மு.கா தலைவர் மேல் வரலாறு பெரும் பாரத்தினை கையளித்துவிட்டுள்ளது!
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் மக்கள் அபிப்பிராயங்களாக வெளிவந்துள்ளது.
தமிழ்,முஸ்லீம்மக்களிடையேயும், தமிழ், முஸ்லீம்பிரதேசங்களிலும் பெரும்பான்மை ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் பெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு இத் தேர்தல் பலத்த பின்னடைவையும் தோல்வியையுமே தந்துள்ளது.
ஒரே நாளில் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் , கிழக்கு மாகாணம் தவிர,ஏனைய இரு மாகாண சபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, கிழக்கில் தோல்வியும் சரிவும் கண்டிருப்பதானது, அரசாங்கத்தின் மீதும், அதன் செயட்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் முஸ்லீம் மக்களுக்குரிய அதிருப்தியினையும்,அரசியல் எதிர்ப்புணர்வினையும் இத் தேர்தல் முடிவு தெளிவாக காட்டியுள்ளது.
முஸ்லீம் மக்கள் அரசாங்கத்திற்கு எப்போதுமே ஆதாரவானவர்கள் என்கிற குறுந்தமிழ் தேசியவாதத்தின் பரப்புரை மிகத் தவறானது என்பது இத் தேர்தல் ஊடாக நிருபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், தனித்து தேர்தலை எதிர் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு ஆதரவாககவுமே விழுந்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம்பொருந்திய மாவட்டமான திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின், சிங்கள வாக்காளர்கள் பெரும்பான்மையான அம்பாறை தேர்தல் தொகுதி தவிர்ந்த ,கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு,திருமலை மாவட்டங்களிலும் கணிசமான முஸ்லீம் வாக்குகள் முஸ்லீம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் -தமது அரசியல் ,கலாசார ,பொருளாதார, மற்றும் நிலம்,அதிகாரம், இருப்புத் தொடர்பாகவும் அரசியல் ரீதியான பாதுகாப்பினையும் உத்தரவாதத்தினையும் கோரும் அரசியல் பண்பிற்கு முக்கியத்துவமளித்துள்ளனர் என்பது தெளிவுபட நிருபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் காங்கிரஸ் இத்தேர்தல் முடிவின் பிரகாரம், மாகாணத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் தீர்மானகரமான அரசியல் பலமாக நிற்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு சமமானதும் முக்கியத்துவமானதுமாக அதன் அரசியல் முடியும் அமையப்போகிறது. முஸ்லீம் காங்கிரசுக்கு முன் மூன்று தெரிவுகள் உள்ளன.
1. அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தல்,இதன் ஊடாக பெயரளவிலான மாகாண அரசை ஸ்தாபித்தல்
2. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து சிறுபான்மை மக்களின் அடையாள அரசியல் சார்ந்த கூட்டு மாகாண அரசை ஸ்தாபித்தல்
3. மாகாண சபையில் சுயாதீனமாகவும்,தனித்துவமாகவும் செயற்படுதல் முஸ்லீம் முதலமைச்சர் என்கிற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு அடிப்படையில் இணக்கம் காணப்பட வேண்டிய முக்கிய அரசியல் விடயங்களில் இணக்கம் காணாது, வெறுமனே முதலமைச்சர் பதவிக்காக ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட முடியாது.
முதலமைச்சர் பதவி என்பதே பெயரளவிலான அதிகாரமற்ற அலங்காரப் பதவிதான். இந்த முதலமைச்சர் என்கிற அரசியல் ஏமாற்று வித்தையைக் கடந்து,அரசானாலும் சரி,தமிழ் தேசியத் கூட்டமைப்பு ஆனாலும் சரி, முஸ்லீம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவு , இன்ன இன்ன நிலைப்பாடுகளின், கோரிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என பகிரங்கப்படுத்துவது அவசியமானது.
ஏனெனில் முஸ்லீம் காங்கிரசின் அரசியல் முடிவின் முக்கியத்துவம், இதுவரையான அதன் அரசியல் முடிவுகளை விட,முக்கியத்துவமானதாக இருக்கப் போகிறது.
ஏனெனில் இம்முடிவின் ஊடாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துடன் மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம்,இனத்துவ அடையாளம், காலாசார சமூக,பொருளாதார பாதுகாப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
* கடந்த தேர்தல் காலங்களில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை கடைப்பிடித்து வந்த அரசியல் தரகர்களின் ஊடான இரகசிய பேச்சுவார்த்தை முறை கைவிடப்படல் வேண்டும்.
*பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடத்தப்படல் வேண்டும், ௦.இதற்கு முஸ்லீம் காங்கிரஸ் உடனடியாக, தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் தொடர்பாக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை தயார் படுத்தி பொது தளத்திற்கு முன் வைக்க வேண்டும்.இதனை முஸ்லிம்களின் அரசியல் ஆவணமாக தீர்மானங்களாக முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் மயப் படுத்த வேண்டும்.
* முஸ்லீம் காங்கிரஸ் உடனடியாகவும்,அவசரப்பட்டும் முடிவிற்கு வருவதனை தள்ளிப் போட்டு,ஆறஅமர முடிவிற்கு வருதல் வேண்டும்.
சாதக பாதகங்கள் கட்சிக்குள்ளும் பொதுத்தளத்திலும்,துறைசார் ஆளுமைகளுடனும் விவாதிக்கப்படல் வேண்டும்.
மிக இக்கட்டான நிலைமை இது, மு.கா தலைவர் மேல் வரலாறு பெரும் பாரத்தினை கையளித்துவிட்டுள்ளது. “ஏறச் சொன்ன முடவனுக்கு கோபம்,இறங்க சொன்னா எருதுக்கு கோபம்” என்கிற நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையை இக்கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இன்றைய அரசியல்.
அரசியல் தெளிவுடனும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையிலும், முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலும் மு.கா வின் முடிவுகள் அமையட்டும், ஏனெனில் ஒரு போதுமே முஸ்லீம் காங்கிரசின் உருவாக்கம் அமைச்சுப் பதவிகளுக்காக உருவாக்கப்பட்டது அன்று.
அதன் உருவாக்கமும் வளர்ச்சியும் தேவையும் முஸ்லிம்களின் அனைத்து உரிமைகளையும் பேணுகின்ற அரசியல் இயக்கமாக அது இருக்க வேண்டும் என்பதேயாகும்.
-எம்.பௌசர்-
0 comments:
Post a Comment