கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களின் இக்காலத்துக்கு அவசியமான கருத்துக்கள்.

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு  நாம் காட்டிய இஸ்லாம் பற்றிய படத்தின் சரியான முகம் காட்டப்படவில்லை. இத்தவறே இன்றைய இலங்கையின் அசாதாரணச் சூழ் நிலைக்குக் காரணமாகும்  என்று அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளைக் கிளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒழுங்கு செய்த 'இலங்கையின் இன்றைய அசாதாரண சூழ் நிலை' என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இஸ்லாம் என்பது ஒரு பெரிய கோட்டை. தேவையானவர்கள் அதனுள் பிரவேசிக்க முடியும். சிலர் பிறப்பால் அதனுள் பிரவேசித்துள்ளனர். இன்னும் சிலர் தமக்குத் தெரிந்த கதவுகளால் ஏதோ ஒரு வகையில் உற்பிரவேசித்துள்ளனர். இன்னும் அனேகருக்கு கதவு எங்குள்ளது எப்படி பிரவேசிப்பது ஏன் பிரவேசிக்க வேண்டும் என்ற எதுவும் தெரியாது. இவர்களுக்கு நாம் என்ன படத்தை காட்டியுள்ளோமோ அதுமட்டும்தான் அந்நியவர்களுக்குத் தெரியும். உதாரணமாக இன்று பாடசாலைகள் முதல் சாதாரண வீதிகள் வரை, சில இடங்களில் அதற்கும் அப்பாலும்  பர்தாவைக் காண்கிறோம். அப்படியாயின் பர்தா அணிவதுதான் இஸ்லாம் என்று அந்நிய ஒருவன் கணிக்கலாம். இதேபோல் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மாவிற்கு மட்டும் நாம் ஒழுங்காகப் போய் வந்து ஏனையவற்றை கை விட்டு விட்டால் அந்நிய மகனுக்கு வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போவது மட்டும் தான் இஸ்லாம் என்பது போல் தெரிய வரும்.
ஷரீஆ சட்டத்தின்படி கொலை செய்தவனது கழுத்தை வெட்டி கொலை செய்வது  தான் ஷரிஆ என்ற படத்தைக் மட்டும் காட்டினால் அவன்  ஷரிஆ  சட்டம் எனும் போது கழுத்தை வெட்டிக் கொள்வது மட்டும் தான் என்பது அவனுக்குத் தெரிய வரும். இத்தண்டனையின் மறைந்துள்ள மறுபக்கத்தை நாம் காட்டாத வரை அத்தவறைத் திருத்த முடியாது. 
அதே நேரம் நாம் ஒப்பீட்டு ரீதியில் நிறைய நற்பணிகளை செய்துள்ளோம். அதேபோல் சில விடயங்களில் தவறிழைத்த இடங்களும் உண்டு. உதாரணமாக சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு பர்தா அணிந்த ஒரு பெண்ணை காண்பது மிக அரிது. தற்போது அப்படியல்லாத ஒரு முஸ்லிம் பெண்ணைக் காண்பதுதான் அரிது. அதேபோல் முன்னர் உழ்ஹிய்யா என்பது அருமை. இப்போது ஒரு சாதாரண குடிமகன் கூட சுமார் ஐயாரிரம் ரூபாவிலும் குறைந்த ஒரு தொகையைச் செலுத்தி ஒரு பங்காளனாக மாறிவிடுகிறான். முன்னர் ஹஜ் கடமை நிறைவேற்றியவர்கள் ஒரு கிராமத்தில் விரல் விட்டு எண்ணுமளவு தான் இருந்தனர். இன்று குடும்பம் குடும்பமாக ஹஜ் மட்டுமல்லா வருடத்திற்கு பலமுறை உம்ரா செய்கின்றனர். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவோர் எண்ணிக்கை கூடியதால் இன்று பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. முன்னர் ஸகாத் என்பது வெறும் சில்லரைகளால் மட்டுமே வழங்கப்படும். இன்று கூட்டு ஸகாத் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் எமது நல்ல பக்கம். அதேபோல் இன்னும் சில மறுபக்கங்களும் உண்டு.
உதாரணமாக சுற்றாடல் பாதிப்பு பற்றி குர்ஆன் நிறையக் குறிப்பிடுகிறது. அதேநேரம் இன்று சர்வதேச, தேசிய மட்டங்கள் முதல் சாதாரண அமைப்புக்கள் வரை சுற்றாடல் விழிப்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்புக் குழுக்கள் என்று இயங்கு கின்றன. அரசு சுற்றாடல் அமைச்சு ஒன்றையே நடத்துகிறது. எமது நிலை என்ன? ஒரு முஸ்லிம் கிராமத்தை பார்த்த பார்வையிலே அறிந்து கொள்ள முடியும். அழுக்குகளும் குப்பை மேடுகளும் நிறைந்த சேரிப்புறத் தோற்றத்தில் காணப்படக்கூடிய கிராமங்களாக இருக்கும். ஒரு புறம் இறைச்சிக் கடைகளும் அவற்றின் கழிவுகளும், காகம் நாய் போன்றவை அவற்றை  இழுத்துத் திரியும் அருவருப்பான சூழலைக் காணலாம். மறு புறமாக சிங்களக் கிராமங்களுக்குள் நுழைந்தால் பாரம்பரிய முறையில் அமைந்த மரங்களும் விவசாயப் பூமிகளும் தண்ணீர் போன்ற இயற்கை அருட்கொடைகளைப் பாதுகாத்து சுத்தமாக வைத்துள்ளதைக் காண்கிறோம்.
இங்கே இஸ்லாம் காட்டிய வழிமுறைகள் எம்மிடத்தில் உள்ளதா? ஈமானின் ஆகக் குறைந்த ஒருபடிதான் பாதையில் உள்ள ஒரு முள்ளை அகற்றுதல். நாம் பாதையையே ஆக்கிரமித்து விடுகின்றோம். வாகனங்களை நிறுத்தி அடுத்தவர் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளோம். இஸ்லாத்தைப்பற்றி அறியாதவன் என்ன நினைப்பான் . இதுதான் இஸ்லாம் என்று. தாம் வசிக்கும் ஊரை அசுத்தமாக வைத்திருப்பது அடுத்தவர் பிரயானம் செய்யும் போது தடையாக இருப்பது, பாதையை மறைத்து கட்டிடங்களால் ஆக்கிரமிப்பது இதுதான் இஸ்லாம் என்று அவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.
இதன் மறுபுரத்தைப் பார்ப்போம்...
இன்று கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொலை கொள்ளை, இலஞ்சம், ஊழல், மோசடி, ஏமாற்றுதல், மது, விபசாரம், சூது என்று எத்தனையோ தீய செயல்கள் பிறமதத்தவர்களிடம் மலிந்து காணப்படுகின்றன. அதுபற்றி எமக்கு எது வித கவலையும் இல்லை. அது அந்தச் சமூகம் தானே என்று கண்டும் காணாதவராக உள்ளோம். இதனை ஒழிக்க அவர்களுடன் இணைந்து நாம் ஏதாவது வேலைத்திட்டங்களை முன் எடுத்துள்ளோமா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படி அவர்களது விடயங்களிலும் நுழைந்து எமது பெருந் தன்மையைக் காட்டி அவர்களுக்கு அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இப்படியும் ஒன்று இருக்கிறதா எனத் தேடிப்பார்ர்ப்பார்கள். அதனையும் நாம் தவற விட்டுள்ளோம்.
அண்மையில் இடம் பெற்ற ஒரு  விடயத்தைப் பார்ப்போம். ஒலி மாசடைவதால் ஏற்படும தீங்குகள் பற்றியும் அதனை ஒழிப்பது பற்றியும் ஒரு செலமர்வு இடம் பெற்றது. இதன் நோக்கம் அதான் (பாங்கை)  பற்றிய சர்ச்சையாக இருக்கலாம். அதில் விஞ்ஞான ரீதில் தொழில் சார் நிபுணர்கள், பல்கழைக்கழக பேராசிரியர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அங்கு சுற்றாடல் மாசடைவதில் ஒலி மாசடைவது ஒரு பிரிவு எனக் காட்டப்பட்டது. ஒலி மாசடைதலுக்கான நியதிகள் வறையறை செய்யப்பட்டன. 
உதாரணமாக அதிர்வெண், அலைவடிவம் ஒலி அலையின் வீச்சம் போன்ற பல பௌதீக வியல் அம்சங்கள் வரையறுக்கப்பட்டன. நாம் பாங்கு ஒலியையும் அதற்கு ஏற்றவகையில் துறை சார் நிபுணர்களின் உதவியுடன் விஞ்ஞான ரீதியில் பகுத்தும் தொகுத்தும் கொடுத்தோம். சர்வதேச விதிகளுக்கு அமைய அவர்கள் அமைந்த அந்த நியதிகளுக்கு அதான் பொருந்த வில்லை. இதனால் ஒலி மாசடைதலுக்கு அதான் ஒருகாரணமல்ல என்று நிறுவப்பட்டது. இதை தவிர்ந்து அது எமது உரிமை. அல்லது எமது மார்க்கத்திலுள்ள முக்கிய விடயம் என நாம் வாதாடினால் இன்றைய சூழ்நிலையில் அதை ஏற்க முன்வர மாட்டார்கள். எனவே இது போல் நாம் காலத்திற்கு ஏற்ப எமது அணுகு முறைகள் அமையாவிட்டால் அவை காலத்தால் புறந்தள்ளப் படும்.
முஸ்லிம்கள் ஐந்து நேரமும் கட்டாயம் தொழ வேண்டும். அது ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும். அதனால் இன்ன விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனித குலத்திற்கு இந்தவகையில் நன்மைகள் ஏற்படுகின்ற. என்ற வகையில் நாம் அதகைக் காட்டி இருப்பின் பள்ளிகளில் அதிகரிப்பு யதார்த்தம் புரிந்திருக்கும். நாம் அது போன்ற விடயங்களில் சரியான படத்தைக் காட்ட வில்லை.
'றமழான் வந்தால் இரவு முழுதும் பிற சமூகத்திற்கு தூங்கமுடியாது. பெருநாள் வந்தால் (ஹஜ்) கண்ட இடமெல்லாம் மாடுவெட்டி அசிங்கப் படுத்தப்படும். வருடம் ஒரு முறை மக்கா சென்று ஏதாவது கடத்திற் கொண்டு வர முடியும், சேரிப் பகுதிகளில் வாழுமட முஸ்லிம்களால் சட்டவிரோத  நடவடிக்கைளில் தாராளமாக ஈடுபட முடியும்' 
என்ற படத்தை நாம் பிற சமூகத்திற்குக் காட்டி இருப்பின அவர்கள் அதைத்தான் இஸ்லாம் என எதிர் பார்ப்பர். இன்று நடப்பது அது தான். நாம் செய்யும் நல்ல விடயங்களில் கூட அதி லுள்ள நல்ல பக்கத்தை காட்டவில்லை. இது இப்படி இருக்க ஒரு சிலர் மேற்கொள்ளும் தீய செயலில் நல்ல பக்கத்திற்கே இடமில்லையே. 
இப்படியாக இஸ்லாம் என்ற அழகிய கோட்டையில் உள்ள எத்தனையோ கதவுகளை நாம் மூடிவிட்டு தவறான முகத்தைக் காட்டி வருவதும் இன்றைய அசாதாரண சுழ்நிலைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
நபிகளார் காலத்தில் பிரச்சின ஒன்று ஏற்பட்டால் நேரடியாக அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு நபியவர்கள் உயிருடன் இருந்தார்கள் நபியவர்களின் மறைவின் பின் எத்தனையோ கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அது அன்று மட்டுமல்ல இன்றும் உள்ளன. இதற்குப் பிறகும் அது ஏற்படும். இதற்கு இஸ்லாம் காட்டிய அழகிய வழி முறைகள் பல உண்டு. குறிப்பிட்ட கருத்து முரண்பாடுகளைக் கொண்ட தலைவர்கள் ஒன்றிணைந்து குர்ஆன் அதீஸ் அடிப்படையில் அதனை விவாதித்து ஒருகருத்து மட்டுமே ஆதாரத்துடன்  இருக்குமாயின்  அதனை ஏற்பது. இருகருத்துக்கள் இருக்குமாயின் இரண்டையும் ஏற்பது.  விரும்பியவர் செய்யலாம் மற்றவர் அதனை விட்டு விடலாம். இப்படி பல கருத்து இருக்ககுமாயின் அதனைப் பின்பற்றும் கூட்டத்தார் அதனைப் பின்பற்றலாம். அனுமதிக்கப்பட்ட அவற்றை மற்றவர் தடுக்கத் தேவையில்லை. தாம் அதனை மேற்கொள்ளாது இருக்க முடியும். 
இதனைத்தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அழகாக எடுத்துக்காட்டியுள்ளது. ஆதார பூர்வமான விடயங்களை ஒரு கூட்டத்தார் மேற்கொள்ளும் போது அதே விடயமாக கருத்து முரண்பாடு கொண்டோர் அதனை செய்யாது அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது. அடிப்படை விடயங்களில் எமக்கிடையே எதுவித முரண்பாடுகளும் கிடையாது. ஆனால் சின்ன விடயங்கள் சிலவற்றில் கருத்து முரண்பாடு உண்டு. உதாரணமாக தக்பீர் கட்டுவது. இது ஒரு சின்ன விடயம். ஆனால் அது பூதாகரமாக வெடித்து இரண்டு குழுக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது. பேதாமைக்கு பொலீஸ் நீதிமன்றம் எனச் சென்று விடுகிறது. 
இதேபோல் இன்னொரு இடத்திலும் ஒரு சின்ன விடயமத்திற்கு அடிதடி. இப்படி போலீஸ் திணைக்கள வருடாந்த அறிக்கையில் பட்டியல் இடும் போது பெயர் குறிப்பிடமுடியாத சில புதிய முறைப்பாடுகள் பதிவாகத் தொடங்கியுள்ளன. அதனை மார்க்கப் பிரச்சினை என எடுத்துக் கொண்டால் இப்போது முஸ்லீம்களுக்கு மத்தியில் மார்க்கச் சண்டை அதிகரித்து விட்டது என்ற புள்ளவிபரம் வெளியாக ஆரம்பித்து விட்டது.  இவர்கள் ஒரு சின்னப்பிரச்சினையைக் கையாளத் தெரியாத காட்டு மிராண்டிகளா? என  மற்ற சமூகம் நினைக்கிறார்கள். இப்போது சாதாரண பொலீஸ் திணைக்களம் என்ன நினைக்கிறது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த சமுதாயத்தில் இப்போது ஏதோ ஒரு புதுப் பிரச்சினை. இதற்குக் காரணம் முன்னர் இல்லாத வகையில் இன்று பர்தா அணியும் பெண்கள் அதிகரித்துள்ளரமயும், தொழுகின்ற ஒரு கூட்டம் அதிகரித் துள்ளமையும் பள்ளிகள் அதிகரதித்துக் கொண்டு போவதும் (பள்ளி கட்டும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போவதும்) பிச்சினை கூடுவதற்கும் தொடர்பு இருக்கிறது. எனவே இவர்கள் தீவிரவாதிகள். மற்றவர்கள் சம்பிரதாய முஸ்லிம் என்று கூறுபோட ஆரம்பித்து விட்டனர்.
எனவே சுருங்கக் கூறின் நாம் எதைக்காட்ட வேண்டுமோ அதனை மறந்து பிழையான ஒரு படத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதே அசாதாரண சூழ் நிலைக்குக் காரணமாகலாம் என்றார்.
இப்போது பிற இனத்தவர்களுடன் மிக அந்யோன்யமாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றார்கள். இது சரிதான். ஆனால் இதில் ஒரு அபாயமும் உண்டு. அந்நியவர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதுடன் எமது உடன் பிறப்புக்களுடனும் அதே விதமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடன் பிறப்புக்களையும், ஊரில் ஒன்றாய் வாழும் எமது சகோதரர்களையும் ஒதுக்கி விட்டு அந்நிய மதத்தவர்களை மட்டும் அரவனைக்க முற்படுவது எங்கு போய் முடியும் என்று கூற முடியாது என்றார்.
 (J.M.HAFEES MADAWALA BAZZAR)

0 comments:

Post a Comment