கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் எமது சமூகம் பின்நிற்கிறது – அஷ்கர் கான்



எம்.பி.ஏ.படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர். முகாமைத்துவ, சந்தைப்படுத்தல் ஆலோசகராக இருக்கும் இவர், ஊடகத்துறை, ஆவணப்படத் தயாரிப்பிலும் அக்கறை கொண்டவர்.

சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஷ்கர் கான் அவர்கள் (Caring Hands, Knowledge Box) ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் INSIGHT கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

...................................................................
மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன்

Knowledge Box உருவாக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

சமூகத்திலே ஒரு சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இந்த ஊடக நிறுவனம். இலத்திரனியல் ஊடகத்தின் ஊடாக அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விழுமியங்களுடன் கூடிய ஒரு வலைப்பின்னலை நாம் ஏற்படுத்த முனைகின்றோம்.

ஒரு தனி நிறுவனத்தினால் மாத்திரம் அதனை சாதித்து விட முடியாது. ஏனைய அனைத்து ஊடக வலைப்பின்னல்களும் சேர்ந்துதான் இதனை சாத்தியப்படுத்த முடியும். அதற்கு உதவி செய்யும் வகையில்தான் இந்த நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் ஒன்று உருவாக்கப்படும் போது அதற்குரிய வளங்களை, நிகழ்ச்சிகளை நாமும் வழங்க வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகும்.

சமூக மாற்றத்தை நோக்கிய படைப்புக்களை தரமான தயாரிப்புக்களாக வழங்க வேண்டும் என்பது எமது மற்றொரு குறிக்கோளாகும்.

வெறுமனே மகிழ்வளிப்புக்கான படைப்புக்களை மாத்திரம் உருவாக்காமல் அறிவுக்கும் சிந்தனைக்கும் துணை செய்யக் கூடிய படைப்புக்களையே நாம் உருவாக்க நினைக்கின்றோம்.
ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

அடுத்தவர்களை போட்டியாளர்களாகப் பார்க்காமல் உதவியாளர்களாக நாம் பார்க்க வேண்டும். ஊடகத்தின் முக்கியத்துவத்தை இன்னும் எமது சமூகம் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவில்லை.

இன்று பல ஊடகங்கள் சமூகத்தின் பல்வேறு வட்டங்களில் செயற்படுகின்றன. இப்படி செயற்படுகின்ற எல்லோருக்கும் மத்தியில் முதலில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு அடுத்த கட்டமாக இணைந்து பணியாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒரே சிந்தனை ஓட்டத்தில் எமது சமூகத்தின் பிரச்சினைகளை எமது ஊடகங்களால் பேச முடியும்.

இணைப்பு இல்லாமல் தனித் தனியாக செயற்படுகின்றபோது ஒரு வேலையை பலர் செய்கின்ற நிலை தோன்றுகின்றது. அதேபோல ஒரு பிரச்சினை வரும்போது அது எப்படி பார்க்கப்பட வேண்டும் என்ற பொதுப்பார்வை சகல அமைப்புக்களிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு ஊடகங்கள்தான் உழைக்க வேண்டும். அப்படியாயின் முதலில் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பிற்கு வர வேண்டும். அனைவருமாகச் சேர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்போது அந்தக் குரல் வலுவானதாகவும் அர்த்தம் கூடியதாகவும் இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி அறபுலகத்திற்கு என்ன தெரியும் என அண்மையில் வதா கன்பர் கூறும்போது, இலங்கை ஒரு அழகான நாடு, அங்கு நல்ல தேயிலை கிடைக்கும் என்பது தான் அவர்களுக்குத் தெரியும். இங்கிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வியல், கலாச்சாரம், சவால்கள் குறித்து அவர்கள் எதுவும் அறிந்தவர்களாக இல்லை எனக் கூறினார்.

எனவே, எமது பிரச்சினைகள், சவால்கள் சர்வதேச மட்டத்திலும் பேசப்படுவதற்கான வழி வகைகளை ஒருங்கிணைந்த ஊடக வலைப்பின்னல் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு எமக்கிருக்கின்ற சவால்கள் மிகப் பாரியதாக இருக்கின்றன. எனவே, தமது சொந்தக் கருத்தியல்களுக்கு அப்பால் அந்த சவால்களை எதிர்வு கொள்வதற்காக ஒரு பொதுத் தளத்தில், பொதுச் சிந்தனையின் அடிப்படையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் இருக்கிறோம்.

முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சமூக நிறுவனங்கள் ஒப்பீட்டு அளவில் முன்பை விட இப்பொழுது தேர்ச்சி பெற்று வருகின்றன அவர்களது எல்லா விடயங்களிலும் அந்த மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு முடிவை அடையாளப்படுத்தி விளைவை நோக்கி பயணிக்கும் முறையின் மூலமே வெற்றியை துரிதப்படுத்திக் கொள்ள முடியும்.

சமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகப் பிரச்சினைகள் குறைந்துள்ளதா அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்ற ஒற்றைப் பதிலே எமக்கு கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்றால், அடைவை நோக்கிய அணுகு முறை பின்பற்றப்படாமைதான். இது முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். ஒரு வியாபார நிறுவனம் தன்னுடைய வெற்றியை இலாபாத்தை வைத்து இலகுவாக தீர்மானித்துக் கொள்ளும். ஆனால், சமூக நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தின் விளைவை வைத்துத்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, விளைவை மையப்படுத்திய வேலைத்திட்டமாக தமது பணிகளை சமூக நிறுவனங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கடந்த ரமழானிலே செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சிகள் எந்தளவு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஊர் மட்டங்களில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும், தலை நகரத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வுகள் எம்மை ஒரு ஆடம்பர சமூகம் எனவும் அதிகம் பணம் உள்ளவர்களெனவும் அடையாளப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

சமூக நிறுவனங்களில் இருக்கின்ற மற்றொரு விடயம்தான் எப்போதும் அவை நல்லவர்களையே தேடுகின்றன. ஒரு நிறுவனத்தின் போக்கு நல்லவர்களாலும், வல்லவர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா அமைப்புக்களும் தமது சிந்தனையோடு ஒத்துப்போகக் கூடிய நல்லவர்களிடமே பொறுப்புக்களை கொடுக்கின்றன. ஆனால், அடைவு மட்டம் பாதிக்கப்படும்போது அது அப்படித்தான் என தம்மை தேற்றிக் கொள்கிறார்கள்.

எனவே, நல்லவர்கள் தரமானவர்களாகவும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமூக நிறுவனங்கள் தனிநபர்களின் ஆளுமை ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. மேலும், தலைமைத்து வத்திற்கு அடுத்த பரம்பரையையும் உருவாக்குவதில் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

எமது சமூகத்தில் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எமது சமூகத்தில் இன்று ஆய்வாளர்கள் குறைந்து போயிருக்கிறார்கள். ஆய்வுக்காக நேரத்தை ஒதுக்குபவர்களும் குறைந்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை நாம் காலம் கடந்துதான் புரிந்து கொள்ளக் கூடும்.

சமூகம் சார்ந்த ஆய்வுகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. செய்யப்பட்ட ஆய்வுகளும்கூட ஆவணப் படுத்தப்படவில்லை. இந்த நாட்டின் தேசிய நூதனசாலைக்கு முஸ்லிம்களின் ஆவணங்களைத் தேடிச் செல்லும் ஒருவர் வெறுங்கையுடனே திரும்பி வர வேண்டி இருக்கின்றது.

எமக்கான பொது ஆய்வு மையம் ஒன்றின் அவசியத்தை நாம் வேண்டி நிற்கின்ற இக்கால கட்டத்தில் ஆய்வுகளை ஊர், பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்க வேண்டும்.

அத்தோடு, ஆவணப்படங்களை தயாரிப்பதிலே நாம் மிகவும் பின்நிற்கின்றோம். கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆவணப்படுத்தல் தொடர்பான செயலமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் அங்கு வந்திருந்தார்கள். அப்போது எமது சமூகத்தை நினைத்து கவலைப் படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

அல்-ஜஸீரா, பி.பி.சி. போன்ற ஊடகங்களில் செய்தியை அடுத்து அவற்றின் ஆவணப்படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கின்றன. ஆவணப் படம் (Documentary) என்பது சமூகப் பிரச்சினைகளைப் பேச ஒரு வலுவான ஆயுதம்.
எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சமூகத்தை நோக்கிய பார்வையில் இருக்கும் தெளிவின்மை அல்லது அறிவின்மையே என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தின் முதன்மைப் பிரச்சினையாகும். அந்த அறியாமையின் காரணமாக மக்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர்.
எனவே, மக்களின் மனப்பாங்கு, சிந்தனை என்பவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனது மகன் எப்படி செல்வம் சம்பாதிப்பான் என்பதை விட தனது திறமைகளை இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் எப்படி செலவழிப்பான் என்று நம் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
நல்ல மக்கள் இல்லாமல் ஒரு நல்ல அரசியல்வாதி தோன்ற முடியாது. எனவே, சமூகத்தை நோக்கிய எமது பார்வையில் இருக்கும் அறியாமை நீக்கப்பட வேண்டும். இந்தத் தெளிவின்மைதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.
எனவே, ஒரு திசையை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும். சமூகத்தை வழிநடாத்த முன்வருபவர்களும் அதனைச் செயற்படுத்தும் மக்களும் ஒருமைப்பட்ட சிந்தனையோடு சமூக மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் இதற்கு தமது மகத்தான் பங்களிப்பை வழங்க வேண்டும். மக்களது தெளிவின்மையைப் போக்கி அவர்களை அறிவூட்ட எமது ஊடகங்களை நன்கு திட்டமிட்ட வகையில் நாம் பயன்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment