கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீலாது நபி விழா - சில கேள்விகள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான். 

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு. 

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன். 

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை. 

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள். 

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம். 

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? 

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? 

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா? 

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? 

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது? 

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ் 

முஸ்லிமல்லாதவர்களுக்கு: 

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். 

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
http://www.ethirkkural.com/2012/02/blog-post.html 

0 comments:

Post a Comment