இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் - ஜம்இய்யத்துல் உலமா
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன. இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது. ஜீவ காருண்யத்தை ஏவுகிறது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமம் கொடுத்த மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
எனவே, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் ஒருவர் அறுவைப் பிராணிகள் மீது கருணையோடு நடந்துகொள்ளவேண்டும். இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் இவ்வணக்கத்திற்கு கூறப்பட்டுள்ள சிறப்புகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ் தஆலா திருமறையில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வை போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் ஷரீஆவின் வழிகாட்டல்களை பின்பற்றுதல் வேண்டும்.
1. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்விதத்திலும் நோவினை ஏற்படாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
2. அறுவைப் பிராணிகளை வண்டிகளில் அனுமதியின்றி ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
3. அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
4. அறுவைப் பிராணியை ஏனைய பிராணிகளின் முன்னிலையில் அறுத்தல் ஆகாது.
5. அறுவைக்காக பயன்படுத்தும் கத்தியை நன்றாக தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
6. குர்பானியை நிறைவேற்றும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
7. அறுவைக்காக பயன்படுத்திய இடத்திலும் கழிவுப்பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
8. நம் நாட்டில் அறுவைக்கென்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தை இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
9. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப் படவோ அவர்களுடைய உணர்வு தூண்டப்படவோ செய்யாமல் அவதானமாக நடக்கவேண்டும்.
10. போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்துகொள்ள ஏனைய நாட்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
11. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச பள்ளிவாசல்கள் அல்லது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்புடையது.
பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு நில்லாது, அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பிற மத சகோதரர்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
0 comments:
Post a Comment