கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தீமைகளின் கிளையுதிர் காலம்

அல் ஹஸனாத்தில் வெளிவந்த கவிதையிலிருந்து சில பகுதிகள்.


*தீமைகளின் கிளையுதிர் காலம்*

அதோ...நோன்பு வருகிறது என் கல்பு நோக்கி கலிமா வருகிறது

மண்ணிலோ மண்ணுக்கு அடியிலோ அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை‍ வருகிறது.

ஓ...ரமலான் நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய் எங்கள் ஆன்மாவின்

அழுக்கெடுக்க வருகிறாய்...

வா...அருகில் வா,

இனி எங்கள் வீட்டுத் தீமைகள் நெருப்பின் வாடை நுகரும்..

இனி என் தொழுகையின் அறுந்து போன ஆத்மிக நரம்புகள் உயிர் கொள்ளும்..

நடு இரவில் வியர்வையோடு விழிக்கிறேன் ஓ..ரமலான் வருகிறது. என் இதயத்தையும்

வீட்டுக் கதவையும் நட்சத்திரங்களையும் அலங்கரிக்கின்றேன்.

நாளைய ஸஹருக்கு தயாராகின்றேன். தக்வா குத்பா ஓதுகின்றது, தாகமும் பசியும்

யாருக்கு வேண்டும்?

நெற்றிகள் ஸூஜூதில்‍‍‍_கிடக்குமே கால்கள் கண்ணீரில் தேர் விடுமே, கொஞ்சக்கூடிய

பிஞ்சுக் கால்களும் தராவீஹில் வீங்குமே

இடக்கை அறியாமல் ‍_ சிலரின் வலக்கையில் இதயங்கள் முளைக்குமே _அவை நோன்பு கால உயிரோவியங்கள்

நோன்பு ஒன்றும் காலையில் தூங்கி மாலையில் எழுந்து ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

நோன்பு – மரம், இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்

நோன்பு - குழந்தை இந்தக் குழந்தை தாய்க்கும் பாலூட்டும்

நோன்பு -சுவனத்து வாகனம் இது மனிதனின் இதயத்திற்கும் பெட்ரோல் ஊற்றும் திரும்பிப் பாருங்கள் வரலாற்றுப் பார்வையில் நோன்பு சாதனை

இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டம் ‍_ பத்ர் நோன்பு 17ல் தான் முன்னூற்றுப் பதினேழு முஹம்மத்கள், ஆயிரம் அபூஜஹ்ல்களின் கதை முடிந்தது.

ரமலான் 10ல் தான் ஏழை வயிற்றுக்குள் ஸகாத்துல் ஃபித்ராவின் சரித்திரம் புகுந்தது.

நோன்பு 9‍ல் தான் அஹ்ஸாப் யுத்தத்தின் அடி மண்ணிலே வீர மறவர்களின் வியர்வை விழுந்தது.

ரமலான் 21 ல் தான் தபூக் யுத்தத்தின் தடயங்களில் உரோமர்களின் உரோமங்களும் விழுந்தது.

ரமலான் 8 ல் தான் ஃபத்ஹ் மக்கா‍_ மக்கா வெற்றியில் மானுட இருள் மண்டியிட்டு ஓய்ந்தது.

தாரிக் பின் ஸியாத் கடலின் கரையடைந்து வந்த கப்பலை கொளுத்தி வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்தபோது..ஸ்பெயினை இஸ்லாம் தழுவிக் கழுவிய போது ரமலான் 19!

ஸலாஹீத்தீன் அய்யூபி சிலுவை யுத்தத்தில் திருச்சபையை சிலுவையில் அறைந்து விட்டு வியர்வை துடைத்த போது நோன்பு 29!

ஐன் ஜாலூத்தில் தாத்தாரியர்கள் வியர்த்தோடிய போது நோன்பிற்கு வயது 7!

என் இனிய நண்பனே! தயாராகு இது இலையுதிர் காலமல்ல! தீமையின் கிளையுதிர் காலம்.

இந்த ரமலானை நாம் கைநீட்டி வரவேற்போம்.

"மரிக்கார்" அல் ஹஸனாத் ஆகஸ்ட் 2009, ரமலான் 1430

1 comments:

Anonymous said...

நெற்றிகள் ஸூஜூதில்‍‍‍_கிடக்குமே கால்கள் கண்ணீரில் தேர் விடுமே, கொஞ்சக்கூடிய

பிஞ்சுக் கால்களும் தராவீஹில் வீங்குமே

அழகான வரிகள். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

Post a Comment