கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதம்; தீர்வு என்ன?



சுமார் முப்பது வருடகால கொடூர யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் இலங்கைத் திருநாட்டில் நான்கின மக்களும் இன,மத,மொழி பேதங்களை மறந்து ஓர்தாய் பிள்ளைககளாக சுதந்திரக்காற்றை சுவாசித்துவரும் வேளையில் இந்நாட்டிற்கும் இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சாபக்கேடாய் சில பேரினவாத சக்திகள் ஊடுருவி குறிப்பாக முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம்,கலாச்சாரம்,வணக்கஸ்தலங்கள் போன்றவற்றை பகிரங்கமாகவே சூறையாடி வருகின்றமை இன்று உலகறிந்த விடயமாகும்.

இதற்கு உதாரணமாக,

01) 2011 செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி பொலிஸ் அதிகாரிகள் கைகட்டி நிற்க பௌத்த பிக்குகளின் தலைமையின் கீழ் அனுராதபுரம்-குருநாகல் வீதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் தர்கா தகர்க்கப்பட்டது.

02) குருநாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் அமைந்துள்ள அல் அக்ரம் தைக்கியாவில் கடந்த ரமழான் கால வணக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கபட்டது.தெதுறு ஓயாவிலுள்ள கிரிந்திவேல்மட விகாரையின் விகாராதிபதி தலைமையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குகள் அடங்கலாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள் பள்ளிவாயிலின் வளவிற்குள் கதிரைகளில் அமர்ந்தவாறு பிரித் பாராயணம் செய்து தொழுகைக்கு இடையூறை ஏற்படுத்தினர்.இப்பள்ளிவாயில் 1994ம் ஆண்டு ஸ்த்தாபிக்கப் பட்டு முஸ்லிம் சமயக்கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

03) 2012 ஏப்ரல் மாதம் இருபதாம் திகதி தம்புள்ள புனித நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்பட்டது.இவ்வன்முறைச் சம்பவம் தம்புள்ளை ரன்கிரி ரஜமகா விகாரையின் பீடாதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரரின் தலைமையில் வழிநடாத்தப்பட்டது.பொலிசாரும் இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க சுமார் நூறு பேர் வரையிலான பெரும்பான்மையினக் காடையர்கள் பள்ளிவாயிலுக்குள் அத்துமீறி உட்சென்று அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் அப்பள்ளிவாயிலில் ஐவேளை தொழுகைக்கும் கூட பாரிய அச்சுறுத்தல்களே காணப்படுகின்றன.

இச்சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரன்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ ஸ்ரீ சுமங்கல தேரர் "இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் இங்கே விரும்பினால் இருக்கலாம்.இல்லாவிடில் எங்காவது சென்றுவிடவேண்டும்.காகம் தலைக்கு மேல் பறக்கலாம் அனால் தலையில் கூடு கட்ட எத்தனிக்கக் கூடாது"என்று தனது இனத்துவேசத்தை வெளிக்காட்டினார்.

இவ்வன்முறைக்கு உந்து சக்தியாக தம்புள்ளையை தளமாகக் கொண்டு இயங்கும் ரன்கிரி FM என்னும் ஓர் தனியார் வானொலி சுமார் ஆறு மாத காலமாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப்போக்கைக் கொப்பளித்துவந்தது.

இஸ்லாமிய சரீயா சட்டம்,இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் போன்றவற்றை எள்ளி நகையடுவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டு செயற்பட்டது.இன்னும் செயற்பட்டுவருகிறது.

04) 2012ஓகஸ்ட்,முப்பதாம் திகதி கோகிலவத்தை என்னும் ஊரில் உள்ள அல்-இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாயிலுக்குள் மஃரிப் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பெரும்பான்மையின வாலிபர்கள் இருவர் மதுபோதையுடன் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொது மக்களைத் தாக்கி பள்ளிவாயிலில் இருந்த பொருட்களையும் துவம்சம் செய்துவிட்டுச் சென்றனர்.

05) 2012 மே மாதம் குருநாகல் ஆரிய சிங்களவத்தையிலுள்ள உமர் இப்னு ஹத்தாப் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்துவதற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.குறித்த இப்பள்ளிவாயில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் இயங்கிவந்திருந்த போதிலும் கடந்த மே மாதமே இப்பிரச்சினை உருவெடுத்துள்ளது.

06) கடந்த ரமழான் மாதம் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயிலில் தொழுகை நடாத்தக்கூடாதென்று பௌத்த தேரர்கள் குழுவொன்று திரண்டு வந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து அப்பள்ளிவாயிலில் ஐங்காலத் தொழுகைக்கும் இடையூறுகள் ஏற்படுவதால் மக்கள் அங்கே தொழுகைக்காகச் செல்வதில்லை.எனவே இன்றளவும் ராஜகிரிய தாருல் ஈமான் பள்ளிவாயில் மூடப்பட்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது.

07) 2012 மே மாதம் தெகிவளை கல்விகாரை வீதியிலுள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாயிலில் முஸ்லிம்கள் தொழுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கல்விகாரையிலுள்ள பௌத்த தேரர்கள் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நிகழ்த்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு காரணமாக குறித்த இப்பள்ளிவாயில் மாடுகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் மடுவமாகத் தொழிற்படுகின்றது என்ற பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

08) 2012 ஒக்டோபர் 27ம் திகதி முஸ்லிம்களின் பெருநாள் தினமான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று அனுராதபுரம் புதிய நகர் மல்வத்துஓயா லேனிலுள்ள தைக்காப் பள்ளி தீக்கிரையாக்கப் பட்டது.இச்சம்பவத்தில் பள்ளிவாயிலுக்குச் சொந்தமான பல பெறுமதி மிக்க உடைமைகள் முற்றாக அழிந்து போயின.

இதனைத் தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் "அபிவிருத்திப் பணிகளுக்காக இப்பள்ளிவாயில் உடைக்கப்படும்" என்று அனுராதபுரம் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

09) 2012 ஓகஸ்ட் மாதம் புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் தனித்து வாழும் பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.சிங்கள மக்களே இல்லாத ஒரு ஊரில் புத்தர் சிலையை நிர்மாணித்துவிட்டு அங்கு சென்று வழிபடுவதற்காக வெளிப்பிரதேசங்களிளிருந்து மக்கள் அனுப்பப்படுகின்றனர்.
10) அண்மையில் பதுளை நகரில் ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடையில் விற்பனை செய்யப்பட்ட கையுறைகளில் புத்தரின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டி அக்கடையின் உரிமையாளரையும் ஊழியர் ஒருவரையும் போலீசார் கைது செய்ததன் தொடர்ச்சியாக "பொதுபல சேனா" என்னும் அனாமதேய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த பிக்குகளின் தலைமையில் சுமார் நூற்றியைம்பது பேர் வரையில் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.

இதில் பதுளையைச் சேர்ந்தவர்கள் இருபதுக்கும் குறைவானவர்களே காணப்பட்டனர்.

ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் இருந்து வரவளைக்கப்பட்டிருந்தனர்.இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காடையர்கள் பலர் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கீழ்த்தரமான இழிவான வார்த்தைகளால் கோஷமெழுப்பி கேலிசெய்தனர்.

அத்துடன் பதுளை நகரில் ஜும்மா தொழுகையை முடித்துவிட்டு வீதியால் சென்று கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் பேரினவாதக் காடையர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப் பட்டது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆறு ஆடுகள் அதே பேரினவாதக் காடையர்களால் திருடிச்சென்று பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டு இறந்த நிலையில் அவ்வாடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை தட்டிப்பார்க்கும் சம்பவங்கள் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்டவைகள் இன்றுவரைக்கும் பதுளை நகரில் மட்டும் நடந்தேறியுள்ளன.

11) சகல இன மக்களும் எதுவித முரண்பாடுகளும் இன்றி மிகவும் அன்னியோன்யமாக வாழும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம்தான் கண்டி மாநகர்.

அங்கே கடந்த 07.12.2012 அன்று பிரதான வீதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் போலீசார் நடமாடுகின்ற முக்கிய பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுகின்ற சுவரொட்டிகள் பல ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டிகளில் உள்ள வாசகங்கள் இவைதான்.2025ம் ஆண்டில் இலங்கை சபரிஸ்தான் (என்னும் ஒரு முஸ்லிம்) நாடாக மாறும்.(இனியும்) முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவோமா?

இவ்வாறு அச்சுவரொட்டிகளில் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற வாசகங்கள் பகிரங்கமாகக் காணப்படுகின்றன.

மேலே சொல்லப்பட்ட பேரினவாத அடக்குமுறைகளில் தற்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒன்றுதான் கையடக்கத் தொலைபேசிகளில் உலாவருகின்ற ஓர் அநாமதேயக் குறுந்தகவல்(SMS).

இக்குறுந்தகவல் கண்டி,குருநாகல்,கொழும்பு,மாத்தறை,அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பெரும்பான்மையின மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அதிகளவில் வந்தடையக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது.

-2032di sinhala jathiyata wada muslim jathiya 53%k wenawa,ape sinhala rata unta nithiyen aithi wenawa.danma muslim kadawalin badu ganna eka nathara karamu,halal lakuna sahitha badu warjanaya karamu,unta ape idakadan wikunanna epa,thambith ekka wiwaha epa..etisalat wani ayathana walin palli hadanna wisala lesa mudal denawa,fashion bug,nolimit walin redi ganna epa,ape rata beragamu,obath niyama sinhalayeknam meka sinhalunta yawanna-

இதுவே அக்குறுந்தகவலாகும்.

தமிழாக்கம்:
2032ல் சிங்கள இனத்தைவிட முஸ்லிம் இனம் 53% ஆகும்.நமது சிங்கள நாடு அவன்(ர்)களுக்கு நிரந்தரமாக சொந்தமாகிவிடும்.இப்பொழுதே முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்துவோம்.ஹலால் சின்னம் உள்ள பொருட்களை பகிஷ்கரிப்போம்.அவ(ன்)களுக்கு நமது காணிகளை விற்க வேண்டாம்.தம்பி(முஸ்லிம்)களோடு விவாகம் வேண்டாம்..எடிசலாட் போன்ற நிறுவனங்கள் பள்ளிவாயில்கள் அமைப்பதற்கு பெருந்தொகையான பணம் வழங்குகின்றன,பெஷன் பக்,நோ லிமிட் போன்ற இடங்களில் உடுப்பு வாங்க வேண்டாம்,நமது நாட்டை பாதுகாப்போம்.நீங்களும் உண்மையான சிங்களவர்கள் என்றால்,இதை சிங்களவர்களுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு இக்குறுந்தகவல் தொடர்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை த் தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுவிட்டது."புத்த மதத்தை காப்போம்,இது பௌத்தர்களின் பூமி.............."போன்ற பேரினவாதத்தைப் பறை சாற்றுகின்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முச்சக்கர வண்டிகளிலும் பொதுமக்கள் நடமாடும் பஸ் நிலையம்,சந்தைகள் போன்ற இடங்களிலும் இன்றளவும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நம்நாட்டில் வேர்விட்டு வளர்கின்ற பேரினவாத அடக்குமுறைக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.

இலங்கை நாட்டில் எந்தவொரு மனிதனுக்கும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றி வாழ்வதற்குரிய முழு சுதந்திரமும் உண்டு.

யாருடைய மத விவகாரங்களிலும் யாரும் இடையூறு ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.அவ்வாறு இடையூறுகளோ தடைகளோ விதிப்பது இலங்கை மதவுரிமைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் இலங்கை நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கின மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்ற இப்பேரினவாத செயற்பாடுகள் குறித்து அரசாங்கமோ பாதுகாப்புத்தரப்புக்களோ இது வரைக்கும் வாய்திறக்காமல் இருப்பதே ஆச்சர்யமான விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது நாடுமுழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இப்பேரினவாதத்திற்கெதிராக இதுவரையில் முஸ்லிம்கள் எந்தவொரு வன்முறைகளிலும் ஈடுபடாமல் பொறுமை காப்பது இலங்கை நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளில் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இன்னும் குறைந்து போகவில்லை என்பதையே பறைசாற்றுகின்றது.


இப்பேரினவாத அடக்குமுறைகளின் நோக்கம் என்ன?

இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாகவே "சிங்களத் தாய்களும் அதிகமான பிள்ளைகளை பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன்வாருங்கள்"என்று அண்மையில் சில பேரினவாத சக்திகள் அழைப்பு விடுத்திருந்தன.அத்தோடு சிங்களத் தாய்மார்கள் அதிகம் பிள்ளைகள் பெறும்போது அவர்களுக்கு விருது வழங்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடரவே செய்கிறது.

நாட்டின் சனத்தொகைப் பரம்பலில் இந்நிலை நீடித்தால் எதிர்வரும் சந்ததிக்கு இலங்கை பாதியளவிலேனும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடாக மாறிவிடும் என்ற ஓர் அர்த்தமற்ற பயத்தின் காரணமாகவேதான் இன்று இவ்வாறான ஒரு சமூகத்தின் மீதான அடக்கு முறைகள் அலைபாய்கின்றன.

இவ்விடையத்தை தம்புள்ளை பள்ளிவாயிலில் நடைபெற்ற வன்முறைக்கும்,காடைத்தனத்திற்கும் தலைமை வகித்த ரங்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமளுவ தேரர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் வெளிப்படுத்தினார்.

எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பௌத்த சந்ததியை பெருக்க வேண்டுமென்பதற்காகவே தற்போதுள்ள இரண்டாம் நிலை இனத்தின் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.இதன் பிரதிபலிப்புக்கள்தான் இன்று "பொது பலசேனா" என்னும் ஓர் அனாமதேய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மையின அப்பாவி இளைஞர்களுக்கு வன்முறையை போதித்து நாட்டின் எதிர்காலத்தையும் சிங்கள மக்களின் குடும்ப,சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கின்ற கைங்கர்யத்தையுமே இவ்வமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

முஸ்லிம்கள் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடித்தல் பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள்,பள்ளிவாயில்கள் தகர்ப்பு, சிங்கள மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட சவால்கள் போன்ற முஸ்லிம்களுக்கெதிரான சவால்களில் முன்னின்று செயற்படுவது இந்த "பொது பலசேனா"அமைப்பே.

கடமை தவறிய முஸ்லிம் தலைமைகள்.

இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கள் கேள்விக்குறியாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறைகளுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவே நோக்கப்படுகின்றது.

தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் தனியுரிமை என்றும்,முஸ்லிம்களின் எதிர்காலம் என்றும் வீர வசனங்கள் பேசிய முஸ்லிம் தலைமைகள் தங்களுக்கு பதவிகளும் கதிரைகளும் கிடைத்த மறுகணமே சமூகத்தை மறந்து சமூகத்திற்கு தங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து அரசியல் லாபங்களுக்காக முழு சமூகத்தின் குரல்களையுமே அடக்குகின்ற மாபாதகச் செயல்களையே கைக்கொண்டுள்ளன.

தம்புள்ளை நகரில் பட்டப்பகல் வேளையில் பிக்குகளின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மா பள்ளிவாயில் தகர்க்கப்படுகிறது.முழு முஸ்லிம் சமூகத்தினதும் மதச் சுதந்திரம் பேரினவாதக்காடையர்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகிறது.மறுநாள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் "குறித்த பள்ளிவாயிலுக்கு எதுவித சேதமும் இழைக்கப் படவில்லை"என அறிக்கை விடுகிறார்

இன்னுமொரு முஸ்லிம் அமைச்சர் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவதற்கு "தினமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உச்சரியுங்கள் நன்மை கிடைக்கும்"என்கிறார்.

எங்கே செல்கின்றன எமது முஸ்லிம் தலைமைத்துவங்கள்.

மாற்றுமத அரசியல் தலைவர்களை தர்காக்களுக்கும் பள்ளிவாயில்களுக்கும் அழைத்துவந்து அவர்கள் பெயரில் பிரார்த்தனை செய்த நமது இறையச்சம்(?)மிக்க முஸ்லிம் தலைமைகள் அதே பள்ளிவாயில்களும் தர்காக்களும் பேரினவாத சக்திகளால் உடைக்கப்படும்போது மாயமாகிப்போனதேன்?

தேர்தல் மேடைகள் தோறும் ஜனாதிபதியை அழைத்துவந்து "எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு பள்ளிவாயிலுக்கும் எதுவித சேதமும் இழைக்கப்படமாட்டாது"என்று வாக்குறுதியளிக்க வைத்த முஸ்லிம் தலைமைகள் அதே ஜனாதிபதியின் கண் முன்னாலேயே முஸ்லிம்களின் கலாச்சார மையங்கள் அழித்தொழிக்கப்படும்போது வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம்தான் என்ன?

தேர்தல்கள் நெருங்கும்போது முஸ்லிம் சமூகத்தின் மீது அதீத அக்கறைகொள்ளும் அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வந்த மறுகணமே "ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி" என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கின்றன.

மதிப்புக்குரிய முஸ்லிம் அமைச்சர்களே!தலைவர்களே!

நாம் எல்லாம் வல்ல இறைவனை கடவுளாக ஏற்று அந்த இறைவனுக்கு மாத்திரமே அடிபணிகின்ற முஸ்லிம்கள்.மறுமைக்குப் பின்னரான நிரந்தர வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டவர்கள்.பட்டங்கள்,பதவிகள் என்பன இவ்வுலகில் அல்லாஹ் நமக்களித்த பேறுகள்.அவற்றை நம்மால் முடிந்தளவு இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் பயன்படுத்தவேண்டும்.

மறுமையில் நமது பட்டம்,பதவிகள்,பொறுப்புக்கள் பற்றி நிச்சயமாக நாம் விசாரிக்கப்படுவோம்.அந்த நாளில் எந்தவொரு ஆட்சியாளரும் எமக்குப் பரிந்துரை செய்யப்போவதில்லை.இவ்வுலகில் கிடைக்கின்ற அற்ப சொற்ப இலாபங்களுக்காக மறுமை வாழ்க்கையினை தீர்மானிப்பதற்காக அல்லாஹ் நமக்களித்த பொறுப்புக்களை சரிவரப்பயன்படுத்துவோம்.அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிவாழும் ஒரு முஸ்லிமைப் பார்த்து முழு உலகும் அஞ்சும்.நாங்கள் பத்ரையும் உஹதையும் கண்ட வீரமிகு முஸ்லிம் சமுதாயம்.கல்லையும் மண்ணையும் வணங்கும் காபிர்களுக்கு ஒருபோதும் அடிபணிந்து போகாமல் உறுதியுடன் வாழ்வதற்கு நம் சமூகத்திற்காகக் குரல் கொடுங்கள்.

பொதுமக்களின் கடமை................

நம் நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையானது ஒரு சில பேரினவாத இயக்கங்களால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் கணிசமான அளவில் அவர்கள் அன்பான இரக்க மனமுடையவர்கள்.

சாதாரணமாக தொழில் செய்து அன்றாட வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை.சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற எமது முஸ்லிம்கள் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது கூடாது.அம்மக்களுடன் மிகவும் கண்ணியமாக நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும்.பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்.பெருநாள் தினம்,வெள்ளிக்கிழமை போன்ற விஷேட தினங்களில் அருகிலுள்ள சிங்கள மக்களுக்கு அன்பளிப்புக்களை வழங்குவது,அவர்களின் பிள்ளைகளுக்கு ஆடைகள்,புத்தகங்கள் போன்றவற்றை நமது சக்திக்கேற்ற வகையில் அன்பளிப்புச் செய்வது போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தவேண்டும்.

அது மட்டுமல்லாது அவர்கள் நோய்வாய்ப் படும்போது வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பது போன்ற நற்செயல்கள் முஸ்லிம்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

சமூக சேவை அமைப்புக்கள் சிங்கள் மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களுக்குச் சென்று அங்கே வறிய நிலையிலுள்ள மக்களுக்கு தங்களின் சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.இரத்ததானம் போன்ற உயிர்காக்கும் சேவைகளை சிங்கள மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

எனவே இஸ்லாம் காட்டித் தந்த மனித நேயப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்கள் பெருமளவில் களையப்படும்.

அத்துடன் இறைவனை அஞ்சி நடக்கும் சமூகமாக நம் முஸ்லிம் சமூகம் மாற வேண்டும்.மாற்றுமத மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் வர்த்தகம் செய்கின்ற நாம் கொடுக்கல் வாங்கல்,அளவை நிறுவை போன்ற விடயங்களில் மிகவும் உன்னிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.மாற்று மதத்தவர்களுடன் நட்புடன் பழகும் நமது இளைஞர்கள் இஸ்லாம் விதித்த எல்லைக்குள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மது,புகைத்தல் போன்றவற்றை கைக்கொள்ளுதல் கூடாது.

எனவே இஸ்லாமிய உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் மாற்றுமத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அவ்வழி வகைகளை கையாண்டு சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சாதுர்யமான முறையில் எதிர்நோக்கி அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக.

அபூஆஸியா, காத்தான்குடி.

0 comments:

Post a Comment