கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்மாதிரி பெண் ஸுமையா அக்ரம்...

மரணித்தவரின் நல்ல விடயங்களை நினைவு படுத்துங்கள் அது
வாழ்கின்றவர்களுக்கு பிரயோசனமாகும் என்ற கருத்துக்கு ஏற்ப அண்மையில் வாழ்ந்து தன் இள வயதிலேயே மரணித்த இந்த சகோதரியை ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.. எனக்கு இவர் பற்றி கிடைத்த சில தகவல்களைத் தான் இங்கு எழுதுகிறேன், இ...தில் ஏதும் தவறுதலாக எழுதப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுமாறு தயவைக் கேட்டுக் கொள்கிறேன்..)

கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாக கொண்ட முஹம்மது அக்ரம், சீனங்கோட்டையை வசிப்பிடமாக கொண்ட பாத்திமா பர்ஸானா என்பவருக்கும் நான்காவது புதல்வியாக பிறந்தவர்தான் ஸுமையா. தன சிறு பராயத்தை கஹட்டோவிட்டவில் ஆரம்பித்தவர். பின்னர் தாயாரின் பிறப்பிடத்தை வசிப்பிடமாக்கி தன் கல்வியை தொடர்ந்தார். உயர் தரத்தில் விஞ்ஞான துறையை தேர்ந்தெடுத்து வைத்தியர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் படித்திருக்கிறார். சிறு பராயம் முதலே இஸ்லாமிய குடும்பத்தின் அரவணைப்பில் வளர்ந்ததால் இஸ்லாம் தனது வாழ்க்கையாக மாறி இருந்தது எனலாம்.

தனது தோலில் ஏற்பட்ட சிறு சிறு மாறுதல்கள் ஒரு தோல் நோய்க்காக இருக்கும் என்றே எண்ணியிருந்தனர் இவரின் பெற்றோர். ஆனால், இந்த சகோதரி தனது மாறுதல்களை இந்த இன்டெர் நெட்டில் தேட நினைத்தார். தான் படித்ததும் விஞ்ஞான துறை அல்லவா. அல்லாஹ் தந்த அறிவை தனது நோய் பற்றி அறிய தனது தேடலை தொடங்கினார். சுருங்கச் சொல்லப் போனால் தான் என்ன நோயினால் பீடிக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிய தானே தேடுகின்றார். சும்மா சொல்ல கூடாது, தேடலின் விளைவு சாதகமா பாதகமா என்று அறிகின்ற இந்த துணிச்சல் 20 வயதில் யாருக்கு தான் வரும்? பாதகமான விளைவு வந்தால் அதை ஏற்கின்ற மனோநிலை யாருக்கும் இல்லையே.. உண்மையில், இந்த பெண் துணிச்சலானவள் தான்..

தான் தேடிய இணைய தளங்கள் தனக்கு பீடித்துள்ளது குணப்படுத்த முடியாத இரத்தத்தில் ஏற்பட்ட புற்று நோய் என்பதனை இவருக்கு உணர்த்துகிறது. அதை உறுதி செய்துகொள்ள மகரகமையில் அமைந்துள்ள வைத்திய சாலையை நாடுகிறார், அதுவும் தனது பெற்றோருடன். அங்கே பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அது இரத்த புற்று நோய் என்பதனை உறுதி செய்கிறார்.

மரணம் எம்மை பின்தொடர்ந்து வருகின்றது என்பதனை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தன்னை மரணம் பிடித்துவிட்டது என்று ஊர்ஜிதப்படுத்தப் பட்டால் எமது வாழ்க்கை எப்படி இருக்கும்.? ஒரு நிமிடம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்..!!! ஒரு கருத்து சொல்வாங்க "இறக்கின்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்கின்ற நாள் நரகமாகிடும்" என்று. ஆனால், இந்த பெண் இவ்விடத்தில் மாறுபடுகிறாள்.
தன்னை மரணம் பிடித்துவிட்டது என்பதால் கலங்கவில்லை. தன்னை பெற்று இந்த இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுத்த தன் பெற்றோருக்கு ஆறுதலாக, நம்பிக்கையூட்டும் விதமாக "இது அல்லாஹ் எனக்கு தந்த சோதனை. இன்ஷா அல்லாஹ் நான் இதில் பொறுமையாளராக இருப்பேன்" என்று கூறுகிறார். என்ன ஒரு அழகிய முன்மாதிரி நண்பர்களே!!

இந்த பொறுமையை இவர் மரணிக்கும் வரை காப்பாற்றியிருக்கிறார். இவர் வைத்திய சாலையில் இருக்கும் போது ஒருமுறை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த குரலில் எந்த கலக்கமும் தென்படவில்லை. அவர் சொன்னது "நான் பொறுமையை கையாளுகிறேன் இன்ஷா அல்லாஹ்" என்றுதான். அவரது யோசனைகள் எல்லாம் தன் மீது அன்பு வைத்திருக்கும் தன் பெற்றோரை நினைத்து தான் இருப்பதாக சொன்னார். இந்த அழகிய பொறுமை, தடுமாற்றம் இல்லா பேச்சு, இயக்க பேதமில்லாமல் பழகும் குணம் என்பவை அவரின் தகப்பனாரிடம் நான் பார்த்தவை.

எமது சமூகத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்த நோயாளியை எப்படியாவது, எந்த வழியிலாவது குணமாக்கணும் என்ற மனப்பாங்கு இருக்கிறதே ஒழிய அந்த நேரத்தில் இஸ்லாம் கூறும் பொறுமையை கடைப்பிடிக்க அந்த நோயாளியை அறிவுறுத்துவது குறைவு. இதனால் தான் இஸ்லாம் காட்டாத வழிகளில் கூட நோய்களுக்கு தீர்வு தேடி அலைகிறார்கள் இந்த அப்பாவி முஸ்லிம்கள். கடைசியில் முஸ்லிம் அல்லாத சாமியார்களிடம் கூட போய் இஸ்லாத்தையும் அந்த நோயாளியையும் அடகு வைக்கின்ற நிலை இன்னும் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட ஸுமையா அக்ரம் ஐ ஒரு முன்மாதிரியாக கொள்ளுங்கள் என் நெஞ்சங்களே..

மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட தனது குடும்பத்தில் தான் தான் முதலில் இறைவனை சந்திக்க போவதாக அடிக்கடி சொல்வாராம். வேதனை அதிகமாகும் போது இரண்டு ரகாத் தொழுதுவிட்டு அப்படியே சுஜூதில் இருப்பாராம். சனிக்கிழமை (29-12-2013) காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போயிருக்கிறார்கள் அவரது பெற்றோர். வைத்திய சாலையில், தனது அப்பா ( உம்மாவின் வாப்பா) வை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்பாவும் வந்து பேசியிருக்கிறார். பின்னர் வாப்பாவை கூப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படியே கண்ணை மூடியிருக்கிறார்.. உயிரைத் தந்த ரப்பு தானே அதை வாங்கிக் கொள்கிறான்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

தனது நோயை தானே கண்டுபிடித்தது முதல் மரணிக்கின்ற வரை அழகிய பொறுமையை கடைபிடித்தார். இஸ்லாம் அல்லாத எந்த வழியையும் தனது நோய் நிவாரணத்துக்காக பயன்படுத்தாமை. இவை இந்த சகோதரி விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரிகள்..

அந்த அரபு நாட்டில் மாத்திரமல்ல இந்த கஹட்டோவிட்டாவில் கூட இஸ்லாத்தை வாழ்க்கையாக கொண்ட ஸுமையாக்கள் வாழ்ந்து மரணித்தாலும், இது போன்ற முன்மாதிரிகளால் இன்னும் நிறைய ஸுமையாக்கள் உருவாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை...

யா அல்லாஹ் அந்த சகோதரியை ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக.. அவரின் பெற்றோருக்கு உனது சாந்தியையும் சமாதானத்தையும் நல்குவாயாக...


ஜதாகுமல்லாஹ்
Muhammadh Muhammadh.

1 comments:

Anonymous said...

Masha Allah! May Allah grant her Jenna! Mah he console her family! mahy he shower his blessings on them!

Post a Comment