கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹிஜ்ரி 1431 றமழான் ஆரம்பம் – ஒரு கள நிலவர ஆய்வு.

ஹிஜ்ரி 1431 றமழான் ஆரம்பம் ஒரு கள நிலவர ஆய்வு. - Thanks Muslim watch
 
நாம் புனித றமழான் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். அல்லாஹுத் தஆலாவின் நாட்டம் நம்மைச் சேருமாக இருந்தால் அந்த மாதத்தின் பாக்கியங்கள் நம்மைச் சேரும்.
 
புனித றமழானை எதிர்பார்த்து ஷஃபானின் இறுதி நாட்களை நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
 
இந்த ஷஃபான் மாதம் தலைப்பிறை பார்த்தலின் படி இரு ஆங்கில கிறிகோறியன் நாட்காட்டித் தினங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஜூலை 12ம் திகதி மாலை ஐக்கிய அரபு இராச்சியம் தொட்டு மேற்காக உற்ற நிலப்பிரதேசங்களில் தலைப்பிறை தென்பட்டதனால் மத்திய கிழக்கு, ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் அமெரிக்கக் கண்ட நாடுகளில் ஜூலை 13ம் திகதி ஷஃபான் முதலாம் நாளாக அமைந்தது.
 
இலங்கை அடங்கலான ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கிழக்காக உள்ள நாடுகளில் ஜூலை 14ம் திகதி ஷஃபான் முதல் நாளாக அமைந்தது.
 
13ம், 14ம் திகதிகள் கிறிகோறியன் நாட்காட்டியின் படி இரண்டு வேறுபட்ட நாட்களாக இருந்தாலும், உலகில் முதலில் தலைப்பிறை தென்பட்டதிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள்ளாக உலகின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரே சந்திர நாளில் ஷஃபான் ஆரம்பமானது.
 
இதற்கு அமைவாக ஜூலை 13ம் திகதி ஷஃபானை ஆரம்பித்த நாடுகளில் ஆகஸ்ட் 10 ம் திகதியும், ஜூலை 14ம் திகதி ஷஃபானை ஆரம்பித்த நாடுகளில் ஆகஸ்ட் 11ம் திகதியும் ஷஃபான் 29ம் நாளாக அமையும். இந்த நாட்கள் குறித்த பிராந்தியங்களில் றமழான் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாட்களாகும்.
 
ஆகஸ்ட் 10ம், 11ம் திகதிகள் கிறிகோறியன் நாட்காட்டியின் பிரகாரம் 2 நாட்களாக இருந்த போதிலும் தலைப்பிறை பார்த்தலின் பிரகாரம் 24 மணித்தியாலங்கள் கொண்ட ஒரு சந்திர நாட்காட்டி நாளேயாகும்.
 
இவ்வருடத்தின் றமழானுக்கு முந்திய புவி மைய அமாவாசை ஆகஸ்ட் 10ம் திகதி நேரம் GMT 03.08க்கு இடம் பெறுகின்றது. ஆனால் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமாவாசை ஆகஸ்ட் 10ம் திகதி காலை 7 மணிக்கு இடம் பெறுகின்றது. இத்தினம் சூரியன் கொழும்பில் அஸ்த்தமிக்கின்ற போது, அமாவாசைக்குப் பின் 11 மணித்தியாலம் 27 நிமிடம் மட்டுமே வயதுடைய சந்திரன் மேற்குவானில் இருக்கும். இந்தச் சந்திரன் சூரியன் அஸ்த்தமித்து 12 நிமிடங்களில் தானும் அஸ்த்தமித்து விடும்.
 
சந்திரனின் விலகல் 6 பாகை 19 கலை 12 விகலை ஆக இருக்கும். சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது சூரியனுக்கும் சந்திரனுக்குமான சார்பு உயரம் 2 பாகை 44 கலை 37 விகலை ஆக இருக்கும்.
 
சந்திரன் சூரியனுக்கு மிக அண்மித்தாக இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சந்திரனின் பிரகாசம் பௌர்ணமியின் பிரகாசத்தின் 0.31 வீதமாக மட்டுமே இருக்கும்.
 
-          அமாவாசைக்குப்பின்னான சந்திரனின் குறைந்த வயது
-          சூரியன் மறைந்ததன் பின்னர் குறுகிய நேரம் மட்டுமே வானில் தரிதிருத்தல்.
-          9.2 பாகைக்கும் குறைவான விலகல்
-          சூரியனுக்கு மிக நெருக்கமாக இருத்தல்.
-          புறக்கணிக்கத் தக்க பிரகாசம்
 
மற்றும் ஏனைய அனைத்துக் காரணிகளின் சாதகமற்ற நிலைமைகளின் பேறாக ஆகஸ்ட் 10ம் திகதி இலங்கையின் எப்பிரதேசத்திலும் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படாது. வெற்றுக் கண்களுக்கு மட்டுமல் தொலை நோக்கிகளுக்குகூடாகக் கூட அது புலப்படாது.
 
உலகில் முதலில் இம்முறை றமழான் தலைப்பிறை ஆகஸ்ட் 10ம் திகதி தோற்றம் தரக்கூடிய ஆரம்பப் பிரதேரம் தென்னாபிரிக்காவாகும். அதுவும் தொலை தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
 
அதனைத் தொடர்ந்து தென்னமெரிக்க நிலப் பிரதேசத்தில் தலைப்பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படும் சாத்தியம் உண்டு. Chile நாட்டிலிருந்து 10ம் திகதி வெற்றுக்கண்களுக்கு தலைப்பிறை தென்பட்டதற்கான அறிவித்தல்கள் கிடைக்கலாம். இன்ஷா அல்லாஹ்.
 
இந்தச் சாத்தியங்களை வைத்துப் பார்க்கும் போது சில முஸ்லிம் நாடுகளில் ஆகஸ்ட் 11ம் திகதி றமழான் முதல் நாளாகக் கொள்ளப்படும் சாத்தியம் இருக்கின்றது.
 
சஊதி அரேபியா கடைப்பிடித்து வரும் உம்முல் குறா நாட்காட்டி முறையின் படி ஆகஸ்ட் 11ம் திகதி றமழான் முதல் நாள் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் 10ம் திகதி சஊதி அரேபியா மக்கா நகரில் தொலை நோக்கிகள் மூலமாகவேனும் தலைப்பிறையைக் காண முடியாது.
 
உம்முல் குறா நாட்காட்டியானது தலைப்பிறை பார்த்தலை அன்றி அமாவாசை மற்றும் சந்திர சூரிய அஸ்த்தமன நேரங்களை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
 
தென்னமெரிக்காவில் (GMT  -5)ஆகஸ்ட் 10ம் திகதி அங்கே சூரிய அஸ்த்தமனத்தில் அவர்களுக்குத் தலைப்பிறை தென்படும் போது இங்கே இலங்கையில் (GMT  +5.30) ஆகஸ்ட் 11ம் திகதி ஸுப்ஹ் தொழுகைக்கான அதான் ஒலித்திருக்கும்.
 
எனவே அங்கே தலைப்பிறை தென்படக் கூடும் என்பதனை இங்கிருந்து கணிப்பிட்டு அங்கே தலைப்பிறை தென்படுவதற்கு முன்னரே இங்கிருந்து நோன்பு நோற்பது அறிவுடைமையாகாது.
 
மேலும், தலைப்பிறையைக் காணாத நாம் அதனை முதன் முதலில் கண்டவர்களையும் முந்திக் கொண்டு அவர்களுக்கு பத்தரை மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே ஸஹர் செய்வதும் அறிவுடைமையானது அல்ல.
 
எனவே தலைநோன்பு நோற்க தொடர்ந்து வரும் ஸஹருக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.
 
ஆகஸ்ட் 11ம் திகதி இலங்கையில் ஷஃபான் 30ம் நாளாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
 
அதேவேளை ஆகஸ்ட் 11ம் திகதி இலங்கையில் தென்படும் பிறையானது சூரியன் அஸ்த்மித்ததிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் (இஷா) வரை வானில் தரித்திருக்கும்.
 
சூரிய அஸ்த்தமனத்தின்போது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான இடைக் கோணம் சுமார் 15 பாகை ஆக இருக்கும். மேலும் அமாவாசையின் பின்னான சந்திரனின் வயது 35 மணித்தியாலம் 55 நிமிடமாகவும்,
சந்திரனின் பிரகாசம் பௌர்ணமியின் பிரகாசத்தின் 3 வீதம் அளவானதாகவும் இருக்கும்.
 
எனவே இந்தப்பிறை அதிக பிரகாசத்துடன் அதிகளவு நேரம் வானில் தோற்றம் தருவதனால் அதனை இரண்டாம் நாள் பிறையாகக் கருத இடமுண்டு. ஆனால் இது தவறானதாகும். 11ம் திகதி தென்படும் பிறையே இலங்கைக்கு தலைப்பிறையாகும்.
 
உலகின் முதல் தலைப்பிறை ஆகஸ்ட் 10ம் திகதி தென்னமெரிக்காவில் தோற்றம் தந்ததன் பின்னர் அது இலங்கையில் தோற்றம் தருவதற்கு எடுக்கும் காலம் பதின் மூன்றரை மணித்தியாலங்கள் மாத்திரமே.
 
பதின் மூன்றரை மணித்திலயாலங்கள் என்பது ஒரு நாளின் அரைவாசியிலும் பார்க்கச் சற்று அதிகமான காலமாகும்.
 
எனவே தென்னமெரிக்காவில் 11ம் திகதி நோன்பை ஆரம்பிப்பதுவும் இலங்கையில் 12ம் திகதி நோன்பை ஆரம்பிப்பதுவும் இரு கிறிகோறியன் நாட்களாக இருந்தாலும் சந்திர நாட்காட்டியின் படி ஒரே நாளாகும்.
 
எனவே தேசியப்பிறையைப் பின்பற்றுவதுவும், சர்வதேசப்பிறையை சரியான முறையில் பின்பற்றுவதுவும் ஒரே விடயம்தான்.
 
றமழான் முபாறக்

ஆகில் அஹ்மத்

0 comments:

Post a Comment