்கள்
மக்களை உசுப்பேத்துவார்கள்

மக்களும் அவர்களை நம்பி
நாரே தக்பீர் முழங்கும்
நடிகர்கள் தியாகிகளாக வலம் வருவார்கள்

மக்கள் எல்லாவற்றையும் மறந்து
தியாகிகளை பாராளுமன்றம் அனுப்ப
பாடுபடுவார்கள்

கள்ள ஓட்டுகளாலும்
கபடத்தனத்தாலும்
கயவர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்

மக்களின் நன்மை கருதி மீண்டும்
அரசில் இணைகிறோம் என
அறிக்கை விடுவார்கள்

மீண்டும் ஊருக்கு ஒரு அமைச்சர்
கிடைத்த திருப்தியில் மக்கள்
சுருட்டிக்கொண்டு தூங்குவார்கள்

அமைச்சர் ஊரையே சுருட்டி
அரசாங்கத்துக்கு கொடுக்கப்போவதை
உணராதவர்களாக….!

காத்தான்குடி முபா -

அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம் : இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா






இலங்கைக்கு எதிரான தீர்மானம் 25-13 என மேலதிக வாக்குகளால் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
அமெரிக்க பிரேரணை மீதான ஐ.நா உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு சற்று முன்னர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்று முடிந்தது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இதேவேளை பாகிஸ்தான் இதை கடுமையாக எதிர்த்துள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஐ.நாவுக்கான இந்திய தூதுவர் திலீப் இன்கா இவ்வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பு கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் பரிந்துரைகளை தொடர்ந்து கண்டிப்பாக இலங்கை அமல்படுத்த வேண்டும் எனவும், 13வது சட்டதீர்திருத்தத்தை நோக்கி நகரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் காணாமல் போவோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர், தனியார் காணிகள் அபகரிக்கப்படுதல் தொடர்பிலும் இலங்கை முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இலங்கையுடனான இந்தியாவின் நெருங்கிய நட்புறவு 1000 வருடங்களுக்கு மேல் நீடிக்கின்ற போதும், இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் பாராமுகமாக இந்தியாவால் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.  ஐ.நா மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, பிரேசில் ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் சியெரா லியோன் ஆகியனவும் இலங்கைக்கு எதிராகவும், பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. வெனிசுலா இலங்கை தொடர்பிலான பிரேரணையை கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இத்தீர்மானம் பாசாங்குத்தனமான போலியான தீர்மானம் எனவும் குற்றம் சுமத்தியது.




விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது என்று கூறினார். சர்வேதச பரிந்துரைகள் இந்த தீர்மானத்தில் இதில் இல்லை என்றும், இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிரான இத்தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், சிவில் யுத்தங்களை எதிர்கொண்ட பல நாடுகள் இருக்க இலங்கைக்கு எதிராக மட்டும் இவ்வளவு ஆவேசம் காட்டுவது ஏன்  எனவும் கேள்வி எழுப்பினார்.

தாய்லாந்து இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. கொரிய குடியரசு தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

இதை தொடர்ந்து அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. 13 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 08 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து 12 மேலதிக வாக்குகளினால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா மனித உரிமை சபையில் நிறைவேற்றம் கண்டுள்ளது.

முஸ்லிம்களை மறந்து பிக்குகளுக்காக போராடும் அஸ்வர் ஹாஜி




ஒரு முஸ்லிமின் திறந்த மடல் - -மூதூர் ரஸ்மி-

நேற்று நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ் நாட்டில் புத்த பிக்குகள் தாக்குதலுக்கு உள்ளாவதாக பேசினீர்கள் இதனை ஐநா வரைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்றும் சொன்னீர்கள், இதனைகேட்டவுடன் எனது மனசு மிகவும் கஷ்டப்பட்டது. காரணம் எமது முஸ்லிம் மக்கள் அண்மைக்காலமாக இந்த புத்த பிக்குகளால் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் இன்றைக்கு நாம் இலங்கையில் எமது இருப்பே கேள்விக்குறிகுள்ளான நிலையில் உள்ளோம்.

பள்ளிகள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் பெண்கள் மீதான தாக்குதல்கள், எமது மதத்தை கேவலபடுத்தும் பேச்சுக்கள், முஸ்லிம் வியாபாரஸ்தலமீதன தாக்குதல் இப்படி பலவற்றை அடுக்கி கொண்டே போகலாம். இதை எல்லாம் யார் செய்கின்றனர்? இந்த காவியுடை அணிந்த புத்த பிக்குகளே.

இது உங்களுக்கும் நன்றாக தெரியும் நீங்கள் இவர்களுக்காக வக்காலத்து வாங்கியதை நான் குறை கூற வரவில்லை, பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். ஆனால் நான் இங்கு கூறவந்தது என்னவென்றால் நீங்கள் இவர்களின் பிரச்சினையை ஐநா வரை கொண்டு செல்ல இருக்கிறீர்கள் பாரட்டதக்கது ஆனால், எமது முஸ்லிம்கள் மீது இந்த நாட்டு பொது பாலா சேனா நடாத்திய ஆர்பாட்டங்கள் தாக்குதல்களை நீங்கள் எமது பாராளுமன்றத்தில் கூட ஒரு வார்த்தை பேசியது இல்லையே இது மிகவும் தூரதிஷ்டமானது.

நேற்றைய உங்கள் உரையை கேட்டவுடன் நான் மிகவும் கவலைப்பட்டேன். எம் சமூகத்திற்கு இந்த புத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனத்தை மறந்து இவர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் எமது மொத்த முஸ்லிம் சமூகத்திற்காக வாய் மூடி மௌனியாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

இது நீங்கள் எமது சமுதாயத்துக்கும் இஸ்லாத்திற்கும் செய்யும் துரோகமாகும்.

நீங்கள் எவர்களுக்காக பரிந்து பேசினீர்களோ அவர்கள் இன்று சொல்லுகிறார்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய தவ்ஹீத் ஜமாத்தினாராம். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல இருக்கின்றீர்கள்? இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரை கண்டித்து ஐநா வரை செல்ல இருக்கின்றீர்கள? எதிர்காலத்தில் இப்படியம் செய்வீர்கள். என்ன மானம் கேட்ட பிழைப்பு இது?

நீங்கள் இப்படி எல்லாம் பேசும்போது நான் நினைக்கறேன், அதாவது, நான் மக்களால் இந்த பாரளுமன்றத்துக்கு வரவில்லை நான் வந்தது ஜனாதிபதியால்தான் அதானால நான் எதுக்கு உங்களுக்காக குரல் கொடுக்கணும் ? ஜனாதிபதிக்கும் அவரின் குடும்பத்திற்கும் அவரின் மதத்திற்கும் மட்டும்தான் பரிந்து பேசுவேன்.. இப்படிதான் உங்கள் நடைமுறை இருக்கின்றது.

பதவியோ அல்லது அந்தஸ்தோ இந்த உலகில் நிரந்தரம் இல்லை, நாம் செய்யும் நல்ல அமலும் நல்ல செயலும்தான் மறுவுலகில் வெற்றியை கொடுக்கும். அதனை மறந்து நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் பேசி எம்மை வேதனை படுத்துகின்றீர்கள். இதனை நாங்கள் அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

அல்லாஹ் உங்களுக்கு நல்ல எமானை கொடுப்பானாக. ஆமின்…

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிடக் கிளை புணர்நிர்மானம்.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிடக் கிளையை மீள ஒழுங்கமைப்பதற்கான கூட்டம் நேற்று 17.03.2013ஆம் திகதியன்று பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்துவரும் காலப்பகுதிக்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. 

புதிய நிர்வாக விபரம் வருமாறு.

தலைவர் : மௌலவி சாஹுல் ஹமீத் (கபூரி)
செயலாளர் : மௌலவி அல்ஹாஜ் அப்துஸ்ஸலாம் ஆசிரயர் (பலாஹி)
 நிதிச் செயலாளர் : மௌலவி பைரூஸ் (கபூரி)

செயற்குழு உறுப்பினர்கள்.
1. அஷ்ஷைக் ரம்ஸி அலி (நளீமி)
2. அஷ்ஷைக் மௌலவி சிஹாப்தீன்
3. அஷ்ஷைக் ஹிசாம் முஹம்மத் (நளீமி)
4. அல்ஹாபிழ் மௌலவி ஸஹ்ரான் (ஹஸனி)
5. அஷ்ஷைக் மஸ்ஊத் (ஸலபி)
6. அஷ்ஷைக் ஸஹீல் (நூரி)
7. அஷ்ஷைக் முஹியத்தீன் (இஸ்லாஹி)

கஹட்டோவிட வரலாற்றில் அனைத்து தஃவா அமைப்புக்களையும் பிரதிநிதிப்படுத்தும் ஆலிம்கள் இக்குழுவில் அங்கம் வகித்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.  இந்த அமைப்பானது ஹலாலுடன் முடிந்துவிடாது பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி ஊரில் சிறந்ததொரு பரம்பரையை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் ஆவலாகும். அல்லாஹ் இவர்களின் முயற்சிகளைக் கபூல் செய்து நற்பயன்களை நல்குவானாக!

(அதிர்ச்சி வீடியோ வெளியானது.. இன்று காலை மறுபடியும் சிங்கள பிக்குகள் மீது கடும் தாக்குதல் UPDATES

சென்னை ரயில் நிலையத்திலும்
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. சிங்களர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் தமிழ் அமைப்பினர் தமிழகத்தில் புத்தபிட்சுகளையும், சிங்களர்களையும் பார்த்தால் விரட்டி அடிக்கிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தஞ்சையில் 2 பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.


இந்த நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 19 பேர் டெல்லியில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். அவர்கள் வந்த ரெயில் காலை 7.30 மணி அளவில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்துக்கு வந்தது.



ரெயிலில் இருந்து இறங்கி அனைவரும் நடந்து வந்தனர். அப்போது காவி உடையுடன் புத்த துறவிகளான என்.கே. பண்டாரா (70), வங்கிசா (40) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் திடீரென்று 3 பேர் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்தனர். கால்களாலும் எட்டி உதைத்தனர்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத புத்த துறவிகள் இருவரும் தப்பித்து ஓடினார்கள். ஆனாலும் விடாமல் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். இந்த சம்பவம் நடந்த போது ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் 3 வாலிபர்கள் தைரியத்துடன் நடத்திய திடீர் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர். புத்த துறவிகளுடன் வந்த மற்ற 17 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் தான்.

அவர்கள் சாதாரண உடையில் இருந்ததால் அடிவாங்காமல் தப்பினார்கள். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பொன்ராமு, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் தாக்குதலை நடத்திய 3 வாலிபர்களும் தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த இருவரையும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்தனர்.

ஆனால் இருவரும் பயந்து ஆஸ்பத்திரி செல்ல மறுத்துவிட்டனர். பத்திரமாக எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் கொண்டு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். இதையடுத்து 19 பேரையும் போலீசார் ஒரு வேனில் பத்திரமாக எழும்பூர் புத்த மடத்துக்கு அழைத்து சென்றார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தை தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் படம் எடுத்து இருந்தார்.

அவரையும், நிருபரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது தாக்குதல் நடத்தப் போவது பற்றி போனில் வந்த தகவல் அடிப்படையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் தனியாக பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் முகம் அதில் தெளிவாக தெரிந்தது.

அந்த படத்தின் மூலம் தாக்குதல் நடத்தியது யார்? என்று போலீசார் அடையாளம் பார்த்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் ரெயில் நிலையத்துக்கு சென்று விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த புத்த துறவிகள் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் 3 பேர் திடீரென்று தாக்கியதாகவும், அவர்கள் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் ஆரம்பம்? : நாவலயில் சம்பவம்


நாவல, வலாவ்வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சிங்கள ரவாய அமைப்பைச் சேர்ந்த பிக்குகளும் அவர்களோடு இணைந்த குண்டர்களும் குறித்த வீடு மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் மத பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறியே வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் குழுவினர் அவ் வீட்டுரிமையாளரின் மனைவியை அவர்களது பிள்ளையின் முன்னிலையில் தாக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கமெராவில் பதிவாகியுள்ளது.

இவ் வீட்டில் பௌத்த சிலைகளுடன் ஏனைய மதங்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் படங்களும் அருகருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

அங்கிருந்து புத்தர் சிலையை அகற்றுமாறு ஒரு பிக்கு குண்டர்களுக்கு உத்தரவிட்டதாகவும் மற்றொரு பிக்கு அவ்வீட்டிலிருந்த பைபிளை வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிசார் இரு தரப்பினரையும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தமது வீட்டுக்கு வந்த குண்டர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை களவாடிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டையில் மாணவிகளின் ஹிஜாப்பை களையுமாறு இனவாதிகளால் நிர்ப்பந்தம்


கொழும்பு கோட்டையில் மாணவிகளின் ஹிஜாப்பை களையுமாறு இனவாதிகளால் நிர்ப்பந்தம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து நான்கு முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப்பை களையுமாறு இனவாதிகளால் இன்று நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

நிலைமை மோசமடைவதை கண்ட சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை சகோதரர்களின் தலையீட்டினால் நிலைமை சுமூகநிலைக்கு கொண்டுவரப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். நாட்டில் தொடர்ந்தும் இவ்வாரான சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்துவருகின்றமை முஸ்லிம் பெண்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹலால் சான்றிதழ் இடைநிறுத்தம்? .



ஹலால் சான்றிதழ் வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.


சகல தரப்பினரின் இனக்கப்பாட்டுடனேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது சம்பந்தமான தரப்பினருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பின்னரே இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதத்தலைவர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள், முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் ஜம்இயத்துலமா முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தைக்கு விற்பனை செய்வதற்காக ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் நிறைவடையும் வரையிலும் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இதற்கு பின்னர் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்விதமான கட்டணங்களும் அறவிடாமல் விநியோகிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹலால் சான்றிதழுடன் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் பொதுபலசேன அமைப்பினர் கடந்த காலங்களில் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

போப்பாண்டவர் ஆவார் 16 ம் பெனடிக் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளாரா??



ஒய்வு பெற்ற போப்பான்டவர் Pope Benedict XVI இஸ்லாத்தை தழுவியதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 
 
சமகாலமாக இஸ்லாத்தின் வலர்சியை பற்றியும் பெறுமிதமாகவும் . முஸ்லீம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தும் குரல் கொடுத்த வத்திக்கான...ின் மிகப் பெரும் போப்பாண்டவர் ஆவார். இவர் சமகாலமாக குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்கும் பலக்கம் உல்லவராகவும் இருந்து வந்துல்லார், தத்சமயம் தனக்கு உடல் பலகீனம் மற்றும் வயதைகாரணமாக காட்டி வத்திக்காண் தேவாலயத்தின் தலைமையில் இருந்து தானாக விலகிக் கொல்வதாக அறிவித்து ,2013-02-28,யில் பரிபூர்வமாக விலகிக் கொல்கிண்ரார். இதில் மிகப் பெறும் உண்மை ஓன்று மறைந்து இருப்பதாக தகவல் வெலிவருகின்ரது. போப்பான்டவர் இஸ்லாத்தில் தன்னை பரிபூர்வமாக இனைந்து கொண்டுல்லதாக தகவல் வெலியாகின்ரது. இதனை பகிரங்கமாக அறிவிப்பதில் இவருக்கு பலவிதத்திலும் ஆபத்தாக இருப்பதால் மரைமுகமாக தன்னை இஸ்லாத்தின் பால் இனைத்துக் கொண்டுல்லார். இனிமேல்தான் உண்மை நிலைமையை ஆராயவேண்டும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=m58ILXAJuw8

ஜம்ய்யதுல் உமலாவின் முடிவுகளை மதிப்பதே நமது தற்போதைய தேவையாகும். -மௌலவி அர்கம்-




நாட்டின் இன்றைய நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் இச்சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும் கடந்த 02.03.2013 சனியன்று கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் ஒரு உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வுரையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய செயற்குழு உறுப்பனரும் தென்ஆபிரக்கா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சரீஆத்துறையல் கல்வி கற்றவருமாகிய மௌலவி அர்கம் அவர்கள் நிக்ழ்த்தினார்.

நாட்டில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக முடக்கி விடப்பட்டிருக்கும் சதித்திட்டங்கள் இஸ்லாத்திற்கு ஒன்றும் புதிய விடயமல்ல என்றும் அன்றைய ஸஹாபாக்கள் காலம் தொட்டு இந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் எம்மவர்களிற்கு மத்தியில் உள்ள பிளவுகள் இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களுக்கு வாய்ப்புக்களாக அமைவதாகவும் இயக்கங்களிற்கு இடையிலான பொறாமை உணர்வுகளும் போட்டிகளும் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளமையும் எமது எதிரிகளுக்கு தமது சதித்திட்டங்களை அரங்கேற்ற ஏதுவாகின என்றும் தெரிவித்தார்.

மேலும் எமக்கிடையில் ஏற்படும் மார்க்க ரீதியான பிரச்சினைகளை பொலிஸாரிடம் எடுத்துச்சென்று மார்க்கத்தை அவர்கள் கீழ்த்தரமாக பேசும் நிலைமைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டிக் கொண்டார். இவ்வாறான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை இரு தரப்பு உலமாக்களையும் கொண்டு நமக்குள்ளே பேசித்தீர்ப்பதே காலத்தின் தேவை என்பதையும் வழியுறுத்தியதுடன் இயக்கங்கள் விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தண்மையுடனும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த ஒரு இயக்கமும் தீவிரத்துடன் நடந்துகொள்வதை தவிர்ந்து கொள்ளல் வேணடும் என்றும் கூறினார்.

மேலும் தற்போது இலங்கை முஸ்லிம் உம்மத் ஜம்இய்யதுல் உலாவுடன் கைகோர்த்து அவர்களிற்கு உதவி செய்வதே இப்பிரச்சினைகளை வெற்றிகரமாக முகங்கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார். ஜம்இய்யதுல் உலமாவுடன் உள்ள கருத்து முரண்பாடுகளைக் களைந்துவிட்டு நமது பொது எதிரியை ஒன்றாக எதிர்த்து வெற்றிபெற முன்வரவேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்தார்.

காலத்திற்கு ஏற்ற ஒரு உரையை ஏற்பாடு செய்த நூர் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மேலும் இந்நிகழ்வுக்கு இணைப்பாக இருந்த ஜம்இய்யாவின் ஹலால் பிரிவின் செயலாளர் மௌலவி முர்சித் மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் நற்பாக்கியங்களை நல்குவானாக!

"இன்றைய சூழலும் நமது கடமைகளும்" விஷேட சொற்பொழிவு



இன்றைய சூழலும் நமது கடமைகளும் என்ற கருப்பொறுளில் விஷேட சொற்பொழிவென்று மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  இன்று மாலை (02.03.2013) சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெரவிருக்ககும் சொற்பொழிவை மௌலவி அஷ்செய்க் அர்க்கம் நூர்ஹாமித் (Dharul Uloom Islamiya, - Capetown, South Africa )  அவர்கள் நிகழ்த்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் பிரிவின் செயலாளர் அஷ்ஷைக் முர்ஷித் மௌலவி அவர்களின் உதவியோடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.




வவுனியா பள்ளிவாசலில் இரு தரப்பினரிடையே முறுகல்; பொலிஸார் குவிப்பு .

வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று பிற்பகல் இரு சாராருக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினால் குழப்பமான சூழல் வவுனியா நகர்ப்பகுதியில் ஏற்பட்டது.


வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற இருந்த நிலையில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினை சேர்ந்தோர் இதில் பங்கு பற்றியிருந்தனர். இதன்போது புதிய நிர்வாகிகள் தெரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு முறையில் ஏற்பட்ட குழப்பமான சூழலே இம்முரண்பாட்டுக்கு காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் ஒரு அங்கத்தவர் ஒரு வாக்கே அளிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. இருப்பினும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணி;ப்பாளரினால் ஒருவர் 15 வாக்குகள் அளிக்கலாம் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணிப்பாளரின் இந்த தீர்மானத்துக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.வி.அருணகிரிநாதன் ஊடாக புதிய நிர்வாகத்தெரிவை நிறுத்த அனுமதி கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த வவுனியா நீதிவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா, எதிர்வரும் 14ஆம் திகதிவரை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத்தெரிவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் பின்னரே வவுனியா பள்ளிவாசலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணக்களத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் அவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாட்டினையும் செய்துள்ளனர். இந்நிலையில் வவுனியா பொரிய பள்ளிவாசலின் முன்னாள் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பள்ளிவாசலின் தற்போதைய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது பள்ளிவாசலில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் பள்ளியுடன் தொடர்பில்லாத வேறு பிரதேசத்தவர்களே முரண்பட்டுக் கொண்டனர் எனவும் தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பில் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை




tamil mirror website: