கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அன்புள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு அவசர மடல்.





ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வத...ைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

அல்லாஹ், இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக !!!

என்ற பிராத்தனைகளுடன் விடயத்துக்கு வருகின்றேன்.

இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுதான் இவ்வவசர மடலை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் நானும் உங்களுடன். ஆனால் கவலை, கஸ்ட்டங்கள் வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும் மிகவும் பொறுமையும், நிதானமும் தேவை.

அதனால் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் இறைவன் புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்) என்று கூறுமாறு நபியவர்கள் கற்றுத்தந்தார்கள். இது நிதானத்தையும், மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும்.

ஆனால் சிலர் சவூதி அரசை மிகவும் காரசாரமாக விமர்சிக்கின்றனர், பலர், முஸ்லிம் சகோதரர்கள் உட்பட, சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.

இந்த விடயத்தில் ஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான் இருக்க வேண்டும்;

ஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது. அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது.

வாதத் திறமையும், சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயமாகும். குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்த எடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாது, இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ரிசானா விடயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்.

உலக நீதியை, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதி வாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES) இஸ்லாம் உத்தரவிடுகின்றது.
ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.
2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்.
3. அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?
5. 18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல், அது ஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூட, ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியான முறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையே, இது யார் குற்றம் தீர்ப்பு வழங்கிய சஊதி அரசின் குற்றமா. அவர்களின் ஆவணப்படி ரிஸானா 18 வயதைத் தாண்டியவர்.

இது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதார்த்தம் என்னவென்று தெரியாமல், கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம் பேசக்கூடாது. வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.

அதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும். இதை நான் கூறவில்லை, அமெரிக்க அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர். பரிதாவப்படுகின்றனர். ஆனால் ஆயிரமாயிரம் ரிசானாக்கள் இன்னும் அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாவப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.

நீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாக பல காரணங்களும், பல காரணகர்த்தாக்களும் உள்ளனர். இந்தப் பாவத்தில் அனைவரும் பங்காளிகளே.

1. மஹ்ரம் (தக்க துணை) இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.

2. தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.

3. வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் (ஏழை வரிப்) பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.
4. திருமணமுடிக்க வீடு, பணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் சீதனம் கேட்கும் மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.
5. பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்த குற்றம்.
6. வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வெளைக்கனுப்பிய கூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.
7. இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில், வீட்டில் வெளிக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்.

பாவிகளும் நாங்களே, அப்பாவிகளும் நாங்களே, பரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே, பரிதாவப்படுபவர்களும் நாங்களே. எல்லாம் நாங்களே.

இனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால், எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.
1. பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள் அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.
3. சீதனத்தை சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.

4. உலமா சபை பணக்காரர்களிடமிருந்து சகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.
5. பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனம் வைத்து முயற்சிக்க வேண்டும், வெற்றிபெற அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை ரிஸானாவுக்காய் பிராத்தித்தவனாய் விடைபெறுகின்றேன்.
வேதனைகளுடன் இவன்
அபூ இமான் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி

2 comments:

fazmina riyas said...

superb...
I really appreciate you!!!
we are slaves of the almighty Allah...
we do not have any rights to interfere in sha'riah

கிருஷ்ணா said...

ஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது. அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது.

Post a Comment