கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ளைப் பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல்– ஜமாஅத்தே இஸ்லாமி

தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படு மென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 65 கட்டிடங்களை அகற்றுமாறு நகர அதிகார சபை அனுப்பிய கடிதம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பேச்சாளர் எம்.எச்.எம். ஹஸன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள், தனிமனிதர்கள் என்று பலரும் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் சம்பவமாக அதனை அரசாங்கமும் உணர்ந்திருப்பதாகச் செய்திகளும் வெளிவந்தன. இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரமுகர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
 
ஜெனீவாவில் இலங்கைக்குச் சார்பாக அறபு முஸ்லிம் நாடுகளை ஆர்வங் கொள்ளச் செய்யும் முயற்சியில் ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்கள் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலும் இந்த விடயம் ஊடகங்களில் பேசப்பட்டன. அந்த வகையில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான முழுப் பொறுப்பும் இப்போது அரசாங்கத்திடமேயுண்டு.
 
நபிகள் நாயகத்துக்கு எதிரான திரைப்படத்துக்கான எதிர் விளைவுகளைக் காட்டிய முஸ்லிம்களின் முன்னெடுப்புக்களின்போதும் முஸ்லிம்கள் சமய விவகாரங்களின்போது எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கண்டு கொண்டது. பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்களித்திருப்பதாகவே பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்களும், ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்களும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உறுதி வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆயுதமாக தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முன்னெடுக்கப்பட்டபோது கூட அரசாங்கம் முஸ்லிம்களுக்குச் சாதகமான பதிலையே கூறி வந்ததது.
 
இந்நிலையில் தம்புள்ளை நகரில் உள்ள 65 வீடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கிடையில் அகற்ற வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் மாத்தளைப் பிராந்திய முகாமையாளரும் ஒப்பமிடப்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 முஸ்லிம் வீடுகளும் அடங்கும். பள்ளிவாசலுக்கு இத்தகைய ஒரு கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் பள்ளிவாசலுக்கு ஆபத்தில்லை என்று கூறியிருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி கூறியிருந்தாலும் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் பாரதூரமானவை என்றே நம்பப்படுகிறது.
 
மீண்டும் ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல்கள் என்றில்லாமல் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல், சமூகத் தலைவர்கள் அரசின் உயர் பீடத்தைச் சந்தித்து உத்தியோகபூர்வமான உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும். இப்பணி அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

0 comments:

Post a Comment