கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பெருநாள் எப்படி?

ரமழான் பற்றிய பேசும் ஸுரதுல் பகராவின் 185 வது வசனத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். “நீங்கள் (ரமழான் மாதத்தைக் கணக்கிட்டு நோன்பின்) எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும். மேலும் (இந்த மாதத்தில் குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகன்) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்க வேண்டும். நீங்கள் நன்றியுள்ளவர்களாக மாறலாம்.”


குர்ஆனை இறக்கியருளி நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் பொருட்டு, அவனது நாமத்தை தக்பீராக முழங்கி கொண்டாட வேண்டிய நாள்தான் நோன்பு பெருநாள் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சுலோகம்தான் தக்பீர் - அல்லாஹு அக்பர்!

பெருநாள், மகிழ்ச்சியின் நாளாகும் . அன்றைய மகிழ்ச்சி, புத்தாடை அணிகிறோம், அறுசுவை உண்டு சுவைக்கிறோம் என்பது மட்டுமல்ல.

உலகில் நாம் வாழ வேண்டிய வழியை அல்லாஹ் எமக்கு காட்டிவிட்டான் என்பதே பெருநாளின் மகிழ்ச்சியாகும்.

முஸ்லிம்கள் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக அழகியதொரு வழிமுறையை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

பெருநாள் தினம் சுபஹ் தொழுகைக்கு முன்பே முஸ்லிம்கள் தமது பெருநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராக வேண்டும். குளிப்பு, புத்தாடை, நறுமணம் என்பவற்றோடு சுபஹ் தொழுகைக்காக செல்லும் முஸ்லிம்கள் சுபஹை முடித்துக் கொண்டு ஒரு திறந்த வெளியில் ஒன்று கூடுவார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் இந்த ஒன்று கூடலில் பங்கேற்பார்கள். மாதவிலக்கு காரணமாக தொழு முடியாதிருக்கும் பெண்களாக இருப்பினும் கூட இந்தப் பெருநாள் ஒன்று கூடலில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடாது. ஆண்கள் முன்வரிசையிலும், சிறுவர்கள் அதற்குப் பின்னாலும், பெண்கள் பின் வரிசையிலும் அணிவகுத்து நிற்பார்கள்.

சுபஹ் தொழுகை முடிந்ததும் சூரிய உதயம் கழித்து, அடிவானில் சூரியன் ஒரு ஈட்டியளவு உயரும் வரை அந்த வெளியில் அனைவரும் காத்து நிற்பார்கள். பெருநாள் தொழுகை ஆரம்பமாகும். இந்த நேரம் வரை தக்பீர் முழக்கத்தால் தங்களது மகிழ்ச்சி பிரவாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு திறந்த வெளியில் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி உயரும் இந்த தக்பீர் மூலமாகத்தான் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி அருளப்பட்ட குர்ஆனுக்காக முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

அந்த நன்றி முழக்கத்தோடு பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. பின்னர் ரமழானின் பரிசாகிய ஹிதாயத்தை பெற்றுக்கொண்டு ரமழானை வழியனுப்பும் ஒரு பேருரை பெருநாளுரையாக நிகழ்த்தப்படுகிறது. அது சடங்குக்காக நிகழ்த்தப்படும் உரையல்ல. ரமழானை முடித்துக்கொண்ட முஸ்லிம் உம்மத்தின் அடுத்த 11 மாதகாலத்திற்க்கான பிரகடன உரையாகும்.

அந்த உரையோடு விண்ணினதும் மண்ணினதும் இரட்சகனுக்கு கூறிய முஸ்லிம்கள் முஸாஹபாவும், முஆனகாவும் செய்து ஒருவரை ஒருவர் வாழ்த்தும் கண்கொள்ளாக்காட்சி உலகில் எந்த கொண்டாட்டத்திற்கும் ஈடாக மாட்டாது.

இவை யாவற்றையும் முடித்துக் கொண்டு வந்த வழியை விட்டு வேறு வழியாகத் தங்களது வீடுகளை நோக்கி திரும்பிச் செல்லும் போது இன்னுமுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் சந்தித்து ஸலாம கூறும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரிக்கமைய கொண்டாடப்பட வேண்டிய பெருநாள் இன்று அதன் தன்மையயை முற்றாக இழந்து நிற்கிறது.

எதற்காக, எந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பது எமக்குப் புரியாமல் இருக்கிறது.

காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் தொழுகை ஆரம்பிக்கிறது. சுபஹ் தொழுகையை தூக்கத்தில் “கழா” வாக்கிவிட்டு தாமதமாக துயிலெழுந்து ஆறுதலாக குளித்து விட்டு பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கிச் செல்லும் சோம்பேறித்தனம்தான் இன்றைய பெருநாட்களை அலங்கரிக்கிறது.

ஆண்கள் பள்ளிக்குப் போகிறார்கள். பெண்கள் ஆங்காங்கே வீடுகளிலும், தக்கியாக்களிலும் சிறு சிறு குழுக்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு குத்பா இல்லை.

தாமதமாகி பள்ளிக்குச் செல்லும் ஆண்களுக்கு குத்பாவின் பின்னரும் பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுகிறது. ஏற்கனவே தொழுகை ஒன்பது பத்துமணி வரை தாமதமாவது ஒருபுறம், அதற்கு மத்தியில் சோம்பேறித்தனத்திற்கு கண்ணியம் வேறு.

இவ்வாறு கொண்டாடப்படும் இந்தப் பெருநாளில், பெருநாளின் நோக்கம் சிறிதளவும் பிரதிபலிப்பதில்லை. குர்ஆனை அருளி ஹிதாயத்தைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் தன்மையை இன்றைய பெருநாட்களில் காண முடியாதிருக்கிறது. பட்டாசு கொழுத்தி ரமழானை விரட்டும் ஒருவகை வறட்டு மகிழ்ச்சிதான் இன்றைய பெருநாட்களின் தோரணையாக மாறியிருக்கிறது.

ஏன் இப்படி? அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த முன்மாதிக்கமைய எமது பெருநாட்களை கொண்டாட முடியாதா? ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு திரையில்லாத ஒரு பெருவெளியில் நபிகளாரின் பெருநாளைப் போல நாம் பெருநாள் கொண்டாடினால் என்ன? என்று சமூகத்தை கேட்டுப்பார்த்தால் கிடைக்கும் பதில்கள்ஆச்சரியமாக இருக்கின்றன.

ரமழானில் பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் தராவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு கிடைக்க வேண்டிய “பெருநாள் கலெக்சன்” இல்லாது போய்விடும் என்ற பயம்தான் பெருநாளின் தாக்கத்தையும் இல்லாது செய்து நபிகளாரின் முன்மாதிரியையும் குழிதோண்டி புதைக்கிறது.

என்ன ஆச்சரியம்! தரவீஹ் தொழுகை நடாத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? குர்ஆனின் மூலம் ஹிதாயத்தை அருளிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? புரியவில்லை.

ஒரு திறந்த வெளியில் பெருநாள் கொண்டாடுவதற்கு முற்படுகின்ற போது ஒவ்வொரு தக்கியாவிலும் தராவீஹ் தொழுதவர்கள் அந்தத் தக்கியாவிற்குரிய நன்கொடையை வெவ்வேறாக செலுத்துவதற்குரிய ஒரு முறையைக் கையாளலாம். அப்போது “பெருநாள் கலெக்சன்” பாதிப்படைவதற்கில்லை.

எனினும் இத்தகைய வழிமுறைகளைக் கையாளாமல் நபிகளாரின் சுன்னாவை புறக்கணித்துவிடும் எமது சமூகம் மார்க்கத்தின் ஏனைய சுன்னாக்களை ஏவ்வாறுதான் உயிர்பெறச் செய்ய முடியும்!?

அது மட்டுமல்ல, சன்மார்க்க விவகாரங்களில் பங்கெடுப்பதற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த இடத்திற்கும் முஸ்லிம் பெண்களை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஒரு கூட்டம் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றி பெருநாள் கொண்டாடுவதற்கு மற்றுமொரு தடையாக இருக்கிறது.

இவர்களது வாதம் என்னவென்றால் ஆண்களும், பெண்களும் ஒரே வெளியில் ஒன்றுகூடுவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.

உண்மையில் இவர்கள் பெண்கள் சமூகத்தைப் பாதுகாப்பதாக நினைத்து அல்லாஹ்வின் தீனை விட்டும் அவர்களைத் தூரமாக்கும் வேலைகளையே செய்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய சமூகமாற்றத்திற்கான காரணங்களுள் ஒன்று ஆண்களைப் போலவே சமூகத்தில் சரிபாதியான பெண்களை சன்மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவர்கள் பங்குகொள்ளச் செய்ததாகும்.

ஆனால் இன்று இஸ்லாமிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பெண்கள் மார்க்கம் படிக்க வேண்டியதில்லை, பெண்களை பாடசாலைகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் அனுப்ப வேண்டியதில்லை. பெண்கள் இஸ்லாமிய பணிகளில் ஈடுபடவும் கூடாது. இதேபோன்றுதான் பெண்கள் ஜுமஆத் தொழுகைகளிலோ பெருநாள் தொழுகைகளிலோ கலந்து கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தக் கொள்கையை விடாப்பிடியாக செயல்படுத்தும் சில மார்க்க பக்தர்கள் காரணமாக பெண்கள் சமூகம் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் எத்தனையோ சுன்னாக்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நபிகளார் கொண்டாடிய பெருநாள்.

நாம் இன்று கொண்டாடும் பெருநாளுக்கும் நபிகளாரின் பெருநாளுக்கும் இடைவெளி தூரம். இந்த இடைவெளியைக் குறைக்க பெருநாள் கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் எமது சமூகமும் சமூகத்தை வழிநடாத்தும் மார்க்க அறிஞர்களும் தயாராவார்களா?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

3 comments:

Anonymous said...

ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று பல கருத்தரங்குகள் செய்கிறார் ஏன் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்கு கூட சென்றார் so அவருக்கு எல்லா கலக்க்ஷனும் டைமுக்கு வந்து சேருதுபோல,
பாவம் தக்கியா மௌலவிமார்கள் அவர்கள் என்னதான் செய்ய?

CNC Job Offers said...

றமழான் மாதத்தில் அவதூறு சொல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். தக்கியா மௌலவிமாரும் சரியான குர்ஆன் சுன்னாவைப் பேசினால் அல்லாஹ் பல இடங்களுக்கும் சென்று சத்தியத்தை பரப்ப உதவியாக இருப்பான்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
"இது அல்லாஹ்வுடைய வேதம், இதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?" -அல்குரான். இதை முஸ்லிமாகப் பிறந்தவர்கள் செய்ய மாட்டார்கள், அதனால் தான் இஸ்லாத்தை ஏற்கின்ற சகோதரர்கள் இக் குற்றச்சாற்றை இன்னும் சொல்லிக்கிட்டே இருக்காங்க..
உண்மையை அறிந்து கொள்ள தைரியம் இல்லாத இது மாதிரியான 'களையான்கள்' சோம்பேறித்தனமான பெருநாலுக்கு வக்காலத்து வாங்க முனைகின்றார்கள்..
முடிஞ்சா தக்கிய்யவில் சாப்பாடில்லாமல் "திக்ர்"(பித்அத்)செய்ய சொல்லுங்க பார்ப்போம்???
-வஹாபி

Post a Comment