கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சுத்திகரிப்பாளராக தொழிலை ஆரம்பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி (தமிழ்வடிவம்)

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

நேர்காணல்: இனோகா பெரேரா பண்டார
தமிழில்: ஒகொடபொல றினூஸா

காத்தான்குடியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்லூரிக்கு வரும்போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்தான்குடியில் இருந்து முதன்முறையாக சவூதி அரேபியாவுக்குச் செல்­கின்றபோது இவர் வலிமைமிக்க ஓர் இளைஞர். வர்த்தக அறிவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் இயல்பும் இவருடன் கூடவே பிறந்த திறன்களாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்சலால்’ முதிர்ச்சியடைந்து சாதித்தவரான N.L.M. முபாறக், ஒரு புதுமையான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்றியது இந்தப் புதுமையான மனிதரிடத்திலிருந்தே. இந்த வடிவமைப்பாளரிடமிருந்தே.

மிகவும் பரந்தளவிலான வாடிக்கையாளர் வலையமைப்பொன்றைக் கொண்டிருந்தபோதிலும்,  ஒருபோதும் இவர் பொது மக்கள் முன்னி­லையில் தோன்றியதில்லை. முதன் முறையாக அந்தக் கொள்கையைத் தகர்த்து இவர் உங்களைச் சந்திக்க வந்துள்ளார்.

நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலையமைப்பை உருவாக்கிய வர்த்தகர்?
வர்த்தகர் என்று சொல்வதைவிட தொழில் முயற்சியாண்மையாளர் என்று அறிமுகப்படுத்துவதையே நான் விரும்புகின்றேன். ஏனெனில் வர்த்தக நோக்கங்களைக் கடந்த மிகச் சிறந்த நோக்கங்கள் NOLIMIT இற்குள்ளும் என்னுள்ளும் இருக்கின்றன.  NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாகும். அவர்களுக்கு முன்மாதிரி ஒன்றை வழங்குகின்ற தொழில் முயற்சியாண்மையாளராகவும் தொழிலதிபராகவும் என்னை நான் காண்கின்றேன்.

நீங்கள் எவ்வாறு அப்படிக் கூறுவீர்கள்?
எனக்கு இருப்பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்னுடனேயே ஒன்றிப் பிறந்தது. இந்தக் காய்ச்சல் காரணமாக நான் பெஷன் பற்றி நிறையவே சிந்திக்கின்றேன். வர்த்தகக் கருத்தேற்புக்களை (Business Concepts) உருவாக்குகின்றேன். அதன் மூலம் தொழில்வாய்ப்­புக்களை ஏற்படுத்துகின்றேன். நான் இந்த நாட்டில் சில்லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்றியமைத்து அதற்குப் புதிய­தொரு வடிவத்தைக் கொடுத்தேன்.

நீங்கள் இந்நாட்டில் எந்தளவு எண்ணிக்கையான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளீர்கள்?
கடந்த 24 வருட காலத்தினுள் நாம் இந்த நாட்டின் சில்லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை ஏற்ப­டுத்தியுள்ளோம். சிலவேளை இதனைவிட அதிகமாகவும் இருக்கலாம். பாடசாலையை விட்டுவிலகிய இளைஞர்களை உள்வாங்கி, அவர்­களுக்குச் சிறந்ததொரு பயிற்சியை வழங்கி, அவர்களின் நடையுடை பாவனை மற்றும் மனப்பாங்கு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி­யுள்ளோம்.  அவ்வாறு உருவாகியவர்களுள் பலர் இன்று நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற விதத்தில் சர்வதேச ரீதியில் பணியாற்றுகின்றனர். NOLIMIT இல் பணியாற்றியதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய வரவேற்புக் கிடைக்­கின்றது.

உங்களது பெஷன் வலையமைப்பில் தொழில்வாய்ப்புக்கள் முஸ்லிம் இனத்தவர்களுக்கு மாத்திரமா?
இது சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்ற ஓரிடம். நூற்றுக்கு, ஐம்பது – ஐம்பது வாய்ப்புக்கள் அவர்க­ளுக்கும் உள்ளது. நான் தொழில்வாய்ப்புக்களை வழங்குவது இலங்கையர்களுக்கு. எமது வாடிக்கையாளர்களுள் பல்வேறுபட்ட வர்க்­கத்தைச் சார்ந்தவர்களும் உள்ளனர். அதேபோன்றுதான் எமது பணியாட்தொகுதியினரும்.

உங்களது வர்த்தகத்தின் நோக்கம் என்ன?
எந்தவொரு வர்த்தகருக்கும் மேலிருந்து கீழ் வரை (top to bottom) குறிப்பான கவனக்குவிவொன்று இருக்க வேண்டும். அதனூடே வாடிக்­கையாளர் மகிழ்ச்சியடைய வேண்டும். இறுதியில் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். NOLIMIT இல் இருப்பது முற்றிலும் மகிழ்ச்­சியை அடிப்படையாகக் கொண்டமைந்த இத்தகையதொரு குறிக்கோளே.

சில நிறுவனங்களில் வாடிக்கையாளர் மீது கோபத்துடன் இருப்பதைப்போல் பெண் விற்பனையாளர் (Sales Girl) பதவியி­லுள்ள யுவதிகள் இருக்கின்றனர். இது சில்லறை வணிகத் துறையின் இயல்பா…
இல்லை. ஏதேனுமொன்றைக் கொள்வனவு செய்தாலும், செய்யாவிடினும் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியுடன் உதவுவதுதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறியாகும். NOLIMIT பணியாளர்களும் அவ்வாறுதான். எமது நிறுவனத்தில் உயர்மட்டத்திலி­ருந்து அடிமட்டம் வரையான அனைத்துப் பணியாட்தொகுதியினரும் இத்தகைய மகிழ்ச்சியுடன் வேலை செய்யும் உளக்கருத்துக்கு இயை­பாக்கம் அடைந்தவர்களேயாவர். தனது உயரதிகாரி இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அவர்கள் இதயசுத்தியுடன் பணியாற்றுவர். எமது முன்னேற்றமும் அதுதான்.

பணியாளர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது இலகுவாக அமைந்ததா?
வாழ்க்கையின் பழக்கமாக அதனை மாற்றிக்கொண்டால் அது கடினமான ஒன்றல்ல. வாடிக்கையாளர் திருப்தியடைந்தால் மாத்தி­ரமே அவர்கள் மீண்டும் எம்மிடம் வருவர். அவ்விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தால்தான் எமது நிறுவனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்கினால் மாத்திரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்தத்தைப் பணியாளர்கள் புரிந்து கொள்வதே முக்கிய­மாகும்.

சிறந்த மனப்பாங்கை உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் உங்கள் நிறுவனத்தைவிட்டு விலகுவதற்கு நீங்கள் இடமளிக்கின்றீர்களா?
எம்மிடம் உள்ளவர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதமானோர் 25 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள். பத்துப் பதினைந்து வருடங்கள் தொடர்ச்சியாக எம்மிடமே பணியாற்ற வேண்டுமென்ற எந்தவொரு நிபந்தனையையும் நாம் விதிப்பதில்லை. ஒரு கதவு மூடப்படும்­போது இன்னுமொரு கதவு திறக்கப்படுகின்றது. விலகிச்செல்கின்ற அளவுக்கு, நாம் புதியவர்களை ஆட்சேர்ப்புச் செய்து பயிற்றுவிக்­கின்றோம். அது எமக்குப் பிரச்சினையல்ல.

உங்களுடைய முகாமைத்துவப் பாங்கு யாது?
அது ஏதேனும் செயற்பாடுகளுக்கு அமைவாக நிகழ்கின்ற ஒன்று. மேலிருந்து கீழ் வரை சகலருக்கும் வழங்கப்படுகின்ற கடமை­யொன்று உள்ளது. அவரவருக்கென அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அதிகார வட்டத்தினுள் அவர்களுக்கான சுதந்திரமும் உள்­ளது. சகலவற்றிலும் தலையிடுவதை விடுத்து குறித்த வட்டத்தினுள் தொழிற்படுவதே எனது பாங்கு.

உங்களுக்கும் பணியாட்தொகுதியினருக்குமிடையே நிலவுவது, கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரமா அல்லது அதனையும் தாண்டிய பிணைப்பொன்றா?
சிறந்த பணியாளர் ஒருவர் கிடைப்பதென்பது சிறந்ததொரு மனைவி கிடைப்பதற்குச் சமமானதாகும். பண்பற்ற பணியாளர் ஒருவருடன் வேலை செய்வதானது கொடூரமான மனைவியுடன் வாழ்வதற்குச் சமமானதாகும். நிறுவனத்தின் முன்னேற்றமானது பணியாட்தொகுதியி­னரின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதனால் அவர்களுடன் எனக்குள்ளது ஒரு பிணைப்பேயாகும்.

தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது நீங்கள் எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?
அவை மிகத் துரிதமான தீர்மானங்களாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்கப்படுபவை அல்ல. வர்த்தக நடவடிக்கைகளில் அவ்வாறு இழுத்தடித்துக்கொண்டு இருக்க முடியாது.

நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்டமிடுபவரா?
இதுவரை திட்டங்கள் ஏதுமின்றியே நிறைய விடயங்கள் நடந்துள்ளன. எனினும் இறைவனின் திட்டத்திற்கு ஏற்பவே அவை நிகழ்ந்துள்­ளன. நல்ல விடயங்களைச் செய்தால் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையொன்று உருவாகும்.

மனிதனின் முன்னேற்றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற காரணி என்ன?
முதலில் மற்றவர்களை முன்னேற்றுகின்ற முறை பற்றிச் சிந்தியுங்கள். சகல தொழில்வாண்மையாளர்களும் சாதிக்கவில்லை. சாதித்த அனைவரும் தொழில்வாண்மையாளர்களும் அல்லர். சிறந்த குறிக்கோளுடன் வேலைசெய்வதே முக்கியமானதாகும். அந்தக் குறிக்கோ­ளினுள் மற்றவர்களை முன்னேற்றிவிடுகின்ற செயற்றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதேபோன்று வாழ்க்கைக்கு எவ்வித பெறுமானத்­தையும் வழங்காத நபர்களிடமிருந்து விலகியிருப்பதும் முக்கியமாகும். சிறந்த மனிதர்களுடன் பழகுவதும், வாழ்க்கையில் நல்ல விடயங்­களை இணைத்துக் கொள்வதும் முக்கியமானவையாகும்.

பெஷன் உலகத்தில் நிலவும் போட்டியானது உங்களுக்கு சவாலான ஒன்றா?
என்னைப் போன்றே ஏனையவர்களும் வாழ வேண்டும். ஆனால் சமமான வர்த்தக நடவடிக்கை ஒன்றில் மாற்றமொன்றை, புதுமை­யொன்றை வழங்குவதற்கு என்னால் முடியுமாயின் அந்த இடத்தில்தான் நான் வெற்றியாளனாகின்றேன். நான் அத்தகைய போட்­டியை விரும்புகின்றேன். ஏனெனில், அப்போதுதான் எனக்கு மென்மேலும் புதிய விடயங்கள் குறித்துச் சிந்திப்பதற்கான சிறந்த தூண்டுதல் ஏற்படும். ஆடையணிகலன்களில் மட்டுமன்றி வீட்டு வாசல், சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என சகல இடங்களும் எனக்கு பெஷன். வாழ்க்கையை வடிவமைக்கின்ற, அதனை வர்ணமயமாக்குகின்ற, எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.

நீங்கள் முதலாவதாகச் செய்த தொழில் என்ன?
பாடசாலையில் இருந்து விலகியவுடனேயே லங்கா ஒபரோய் ஹோட்டலில் House Keeping  பிரிவில் தொழிலொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்தையை சுத்தப்படுத்தினேன். அறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்தப்படுத்தினேன். பகலிலும் வேலை, இரவிலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்றவரை சிறப்பாக வேலை செய்தேன். அது தொந்­தரவு என்றோ தாழ்வானதென்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. சவூதியில் இருந்த பத்து வருடங்களிலும் அவ்வாறுதான்.

இன்று அந்த கடந்தகாலம் ஞாபகத்திற்கு வருகின்றபோது என்ன நினைக்கின்றீர்கள்?
ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்தப்படுத்திய ஒரு சிறிய பையனுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்­களை வழங்கக்கூடிய பாரிய கம்பனியொன்றை உருவாக்க முடியுமாயின், இன்றைய சந்ததியினருக்கு எவ்வளவு விடயங்களைச் சாதிக்க முடியும். சரியான பாதையொன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதே அவசியமாகும். தாய் தந்தை இல்லையெனில் ஏனைய முதியவர்களாவது அவ்வாறானவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதனையே நான் நினைக்கின்றேன்.

பத்து வருட காலம் நீங்கள் சவூதியில் என்ன செய்தீர்கள்?
அது “camp operation…” நிறுவனமொன்றாகும். நான் சுத்திகரிப்பாளர் ஒருவராகத் தொழிலை ஆரம்பித்தேன். சம்பளம் 950 ரூபா. எழுதுவி­னைஞர், மேற்பார்வையாளர், முகாமையாளர். என படிப்படியாக முன்னேறி, செயற்றிட்ட முகாமையாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழிநடத்தற் செயற்பாடுகளும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டன. 1500 பணியாட் தொகுதியினரை நிருவ­கித்தேன். நிருவாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான சிறந்த அனுபவங்களை நான் அந்தத் தொழிலின்போதே பெற்றுக்­கொண்டேன்.

அத்தகைய சிறந்த தொழிலை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்தீர்கள்?
எனக்கே உரிய ஒன்றைச் செய்வதற்கு. சிலவேளை எனக்குள்ளேயே தொந்தரவு தருகின்ற பெஷன் பற்றிய ஆர்வத்தின் தூண்டுதலாகவும் அது இருக்கலாம். நான் இலங்கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பதுளையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்தேன். தந்­தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தமையால் எனக்கு இதனைச் செய்வதற்குத் தோன்றியது. எனினும் ஆறு வருடங்களின் பின்னர் நான் அந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். 

0 comments:

Post a Comment