ஹர்த்தால் சொல்லும் செய்தி !!
எமது செய்தியாளர்கள்: கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய படங்கள் பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் வட மாகாணத்தில் யாழ். நகரப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரப் பகுதியிலும் ,ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு சக்திகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும் அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது.
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசஙகளில் வியாபார நிலையங்கள், சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.சில பகுதிகளில் பாடசாலைகள் இயங்கவில்லை. அரசாங்க காரியாலயங்களின் செயல்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. உள்ளுர் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்புகாளால் மக்கள் கோரப்பட்டபோதும் இன்று முஸ்லிம்கள் ஹர்த்தாலை கடைபிடிதுள்ளனர். என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கருத்திற்கொண்டு ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என சில முஸ்லிம் அமைப்புகள் இறுதி நேரத்தில் வேணடுகோள் விடுத்திருந்தன.
காத்தான்குடியிலும் நகர சபை தவிசாளர் மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனம் காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா ஆகியன ஹர்த்தால் கடைப்பிடிக்க வேண்டாம் என கூட்டாக வேண்டுகோளை விடுத்திருந்தது.
இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு ‘முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு’ அழைபொன்றை விடுத்திருந்தது எனினும் இதற்கான பிரசார நடவடிக்கைகள் பெரியளவில் மேற்கொள்ளப்படாத நிலையிலும் இந்த ஹர்த்தால் முஸ்லிம் பொது மக்களினால் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது .
இதேவேளை வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. கொழும்பு , கண்டி , மாத்தளை, குருநாகல், புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் வழமைபோன்று தமது வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை இன்று ஹர்த்தால் நாடத்தும் முஸ்லிம் கடைகளை நிரந்தரமாக முடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பொதுபலசேன எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ஹர்த்தாலை அனுஷ்டிக்கவேண்டாம் என்று அரச ஆளும் தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகளாலும் பிரதேசங்களின் சமூக தலைவர்களாலும் முஸ்லிம்கள் கோரப்பட்ட நிலையிலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் பொதுமக்களின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதுடன் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் அரசுக்கும் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம்கள் இதன் மூலமாக தெளிவாக கோரியுள்ளார்கள் என்று அவதானிகள் தெரிவித்தனர்.
(பி.எம்.எம்.ஏ.காதர். முஹமத் பர்ஹான் , ஆஸிக் அலி , சஹீத் அஹமட் , முபீன் , ஏ.அப்துல்லாஹ் , அஸ்லம் அலி)
0 comments:
Post a Comment