கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆஸாத் சாலியின் அதிரடி செவ்வி



என்னை கைது செய்து உள்ளே வைப்பதிலேயே அரசு குறியாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களையே தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கபடத் தனத்தில் அரசு ஈடுபட்டுள்ளது என்று கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் தற்போது தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராகவும்,முஸ்லிம் தமிழ் ஐக்கிய கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள அஸாத் சாலி தெரிவித்தார்.


அஸாத் சாலியை கைது செய்ய நேற்று எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நிலைமைகள் பற்றி ஜப்னா முஸ்லிம் அவரோடு தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்தும் இதுபற்றிக் கூறுகையில்,

நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்திருந்தால் இன்று கொழும்பு மாநகர மேயராக இருந்திருப்பேன் இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.சமூகத்துக்காகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு அளித்தேன்.ஆனால் இந்த அரசின் இனவாதப் போக்கை புரிந்து கொண்ட அடுத்த கனமே அதிலிருந்தும் வெளியேறினேன்.முஸ்லிம்களுக்கு விடிவு கிட்டும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி தமிழ் சமூகத்துக்கும் சேர்த்து துரோகம் இழைத்ததால் எனது மனச் சாட்சிக்கு விரோதமாக அங்கும் என்னால் இருக்க முடியவில்லை.

இப்போது தனியான ஒரு பாதையில் எல்லா சகோதர இனங்களையும் சேர்த்துக் கொண்டு புதிய அணியொன்றை உரிவாக்கியுள்ளேன்.இந்தப் புதிய அணிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாளுக்கு நாள் ஆதரவு திரண்ட வண்ணம் உள்ளது.இனவாத சிந்தனையற்ற பௌத்த மகாசங்கத்தினர் கூட எனது இந்த முயற்சிக்கு தமது பூரண ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.இதுவே அரசாங்கத்தை உறுத்தத் தொடங்கியுள்ளது.என்னை இலக்கு வைப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.

என்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் ஒன்றும் புதியவை அல்ல.ஆரம்பத்தில் ஒரு மனநோயாளியைக் கொண்டு எனக்கு எதிராக பெலிஸ் நிலையத்தில் புகார் செய்ய வைத்தார்கள். அவருக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நான் அவரை ஏமாற்றினேன் அவரிடம் இலஞ்சம் வாங்கினேன் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் விசாரணையை அவர்களே கிடப்பில் போட்டு விட்டார்கள்.

தற்போது நான் அரசின் இனவாத போக்கை கடுமையாகவும் வெளிப்படையாகவும் கண்டித்து வருவது உலகறிந்த விடயம், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுசரணையோடு செயற்படும் பொது பல சேனா அமைப்பை நேரடியாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகளுடன் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தோன்றி அவர்களின் மூக்கு உடைபட வழியமைத்துள்ளேன்.இவர்களுக்கு எதிரான பௌத்த மகா சங்கத்தினரையும்,அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்று திரட்டி ஒரே மேடையில் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கச் செய்துள்ளேன். கடந்த வாரம் மிக வெற்றிகரமாக கொழும்பில் இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளேன்.பொது பல சேனா இன்னும் இரண்டு மாத காலத்தில் மரணித்துவிடும் என்று மகாசங்கத்தினரே ஆரூடம் கூறியுள்ளனர்.

இப்படி அவர்களைப் பாதிக்கும் பல விடயங்களுக்கு நான் காரணமாக இருந்துள்ளேன் என்பதை எல்லோரும் நன்கு அறிவர்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் நான் இந்த நிகழ்வை நடத்துவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக என்னை கைது செய்து உள்ளே வைக்கும் ஒரு சதித் திட்டம் குறித்து அரச மேல்மட்டத்தால் ஆராயப்பட்டுள்ளது.இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான பிரதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்கென மூன்று திட்டங்களை இவர்கள் வகுத்துள்ளனர்.

ஒன்று என்னை கிழக்கு மாகாணத்துக்கு வரவழைத்து நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கவைத்து அங்கு ஒரு பெண்ணை அனுப்பி என்னை பாலியல் குற்றச்சாட்டொன்றில் சிக்கவைப்பது.

இரண்டாவது திட்டம் என்னுடைய வாகனத்தில் ஒரு நவீன ஆயுதத்தை எப்படியாவது போட்டுவிட்டு கள்ள ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி என்னை பொலிஸில் சிக்கவைப்பது.

மூன்றாவது திட்டம் யாராவது ஒரு சில நபர்களை ஒழுங்கு செய்து நான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக என்மீது பொலிஸில் புகார் செய்வது.

இந்தத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை செவ்வனே நிறைவேற்றுவது பற்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபல கேடி ஒருவருடன் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் விரிவாகப் பேசியுள்ளார். இதற்கென இந்த கேடியை பிரதி அமைச்சர் உள்ள இடத்துக்கு வரவழைக்க பத்தாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் துணையால் அவர்கள் திட்டம் தீட்டிய அடுத்த கனமே அது எனக்கு தெரிந்துவிட்டது. எனக்கு தெரிந்தது அவர்களுக்கும் தெரிந்து விட்டது.இதனால் எல்லாமே பிசுபிசுத்து விட்டது.

தற்போது கடந்தவாரம் எனக்கும் ஜனாதிபதியின் ஆலாசகர் ஹஸன் மௌலானாவுக்கும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகைக்குப் பின் பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மௌலானா பள்ளியில் வேலைக்கு வந்தவர் இப்போது அரசியல் செல்வாக்கில் நம்பிக்கையாளர் சபையில் இடம்பிடித்துள்ளார்.குறிப்பிட்ட தினம் ஜூம்ஆ பயானில் ஹலால் விவகாரம் தொடர்பாக உலமா சபையை காரசாரமாக சாடும் வகையில் பயான் இடம்பெற்றது.தொழுகை முடிந்ததும் நான் இதை வன்மையாகக் கண்டித்தேன்.இது பலர் முன்னிலையில் இடம்பெற்ற ஒரு சாதாரண விடயம்.அந்த இடத்தில் இருந்த எல்லோருமே எனக்கு ஆதரவாகவே பேசினர்.விடயம் அத்தோடு முடிந்து விட்டது.அப்படியே இது ஒரு பாரிய விடயமாக இருந்தாலும் அதை எமக்கிடையில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அல்லது கருவாக்காடு பொலிஸில் முறையிட்டு ஆகக் கூடியது அங்கிருந்து இணக்கச் சபைக்கு சென்றாவது தீர்த்துக் கொண்டிருக்கலாம்.

இந்த சாதாரண விடயத்துக்காக என்மீது ஒன்பது குற்றச்சாட்டுக்களை சமத்தி அதுவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஏன் முறையிட வேண்டும்?இங்குள்ள ஒரு பிரிவு பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்குவதாகவும் இவர்கள் தான் அரசியல் எதிரிகளை வட்டமிடுவதாகவும், இந்தப் பிரிவே எனது விடயத்தையும் கையாள்வதாகவும் கேள்விபட்டேன்.ஹஸன் மௌலானாவோடு எனது சட்டததரணிகளும் சமூகம் சார்ந்த சில உயர்மட்டப் பிரமுகர்களும் இது பற்றிப் பேசிய போது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தான் சிலரால் தூண்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்தே என்னைக் கைது செய்யும் நோக்கில் நேற்று எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் பொலிஸார் வந்துள்ளனர். முறைப்பாடுகளை வாபஸ் பெற்று இணக்கத்துக்கு வர தயார் என்று ஹஸன் மௌலானா கூறுகின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கத்துக்கு வர முடியாத வகையில் குற்றச்சாட்டை தாங்கள் உறுதியான சட்ட விதிகளின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும்,என்னைக் கைது செய்து நீமிமன்றத்தில் நிறுத்துவதே ஒரே வழியென்றும் பொலிஸார் எனது சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து எனது சட்டத்தரணிகள் பொலிஸாருடன் ஆலாசனை நடத்தி வருகின்றனர்.

-ஜப்னா முஸ்லிம் இணையம்-

0 comments:

Post a Comment