கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எரிகின்ற முஸ்லிம் பிரச்சினைக்குள் பாராளுமன்ற தெரிவுக்குழு எதற்கு?

ஐ.தே.க.வின் உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம்

(நேர்காணல்: ஸிராஜ் எம்.சாஜஹான்)


கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி...?


பதில்: எனது தந்தை வழியைப் பின்பற்றியே நான் அரசியலில் பிரவேசித்தேன். 1965களில் எனது தந்தை அகில இலங்கை முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளராகப் பணி புரிந்தார். அதன் தலைவராக அப்போது டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல் செயலாற்றி வந்தார். கொழும்பிலுள்ள லீக்கின் தலைமை அலுவலகத்துக்கு எனது தந்தை அடிக்கடி சென்று வந்தார். அதன் போதெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வார். அதன்போது முஸ்லிம் லீக்கின் பிரமுகர்களான அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி அங்கு வருகை தந்தனர். இவர்களுள் டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், எம்.எச்.முஹம்மத். பாக்கிர் மாக்கார், ஜாபிர் ஏ. காதர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் என்னோடு அவ்வப்போது அளவளாவினர். எனக்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எனது அரசியல் பிரவேசத்துக்கு இது ஒரு உந்து சக்தியாகவும் அமைந்திருந்தது.

கேள்வி: தந்தையின் அரசியல் வாழ்க்கை பற்றி...?

பதில்: எனது தந்தை முஸ்லிம் லீக்கில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் நெருங்கிப் பழகினார். எனது தந்தைக்கு மாவனல்லைத் தொகுதி அமைப்பாளர் பதவியையும் வழங்கினார். எனினும் தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட போது முஸ்லிம் என்பதால் அவருக்கு வழங்கக்கூடாதென சிங்கள மக்கள் சிலர் ஸ்ரீகொத்தவுக்குச் சென்று தலைமைத்துவத்தை வற்புறுத்தினர். இதனால் எனது தந்தைக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. உங்களை தேர்தலில் நிறுத்துவதை இனவாதமாகப் பார்க்கின்றார்கள். என்ன செய்ய என டட்லி சேனாநாயக்க தந்தையிடம் கூறியபோது எனக்குப் பதவிகள் முக்கியமல்ல. மக்கள் பணியே முக்கியமென தெரிவித்தார். 1991 இல் சீ.ஆர்.பெலகம்மன (பாராளுமன்ற உறுப்பினர்) இறந்த போது அந்த இடத்துக்குப் பாராளுமன்ற உறுப்பினராக எனது தந்தையை நியமிக்க ஜே.ஆர். ஜெயவர்த்தன முயற்சி மேற்கொண்டார். அதனை எனது தந்தை விரும்பவில்லை.

கேள்வி: உங்கள் அரசியல் பிரவேசத்துக்கு இனவாதம் தடையாக இருக்கவில்லையா?

பதில்: இல்லை, எனது தந்தை இனவாதிகளால் பழிவாங்கப்பட்டார். இது என்னுள் வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்படியும் அரசியலில் பிரவேசித்து எனது தந்தைக்குக் கிடைக்காத பதவிகளைப் பெற வேண்டுமென கங்கணம் கட்டினேன். அதில் வெற்றியும் கண்டேன். 1994 இல் மாவனல்லைத் தொகுதியின் அமைப்பாளராகி கேகாலை மாவட்ட வேட்பாளராக களமிறங்கினேன். அப்போது இனவாதம் தலை தூக்கவில்லை. எனது சிங்கள பௌத்தர்களுக்கும் அதிக உதவி செய்தார். அவர்களது சுக, துக்கங்களில் பங்கேற்றார். இதனால் பௌத்தர்கள் மத்தியில் அவருக்கு மிகப் பெரும் மரியாதையும், பாதிப்பும் இருந்தது. இதனால் நான் தேர்தலில் போட்டியிட்ட போது பௌத்த மக்கள் அதனை எதிர்க்கவில்லை. இனவாதமாக நோக்கவும் இல்லை. என்னை கேகாலையின் புத்திரன் என்றே அவர்கள் அழைத்தார்கள். அதனால் 94 தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றம் செல்லவும் முடிந்தது.. கேகாலையில் அதிக விருப்பு வாக்குகளுடன் முதலிடத்துக்குத் தெரிவானேன். பௌத்தர்களே எனக்கு அதிகம் வாக்களித்திருந்தனர்.

கேள்வி: ஐ.தே.கவின் தற்போதைய நிலை பற்றி...?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இப்போது பலம் குன்றியிருக்கிறது. ஏற்றுக் கொள்கிறோம். எனினும் பெரும் கட்சி ஐ.தே.கவே. கடந்த சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது ஐ.தே.க 35 வீத வாக்குகளைப் பெற்றது. ஐ.தே.கவுக்குள் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த காலப்பகுதிக்குள் கட்சியின் வாக்குப் பலம் பெருமளவில் சரியவில்லை என்பதை இது காட்டுகிறது. இந்த நிலையில் ஐ.தே.கவுக்குள் உள்ள முரண்பாடுகள் காணப்பட்டு திட்டமிட்ட முறையில் எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல்களின் போது இந்த அரசை வீழ்த்தும் வாய்ப்புக் கிட்டும்.

கேள்வி: ஐ.தே.கவுக்குள் பிரச்சினை உள்ளதே?

பதில்: ஆம், இல்லையென்று சொல்ல மாட்டேன். ரணில் விக்கிரமசிங்க 6 வருட காலத்துக்குள் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை தலைவராக எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் சீர்திருத்தங்களை விரும்புவோர் கூட ஐ.தே.கவிலேயே இருக்கிறார்கள். கருஜயசூரிய மற்றும் ஏனையோரும் ஐ.தே.கவிலேயே உள்ளனர். பிரதித் தலைவர் தொடர்பில் பிரச்சினை உள்ளது. பெரும்பாலும் சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவராக நியமிக்கப்படுவார் என நம்புகின்றேன். அடுத்த வாரமளவில் இந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றுவிடும். அதன் பின் இரண்டு தலைவர்களும், ஏனையோரையும் ஒன்றினைத்துக் கொண்டு ஐ.தே.கவுக்கு பலம் சேர்க்கும் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

கேள்வி: சஜித்துக்கு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டுமா?

பதில்: ஆம், தலைவரும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். சஜித் பிரேமதாஸவுக்கும் தலைவருக்கும் இடையில் பெருமளவில் பிரச்சினைகள் எதுவுமில்லை. பிரச்சினைகளை ஒரு சிலர் பெரிதுபடுத்த முயற்சிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் சஜித்துக்கு முக்கிய பதவி ஐ.தே.கவுக்குள் வழங்கப்பட வேண்டுமென்பதில் அதிகமானோர் உறுதியாகவுள்ளனர். அண்மையில் வரக் காப்பொலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ரணிலும் சஜித்தும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். அவர்களுக்குள் பிரச்சினை இல்லையென்பதே இது காட்டுகிறது.

கேள்வி: பொது எதிர்கட்சியில் பிளவேற்பட்டுள்ளதா?

பதில்: இல்லை, ஒரு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எமது கட்சியின் கொள்கைகளை மக்களின் அவசியம் கருதி மாற்ற முடியும். லிபரல் வாதம் பற்றி தற்போதைய அரசு அப்போது அலட்டிக் கொண்டது. ஐ.தே.க மீது குற்றச்சா ட்டுக்களை அடுக்கியது. இன்று மஹிந்த சிந்தனையைப் பாருங்கள். அது லிபரல் வாதத்தையும் தாண்டி அப்பால் சென்றுள்ளதாக உள்ளதனைக் காண்கின்றோம். எமது கொள்கைகள் தெளிவானது. எவருக்கும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும். ஜே.வி.பி மற்றும் இடதுசா ரிக் கட்சிகளோடு எம்மைச் சேர்த்துக் கொள்ளலாம். அதற் காக அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பொது எதிரியான தற்போதைய அரசை வீழ்த்துவதற்கு நாம் ஒன்று சேர வேண்டும்.

கேள்வி: தலைவர் ரணில் சகல கட்சிகளையும் அழைப்பாரா?

பதில்: ஆம், இந்த நாட்டின் ஜனநாயகத்துக்காகப் பாடுபடும் அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுப்பார். ஐ.தே.க வின் கொள்கைகள் அனைவருக்கும் பொருத்தமானது. பொது எதிர்கட்சியொன்றில் அனைத் துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தற்போதைய அரசை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்புக்களையும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

கேள்வி: யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது பற்றி....?
பதில்: தற்போதைய அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததது. அதற்காக இந்த அரசை நாம் பாராட்ட வேண்டும். ஐ.தே.கவும் யுத்தத்தை வெல்வதற்கான எத்தனிப்புக்களைச் செய்தது. எனினும் அது நிறைவேறவில்லை.
கேள்வி: யுத்தத்தின் பின் நாட்டு மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டதா?
பதில் : இல்லை, யுத்தம் நிறைவு பெற்றதும் சகல மக்களும் நிம்மதியாக வாழும் சூழ்நிலையொன்றினைத் தோற்றுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதம் இலங்கையில் இல்லை என்றார். இன்று தமிழ், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெரும்பான்மையினரின் கரங்கள் பலப்படுத்தப்படுகின்றன. தென்னாபிரிக்காவின் கறுப்பினர்களின் உரிமைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அந்த நாட்டில் வர்க்க பேதம் நிறைவு பெற்றதன் பின் சகலருக்கும் முன் மாதிரியாகச் செயற்பட்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொண்டாட வெற்றிவிழா எடுக்குமாறு பலர் நெல்சன் மண்டேலாவினைக் கேட்டனர்.

எனினும் நெல்சன் மண்டேலா இதனை ஏற்கவில்லை. தென்னாபிரிக்காவிலுள்ள இரு பிரிவினருக்கிடையே போராட்டம் வெடித்திருந்தது. இதில் கறுப்பினர்கள் வெற்றியீட்டினார்கள். அதாவது, வெள்ளையர்கள் வசமிருந்ததை கறுப்பர்கள் தட்டிக் கொண்டார்கள். இந்த நாட்டின் ஒரு பிரிவினர் அதிகாரத்தினை இழந்திருக்கின்றார்கள். எமது நாட்டின் ஒரு பிரிவினர் வெற்றியீட்டி மற்றொரு பிரிவினர் தோல்வியடைந்திருக்கும் வெற்றி விழா எதற்காக என மண்டேலா கேள்வியெழுப்பினர். பாருங்கள் எமது நாட்டு ஜனாதிபதி இந்த முன்மாதிரியைக் கைக்கொண்டாரா? அதுதான் இல்லை. இந்த நாட்டிலும் ஒரு இனம் தோல்வியடைய மற்றொரு பிரிவினர் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஆனால் பெரும்பணச் செலவில் வெற்றி விழாவினைக் கொண்டாடுகிறது எமது அரசு.

கேள்வி : 13வது அரசியலமைப்பு நீக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா?

பதில்: 13வது அரசியலமைப்பு இந்தியா இலங்கைக்குத் திணித்தது என ஒரு சிலர் குற்றஞ்சா ட்டுகிறார்கள். எனினும் இந்த அரசியலமைப்பு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தது. அவர்களது நலன்கள் பேணும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. 13ஐ அகற்றுவது சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு கைவைப்பதாகவே அமையும். உரிமைகளை வென்றெடுப்பதற்கான இறுதி ஆயுதத்தையும் பறிகொடுக்க வேண்டிய நிலை சிறு பான்மையினருக்கு ஏற்படும். எனவே, 13ஐ அகற்றுவது அநீதியானது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

கேள்வி: 19ஆவது அரசியலமைப்பினை கொண்டு வர முயற்சி நடக்கிறதே?

பதில்: அவ்வாறு கேள்விப்பட்டேன். 13ஐ விட 19 நல்லதாக இருந்தால் ஐ.தே.க அதற்கு ஆதரவு வழங்கும். எனினும் 18ஐப் போன்று சிறுபான்மையினரின் மறுக்கப்படும் அரசியலமைப்பாக இருந்தால் ஐ.தே.க அதனை எதிர்க்கும்.

கேள்வி: முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதே?

பதில்: ஆம், முஸ்லிம்களுக்கெதிராக சகல மட்டத்திலும் நெருக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுபலசேனா, ஹெல உறுமய உட்பட பல்வேறு குழுக்கள் முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துள்ளனர். நிலைமை மிக மோஷமான கட்டத்தினை எட்டியுள்ளது. ஐ.தே.கட்சி இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, தயாளினி ஜயசேகர ஆகியோர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இன ரீதியான செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். இனவாதிகளின் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும், அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேள்வி: ஐ.தே.க. தலைவர் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்?

பதில்: தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருகிறார். பௌத்த தேரர்கள் ஏனைய பிரமுகர்களுடன் இது தொடர்பாக அவர் அடிக்கடி ஆலோசனைகளை நடாத்தி வருகிறார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அறிக்கைகளைக் கோரியிருக்கிறார். இந்த வார நடுப்பகுதியில் அவர் பாராளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றினையும் விடுக்கவுள்ளார்.

கேள்வி: அரசாங்கம் இனவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதா?

பதில் : இது சம்பந்தமான தகவல்கள் எனக்கு இதுவரை சரியாகத் தெரியவில்லை. என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்களின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தாததை நோக்கும் போது அரசு ஆதரவு வழங்குகின்றதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க தற்போதைய அரசாங்கத்துக்கு ஏன் இந்த இனவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் நினைத்திருந்தால் இதனைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். எனினும் இனவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

கேள்வி: முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது பற்றி...?
பதில்: முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். நல்ல விடயம். என்றாலும் அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற முடிவோடு வெளியே வந்துள்ளனர். முஸ்லிம்களின் எரியும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு எதற்கு? எமது பிரச்சினைகளையெல்லாம் வெளியே கொண்டு வந்து விசாரிப்பதற்கே தெரிவுக்குழு அமைக்கப் போகிறார்கள். எமது முஸ்லிம் அமைச்சர்கள் இதற்கு தலையசைத்திருக்கிறார்கள். உருப்படியான எதையும் அவர்களால் செய்ய முடியாதுள்ளது.

கேள்வி : தெரிவுக் குழுவால் எமக்கு எதுவும் நல்லது நடக்குமா?

பதில்: இந்த அரசு அமைக்கும் தெரிவுக்குழுக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியுமே. சொல்லத் தேவையில்லை. பிரதம நீதியரசர் மீது விசாரணை நடாத்த தெரிவுக்குழு நிறுவினார்கள். தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக அமைந்திருந் தது. இதேபோன்று முஸ்லிம் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்வார்கள். தீர்ப்பினை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாக வழங்குவார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: ஹலால் பிரச்சினை பற்றி?

பதில்: ஹலால் பிரச்சினை மிகப் பெரியளவில் இனவாதிகளால் பேசப்படுகிறது. ஹலால் உணவு அவர்களுக்கு தேவையில்லாவிட்டால் விட்டுவிடவேண்டியதுதானே. முஸ்லிம்கள் ஹலால் உணவையே சாப்பிடவேண்டும். இதனைத் தடுக்க யாருக்கும் முடியாது. ஹலால் என்பது சர்வதேசம் ஏற்றுக் கொண்ட வர்த்தக நடைமுறையாகும். இதனால் இலங்கைக்கு சர்வ தேசத்தில் மிகச் சிறந்த சந்தை வாய்ப்புள்ளது. எமது நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் இதனால் பெரிதும் நன்மை யடைந்துள்ளார்கள். இதனை நிறுத்தினால் எமது நாட்டு பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
கேள்வி: முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கச் சொல்லுகிறார்களே?
பதில்: முஸ்லிம்களின் வர்த்தகத்தினை அழிக்கும் செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. நோலிமிட் நிறுவனத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்கள். இனவாதிகளின் இந்த செயற்பாடுகள் நிறுத்தாவிடின் எமது பொருளாதாரம் மிக மேஷமாகப் பாதிக்கப்படும். இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாம் இந்த நாட்டுப் பிள்ளைகள். எமது வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. எமது முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு இனவாதிகளின் செயற்பாடுகளை வெற்றி கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment