கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இறுதி முடிவுகளை நிராகரிக்கின்றோம்; ஆணையாளருக்கு என்ன நடந்தது? : ரணில்


தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தினத்தன்று தேர்தல்கள் ஆணையாளருக்கு நடந்தது என்ன? அவர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம். அன்றைய தினம் இறுதி முடிவுகளை அறிவித்த போது அவரது பேச்சுக்கள் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் அவர் இயலாமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் என்பது தெளிவாகியது. எவ்வாறாயினும் நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரையில் அதன் இறுதி முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்" என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இராணுவப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரது சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றது. இது சரியானதல்ல. எனவே, அவரது சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.கேம்பிரிஜ் டெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில், கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது காலை 7.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையிலான காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்ற போதிலும் அநேகமான இடங்களில் நீதியான தேர்தல்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. ஆனாலும் அன்றையதினம் 4.00 மணியின் பின்னர் வாக்குகள் எண்ணும் அநேகமான நிலையங்களில் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் அமைச்சர்களும் வன்முறையாளர்களும் வாக்குகள் எண்ணப்படுகின்ற நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளைப் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அவர்கள் தமக்கு தேவையான வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.தேர்தல் முடிவுகளை அறிவிக்கின்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட வாக்கு கணக்கெடுப்பு நிலையங்களுக்குள் அரசாங்கத்தின் அதிகாரிகள் தவிர்ந்த ஏனையோர் அங்கு செல்வதற்கே இடமளிக்கப்படவில்லை. இவ்வாறான அசாதாரண நடவடிக்கைகளை ஆராய்ந்து தகவல் திரட்டுவதற்கென நாம் குழு ஒன்றை அமைத்திருக்கின்றோம்.இதே சந்தர்ப்பத்தில், அநேகமான வாக்கு கணக்கெடுப்பு நிலையங்களுள் செல்வதற்கு தமது அதிகாரிகளுக்கு கூட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் அதேநேரம் சரியான முடிவுகளை வெளியிடுவது தொடர்பில் தம்மால் இயலாமை ஏற்பட்டிருந்ததையும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தனது இறுதிமுடிவை அறிவிக்கும்போது தெரிவித்திருந்தார். ஜனாதிபதி உட்பட தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் சமூகமளித்திருந்த சந்தர்ப்பத்திலேயே ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார். மேலும் இதுவரை காலம் இல்லாதவாறே தேர்தல்கள் ஆணையாளர் கடந்த 27ஆம் திகதி தனது உரையை நிகழ்த்தியிருந்தார் என்பதையும் இன்று குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். அவரது கூற்றுக்களின் அடிப்படையில் முடிவுகளில் ஏதோ ஓர் உள்ளார்ந்த ரகசியம் ஒளிந்து கிடப்பதாகவே தென்படுகின்றது. அவர் ஏதோ ஒரு சஞ்சலத்துக்கு ஆட்பட்டிருந்தார் என்பதையும் அவரது பேச்சுக்கள் தெளிவாக எடுத்துக்காட்டின. அதேபோல் எதிர்பார்த்த அளவில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் ஆணையாளருக்கு நடந்தது என்ன? அன்றைய தினம் இரவு அவர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு முன்னராவது இவ்வாறானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டாரா? ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்பட்டனவா? இவற்றையெல்லாம் நோக்கும்போது அவர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தார் என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்த மாதிரியான பயங்கரமானதொரு சூழலில்தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். தேர்தல்கள் ஆணையாளரை அச்சுறுத்தும் அளவுக்குச் செல்லும் பாரதூரமான நடவடிக்கைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் இதனை முற்றாக நிராகரிப்பதென எமது கட்சி தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பில் நாம் ஏனைய கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து வருகின்றோம். அதேபோல் எமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையும் நாம் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவோம்.அதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் சரத்பொன்சேகா மீது திட்டமிடப்பட்ட வகையில் சூழ்ச்சிகரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரது சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் ஜெனரல் பொன்சேகாவின் சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அச்சுறுத்தல் ஊடாகவோ அடக்கு முறைகளின் ஊடாகவோ அவர் இன்னல்களுக்கு உட்படுத்தப்பட முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.தேர்தலின் பின்னர் மோசமான நிலைமை எந்தவொரு தேர்தலின் பின்னரும் நாட்டு மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு சகோரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்பதையே விரும்புவர். எனினும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அது ஏற்பட்டிருக்கவில்லை. தற்போது கிடைக்கப் பெற்று வருகின்ற தகவல்களின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள், தாக்குதல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்க ஆதரவாளர்கள் மாற்று தரப்பினரின் வீடுகளைத் தாக்கிக் குழப்பத்தை விளைத்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர். தேர்தல் தினத்தில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருந்த பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று அதனை உறுதிப்படுத்த முடியாதிருக்கின்றது.தேர்தலின் பின்னர் சமாதான சூழல் ஏற்பட வேண்டுமென்றும் அதற்காக யாவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். அவரது கருத்தும் இன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரைக் கொண்டு ஹோட்டல்களைச் சுற்றிவளைக்க முடியுமானால், ஏன் கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியாது? ஏன் அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை? தேர்தல் முடிவுகளுக்கு மக்கள் இயைந்துள்ளனரா? தனிப்பட்ட நபர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ளவர்கள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனரா? அல்லது கருத்து வெளியிட்டுள்ளனரா? இதுதான் இன்று மக்களிடையே எழுந்துள்ள அடிப்படைப்பிரச்சினையாகும்.ஜனநாயகம் தோற்கடிக்கப்படக் கூடாது இந்தக் காரணிகள் அனைத்தும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. எந்தவொரு தேர்தலிலும் ஒரு தரப்பினரே வெற்றிகொள்ள முடியும். மாற்றுத் தரப்பு தோல்வியடைய வேண்டும். எனினும் எந்தச் சந்தர்ப்பத்தலும் ஜனநாயகம் தோல்வியடைந்துவிடக் கூடாது. ஜனநாயகம் தோற்கடிக்கப்படுமானால் மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். தான்விரும்பும் கட்சியை, தான்விரும்பும் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாதவாறு அந்த உரிமை பறிக்கப்படுகின்றது. தேர்தலில் வாக்களிக்கத்தவர்கள் பிரச்சினைகளுக்கும் வன்முறைகளுக்கும் முகம் கொடுப்பார்களேயானால் அதுவும் ஜனநாயக அடக்குமுறையாகும். அதனால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்திருக்கிறோம். எனவே, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் கட்சி பேதமற்ற வகையில் அனைவரினதும் ஆதரவும் எமக்குக் கிடைக்க வேண்டும்." இவ்வாறு அவர் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment