கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஆடை தொழிற்சாலை யுவதி கொலை; வைத்தியருக்கு மரண தண்டனை


ஆடை தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே 12-11-2007 அன்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபரான வைத்தியருக்கு எதிராக  பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் கொலை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டடிருந்தன.  

கொலை குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையும், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்காக 15 வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஆறுமாத கால சிறை தண்டனை வழங்கவும் நீதிபதியினால் உத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியினால் தீர்மானிக்கபபடும் தினம் ஒன்றில் இந்த மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி, தனது தீர்ப்பின் போது குறிப்பிட்டார். சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்களுக்கு அப்பால், ஆய்வுபூர்வமான சாட்சிகள், ஆதாரங்கள் மூலமாக  பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பிரதிவாதிக்கு கருத்து கூற நீதவானால் அனுமதி அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தால் சமிலா திசாநாயக்காவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைப் போன்று, தனக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும், இத்தனைக் காலமும் தனக்கு அவமரியாதைகளும் அவமானமே கிடைத்ததாகவும், அதனை தான் பொறுத்துக் கொணடதாகவும், பொலிஸார் தனக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தனது கைவிரல் அடையாளம்  தொடர்பாக பொலிஸார் குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அது ஏன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை, குற்றவாளிகள் இன்னும்   நீர்கொழும்பு வைத்தியசாலையில்  இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர், நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.

வழக்கின் பிரதிவாதியான வைத்தியர்,  நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் இன்றுக்காலை அழைத்து வரப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட யுவதியின் தந்தையான திசாநாயக்க முதியானசலாகே அப்புஹாமி (57 வயது), தாயார் வணசிங்க முதியானசலாகே கருணாவதி (52 வயது) ,கட்டுநாயக்க சுதநதிர வர்த்தக வலய ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலய  மற்றும் பொது சேவா சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள், பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த வழக்கின் போது மன்றுக்;கு சமுகமளித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட யுவதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ், சட்டத்தரணி துசிர மெலேவ்வென்த்றி ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற குற்றசாட்டின் அடிப்படையிலேயே வைத்தியர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கொலைச் சம்பவத்தை அடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அப்போது நீர்கொழும்பு மேலதிக நீதிவானாக பணியாற்றிய  மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன், வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வைத்தியரின் அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன.

அத்துடன், 27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.

5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து) கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படுத்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இதேவேளை, நீதிமன்றிற்கு  வருகை தந்திருந்த சமிலா திசாநாயக்காவின் பெற்றோர்கள், இந்த தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  ஏழு வருடங்களின் பின்னர்  தமக்கு நீதி கிடைத்திருக்கிறது. இதற்காக ஆஜரான சட்டத்தரணிகளுக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும்  பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என்றனர்.


எம்.இஸட். ஷாஜஹான்

0 comments:

Post a Comment