(அதிர்ச்சி வீடியோ வெளியானது.. இன்று காலை மறுபடியும் சிங்கள பிக்குகள் மீது கடும் தாக்குதல் UPDATES
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. சிங்களர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் தமிழ் அமைப்பினர் தமிழகத்தில் புத்தபிட்சுகளையும், சிங்களர்களையும் பார்த்தால் விரட்டி அடிக்கிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தஞ்சையில் 2 பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 19 பேர் டெல்லியில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். அவர்கள் வந்த ரெயில் காலை 7.30 மணி அளவில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்துக்கு வந்தது.
ரெயிலில் இருந்து இறங்கி அனைவரும் நடந்து வந்தனர். அப்போது காவி உடையுடன் புத்த துறவிகளான என்.கே. பண்டாரா (70), வங்கிசா (40) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் திடீரென்று 3 பேர் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்தனர். கால்களாலும் எட்டி உதைத்தனர்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத புத்த துறவிகள் இருவரும் தப்பித்து ஓடினார்கள். ஆனாலும் விடாமல் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். இந்த சம்பவம் நடந்த போது ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் 3 வாலிபர்கள் தைரியத்துடன் நடத்திய திடீர் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர். புத்த துறவிகளுடன் வந்த மற்ற 17 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் தான்.
அவர்கள் சாதாரண உடையில் இருந்ததால் அடிவாங்காமல் தப்பினார்கள். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பொன்ராமு, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் தாக்குதலை நடத்திய 3 வாலிபர்களும் தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த இருவரையும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்தனர்.
ஆனால் இருவரும் பயந்து ஆஸ்பத்திரி செல்ல மறுத்துவிட்டனர். பத்திரமாக எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் கொண்டு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். இதையடுத்து 19 பேரையும் போலீசார் ஒரு வேனில் பத்திரமாக எழும்பூர் புத்த மடத்துக்கு அழைத்து சென்றார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தை தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் படம் எடுத்து இருந்தார்.
அவரையும், நிருபரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது தாக்குதல் நடத்தப் போவது பற்றி போனில் வந்த தகவல் அடிப்படையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் தனியாக பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் முகம் அதில் தெளிவாக தெரிந்தது.
அந்த படத்தின் மூலம் தாக்குதல் நடத்தியது யார்? என்று போலீசார் அடையாளம் பார்த்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் ரெயில் நிலையத்துக்கு சென்று விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த புத்த துறவிகள் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் 3 பேர் திடீரென்று தாக்கியதாகவும், அவர்கள் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment