கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீண்டும் விக்கிலீக்ஸில் ரகசியக் கசிவுகள்


விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டுக்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.

மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணங்கள் கைவசம் இருந்தும், அவ்வாறு எவ்வித ஆவணமும் இல்லை என அமெரிக்கா முன்னர் மறுத்து வந்ததும் தெரிய வருகிறது. இராக் மீது போர் தொடுத்த பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,09,000 என்றும், அவற்றில் 66,081 பேர் பொதுமக்கள் என்றும் இப்போது அறிய வருகிறது.

ஆனால் இந்த தகவலை எல்லாம் நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதெல்லாம் மேலோட்டமான தகவல்கள் என கூறியுள்ளது. மேலும் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கை இருந்தால், அவை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் கோட்பாடாகவே வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸாங்கே, ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த பதிவுகள், இந்த போரால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பாக கூறினார். மேலும் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பேர் கொல்லப்படும் சின்ன சின்ன சம்பவங்களின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கை தான் இது என்றும் கூறினார்.

இந்த பதிவுகள், தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், சின்ன தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுவதாக விக்கிலீக்ஸுடன் இணைந்து பணி புரியும் ‘இராக் பாடி கவுண்ட்’ அமைப்பின் ஜான் ஸ்லபோடா கூறினார்.



அமெரிக்கா விசனம்

ஹிலரி கிளிண்டன்

முன்னதாக விக்கிலீக்ஸ் பதிவுகளை வெளியிடுவது தவறு என்று கூறியிருந்த அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த தகவலால் பலருக்கு உயிராபத்து ஏற்படும் என கூறியிருந்தார்.

ஆனால் மிகவும் தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தால் எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ், இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் கூறியுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் ஒன்றில், டலஃபார் நகரத்தில் இராக்கிய இராணுவத்தினர் நபர் ஒருவரை கொன்றது தொடர்பான காட்சிநாடா அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கூட அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மற்றுமொரு சம்பவத்தில் நபர் ஒருவரின் விரல்களை வெட்டி எடுத்த இராணுவத்தினர், அந்த நபரை பின்னர் அமிலத்தில் வீசி கொன்றுள்ளனர்.
இது போல இன்னும் ஏராளமான சித்ரவதை தொடர்பான பதிவுகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று, அமெரிக்க படைகளால் வெளியில் இதற்கு முன்னர் சொல்லப்படாத ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment